பன்னிரண்டு வைணவ ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் பாடிய பக்தி பாடல்களின் தொகுப்பு திருப்பாவை ஆகும். மார்கழி மாதத்தில் தினசரி பாடப்படும் திருப்பாவையில் 30 பாடல்கள் உள்ளன. வைணவப் பக்தி நூல்களின் தொகுப்பான நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் இடம் பெற்றுள்ள திருப்பாவையின் சிறப்பு தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் மார்கழி மாதத்தில் காணமுடியும்.
மார்கழி மாதத்தில் (Margazhi Masam)கன்னிப் பெண்கள் பாவை நோன்பு நோற்றனர். சூரியன் உதிப்பதற்கு முன்பே விடியற்காலையில் எழும் பெண்கள், பிற பெண்களையும் துயில் எழுப்பிக்கொண்டு ஆற்றில் நீராடி இறைவனைத் துதித்து வழிபடுவதை உணர்த்தும் பாடல்கள் இவை.
மார்கழியில் நோன்பிருப்பது சிறப்பு. அதிகாலையில் எழுந்து வாசல் தெளித்து கோலம் போட்டு நீராடி பூஜை (Pooja) அறையில் விளக்கேற்றி திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி பாடி இறைவனை துதிப்பது பக்தி சம்பிரதாயம்.
இந்த மாதத்தில் திருப்பதி திருமலையில் (Venkateswara Temple) காலையில் சுப்ரபாதம் பாடுவதற்கு பதிலாக ஆண்டாளின் திருப்பாவை பாடுவார்கள். இந்த மாதத்தில் எல்லா பெருமாள் கோயில்களிலும் சுப்ரபாதத்துக்கு பதில் திருப்பாவை பாடுவார்கள்.
மாதங்களில் நான் மார்கழி என்று சொன்ன கண்ணனைத் துதித்து மார்கழியில் பாவையர்கள் பாடும் திருப்பாவை பாடுபவருக்கும், கேட்பவருக்கும் மன நிம்மதியைக் கொடுப்பது.
இன்று மார்கழி மாதம் 18 வது நாள். சூடிக் கொடுத்த சுடர்க்கொடியின் 18வது பாசுரம் இது. கண்ணனின் தந்தை ஸ்ரீநந்தகோபர், தாய் யசோதை, அண்ணன் பலராமன் மற்றும் கார்முகில் வண்ணன் கண்ணனை எழுப்பும் பாடல்.
பூஜைக்கான நல்ல நேரம்..
02-ஜன-2021 திங்கள்
நல்ல நேரம் : 7.30 – 8.30 ராகு : 9.00 – 10.30 குளிகை : 6.00 – 7.30
எமகண்டம் : 1.300 – 3.00
திதி : சதுர்த்தி
திதி நேரம் : திரிதியை கா 9.24
நட்சத்திரம் : ஆயில்யம் இ 8.42
யோகம் : மரண-அமிர்த யோகம்
சந்திராஷ்டமம் : உத்திராடம், திருவோணம்
திருப்பாவை – 18
அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குல விளக்கே
எம்பெருமாட்டி யசோதா அறிவுறாய்
அம்பரம் ஊடு அறுத்து ஓங்கி உலகளந்த
உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா
உம்பியும் நீயும் உறங்கேல் ஓர் எம்பாவாய்
பாடல் விளக்கம்:
ஆயர்பாடி மக்களுக்கு ஆடையையும், தண்ணீரையும், உணவினையும் குறைவில்லாது தானம் தருமம் செய்யும் எங்கள் தலைவராகிய நந்தகோபரே துயில் கலைந்து எழுந்திருக்கவும் என்று ஆண்டாள் துயில் எழுப்புகிறார். பூங்கொடி போன்ற ஆயர்குலப் பெண்களின் தலைவியே, எங்கள் குலத்தை துலக்க வந்த விளக்காய் திகழும் இறைவியே, குலவிளக்கே யசோதையம்மையே எழுந்திருக என்று ஆண்டாள் இறைஞ்சுகிறார்.