மதுராவில் உள்ள கிருஷ்ண ஜென்ம பூமியை மீட்கக் கோரி புதிய வழக்கு தொடரப்பட்டுள்ளது. அங்கு ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள, ‘ஷாயி ஈத்கா’ மசூதியை மாற்ற வேண்டும் எனவும் வழக்கில் கோரப்பட்டுள்ளது.
‘அயோத்தியில் ராமர் கோவில் கட்டலாம்’ என, கடந்த 2019 நவ.,ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து, கடந்த ஆக., 5ம் தேதி, அயோத்தியில் ராமர் கோவில் கட்ட பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். ராமஜென்ம பூமி வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய போதே, ‘உத்தர பிரதேசம் மதுராவில் கிருஷ்ண ஜென்ம பூமியையும் மீட்க வேண்டும்’ என, இந்து அமைப்புகள் குரல் எழுப்பின.
இதற்காக, கடந்த ஆகஸ்ட் மாதத் துவக்கத்தில், ‘கிருஷ்ண ஜென்ம பூமி நிர் மாண் நியாஸ்’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இதில் 14 மாநிலங்களைச் சேர்ந்த 80 சாதுக்கள் இடம்பெற்றுள்ளனர்.
மதுராவில் கிருஷ்ண ஜென்ம பூமியை மீட்க, பகவான் கிருஷ்ண விராஜ்மன் சார்பில் மதுரா நீதிமன்றத்தில் புதிதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஸ்ரீகிருஷ்ண விராஜ்மன் சார்பில் லக்னோவை சேர்ந்த ரஞ்சனா அக்னிஹோத்ரி மனு தாக்கல் செய்துள்ளார். உத்தர பிரதேச சன்னி வக்பு வாரியம், ஷாயி ஈத்கா மசூதி நிர்வாக அறக்கட்டளை ஆகியவை எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளன.
ரஞ்சனா அக்னி ஹோத்ரி தனது மனுவில் கூறியிருப்பதாவது:
இந்தியாவில் கடந்த 1658ம் ஆண்டு முதல் 1707ம் ஆண்டு வரை முகலாய மன்னர் அவுரங்கசீப் ஆட்சி நடத்தினார். அவரது ஆட்சிக் காலத்தில் ஏராளமான இந்து கோவில்கள் இடிக்கப்பட்டன. கடந்த 1669 – 70ம் ஆண்டுகளில் அவுரங்கசீப்பின் உத்தரவுபடி அவரது படையினர், மதுராவில் உள்ள கேசவ தேவ் கோவிலின் ஒரு பகுதியை இடித்துவிட்டு ஷாயி ஈத்கா மசூதியை கட்டினர். மசூதி அமைந்துள்ள இடம் பகவான் கிருஷ்ண விராஜ்மனுக்கு சொந்தமானது. அந்த ஆக்கிரமிப்பு மசூதியை அகற்ற வேண்டும்.
மதுராவின் கத்ரா கேசவ் தேவ் பகுதியின் ஒவ்வொரு அங்குல நிலமும் இந்துக்களின் புனித பூமியாகும். கிருஷ்ண ஜென்ம பூமியின் 13.37 ஏக்கர் நிலத்தை மீட்டுத் தர வேண்டும்.
இவ்வாறு மனுவில் கோரப்பட்டுள்ளது.
ரஞ்சனா அக்னி ஹோத்ரி சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஹரி சங்கர் ஜெயின், விஷ்ணு சங்கர் ஆகியோர் மதுரா நீதிமன்றத்தில் மனுவை தாக்கல் செய்துள்ளனர்.