காஞ்சிக்கும் அயோத்திக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது, என காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது: காஞ்சிபுரத்திற்கும், அயோத்திக்கும் உள்ள தொடர்பு பற்றி அம்பாளின் மகிமைகளை தெரிவிக்கக்கூடிய, ‘லலிதோபாக்யானம்’ என்ற புராணத்தில் 39, 40 வது அத்தியாயங்களில் குறிப்பிடப்படுகிறது. அதன்படி, சூர்யவம்சத்தை சார்ந்த தசரதர் குழந்தைப்பேறின்றி தவித்தார். அந்த வம்சத்தின் குலதெய்வமான அம்மன் கனவில் வந்து ‘காஞ்சிபுரம் என்ற ஊருக்குச் சென்று ஜபம், ஹோமங்கள், பூஜை களைச் செய்தால் புத்திரப் பேறு உண்டாகும் என்றாள். இதையடுத்து அவர் காஞ்சிபுரத்தில் ஏழு நாட்கள் தங்கி அம்பாளுக்கு பூஜை செய்திருக்கிறார். பிறகு காமாட்சி அம்மன் ”என்னுடைய அம்சத்துடன், நான்கு குழந்தைகள் உங்களுக்குப் பிறப்பார்கள்” என்று அசரீரியாக உரைத்திருக்கிறாள்.
பஞ்சபூத ஸ்தலங்களில் ப்ரிதிவீ க்ஷேத்ரமாக இருப்பது காஞ்சிபுரம். சக்தி வழிபாட்டில் ப்ரிதிவீ தலம் அயோத்தி.ராமபிரான் பிறந்த இடத்தில் கோயில் அமைய காஞ்சி மடமும் இரண்டு பெரியவர்களும் பல முயற்சிகளை செய்துள்ளனர். 1950களில் முயற்சி துவங்கி 1980களில் தீவிரமடைந்தது. பிரச்னைக்கு தீர்வு காண மத்தியில் அமைந்த பல்வேறு அரசுகளும் ஈடுபட்டன. பலரும் காஞ்சி பெரியவரையும், ஜெயேந்திரரையும் சந்தித்துப் பேசியுள்ளனர். மத்திய ரயில்வே அமைச்சராக ஜார்ஜ் பெர்னாண்டஸ் இருந்தபோது பஞ்சகச்சம் கட்டிக் கொண்டு காஞ்சிபுரம் வந்து, பெரியவரை தரிசனம் செய்து அயோத்தி பிரச்னைக்கு ஆலோசனை கேட்டுள்ளார். மத்திய அமைச்சர்களாக இருந்த, சுபோத்காந்த் சகாய், ஸஹாபுதீன், சுப்ரமண்யன் சுவாமி காஞ்சி சங்கரமடத்துக்கு வந்து ஆலோசித்துள்ளனர்.
வாஜ்பாய் பிரதமரானதும் ஜெயேந்திரர் பல்வேறு தரப்பை சார்ந்தவர்களோடும் பேசி, இணக்கமான சூழ்நிலை உருவாக்க முயற்சித்தார்.1986ல் ஜெயேந்திரர் அலஹாபாத்திலே காஞ்சி மடத்தின் கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சிக்காக அங்கிருந்தார். அந்த ஆண்டு பிப். 1-ல் அயோத்தி கோயில் தரிசனத்திற்காக திறக்கப்பட்டது. இதையடுத்து காஞ்சிபுரத்திலிருந்து பட்டு வஸ்திரம் போர்த்திய குடை, (சத்ரம்) இரண்டு சாமரங்களை விமானத்தில் சீடர்கள் மூலம் பெரியவர் அனுப்பி வைத்தார். பிப்.10ல் ஜெயேந்திரர் இதை அயோத்தியில் சமர்ப்பித்தார்.பின்னர் ஜெயேந்திரர், சரயூ கரையில் இடத்தை வாங்கி அங்கு மடம், காமாட்சி அம்மன், ராமபிரான், ஆதிசங்கரர் விக்ரகங்களை பிரதிஷ்டை செய்தார். இப்போதும் அங்கு சங்கரமடம் சார்பாக வேதபாடசலை நடந்துகொண்டிருக்கிறது.
அயோத்தி மக்களின் கல்வி, சிறு தொழில் பயிற்சிக்காக ஒரு நிறுவனத்தை நிறுவி பல தொழிற்கல்விகள் கற்பிக்கப்பட்டன.இப்படி ராமரின் பூமியுடனும், ராமர் கோயிலுடனும் காஞ்சி மடத்துக்கு நெருங்கிய தொடர்புகள் உண்டு.தற்போது அயோத்தியில் ஸ்ரீராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை ஆகஸ்ட் 5ல் நடக்கிறது. இதில் மெய்சிலிர்க்க வைக்கும் விஷயம் என்னவென்றால், அந்த நாள் ஜெயேந்திரருடைய ஜெயந்தி நாள் (நட்சத்திர பிறந்த நாள்) ஆகும். அயோத்தி பிரச்னை தீர முயற்சித்தவரின் நட்சத்திரத்தன்று அங்கு கோயிலுக்கு பூமிபூஜை நடைபெறுவது தெய்வத்தின் உத்தரவன்றி வேறில்லை. பல மொழிகள், நம்பிக்கைகள் இருக்கும் இந்த நாட்டில் பக்தியை வளர்க்க ‘ராம ராஜ்யம்’ ஏற்பட வேண்டும். அதற்கான தொடக்கமாக அயோத்தியில் ஸ்ரீ ராமர் கோயில் கட்டும் பணி நல்ல முறையில் நடைபெற வாழ்த்துகிறோம். இவ்வாறு கூறியுள்ளார்.