லண்டனில் உள்ள புகழ்பெற்ற ஸ்வாமிநாராயண் கோவிலின் வெள்ளி விழாவை முன்னிட்டு, பிரிட்டன் இளவரசர் சார்லஸ், சிறப்பு, ‘வீடியோ’ செய்தியை வெளியிட்டுள்ளார்.
ஐரோப்பிய நாடான பிரிட்டனின் தலைநகர் லண்டனில், பி.ஏ.பி.எஸ்., எனப்படும், ‘போச்சாசன்வாசி ஸ்ரீ அக்ஷர் புருஷோத்தம் ஸ்வாமி நாராயண் சன்ஸ்த்’ அமைப்பால் நிர்வகிக்கப்படும், ஸ்வாமி நாராயண் கோவில் உள்ளது. பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் இந்த கோவிலுக்கு,1995 ஆகஸ்ட், 20ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. இந்த கோவிலுக்கு, பிரதமர் போரிஸ் ஜான்சன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல தலைவர்கள் வந்து சிறப்பு பூஜைகள் நடத்தியுள்ளனர்.
இந்நிலையில், கோவில் திறக்கப்பட்டு, 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதன் வெள்ளி விழாவை முன்னிட்டு, பிரிட்டன் இளவரசர் சார்லஸ், சிறப்பு வீடியோ செய்தியை நேற்று வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: வழிபாடு, கற்றல், கொண்டாட்டம், அமைதி மற்றும் சமூக சேவை போன்றவற்றை உள்ளடக்கிய இடமாக, ஸ்வாமிநாராயண் கோவில் விளங்குகிறது. இந்த கோவில் கட்டுமானத்தின் சிறப்புமிக்க அழகு மற்றும் கைவினைத்திறன், என்னை பெரிதும் ஈர்த்தது.
பி.ஏ.பி.எஸ்., தன்னார்வலர்கள் உள்ளிட்ட ஹிந்து சமூகத்தினர், ஆதரவற்ற மக்களுக்கு தொடர்ந்து பல உதவிகளை செய்து வருகின்றனர். ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவு வழங்குதல், முதியோருக்கு தேவையான உதவிகளை செய்தல் போன்ற பல அளப்பறியபணிகளை செய்து வருகின்றனர். அவர்களை நினைத்து பெருமைப்படுகிறேன். இவ்வாறு, அவர் கூறினார். இந்த கோவிலுக்கு, இளவரசர் சார்லஸ், நான்கு முறை சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.