வரும், 5ம் தேதி, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்படுகிறது. பிரதமர் மோடி உட்பட, பலர் கலந்து கொள்கின்றனர்.
கொரோனாவால் இந்த நிகழ்ச்சி அடக்கி வாசிக்கப்படுகிறது.பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கைகளில், ராமர் கோவில் கட்டுவோம் என, தொடர்ந்து வாக்குறுதி அளிக்கப்பட்டு வந்தது. இப்போது அதை, மோடி தலைமையில் நிறைவேற்றுகிறது, பா.ஜ., அயோத்தி ராமர் கோவிலுக்கும், தமிழகத்திற்கும் உள்ள தொடர்பு குறித்து, டில்லியில், குறிப்பாக பா.ஜ., வட்டாரங்களில் அலசப்படுகிறது.
முதலாவதாக, காஞ்சி சங்கராச்சார்யார், ஜெயேந்திர சரஸ்வதி. ராமருக்கு கோவில் கட்டியே ஆக வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை, ஆன்மிக ரீதியாக மேற்கொண்டார், ஜெயேந்திரர். அடுத்தவர், மூத்த வழக்கறிஞரும் இந்தியாவின் முன்னாள் அட்டர்னி ஜெனரலுமான, கே. பராசரன். சமஸ்கிருத பண்டிதரான இவர் தான், ராமர் கோவில் வழக்கில், உச்ச நீதிமன்றத்தில், முன் நின்று வாதாடியவர். ராமர் கோவில் டிரஸ்டியாக நியமிக்கப்பட்டுள்ளார். கோவில் கட்ட, சட்ட ரீதியாக உதவியவர், இவர்.
மூன்றாவதாக, மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா. ராமர் கோவில் கட்டுவதற்காக, முதன் முதலாக ஆதரவளித்த, மாற்றுக் கட்சி அரசியல் தலைவர் இவர். கோவில் கட்ட, மற்ற கட்சிகள் எல்லாம் எதிர்ப்பு தெரிவித்த போது, முதல்வர் பதவியில் இருந்த போதும், எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஆதரவு கொடுத்தார், ஜெயலலிதா. அ.தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையிலேயே கோவில் கட்ட வேண்டும் என சொன்னவர். அரசியல் ரீதியாக, மோடிக்கு இந்த கோவில் விவகாரத்தில் உதவினார், ஜெ.,
இப்படி இந்த மூவரும், ஆன்மிக, சட்ட மற்றும் அரசியல் ரீதியாக, அயோத்தியில் கோவில் கட்ட உதவி செய்துள்ளது குறித்து, பா.ஜ., வட்டாரங்களில் ஆர்வமாக உரையாடிக் கொள்கின்றனர்.