கொரோனா ஊரடங்கிற்கு பிறகு திருப்பதி கோவில் மீண்டும் கடந்த ஒரு மாதத்திற்கு முன் திறக்கப்பட்டது. இந்த ஒரு மாத காலத்தில் ரூ 16 கோடியே 73 லட்சமும், 2 கிலோ தங்கமும் காணிக்கையாக கிடைத்துள்ளன.
இது குறித்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் அனில் சிங்கால் ‘ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு திருப்பதி கோவில் வழிபாட்டுக்கு திறக்கப்பட்ட பின் ஒரு மாத காலத்திற்குள் சுமார் 2.5 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளார்கள். ஒரு மாத காலத்தில் உண்டியலில் 16 கோடியே 73 லட்சம் ரூபாய் மற்றும் 2 கிலோ தங்கம் காணிக்கையாக கிடைத்துள்ளன. தேவஸ்தானத்தில் பணிபுரியும் ஊழியர்கள், காவலர்கள் என 3,569 பேருக்கு பரிசோதனை செய்ததில் 91 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது’ இவ்வாறு அவர் தெரிவித்தார்.