திருமலை ஏழுமலையான் தரிசனத்திற்கு நேற்று முன்தினம் முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். 3,000 தரிசன டிக்கெட்டுகள் ‘ஆன்லைன்’ மூலமும் 3,000 டிக்கெட்டுகள் நேரடி முன்பதிவு டோக்கன்கள் மூலமும் வழங்கப்பட்டு வருகிறது. இதில் ஆன்லைன் டிக்கெட்டுகள் ஜூன் 30ம் தேதி வரை முன்பதிவு செய்யப்பட்ட நிலையில் நேரடி தரிசன டோக்கன்கள் ஜூன் 17ம் தேதி வரை வழங்கப்பட்டு விட்டது.
இதையறியாத பக்தர்கள் சிலர் திருப்பதிக்கு வந்து தரிசன டோக்கன் பெற சீனிவாசம் விஷ்ணுநிவாசம் அலிபிரி உள்ளிட்ட இடங்களில் காத்திருக்க துவங்கினர். அங்கு வந்த ஊழியர்கள் தரிசன டோக்கன்கள் 17ம் தேதி வரை வழங்கப்பட்டு விட்டதை தெரிவித்தனர். அத்தனை நாட்கள் திருப்பதியில் தங்க முடியாத பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
மேலும் சிலர் தரிசன டிக்கெட் மற்றும் டோக்கன்கள் குறித்து அறியாமல் அலிபிரியிலிருந்து பஸ்சில் திருமலைக்கு சென்று அங்கு உண்மை நிலையை அறிந்து திரும்பி வர நேர்ந்தது. இதனால் தேவஸ்தானம் ‘இனி தரிசன டிக்கெட் இருந்தால் மட்டுமே பக்தர்களுக்கு பஸ் பயண சீட்டு வழங்க வேண்டும்’ என கேட்டுக் கொண்டுள்ளது.