திருப்பதி கோயிலில் பரிசோதனை முயற்சியாக உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி வழங்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவானது பிறப்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கானது ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும் ஊரடங்கில் சில தளர்வுகள் அளித்து கொள்ள மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
பொது முடக்கத்தால் வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில், வழிபாட்டுத்தலங்கள் எப்போது திறக்கப்படும் என்று எதிர்பார்த்து பக்தர்கள் காத்திருந்தனர். குறிப்பாக திருப்பதி கோவிலில் பக்தர்கள் எப்போது அனுமதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் இருந்த நிலையில், தனிநபர் இடைவெளியுடன் பக்தர்களுக்கு அனுமதி வழங்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
முதற்கட்டமாக உள்ளூர் மக்கள், தேவஸ்தான ஊழியர்களுக்கு ஆந்திர அரசு அனுமதி வழங்கியது. 6 அடி இடைவெளியில் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவர் என ஆந்திர அரசு அறிவித்துள்ளது. வரும் 8ம் தேதி முதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என தகவல் அளித்துள்ளனர்.