திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஊரடங்கு விதிமுறைகளையொட்டி பல்வேறுகட்ட தளர்வுகளுடன் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. திருப்பதியிலும் சுவாமி தரிசனத்திற்கு பக்தர்கள் ஆன்லைன் மூலமாக அனுமதிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது தொடர்ந்து, பொது தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் 6,737 பேர் மட்டுமே சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப் பட்டனர். கோவிலில் 2,163 பக்தர்கள் தங்களது தலைமுடியை காணிக்கையாக செலுத்தினர். அன்று ஒருநாள் உண்டியல் காணிக்கையாக ரூ.38 லட்சத்து 55 ஆயிரம் கிடைத்ததாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடர்ந்து, திருப்பதிக்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து விட்டு வர வேண்டுமென தேவஸ்தான அதிகாரி சில தினங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார். அவர் கூறுகையில், திருப்பதி கோவிலில் அரசு விதிகளின் படி, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். திருப்பதி மட்டுமின்றி அனைத்து இடங்களிலும் , மாஸ்க் அணிவது, கைகளை கழுவுவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது.
தேவஸ்தானத்தின் மீது சிலர் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை சமூக வலைதளங்கள் மூலம் பரப்புகின்றனர். தேவஸ்தான ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இது முற்றிலும் தவறானது. பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க பல்வேறு பகுதிகளிலும் லட்டு பிரசாதம் விநியோகிக்கப்படுகிறது.
தற்போது, ஜூன் 30 வரை 300 ரூபாய் தரிசன டிக்கெட் முடிந்து விட்டது. இலவச தரிசனத்திற்கான டோக்கன் ஜூன் 22 முதல் 26 வரை 3,750 டோக்கன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலவச தரிசன டோக்கன் திருப்பதியில் உள்ள விஷ்ணு நிவாசம், சீனிவாசம், அலிபிரி பூதேவி காம்ப்ளக்ஸ் ஆகிய இடங்களில் வழங்கப்படுகின்றன. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தனர்.