கொரோனா பொது முடக்கத்திற்கு பின், திருமலை ஏழுமலையான் கோவிலில், உண்டியல் காணிக்கையாக, 43 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக, திருமலை ஏழுமலையான் கோவிலில் மார்ச், 20 முதல், பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில், 82 நாட்கள் பொது முடக்கத்திற்கு பின், இம்மாதம், 11ம் தேதி முதல், ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
கடந்த, 11, 12ம் தேதிகளில், 13 ஆயிரம் பேர் ஏழுமலையானை தரிசித்தனர். அவர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்திய தொகையை கணக்கிட்டதில், தேவஸ்தானத்திற்கு, 43 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது. தினமும், 2 முதல், 3 கோடி வரை வருமானம் கிடைத்து வந்த நிலையில், தற்போது, குறைவான பக்தர்களே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவதால், உண்டியல் வருவாயும் குறைந்துள்ளது.
பரிசோதனை கட்டாயம்
இதற்கிடையில், திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் பணிபுரியும் அதிகாரி ஒருவருக்கு, கொரோனா தொற்று நேற்று உறுதியானது. அதனால், திருமலைக்கு செல்லும், தேவஸ்தான ஊழியர்கள் அனைவருக்கும், அலிபிரி சோதனை சாவடியில், கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. தற்போது, ஏழுமலையானை தரிசிக்க, பக்தர்கள் வரத் துவங்கியுள்ளதால் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனையை தேவஸ்தானம் கட்டாயமாக்கியுள்ளது.