இந்திய-சீன எல்லை நிலைப்பாட்டின் சிக்கல்களுக்கு மத்தியில், அயோத்தியில் கோவில் கட்டுமானத்தை தொடங்குவதற்கான திட்டத்தை ராம் மந்திர் அறக்கட்டளை இடைக்காலமாக நிறுத்தி வைத்துள்ளது.
லடாக்கில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் இந்திய மற்றும் சீன துருப்புக்களுக்கு இடையே ஏற்பட்ட வன்முறை மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்திய வீரர்கள் கொல்லப்பட்டது குறித்து கவலை தெரிவித்த ராம் மந்திர் அறக்கட்டளை, கோவில் கட்டுமானப் பணிகளை இடைக்காலமாக நிறுத்தி வைத்துள்ளது. மேலும் கட்டுமானத்திற்கான புதிய தேதி விரைவில் முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
“கோவிலின் கட்டுமானத்தைத் தொடங்குவதற்கான முடிவு, நாட்டின் நிலைமைக்கு ஏற்ப எடுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்” என்று அறக்கட்டளை உறுப்பினர் அனில் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
உத்தியோகபூர்வ அறிக்கையில், இந்திய-சீனா எல்லையில் தற்போது நிலைமை “தீவிரமாகியுள்ளது” என்றும், நாட்டைப் பாதுகாப்பது தற்போது முக்கியம் என்றும் அறக்கட்டளை குறிப்பிட்டுள்ளது. மேலும் அறக்கட்டளை இந்திய படையினருக்கும் அஞ்சலி செலுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் 9-ஆம் தேதி உச்சநீதிமன்றம், ஒரு வரலாற்று முடிவில், அயோத்தி இடத்தை கோவில் கட்டுவதற்காக ஒப்படைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. மேலும் கோவில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள ஒரு அறக்கட்டளை அமைக்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
அதேவேளையில் சன்னி வக்ஃப் வாரியத்திற்கு ஐந்து ஏக்கர் பரப்பளவில் பொருத்தமான நிலத்தை வழங்குமாறும் உச்ச நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டது.
இதற்கிடையில், பல்வேறு இந்து அமைப்புகள் அயோத்தியில் சீனாவுக்கு எதிராக போராட்டங்களை நடத்தின. இந்து மகாசபா ஆர்வலர்கள் சீனக் கொடியை எரித்தபோது, விஸ்வ இந்து பரிஷத்தின் (வி.எச்.பி) ஆர்வலர்கள் சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் உருவ பொம்மையை எரித்தனர் மற்றும் சீனத் தயாரிப்புகளை அடித்து நொறுக்கினர்.