இந்தியா சுதந்திரம் அடைய பாடுபட்ட எண்ணற்ற தேச தலைவர்களில் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரும் ஒருவர். அவர் உலகின் முதல் தெய்வம் பாரத அன்னை தான்,’என்றார். பாரத அன்னைக்கு கோயில் எழுப்பி வழிபாடு நடத்துவதற்காக வேலுாரில் பாப்பாரப்பட்டியில் நான்கரை ஏக்கர் நிலம் வாங்கினார். அவரது கனவு கடைசி வரை நிறைவேறாமல் போனது.
பாரதியாரின் எண்ணத்திற்கு செயல்வடிவம் கொடுக்க விருதுநகர் தேசபக்தர் நாகராஜன் முயற்சி எடுத்தார். இதன் பயனாக செங்குன்றாபுரம் ரோட்டில் நாராயணபுரத்தில் நான்கரை ஏக்கர் நிலம் வாங்கினார். அதில் பாரத அன்னைக்கு 31 அடி உயரத்தில் தத்ரூபமாகவும், மிடுக்காகவும் சிலை வடித்து கோயில் எழுப்பினார். சிலை முன் 60 அடி உயர கொடிமரமும் அமைத்தார். அதில் தேச ஒருமைப்பாட்டை பறை சாற்றும் வகையில் காவிக் கொடியை பட்டொளி வீசி பறக்க செய்தார். கோயில் நுழைவு வாயிலில் தலைவர்களை நினைவு கூறும் வகையில் சத்ரபதி வீர சிவாஜி நுழைவு தோரண வளைவை பிரமாண்டமாக வடிவமைத்து வழிபாடு நடத்தி வருகிறார். அவரது தேசபற்றுக்கு புகழாரம் செலுத்தும் வகையில் பலரும் புகழ் மாலை சூட்டி வருகின்றனர்.