விருதுநகர் பாண்டியன் நகரில் பிரசித்தி பெற்ற துள்ளுமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு கருவறையில் இருக்கும் குழந்தை மாரியம்மன் ஆண்டுக்கு ஒரு முறை ஆடி கடைசி வெள்ளியில் மட்டும் கண் திறந்து தரிசனம் தருகிறாள். அதே போல் ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே படப்பு பூஜையும் நடக்கிறது. இதில் நாட்டுக்கோழி கறி , கருவாடு, முட்டை, கொழுக்கட்டை, துள்ளுமாவு, அவல், பொரி, கடலை, பானகம், இளநீர், பழ வகைகள், மாவிளக்கு ஏற்றி அகத்தி கீரையுடன் சக்தி கிடாய் பலியிட்டு பூஜைகள் நடக்கும். படப்பு பூஜை முடிந்த பின் கோயில் பூசாரி மேல் அம்மன் இறங்கி ஒருவரை மட்டும் அழைப்பாள்.
அவருக்கு மஞ்சள் நீர் ஊற்றி வேப்பஞ்சேலை சுற்றி மாலைகள் அணிவிக்கப்படும். அவர் மீது அம்மன் இறங்கி அக்னி சட்டி எடுத்து ஊர்வலம் சென்று மீண்டும் கோவிலுக்கு வரும் நிகழ்ச்சியும் நடக்கும்.இதன்பின் பக்தர்களுக்கு கறிவிருந்து வழங்கப்படும். ஆடி கடைசி வெள்ளி அடுத்து வரும் ஞாயிறு அன்று பக்தர்கள் பால்குடம் சுமந்து பாகுபாடின்றி கருவறைக்குள் சென்று அனைவரும் தங்கள் கைகளாேலயே அம்மனுக்கு அபிஷேகம் செய்கின்றனர். ஆடி மாதம் பிறந்தது முதலே பக்தர்கள் மஞ்சள் பாசிமணி மாலை அணிந்து 3,5,7,21 நாட்கள் என விரதம் இருப்பர். இதோடு அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தால் குழந்தை பாக்கியம், திருமண தடை, தீராத நோய்கள், மாணவர்கள் கல்வி, பருவமழையுடன் விவசாயமும் செழிக்கும் என்பது நம்பிக்கை.