”திருமலையில் ஏழுமலையான் தரிசனத்திற்கு பக்தர்களை அனுமதிப்பது குறித்து இன்று (ஜூன் 5) அறிவிப்பு வெளியிடப்படும்” என தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் தெரிவித்தார்.
திருமலையில் நேற்று நடந்த வருடாந்திர ஜேஷ்டாபிஷேகத்தில் பங்கேற்ற பின் அவர் கூறியதாவது: வரும் 8 முதல் நாடு முழுவதும் உள்ள கோவில்களில் பக்தர்களை சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கலாம் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி திருமலை ஏழுமலையான் கோவிலிலும் பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்க ஆந்திர அரசிடம் தேவஸ்தானம் அனுமதி கோரியது. ஆந்திர அரசும் நிபந்தனைகளுடன் அனுமதி தந்துள்ளது.
ஆந்திர அரசு நிபந்தனைகளின்படி திருமலையில் சமூக இடைவெளியை பின்பற்றுதல் பக்தர்கள் அதிக அளவில் நடமாடும் இடங்களில் கிருமிநாசினி தெளித்தல் தரிசன வரிசைகள் தடுப்பு வேலிகள் உள்ளிட்டவற்றை சுத்தம் செய்தல் முகக் கவசம் சானிடைசர் பயன்படுத்துதல் தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.
வரும் 8ம் தேதி முதல் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு டிக்கெட் வழங்குவது ஆன்லைன் முன்பதிவு செய்வது.வாடகை அறைகள் வழங்குவது அவர்களின் போக்குவரத்திற்கு ஏற்பாடு அன்னதானம் வழங்குவது குறித்து தேவஸ்தான அதிகாரிகள் தேவஸ்தான ஆகம ஆலோசனை குழுவுடன் இணைந்து ஆலோசித்து வருகின்றனர். ஏழுமலையான் தரிசனம் தொடர்பாக இன்று அறிவிப்பு வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.