உலக மக்களுக்கு, பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும் கொரோனா வைரசை, தெய்வமாக நினைத்து, கேரளாவில் ஒருவர், தினந்தோறும் சிறப்பு வழிபாடுகள் நடத்தி வருகிறார்.
உலகம் முழுவதும், கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தி உள்ளது. நம் நாட்டில், மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், கேரளாவின் கொல்லம் மாவட்டம். கடைக்காலில், அனிலன் என்பவர், கொரோனா வைரசை ஒரு தேவியின் வடிவில், தன் வீட்டு பூஜை அறையில் வைத்து, தினந்தோறும் வழிபாடு நடத்தி வருகிறார்.
இவரது வழிபாடு. ‘வீடியோ’ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், இது விளம்பரத்திற்கான நடவடிக்கை என, சிலர் கூறியுள்ளனர். இதன் நோக்கம் குறித்து, சிலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.அனிலனின் வழிபாட்டினை, கேலி செய்துள்ளதுடன், மூடநம்பிக்கை என, பலரும் விமர்சித்துள்ளனர்.
இதுகுறித்து, அனிலன் கூறியதாவது:
அரசியலமைப்பில் எனக்குள்ள, அடிப்படை உரிமையின் பேரில், கொரோனா வைரசை தெய்வமாக நினைத்து, தினந்தோறும் பூஜைகளை நடத்துகிறேன். மக்களுக்காக உழைக்கும் சுகாதார பணியாளர்கள், டாக்டர்கள், போலீசார், தடுப்பு மருந்து கண்டுபிடிப்பில் ஈடுபட்டுள்ள ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்ட, அனைத்து தரப்பினரின் நலனுக்காக பிரார்த்தனை செய்கிறேன்.
அதுமட்டுமின்றி, வைரஸ் குறித்த விழிப்புணர்வை, என் வழியில் ஏற்படுத்துவதாக நினைக்கிறேன். வைரஸ் பரவல் உள்ள நேரத்தில், கோவில்கள் உள்ளிட்ட மத வழிபாட்டு தலங்களை திறக்க, அரசு முடிவு செய்துள்ளது அழிவை மட்டுமே ஏற்படுத்தும்.இவ்வாறு, அவர் கூறினார்.