வைணவ பக்தி நூல்களின் தொகுப்பாக நாலாயிரம் திவ்ய பிரபந்தங்கள் என அழைக்கப்படுகின்றன. இதில் 473 முதல் 503 வரை உள்ள பாடல்களின் தொகுப்பு தான் திருப்பாவை பாடல்கள் ஆகும்.
வைணவ ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் பாடிய பக்தி பாடல்கள் திருப்பாவை என்று அழைக்கப்படுகிறது. மொத்தம் 30 பாடல்களை கொண்ட திருப்பாவை மிகவும் சிறப்பு வாய்ந்தது. தாய்லாந்தில் மன்னருக்கு முடிசூட்டும்போது திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் பாடப்படுகின்றன. மார்கழி மாதத்தில் அனைத்து பெருமாள் கோயில்களிலும் சுப்ரபாதத்துக்குப் பதில் திருப்பாவை பாடப்படுகிறது.
மார்கழியில் (Margazhi Masam) அதிகாலையில் விழித்தெழுந்து, வீட்டை சுத்தம் செய்து, நீராடி, கோலமிட்டு, திருப்பாவை பாடல்களைப் பாடுவது சிறப்பு. மார்கழி மாதத்தில் வீட்டின் முன் கோலமிடுவது அன்னை மகாலட்சுமிக்கு பிடித்தமானது என்பது நம்பிக்கை. மார்கழியில் கோலமிட்டால் மங்களங்களை அள்ளித் தரும் மகாலட்சுமி வீடு தேடி வருவாள் என்பது நம்பிக்கை. இதனால் மார்கழியில் கோலமிடுவது மிகவும் பிரபலமானது.
பூஜைக்கான நல்ல நேரம்..
வெள்ளி
நல்ல நேரம் 9.30 – 10.30; 4.30 – 5.30.
எமகண்டம் மாலை 3.00 – 4.30
இராகு காலம் காலை 10.30 – 12.00
8.1.2021 வெள்ளிக்கிழமை சார்வரி வருடம் மார்கழி மாதம் – 24ம் நாள்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கள்ளர் திருக்கோலமாய் காட்சி.
குளிகை: காலை 7.30 – 9.00
சூலம்: மேற்கு
பொது: தேய்பிறை. தசமி திதி இரவு 9.40 மணி வரை; பிறகு ஏகாதசி. சுவாதி நட்சத்திரம் பகல் 12.12 மணி வரை ; பிறகு விசாகம். யோகம்: சித்த யோகம்.
பரிகாரம்: வெல்லம்
மார்கழி மாதம் என்றாலே, திருப்பாவை (Thiruppavai),, திருவெம்பாவை, கோலம், நீராடுதல், பொங்கல் என பல விஷயங்கள் நினைவுக்கு வரும்.
இன்று மார்கழி மாதம் 24ஆம் நாள். இன்றைய திருப்பாவை பாசுரத்தில், அனைத்திற்கும் முதல்வனான கார்முகில் வண்ணனையே ஆயர்குலப் பெண்கள் வரமாக வேண்டுகின்றனர்.
பாடல் 24:
அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி!
சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி!
கொன்றடச்சகடம் உதைத்தாய் புகழ் போற்றி!
கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி!
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி!
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல் போற்றி!
என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.
பொருள்:- மகாபலி இந்த உலகத்தை கைப்பற்றிய காலத்தில், அதை மூன்றடிகளால் அளந்து உன்னுடையது என்று உணர்த்தியவனே! உன் திருவடிகளுக்கு வணக்கம். ராமாவதாரம் எடுத்த போது, சீதையை மீட்க தெற்கிலுள்ள இலங்கைக்கு சென்று ராவணனை வெற்றி கொண்டவனே! உன் வீரத்துக்கு நமஸ்காரம்.
சக்கர வடிவில் வந்த சகடன் எனற அசுரனை ஒரே உதையில் வீழ்த்தியவனே! உன் புகழுக்கு வந்தனம். கன்று வடிவில் வந்த வத்சாசுரனை தடியாகக் கருதி, அவனை விளாமர வடிவில் வந்த கபித்தாசுரன் மீது எறிந்து அழித்தவனே! உன் கால்களில் அணிந்த வீரக்கழலுக்கு மங்களம் உண்டாகட்டும்.
கோவர்த்தனகிரியை குடையாக்கி ஆயர்குலத்தவரை இந்திரன் அனுப்பிய மழையில் இருந்து காத்தவனே! உன் இரக்க குணத்துக்கு தலை வணங்குகிறோம்.பகைவர்கள் எவ்வளவு பலவான்களாயினும் அவர்களை உன் கையிலுள்ள வேலால் அழித்தவனே! அந்த வேலாயுதத்துக்கு நமஸ்காரம்.
உன் வீரச்செயல்களைப் பாடி, உன்னருளைப் பெறுவதற்கு, இப்போது நாங்கள் வந்துள்ளோம். எங்கள் மீது இரக்கம் காட்ட வேண்டுகிறோம்.
விளக்கம்:- இந்த பாசுரம் மிக முக்கியமானது. இதை தினமும் நாம் பாராயணம் செய்யலாம். இதை “போற்றிப் பாசுரம் என்பர். இந்த பாசுரத்தை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்து, கண்ணன் பாலகனாக இருந்த போது நிகழ்த்திய வீரச்செயல்களை அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். இதன் மூலம் அவர்கள் தைரியத்தை வளர்த்துக் கொள்வார்கள்.