ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டிய பின் பிரதமர் மோடி, ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்பதற்கு பதிலாக, ‘ஜெய் சியா ராம்’ என, முழக்கமிட்டார். இந்த கோஷம் குறித்து இந்து துறவிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
அயோத்தி ராம ஜென்ம பூமியில் நேற்று, ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டிய பின் பேசிய பிரதமர் மோடி, ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்பதற்கு பதிலாக ‘ஜெய் சியா ராம்’ எனக் குறிப்பிட்டார். மேலும்,’நாம் எல்லோரும் ராமரையும் மாதா ஜானகியையும் நினைவு கூறவேண்டும். எல்லோரும் சேர்ந்து கூறுவோம், ஜெய் சியா ராம்’ என, வலியுறுத்தினார். அவர் இப்படி வித்தியாசமாக குறிப்பிட்டது குறித்து நேற்று இணையத்தில் பலரும் கேள்வி எழுப்பி இருந்தனர்.
ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக அயோத்தி பிரச்சனை துவங்கிய 1984ம் ஆண்டில் இருந்து, ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்ற கோஷம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆக்கப்பட்டது. இந்து அமைப்புகள் அனைத்தும் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ கோஷத்தை மட்டுமே பயன்படுத்தினர். அதிலும் கடந்த 6 ஆண்டுகளாக ‘ஜெய் ஸ்ரீ ராம்’ கோஷம் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்படி இருக்கையில், பிரதமர் மோடி ‘ஜெய் சியா ராம்’ என, ஏன் குறிப்பட்டார். அந்த முழக்கத்தின் அர்த்தம் என்ன… காரணம் என்ன என்ற கேள்வி அனைவரிடத்திலும் தொற்றிக்கொண்டது. அந்த கோஷத்திற்கான விளக்கங்கள் தற்போது வெளியாகி உள்ளன.
இதுகுறித்து, இந்து மத துறவிகள் தெரிவித்துள்ளதாவது:
‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்பது அதிரடியான ஒரு போர் முழக்கம். அதற்கு எதிர் மாறானது, ‘ஜெய் சியா ராம்’. ஜெய் சியா ராம் என்பது சகோதரத்துவம், அன்பை உணர்த்தும் கோஷம்.
ஜெய் ஸ்ரீ ராம் என்பது மிகவும் வலுவான ஒரு கோஷம். சண்டை, வீரம் ஆகியவற்றை பறைசாற்றும் விதமாக இந்த கோஷம் எழுப்பப்படும். அதேபோல் ஜெய் ஸ்ரீ ராம் என்பதில் சீதையின் பெயர் இல்லை. ஆனால் ஜெய் சியா ராம் என்பது சீதையையும் போற்றும் குணம் கொண்டது. அவரையும் போற்றும் வகையில் ஜெய் சியா ராம் உள்ளது. இதனால், ஜெய் சியா ராம் என்ற அன்பையும், அச்சமற்ற தைரியத்தையும் குறிக்கும் கோஷத்தை பிரதமர் மோடி பயன்படுத்தினார்.
இவ்வாறு அவர்கள் விளக்கமளித்துள்ளனர்.
‘அயோத்தி பிரச்சனை சுமுகமாக முடிந்துள்ளது. இதனால் சண்டை, வீரத்தைக் குறிக்கும் ஜெய் ஸ்ரீ ராம் என்ற வலுவான கோஷம் தேவையில்லை. இனி, இந்தியாவின் வளர்ச்சியே முக்கியம். அதற்கு சகோதரத்துவமும், அன்பும் முக்கியம். அதை குறிப்பால் உணர்த்தும் விதமாக, பிரதமர் மோடி, ‘ஜெய் சியா ராம்’ கோஷத்தை முன்வைத்துள்ளார்’ என, ஒரு தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர். ‘ஜெய் ஸ்ரீ ராமில் இருக்கும் ஸ்ரீ என்பதே சீதையை குறிக்கும் சொல்தான். அதனால், ஜெய் ஸ்ரீ ராம் மற்றும் ஜெய் சியா ராம் இரண்டுமே ராமரை புகழும் கோஷம்தான். இரண்டு கோஷத்திற்கும் வேறுபாடு இல்லை’ எனத் தெரிவித்துள்ளனர்.