கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. நாளடைவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தளர்வுகள் அளித்தாலும், தமிழகத்தில் ஆக., மாதம் முழுவதும் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகளின்றி முழு ஊரடங்கை கடைபிடிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி இன்று முழு ஊரடங்கு ஆகும். இந்நிலையில் ஆடி பெருக்கான இன்று பெரும்பாலானோர் கோவிலுக்கு சென்றும், ஆறு, குளங்கள் போன்ற நீர்நிலைகளுக்கு சென்றும் வழிபாடுகள் நடத்துவர். ஆடிப்பெருக்கில் கோவில்களில் மக்கள் கூட்டம் அலைமோதும்.
ஆனால் முழு ஊரடங்கு காரணமாக கோவில்களும் திறக்கப்படவில்லை. பொதுவாக ஆடிப்பெருக்கு நாளில் காவிரி கரையோரங்களில் மக்கள் பெருந்திரளாக கூடுவர். ஆனால் இந்த முறை அனைத்து காவிரி கரையோர பகுதிகளில் கூடுதுறைகளில் பொதுமக்கள் வழிபாடு இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன. பொது முடக்கத்தையும் மீறி மயிலாடுதுறையில் காவிரி துலாக்கட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கூடி காவிரி அம்மனுக்கு வழிபாடு நடத்தி, புனித நீராடி ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடினர். பக்தர்கள் மற்றும் புதுமணத் தம்பதிகள் கருகுமணி, வளையல், காப்பரிசி, கண்ணாடி, பழவகைகளை வைத்து, தங்கள் வாழ்வு வளம் பெற காவிரி அன்னைக்கு வழிபாடு நடத்தி புனித நீராடினர்.