திருமலைக்கு வரும் வேற்று மதத்தவர்கள் மத உறுதி பத்திரத்தில் கையெழுத்திடும் முறையை ரத்து செய்ய தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
திருமலை திருப்பதி ஏழுமலையான் மீது பக்தி கொண்ட வேற்று மதத்தவர்கள் தரிசனத்திற்கு வரும் போது உண்மையான பக்தியுடன் தரிசனத்திற்கு செல்வதாக உறுதி கூறும் மத உறுதி பத்திரத்தில் கையெழுத்திட்டால் மட்டுமே தரிசனத்திற்கு செல்ல முடியும். இந்த முறை தேவஸ்தானத்தில் பல ஆண்டுகளாக அமலில் உள்ளது.
அப்துல்கலாம் ஜனாதிபதியாக இருந்த காலத்திலும் அவர் கையெழுத்திட்ட பின்பே தரிசனத்திற்கு சென்றார். தற்போது இந்த முறையை ரத்து செய்ய தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. ஏழுமலையான் மீது உண்மையான பக்தி கொண்ட வேற்று மதத்தவர்கள் மட்டுமே தரிசனத்திற்காக வரும் நிலையில் அவர்களிடம் மதஉறுதி பத்திரத்தில் கையெழுத்து பெறுவது தேவையில்லாதது. அது அவர்களின் பக்தியை குறை கூறுவதாக அமைகிறது என்று அதிகாரிகள் கருத்து தெரிவித்தனர்.
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன்ரெட்டி திருமலைக்கு செப்.,23ம் தேதி பட்டு வஸ்திரம் சமர்பிக்க வருகிறார். அதற்கு முன் இந்த உறுதி பத்திர முறையை ரத்து செய்யும் வகையில் தேவஸ்தானம் வழிவகையை மேற்கொண்டு வருகிறது.