ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியை கிருஷ்ண ஜென்மாஷ்டமி அல்லது கோகுலாஷ்டமி என்றும் அழைக்கின்றனர். இந்த வருட கிருஷ்ண ஜென்மாஷ்டமி இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. ஸ்ரீகிருஷ்ணரின் பிறப்பை குறிப்பதே இந்த தினமாகும். இந்து மதத்தில் அதிகமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் இதுவும் ஒன்று.
ஸ்ரீகிருஷ்ணரை பற்றி அனைவரும் அறிவோம். அவர், திருமாலின் அவதாரம். உலக நன்மைக்காக குருஷேத்திர போரை நடத்தி அதில் நீதியின் பக்கம் நின்று பாண்டவர்களை வெற்றிபெற வைத்தார். கிருஷ்ணருடைய அருளும், புத்திக்கூர்மையும் இல்லையெனில் போரில் பாண்டவர்கள் நிச்சயம் வெற்றிபெற்றிருக்க முடியாது. அதுமட்டுமின்றி போரில் மனமுடைந்திருந்த அர்ஜுனனுக்கு அவர் கூறிய கீதஉபதேசமே பகவத்கீதை என்னும் அரிய நூலானது. அதனால்தான் அவரை கிருஷ்ண பரமாத்மா என்று நாம் அழைக்கிறோம்.
ஆனால், மகாபாரதம் முழுவதுமே பாண்டவர்கள் மற்றும் கவுரவர்கள் இடையே இருந்த பகை, திரவுபதியின் சபதம் மற்றும் பாண்டவர்கள் எவ்வாறு போரில் வெற்றியடைந்தார்கள் என்பது பற்றி மட்டுமே இருக்கும். கிருஷ்ணருடைய தனிப்பட்ட வாழ்க்கையும், அவருடைய மகிமைகளும் பெரிதாக பேசப்பட்டிருக்காது. கிருஷ்ண லீலையில் கூட அவரின் குழந்தை பருவம் பற்றிய குறிப்புகள் மட்டுமே இருக்கும். எனவே இங்கு கிருஷ்ண பரமாத்மாவின் அற்புதமான குணங்கள் பற்றி பலரும் அறியாத செய்திகளை இங்கு பார்க்கலாம்.
கிருஷ்ண பரமாத்மா குழந்தைப் பருவத்தில் மிகவும் விளையாட்டுத்தனமான, இனிமையான, மகிழ்ச்சியான மற்றும் அழகான தன்மைகளைக் கொண்டிருந்தார். இதனால், குழந்தைகள் விரும்பும் சிறந்த கடவுள்களில் ஒருவராக மாறினார். மேலும், அவரது வாழ்வில் பல பிரச்சினைகள் இருந்தபோதிலும், வாழ்க்கையை ஒரு கொண்டாட்டமாகவே அவர் பார்த்தார். அதனால் வாழ்வு வண்ணமயமாக மாறும் என்பதை அவர் கற்றுத் தருகிறார். இதனால் பகவான் கிருஷ்ணர் மகிழ்ச்சியினர் கடவுளாகிறார்.
கிருஷ்ணர் எல்லா காலத்திலும் நெருக்கடியில் கூட மிகப் பெரிய திட்டமிடுபவராக இருந்தார். அவர் சூழ்நிலைக்கு ஏற்பவும், கையாள வேண்டிய நபர்களுக்கு ஏற்பவும் வெவ்வேறு தலைமைத்துவ பாணிகளை பின்பற்றுகிறார். இதனால் தான் அவரால், 1.53 மில்லியன் போர்வீரர்களைக் கொண்ட பாண்டவர்களின் ராணுவத்தை கட்டுப்படுத்த முடிந்தது.
ஓர் ஆசிரியராக, பகவான் கிருஷ்ணர் யோகா, பக்தி, மற்றும் வேதங்களின் உயர்ந்த உண்மைகளை அர்ஜுனனுக்கு கற்பித்தார். இதன் மூலம், கிருஷ்ணர் தன்னை அனைத்து குருக்களுக்கும் சிறந்த ஆசிரியர் மற்றும் குரு என்பதை நிரூபிக்கிறார்.
