கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் பக்தர்கள் இல்லாமல் ஞாயிற்றுக்கிழமை நிறை புத்தரிசி பூஜை நடைபெற்றது.
நெற்பயிர்கள் செழித்தோங்கி அறுவடை அதிகரித்து நாடு செழிப்படைய வேண்டும் என்பதற்காக ஆண்டுதோறும் நிறைபுத்தரிசி பூஜை நடத்தப்படுகிறது. நிகழாண்டு ஆடி நிறைபுத்தரிசி பூஜையை முன்னிட்டு அறநிலையத் துறைக்குச் சொந்தமான வயல்களில் இருந்து நெற்கதிர்கள் அறுவடை செய்யப்பட்டு கன்னியாகுமரி அறுவடை சாஸ்தா கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
பின்னர் நெற்கதிர்கள் மேள, தாளம் முழங்க பகவதியம்மன் கோயிலுக்கு எடுத்து வரப்பட்டு மூலஸ்தான மண்டபத்தில் உள்ள அம்மன் முன் படைக்கப்பட்டு கோயில் மேல்சாந்திகள் பூஜை நடத்தினர். தொடர்ந்து நெற்கதிர்கள் அம்மனுக்கு மாலையாக அணிவிக்கப்பட்டது.
கரோனா பொதுமுடக்கம் காரணமாக பூஜையில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்படவில்லை. இந்த பூஜையை முன்னிட்டு அதிகாலையில் நிர்மாலய பூஜை, விஸ்வரூப தரிசனம், சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, உஷபூஜை, பந்திரடி பூஜை, உச்சிகால பூஜை, உச்சிகால தீபாராதனை, அன்னதானம், மாலையில் சாயரட்சை தீபாராதனை, இரவு அம்மன் பல்லக்கில் கோயில் உள்பிரகாரத்தில் வலம் வருதல், அத்தாழபூஜை, ஏகாந்த தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.
மேலும், அம்மனுக்கு தங்க கவசம், வைர கிரீடம், வைரக்கல் மூக்குத்தி மற்றும் திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் அம்மன் அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோயில்களின் இணைஆணையர் ம.அன்புமணி, பகவதியம்மன் கோயில் மேலாளர் ஆறுமுகநயினார் ஆகியோர் செய்திருந்தனர்.