இன்று வீடுகள் தோறும் வேல் பூஜையுடன், கந்த சஷ்டி கவசம் ஒலிக்கட்டும்’ என, தமிழக பா.ஜ.க தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக பா.ஜ.க தலைவர் முருகன் வெளியிட்ட அறிக்கை: ‘கருப்பர் கூட்டம்’ என்ற அமைப்பினர், தமிழ் கடவுள் முருகனை வேண்டி பாடும், கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தும் போக்கை நினைத்து, உலகமெங்கும் வாழும் தமிழர்கள், மன வேதனையில் உள்ளனர். தமிழகத்தில் உள்ள, கோடிக்கணக்கான ஆன்மிக பக்தர்கள், முருக பக்தர்கள், காவடி குழுக்கள், பாதயாத்திரை குழுக்கள் வேண்டுகோளை ஏற்று, இன்று மாலை, 6:01 மணிக்கு, பக்தர்கள் அனைவரும், வீடுகள் தோறும், வேல் அல்லது முருகர் படத்தை வைத்து, பூஜை செய்ய வேண்டும். கோடிக்கணக்கான பக்தர்களின் ஒற்றுமை உணர்வினை, உலகிற்கு காட்டுவோம். மத நல்லிணக்கத்திற்கு எதிரான சக்திகளை முறியடிப்போம். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
‘வீடுகள் தோறும் இன்று வாசலில் வேல் வரைந்து, கந்த சஷ்டி பாடி ஒற்றுமையை வெளிப்படுத்துங்கள்’ என ஸ்ரீவில்லிபுத்துார் சடகோப ராமானுஜ ஜீயர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவரது செய்திகுறிப்பு: கடவுள் முருகப்பெருமானின் புனித கவசமான கந்த சஷ்டி கவசத்தை கயவர்கள் இழிவுபடுத்தியது மிகுந்த அதிர்ச்சிக்குரியது. அவர்களை அரசு கைது செய்திருப்பது மனதிற்கு ஆறுதல் அளிக்கிறது.
மடாதிபதிகள், துறவியர்கள், ஆதினங்கள் வேண்டுகோள்படி இன்று காலை ஒவ்வொருவரின் வீட்டின் வாசலில் வேல்வரைந்தும், மாலையில் வீட்டில் விளக்கேற்றி கந்த சஷ்டி கவசத்தை பாடி நமது ஒற்றுமையை வெளிப்படுத்தவேண்டும். இதன்மூலம் இனிமேல் எவரும் நம் கடவுள்களை இழிவுபடுத்தாத நிலையை ஏற்படுத்தவேண்டும், என குறிப்பிட்டுள்ளார்.