வைணவ ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் பாடிய பக்தி பாடல்கள் திருப்பாவை என்று அழைக்கப்படுகிறது. மொத்தம் 30 பாடல்களை கொண்ட திருப்பாவை மிகவும் சிறப்பு வாய்ந்தது. தாய்லாந்தில் மன்னருக்கு முடிசூட்டும்போது திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் பாடப்படுகின்றன. மார்கழி மாதத்தில் அனைத்து பெருமாள் கோயில்களிலும் சுப்ரபாதத்துக்குப் பதில் திருப்பாவை பாடப்படுகிறது.
வைணவ பக்தி நூல்களின் தொகுப்பாக நாலாயிரம் திவ்ய பிரபந்தங்கள் என அழைக்கப்படுகின்றன. இதில் 473 முதல் 503 வரை உள்ள பாடல்களின் தொகுப்பு தான் திருப்பாவை பாடல்கள் ஆகும்.
மார்கழியில் (Margazhi Masam) அதிகாலையில் விழித்தெழுந்து, வீட்டை சுத்தம் செய்து, நீராடி, கோலமிட்டு, திருப்பாவை பாடல்களைப் பாடுவது சிறப்பு. மார்கழி மாதத்தில் வீட்டின் முன் கோலமிடுவது அன்னை மகாலட்சுமிக்கு பிடித்தமானது என்பது நம்பிக்கை. மார்கழியில் கோலமிட்டால் மங்களங்களை அள்ளித் தரும் மகாலட்சுமி வீடு தேடி வருவாள் என்பது நம்பிக்கை. இதனால் மார்கழியில் கோலமிடுவது மிகவும் பிரபலமானது.
மார்கழி மாதம் என்றாலே, திருப்பாவை (Thiruppavai),, திருவெம்பாவை, கோலம், நீராடுதல், பொங்கல் என பல விஷயங்கள் நினைவுக்கு வரும்.
பூஜைக்கான நல்ல நேரம்..
06-ஜன-2021 திங்கள்
நல்ல நேரம் 9.30 – 10.30;4.30 – 5.30.
எமகண்டம் காலை 7.30 – 9.00
இராகு காலம் மதியம் 12.00 – 1.30
திதி : அஷ்டமி
திதி நேரம் : சப்தமி கா 3.17
நட்சத்திரம் : சித்திரை மா 4.28
யோகம் : மரண-சித்த யோகம்
சந்திராஷ்டமம் : பூரட்டாதி, உத்திரட்டாதி
இன்று மார்கழி மாதம் 22ஆம் நாள். இன்றைய திருப்பாவை பாசுரத்தில் உன் விழி திறந்து எங்கள் பாவத்தை போக்குவாய் கண்ணா என்று இறைஞ்சுகிறார் சூடிக் கொடுத்த சுடர்க் கொடி ஆண்டாள்:
அங்கண்மா ஞாலத்தரசர் அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே
சங்கம் இருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய்ச்செய்த தாமரை பூப்போல
செங்கண் சிறுகச்சிறதே யெம்மேல் விழியாவோ?
திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்
அங்கண் இரண்டும்கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்.
கண்ணா! எங்களை விட உயர்ந்த வீரர்கள் இருக்கிறார்களா என தங்களைப் பற்றி பெருமையடித்துக் கொண்டவர்களும், இந்த பரந்த பூமியை ஆட்சி செய்தவர்களுமான அரசர்கள் மிகுந்த பணிவுடன் நீ பள்ளி கொண்டுள்ள கட்டிலைச் சுற்றிலும் பக்தர்கள் போல் காத்து நிற்கிறார்கள். அவர்களைப் போல் நாங்களும் உன் அருகில் சரணடைந்து நிற்கிறோம். தாமரை இதழ் மெதுவாக மடல் அவிழ்ந்து மலர்வது போல, உன் சிவந்த தாமரைக் கண்களை மலர்த்தி விழி அருள மாட்டாயா? சந்திரனும், சூரியனும் உதித்தது போல, உன் தாமரைக் கண்களைக் கொண்டு எங்களைப் பார்த்தால், உன் பார்வை பட்டாஏ எங்கள் எல்லா பாவங்களும் சாபங்களும் நீங்கி விடுமே!
இப்படி உன்னதமான பொருள் கொண்ட திருப்பாவையால் வாய் நிறைய பாடி, கண்ணனின் துயிலை எழுப்புகிறாள் ஆண்டாள் என்னும் சூடிக் கொடுத்த சுடர்க் கொடி…. சூடிக் கொடுத்த சுடர்க்கொடியின் பாதம் பணிந்து, வடவேங்கடவனின் (Venkateswara Temple) தாளினை சரணடைந்து ஆண்டாள் பெற்ற அருளை நாம் அனைவரும் பெறுவோம்.