குருக்ஷேத்ரா போர்க்களத்தில் 18க்கும் மேற்பட்ட ஆலோசனை அமர்வுகளில் 574 கேள்விகளுக்கு அவர் பொறுமையாக பதிலளிப்பார். மேலும், அர்ஜுனனுக்கு கற்பிக்கும் முன், அவரது சந்தேகங்கள், குழப்பங்கள் மற்றும் உணர்ச்சிகரமான முடிவுகளையும் கேள்விகளையும் வெளிப்படுத்த அனுமதிக்கிறார். இதுவே ஒரு மிகச் சிறந்த குருவுக்கான மிகப் பெரிய குணம்.
புராணங்களைக் கொண்டாடும் இந்து உலகில், சுதாமா – கிருஷ்ணரின் கதைக்கு பெரும் மதிப்பு உண்டு. சுதாமா அன்பான நண்பர் மட்டுமல்ல கிருஷ்ணரின் சிறந்த பக்தரும் கூட. சுதாமாவுக்கு காட்டிய முழு மனத்தாழ்மையே காரணமாக, பகவான் கிருஷ்ணர் சிறந்த நண்பராக உருவெடுத்தார்.
சிறுவயது நண்பர்களை காலம் பிரித்தது. சுதாமா பல காலம் கழித்து கிருஷ்ணரின் அரண்மனைக்கு வந்த போது வாயில்களை நோக்கி கிருஷ்ணர் ஓடினார். சுதாமா கொண்டு வந்த எளிய பரிசு கிருஷ்ணருக்கு எல்லாவற்றையும் விட விரும்பத்தக்கதானது. மேலும், திரவுபதியின் கவுரவத்தை கவுரவர்களிடமிருந்து காக்க, அவர் எல்லோருக்கும் தேவைப்படும் நண்பராக மாறினார்.
குழந்தையாக இருந்தபோது வெண்ணெயை மிகவும் விரும்பினார். எங்கு கண்டாலும் அதை சாப்பிட்டார். யார் வைத்திருந்தாலும் அதை எடுத்துக்கொள்வார். குழந்தையாக மிகவும் குறும்புக்காரராக இருந்தார். மேலும், கோபிகளின் ஆடைகளை குறும்புத்தனமாக மறைப்பார் என்றும் நம்பப்படுகிறது. இது தெய்வீக அன்பின் ஓர் எடுத்துக்காட்டு. மேலும் அனைவரையும் நம்முடையவர்களாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற தத்துவத்தை இதன் மூலம் உணர்த்தினார்.
ஒரு சிறந்த ஆசிரியர் முன்னதாக ஒரு சிறந்த மாணவராக இருக்க வேண்டும். கிருஷ்ணரும் பலராமரும் 64 நாட்களில் 64 அறிவியல் மற்றும் கலைகளில் தேர்ச்சி பெற்றனர். அவர்களது குரு, சூரியனுக்கும் சந்திரனுக்கும் பயிற்றுவிப்பதாக கருதினார். மேலும், ஒரு புராணக்கதையில், கிருஷ்ணர் தனது குருவின் விருப்பங்களை நிறைவேற்ற எமலோகாம் வரை பயணம் செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பகவான் கிருஷ்ணர் குறிக்கும் முக்கிய குணம் அவரது எளிமை. அவர் பிருந்தாவனத்திற்குச் செல்லும் முன், வட இந்தியாவில் ஒரு மாடு மேய்ப்பவர்களின் கிராமமான கோகுலத்தில் கழித்தார்.
அங்கு அவர் சாதாரண மனிதர்களிடம் உறவையும் அன்பின் பிணைப்புகளையும் உருவாக்கினார். அவர் ஏழை பிராமணரான சுதாமாவுடன் நண்பராக இருந்தார். அவர் வாழ்க்கையில் எல்லாவற்றையும் மிக எளிதாக எடுத்துக்கொண்டார். மிகப் பெரிய பிரச்சினைகளையும், மிகப் பெரிய போரையும் கூட எளிமையாக தீர்த்தார்.
பகவான் கிருஷ்ணர் உண்மையில் பூமியில் எவ்வாறு வாழ வேண்டும் என்பதைக் கற்றுத்தந்த சிறந்த குரு. உயர்ந்த அறிவின் உன்னதமான பகுதியைப் புரிந்துகொள்ள, அவரது வாழ்க்கை அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. நாம் அனைவரும் தேட முயற்சிக்கும் அனைத்து அறிவையும் கொடுக்கும் ஒரே நூல் பகவத் கீதை.