வைணவ ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் பாடிய பக்தி பாடல்கள் திருப்பாவை என்று அழைக்கப்படுகிறது. மொத்தம் 30 பாடல்களை கொண்ட திருப்பாவை மிகவும் சிறப்பு வாய்ந்தது. தாய்லாந்தில் மன்னருக்கு முடிசூட்டும்போது திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் பாடப்படுகின்றன. மார்கழி மாதத்தில் அனைத்து பெருமாள் கோயில்களிலும் சுப்ரபாதத்துக்குப் பதில் திருப்பாவை பாடப்படுகிறது.
வைணவ பக்தி நூல்களின் தொகுப்பாக நாலாயிரம் திவ்ய பிரபந்தங்கள் என அழைக்கப்படுகின்றன. இதில் 473 முதல் 503 வரை உள்ள பாடல்களின் தொகுப்பு தான் திருப்பாவை பாடல்கள் ஆகும்.
மார்கழியில் (Margazhi Masam) அதிகாலையில் விழித்தெழுந்து, வீட்டை சுத்தம் செய்து, நீராடி, கோலமிட்டு, திருப்பாவை பாடல்களைப் பாடுவது சிறப்பு. மார்கழி மாதத்தில் வீட்டின் முன் கோலமிடுவது அன்னை மகாலட்சுமிக்கு பிடித்தமானது என்பது நம்பிக்கை. மார்கழியில் கோலமிட்டால் மங்களங்களை அள்ளித் தரும் மகாலட்சுமி வீடு தேடி வருவாள் என்பது நம்பிக்கை. இதனால் மார்கழியில் கோலமிடுவது மிகவும் பிரபலமானது.
பூஜைக்கான நல்ல நேரம்..
வியாழன்
நல்ல நேரம் 10.30-11.30; 12.30-1.30.
எமகண்டம் காலை 6.00-7.30.
இராகு காலம் மதியம் 1.30-3.00
7.1.2021 வியாழக்கிழமை சார்வரி வருடம் மார்கழி மாதம் – 23ம் நாள்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் எண்ணை காப்பு உற்சவம்.
குளிகை: காலை 9.00 – 10.30
சூலம்: தெற்கு
பொது: தேய்பிறை. நவமி திதி இரவு 11.58 மணி வரை; பிறகு தசமி. சித்திரை நட்சத்திரம் பகல் 3.46 மணி வரை ; பிறகு சுவாதி. யோகம்: சித்த யோகம்.
பரிகாரம்: தைலம்
மார்கழி மாதம் என்றாலே, திருப்பாவை (Thiruppavai),, திருவெம்பாவை, கோலம், நீராடுதல், பொங்கல் என பல விஷயங்கள் நினைவுக்கு வரும்.
இன்று மார்கழி மாதம் 23ஆம் நாள். இன்றைய திருப்பாவை பாசுரத்தில், அனைத்திற்கும் முதல்வனான கார்முகில் வண்ணனையே ஆயர்குலப் பெண்கள் வரமாக வேண்டுகின்றனர்.
மாரி மலைமுழஞ்சில் மன்னிக்கிடத்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கப் புறப்பட்டு
போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா! உன்
கோயில் நின்று இங்ஙனே போந்தருளி கோப்புடைய
சீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.
மழைக்காலத்தில் மலையிலுள்ள குகையில் உறங்கும் பெருமை மிக்க சிங்கம் விழிக்கிறது. அதன் கண்களில் நெருப்பு பொறி பறக்கிறது. நாற்புறமும் நடமாடி பிடரி மயிரை சிலிர்த்து, பெருமையுடன் நிமிர்ந்து கர்ஜனையுடன் வெளியே கிளம்புகிறது. அதுபோல, காயாம்பூ நிறத்தையுடைய கண்ணனே! நீயும் வீரநடை போட்டு உன் கோயிலில் இருந்து வெளியேறி, இங்கே வந்து அருள் செய். வேலைப்பாடுகளைக் கொண்ட மிகச்சிறந்த சிம்மாசனத்தில் அமர்ந்து, நாங்கள் எதற்காக இங்கே வந்தோம் என்பதை அறிந்து, அந்த கோரிக்கைகளைப் பரிசீலனை செய்து நிறைவேற்றி அருள வேண்டுகிறோம்.
நமக்கு எதிரே கடவுள் இருக்கிறார், அவர் எதை வேண்டுமானாலும் கொடுக்க முடியும் என்பதற்காக அவரிடம் பொன் பொருள் என வரம் கேட்கக்கூடாது. அவை நமக்கு அமைய வேண்டுமென்ற விதியிருந்தால், நமக்கு விதித்திருந்தால் கேட்காமலேயே அவற்றை கடவுள் நமக்கு கொடுத்துவிடுவார். எனவே, நியாயமான கோரிக்கைகளையே இறைவனிடம் முறையிட வேண்டும்.
இந்த நியாயத்தின் அடிப்படியிலேயே நாங்கள் கேட்பது நியாயம் எனத் தெரிந்தால் மட்டும் அதைக் கொடு என பெண்கள் கேட்கிறார்கள். ஆனால் அவர்கள் கேட்டது கண்ணனையே என்பதுதான் ஆச்சரியம்… அவனோடு கலந்து விட்டால் சோறு எதற்கு? வாகனம் எதற்கு? வசதிகள் எதற்கு? அதற்கெல்லாம் மேலான பேரின்பமல்லவா கிடைக்கும். அதனால் அனைத்திற்கும் முதல்வனான கார்முகில் வண்ணனையே வரமாக கேட்டார்கள் ஆயர்குலப் பெண்கள்.