மகாளய பட்சம் என்பது மிகவும் உன்னதமான காலம். பட்சம் என்றால் பதினைந்து நாட்கள் என்று அர்த்தம். மகாளய பட்சம் எனப்படும் பதினைந்து நாட்கள், நமக்கான நாட்கள். நம் முன்னோருக்கான நாட்கள். நம் முன்னோர்களை நாம் வணங்குவதற்கான நாட்கள்.
ஆவணி மாதம் பெளர்ணமியை அடுத்து வரும் பிரதமை திதியில் இருந்து மகாளய பட்ச காலம் தொடங்குகிறது. கடந்த செப்டம்பர் 2ம் தேதி முதல் மகாளய பட்ச காலம் தொடங்கிவிட்டது.
ஒவ்வொருநாளும் பித்ரு வழிபாடு செய்வதும் அவர்களுக்கு ஆராதனைகள் செய்வதும் மிகுந்த சந்துஷ்டியைத் தரும். அதாவது சத்தான வாழ்க்கையைத் தரும் என்பது ஐதீகம்.
மகாளய பட்ச காலத்தில், பதினைந்து நாட்களும் தர்ப்பணமும் முன்னோர் வழிபாடும் செய்வது அவசியம். அதேசமயம், இயலாதவர்கள் ஏதேனும் ஒருநாளேனும் முன்னோர் வழிபாடு செய்யவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், முன்னோர்கள் என்பவர்களின் உருவமாக காகம் சொல்லப்பட்டிருக்கிறது. அதனால்தான், காகத்துக்கு எல்லா நாளும் உணவிடச் சொல்லி பழக்கப்படுத்தினார்கள். முக்கியமாக, மகாளய பட்ச காலத்தில் தினமும் காகத்துக்கு உணவிட வேண்டும் என்கிறது சாஸ்திரம். காகத்துக்கு வழங்குகிற உணவானது, நம் முன்னோர்களுக்குப் போய்ச் சேருகிறது என்றும் அந்த உணவையும் நம் வழிபாட்டையும் நம் வீட்டுக்கே வந்து பித்ருக்கள் பார்க்கிறார்கள் என்றும் சாஸ்திரம் விவரிக்கிறது.
அதிலும் இன்னொரு முக்கியமான விஷயம்… காகம் என்பது சனீஸ்வர பகவானின் வாகனம் எனச் சொல்கிறது புராணம். அதேபோல, காகம் என்பது முன்னோர்களின் வடிவம் என்றும் சொல்லி வைத்திருக்கிறார்கள்.
மகாளய பட்ச காலத்தில், பதினைந்து நாட்களும் தர்ப்பணம் செய்யவேண்டும். முன்னோர்களின் பெயரைச் சொல்லி, எள்ளும் தண்ணீரும் விடவேண்டும் என்கிறது. தினமும் தர்ப்பணம் செய்வதால், பித்ருக்களின் ஆசீர்வாதமும் அவர்களின் அருளும் கிடைக்கப் பெறலாம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
ஆகவே, தினமும் காகத்துக்கு உணவிடுங்கள். மகாளயபட்ச காலத்தில் தினமும் உணவிடுங்கள். முக்கியமாக, சனிக்கிழமைகளில், அவசியம் காகத்துக்கு உணவிடுங்கள். முன்னோரை நினைத்துக் கொண்டு, சனீஸ்வரரை பிரார்த்தித்துக் கொண்டும் காகத்துக்கு உணவிடுங்கள்.
முன்னோரின் ஆசியும் கிடைக்கும். சனீஸ்வர பகவானின் அருளும் கிடைக்கப் பெறலாம்.