பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்குவது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் ஆகும். அண்ணாமலையார் கோவிலில் கடந்த நவம்பர் மாதம் 20ம் தேதி திருக்கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வந்தது.
கொரோனா நோய்தொற்று காரணமாக அண்ணாமலையார் கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதி இல்லாமல் நடைபெற்றது. குறிப்பாக காலை மற்றும் மாலை வேளைகளில் பஞ்சமூர்த்திகள் மாட வீதியில் வலம் வருவது ரத்து செய்யப்பட்டு அண்ணாமலையாரின் கோவிலுக்குள் உள்ள 5ம் பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் 10ம் நாள் திருவிழா கடந்த நவம்பர் மாதம் 29ம் தேதி அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கருவறை முன்பு ஏகன் அனேகனாக மாறும் தத்துவத்தினை விளக்கும் விதமாக பரணி தீபமும், அன்று மாலை 6 மணி அளவில் அனேகன் ஏகனாக மாறும் தத்துவத்தினை விளக்கும் விதமாக கோவிலின் பின்புறமுள்ள 2,668 அடி உயரம் கொண்ட மலைமீது மகா தீபம் ஏற்றப்பட்டது.
இந்த மகா தீபம் தொடர்ந்து 10 நாட்கள் ஏற்றப்பட்டு வந்த நிலையில் பதினோராம் நாளான இன்றுடன் (09-12-20) இந்த மகா தீபம் ஏற்றும் நிகழ்வு நிறைவு பெறுகிறது. இதற்குப் பிறகு தீப மலையிலிருந்து தீபம் ஏற்றிய கொப்பரையை அண்ணாமலையார் கோவிலுக்கு கொண்டு வந்து கொப்பரையில் இருந்து நெய் சேகரிக்கப்பட்டு அதில் மூலிகைப் பொருட்கள் மற்றும் வாசனை திரவியங்கள் சேர்த்து மை தயாரிக்கப்படும். இந்த தீப மை பிரசாதத்தினை வருகிற (30.12.2020) ஆருத்ரா தரிசனத்தின் போது சிவகாமி சமேத நடராஜருக்கு பொட்டாக வைக்கப்பட்டு பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுவது குறிப்படத்தக்கது.