திருமலை திருப்பதி கோவில் நிர்வாகத்தின் சார்பில் கார்த்திகை மாத மஹா தீபோற்ஸவ விழா நேற்று மாலை வெகு விமரிசையாக நடைபெற்றது. காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்று விழாவினை துவக்கி வைத்து ஆசியுரை வழங்கினார்.
திருப்பதியில் தேவஸ்தான நிர்வாக கட்டடத்தின் பின்புறத்தில் அமைந்துள்ள மைதானம் இந்த நிகழ்ச்சிக்காக சிறப்பாக தயார் செய்யப்பட்டு இருந்தது. பல இடங்களில் மலர்களால் ரங்கோலி ஒவியம் வரையப்பட்டு அதன் மையத்தில் விளக்குகள் ஏற்றப்பட்டன. மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்த மேடையில் மகாலட்சுமி வைர வைடூரிய நகைகளுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தபடி வீற்றிருந்தார்.
மைதானத்தில் 500க்கும் அதிகமான பெண்கள் சமூக இடைவெளியுடன் அமர வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் நெய் விளக்கு ஏற்றி மைதானத்தை ஒளிரச்செய்தனர். விழாவின் துவக்கத்தில் வேத விற்பன்னர்களால் வேத மந்திரங்கள் முழங்கப்பட்டன. விழாவிற்கு தலைமை தாங்கிய காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தீபத்தின்பல்வேறு சிறப்புகளை பற்றி பேசியதுடன் தீபமேற்றுவதால் கிடைக்கும் பலன்களையும் எடுத்துரைத்தார்.
பின்னர் காஞ்சி பெரியவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் விழாவில் பங்கேற்ற அபூர்வமான புகைப்படங்களையும் காமாட்சி விளக்கையும் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பிரமுகர்களுக்கு வழங்கி ஆசீர்வாதித்தார். நிகழ்ச்சியின் நிறைவாக கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
Related