பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ., ஆகஸ்ட் 15 ம் தேதி அயோத்தியில் உள்ள ராம் கோயில் கட்டிடம் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.
உ.பி., மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலத்தில், ராமர் கோவில் கட்டுவதற்கு, உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு, நவம்பரில் அனுமதியளித்தது. இதையடுத்து, மத்திய அரசு, கோவில் கட்டுவதற்காக, கடந்த பிப்ரவரியில், ‘ஸ்ரீ ராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா’ என்ற பெயரில் அறக்கட்டளையை அமைத்தது. அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழாவை, வரும், 5ம் தேதி நடத்த, அறக்கட்டளை முடிவு செய்துள்ளது.
விழாவில், பிரதமர் மோடி பங்கேற்று, அடிக்கல்லை நாட்டுகிறார், விழாவில், பல மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் உட்பட, 200 பேர் பங்கேற்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை, அறக்கட்டளை செய்து வருகிறது. இந்நிலையில், ராமஜென்ம பூமியில், ஆக.,15ம் தேதி, தாக்குதல் நடத்த பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., திட்டமிட்டுள்ளதாக ‘ரா’ எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து உளவு அமைப்பான ‘ரா’ விடுத்துள்ள எச்சரிக்கையில், பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளான லஷ்கர் – இ – தொய்பா, ஜெய்ஷ் – இ – முகமது அமைப்புகளைச் சேர்ந்த பயங்கரவாதிகளுக்கு, ஆப்கனில் பயிற்சி அளித்து வருகிறது. மேலும், இந்தியாவுக்குள் 5 குழுக்களை அனுப்பி, பல இடங்களிலும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாவும் ‘ரா’ தெரிவித்துள்ளது.
அதே சமயம், இத்தாக்குதல்கள் அனைத்தும் உள்நாட்டுக் குழுக்கள் நடத்திய தாக்குதல் போல இருக்க ஐ.எஸ்.ஐ., திட்டமிட்டுள்ளதாகவும் எச்சரித்துள்ளது. உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து டில்லி, அயோத்தி, காஷ்மீர் உள்ளிட்ட முக்கிய இடங்களில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.