அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை, இன்று (ஆக.,05) காலை நடக்கிறது. பிரதமர் மோடி 40 கிலோ வெள்ளியிலான செங்கல்லை, கருவறை அமையும் இடத்தில் வைத்து, அடிக்கல் நாட்டுகிறார்.
உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில், ராமர் கோவில் கட்ட, உச்ச நீதிமன்றம் கடந்தாண்டு அனுமதி வழங்கியது. கோவில் கட்டுவதற்காக, மத்திய அரசு, ‘ஸ்ரீ ராமஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா’ என்ற பெயரில், அறக்கட்டளையை அமைத்தது.
இந்நிலையில், அயோத்தியில் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, இன்று காலை நடக்கிறது. இதையொட்டி, அயோத்தி மாவட்டம் முழுவதும், விழாக்கோலம் பூண்டுள்ளது. அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு, பூமி பூஜைக்கான சடங்குகள், அயோத்தியில் இரு நாட்களுக்கு முன்னரே துவங்கின. இதற்காக, வாரணாசியிலிருந்து வேதவிற்பன்னர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
மோடி வருகை
இன்று காலை, 8:00 மணி முதல், அடிக்கல் நாட்டு விழாவுக்கான பூஜைகள் துவங்குகின்றன. விழாவில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, டில்லியிலிருந்து, காலை 9:35 மணிக்கு சிறப்பு விமானத்தில் புறப்பட்டு, லக்னோவுக்கு செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம், அயோத்தி செல்கிறார். முதலில், ஹனுமன்கர்கி கோவிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு செய்கிறார். அடுத்து, 12:00 மணிக்கு, ராம ஜன்மபூமிக்கு செல்கிறார். பகல், 12:40 மணிக்கு, கோவில் கருவறை அமைய உள்ள இடத்தில், 40 கிலோ வெள்ளியால் செய்யப்பட்ட செங்கல்லை வைத்து அடிக்கல் நாட்டுகிறார். மதியம், 2:00 மணியளவில், அயோத்தியிலிருந்து புறப்பட்டு, டில்லி திரும்புகிறார்.
கொரோனா பரவல் காரணமாக, 200 வி.வி.ஐ.பி.,க்களுக்கு மட்டுமே விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அயோத்தி நிலம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த இக்பால் அன்சாரி, முக்கிய விருந்தாளியாக பங்கேற்கிறார். ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத், உத்தர பிரதேச கவர்னர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் உட்பட, பலரும் விழாவில் பங்கேற்கின்றனர்.
நனவான மோடியின் கனவு
பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி 1990-ல் குஜராத்தில் இருந்து அயோத்திக்கு நடத்திய ரத யாத்திரையிலும், 1991-ல் பா.ஜ., மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷியின் ஒற்றுமை யாத்திரையின் போதும் பிரதமர் மோடி அயோத்திக்கு உடன் சென்றார். அங்கு நிருபர்களிடம் மோடியை காட்டி, ‛இவர் தான் குஜராத் பா.ஜ. தலைவர்,’ என ஜோஷி அறிமுகம் செய்து வைத்தார். மோடியிடம் நிருபர்கள் ‛அடுத்த முறை அயோத்திக்கு எப்போது வருவீர்கள்?’ எனக்கேட்டனர். அதற்கு அவர், ‛ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவிற்கு வருவேன்,’ என்றார். இன்று அவர் அடிக்கல் நாட்டுகிறார். தான் கூறியது போலவே மோடியின் கனவு நிறைவேறியுள்ளது.
கனவு நிறைவேறியது
ராமர் கோவில் கட்டுவதில் மிகவும் ஆர்வம் காட்டிய பா.ஜ., மூத்த தலைவரான எல்.கே. அத்வானி பூமி பூஜையில் பங்கேற்றவில்லை. வீடியோ கான்பரன்சிங் மூலம் பார்வையிடுகிறார். பூமி பூஜை குறித்து அவர் கூறியதாவது: ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பது எனது இதயத்திற்கு நெருக்கமான கனவு, அந்த கனவு நிறைவேறியுள்ளது. இது எனக்கு மட்டுல்ல, நாட்டு மக்களுக்கு மகத்தான, வரலாற்று சிறப்புமிக்க நெகிழ்ச்சியான நாள். ராமர் கோவில் கட்டுவதற்கான பல தியாகங்களை மேற்கொண்ட அனைவரையும் நன்றியுடன் நினைவுகூறுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.