‘சார்தாம்’ எனப்படும் கங்கோத்ரி, கேதார்நாத், யமுனோத்ரி மற்றும் பத்ரி நாத்தை இணைக்கும் திட்டத்தின் கீழ், ஹிமாச்சலப் பிரதேசத்தில், சம்பா நகருக்கு அடியில், 1,443 அடி நீள சுரங்கப் பாதையை சிறப்பாக அமைத்த, பி.ஆர்.ஓ., எனப்படும் எல்லை சாலை அமைப்புக்கு, மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர், நிதின் கட்கரி பாராட்டு தெரிவித்தார்.
கொலை பற்றி படிக்க : மீண்டும் ஒரு இந்து சாது படுகொலை | Once again a Hindu Sadhu massacre
சார்தாம் திட்டத்தின் கீழ், இந்த நான்கு முக்கிய வழிபாட்டுத் தலங்களை இணைக்க, 12 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் சாலை அமைக்கப்படுகிறது. மிகவும் கடினமான சீதோஷ்ண நிலையிலும், யாத்ரீகர்கள் பயணம் மேற்கொள்ளும் வகையில், இந்த சாலை அமைக்கப்படுகிறது.
இந்த சாலை திட்டத்தின் கீழ், தேசிய நெடுஞ்சாலையில், ரிஷிகேஷ் – தராசு இடையே, ஹிமாச்சலப் பிரதேச மாநிலம் சம்பா நகரில், சுரங்கப் பாதை அமைக்கப்படுகிறது. அதிக மக்கள்தொகை கொண்ட சம்பா நகருக்கு அடியில், இந்தப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. சுரங்கப் பாதை அமைப்பதற்காக துளையிடும் பணிகள் முடிந்தன.
அதையொட்டி நடந்த நடந்த நிகழ்ச்சியில், ‘வீடியோ கான்பரன்ஸ்’ மூலம் பங்கேற்ற, பா.ஜ.,வைச் சேர்ந்த, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர், நிதின் கட்கரி கூறியதாவது: மிகவும் சிக்கலான இந்த சுரங்கப் பாதை அமைக்கும் பணி, கடந்தாண்டு ஜனவரியில் துவங்கியது. வரும், 2021, ஜனவரிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால், திட்டமிட்டதற்கு முன்பாகவே முடிக்கப்பட்டுள்ளது.
மிகவும் மோசமான மண் தன்மையால், சம்பா நகரில் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் எழுப்பப்பட்டது. ஒரு சிறிய அதிர்வு கூட இல்லாமல், மிக குறுகிய காலத்தில், இந்த சுரங்கம் அமைக்கும் பணியை, பி.ஆர்.ஓ., திறம்பட செய்துள்ளது. இது மிகப் பெரிய சாதனையாகும்.
கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தபோதும், நாட்டின் வளர்ச்சிக்காக, இந்த அமைப்பினர் தங்களை அர்ப்பணித்து செயலாற்றியுள்ளனர். வரும், அக்டோபர் மாதத்தில், போக்குவரத்துக்காக இந்த சுரங்கப் பாதை திறந்து விடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.