அயோத்தியில் அமைய உள்ள ராமர் கோவில், ‘நாகர்’ கட்டடக் கலையின் அடிப்படையில் அமைகிறது. 5 குவி மாடங்களுடன், 161 அடி உயர கலச கோபுரத்துடன் அமையுள்ளது. இந்த கோவிலை வடிவமைத்து கட்டும் பொறுப்பை, குஜராத்தில் உள்ள சோம்நாத் ஆலயத்தை வடிவமைத்து கட்டிய பிரபாகர்ஜி சோம்புராவின் பேரன், அகமதாபாத்தை சேர்ந்த சந்திரகாந்த் பாய் சோம்புரா ஏற்றுள்ளார்.
இவர் தான் குஜராத்தில் உள்ள அக்ஷர்தாம் கோவிலையும் வடிவமைத்து கட்டியுள்ளார். 77 வயதான சந்திரகாந்த் பாய் சோம்புராவிடம், இந்த கோவில் வடிவமைப்பு பணியை, 1990ம் ஆண்டில், விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவராக இருந்த அசோக் சிங்கால் அளித்துள்ளார். அப்போது கோவிலுக்குள் அளவிடும் டேப்பை கூட எடுத்துச் செல்ல அனுமதி இல்லாத நிலையில், கால்களாலேயே அளந்து, அதன் அடிப்படையில், கோவிலுக்கான வரைபடத்தை உருவாக்கினார். அதற்கான பணிகளை கடந்த 30 ஆண்டுகளாக மேற்கொண்டு வந்துள்ளார்.
சந்திரகாந்த் தெரிவித்துள்ளதாவது: முதலில் 212 தூண்கள் உடன் 3 குவிமாடங்கள் மற்றும் 141 அடி உயர கலச கோபுரத்துடன் கோவிலை கட்ட தீர்மானித்தோம். அதற்கு ஏற்பவே அனைத்துப் பணிகளையும் இதுவரை மேற்கொண்டோம். உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பின், போதிய இடம் கிடைத்துள்ளது. ராமர் பிறந்த இடத்தில் அமையவுள்ள இந்த வரலாற்று சிறப்பு மிக்க ஆலயத்தைப் பார்வையிட, உலகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் நாள்தோறும் வருவார்கள். அதற்கு ஏற்ப, கோவில் வரைபடத்தை மாற்றி அமைத்துள்ளோம். அதன்படி தற்போது, 360 தூண்களுடன் விசாலமான 5 குவி மாடங்களுடன், 161 அடி உயர கோபுர கலசத்துடன் அமைக்கப்பட உள்ளது. இவ்வாறு சந்திரகாந்த் பாய் சோம்புரா தெரிவித்தார்.
கர்ப்ப கிரகத்தை விட எந்த ஒரு கட்டடமும் பெரியதாகி விடக் கூடாது என்ற சிற்பக்கலை மற்றும் வாஸ்து சாஸ்திர அடிப்படையில் இந்த கோவிலை கட்ட உள்ளோம்.பிரதான கோவிலை சுற்றி நான்கு சிறிய கோயில்கள் அமைக்கப்பட உள்ளது. கர்ப்பக்கிரகம், குடு மண்டபம், நிருத்ய மண்டபம், ரங்க மண்டபம், கீர்த்தனை மண்டபம் மற்றும் பிரார்த்தனை மண்டபம் ஆகியவை அமைக்கப்படவுள்ளன. பத்து ஏக்கரில் 3 தளங்களாக கோவில் அமைய உள்ள நிலையில், கோவில் வளாகம் 57 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான கற்கள் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பன்ஷி மலையில் இருந்து கொண்டு வரப்பட உள்ளது.
மூன்றரை ஆண்டுகளில் கோவிலை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் பல்வேறு மொழிகளில் ஸ்ரீராம் என எழுதப்பட்டு, கடந்த 30 ஆண்டுகளாக சேகரிக்கப்பட்ட செங்கல்கள் இந்த கோவிலின் அடித்தளத்திற்கு பயன்படுத்தப்பட உள்ளது, இதன் சிறப்பு அம்சமாகும். கோவில் படிக்கட்டுகள் 16 அடி அகலத்தில் அமைக்கப்பட உள்ளது. ரங்க மற்றும் நிருத்திய மண்டபங்கள் கடந்த காலங்களில், கோவிலில் பணியாற்றும் தேவதாசி பெண்கள் நடனமாட பயன்பட்ட நிலையில், தற்போது அவை, மூன்று பக்கமும் இருந்து பகவான் ராமரை தரிசிக்கும் வகையில் அமைக்கப்பட உள்ளது. இவ்வாறு சந்திரகாந்த் பாய் சோம்புரா தெரிவித்துள்ளார்.