சித்திரை மாதப் பிறப்பை தமிழ் புத்தாண்டாக கொண்டாடும் மரபு தமிழர்களுடையது. சித்திரை மாத முதல் நாளில் தமிழ் வருடப் பிறப்பை தமிழர்கள் தங்கள் வீடுகளில் விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இந்த காலகட்டத்தில் வரும் மாத பிறப்பு தினம் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. பஞ்சாபில் பைஷாகி, கேரளாவில் விஷு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடக மாநிலங்களில் உகாதி அல்லது யுகாதி, அசாமில் பிஹு என பல்வேறு மாநிலத்தவருக்கும் முக்கியமான காலகட்டம் இது.
சித்திரை முதல் நாளன்று புத்தாண்டை வரவேற்க செய்யக்கூடிய பூஜைகளை பற்றிய விவரங்களையும், அதற்குரிய பலன்களையும் தெரிந்து கொள்வோம்.
அதிலும் ஒரு கண்ணாடியின் முன் பழ வகைகளை வைத்துவிட்டு காலையில் எழுந்து கண்ணாடி மூலம் மங்கலமானபொருட்களை பார்த்தால் ஆண்டு முழுவதும் நல்ல விஷயங்களாக நடக்கும் என்பது நம்பிக்கை.
இதற்கான தயாரிப்பாக, கண்ணாடிக்கு சந்தனம், குங்குமம் இட்டு, பூச்சூடி, பூஜை அறையில் கிழக்கு பார்த்து வைத்துக் கொள்ள வேண்டும். கண்ணாடியின் முன்பு பெரிய தாம்பூலத் தட்டில் ரூபாய் நோட்டுக்கள் நகைகளையும், முக்கனிகளான மா, பலா, வாழை ஆகியவற்றை வைக்க வேண்டும்.
சிறு சிறு கிண்ணங்களில் நவதானியங்கள், அரிசி, பருப்பு, உப்பு, வெல்லம், மஞ்சள் ஆகியவற்றை வைக்க வேண்டும். காலையில் நேராக பூஜை அறைக்கு சென்று கண்ணாடியில் கனி காணுதல் என்ற சம்பிரதாயத்தை முடித்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் குளித்து முடித்து விட்டு நைவேத்தியங்களை தயார் செய்ய வேண்டும். ஒரு சிறிய கலசத்தில் தண்ணீரை நிரப்பி அதில் பச்சை கற்பூரம் மற்றும் பூக்களை போட்டு வையுங்கள்.
நைவேத்தியமாக சர்க்கரைப் பொங்கல் அல்லது பாசிப்பருப்பு பாயாசம் செய்து வைக்கலாம். 6 வகையான சுவைகளும் இருக்கும் படி உணவு தயார் செய்வது கூடுதல் பலன் தரும்.
வீடு முழுவதும் மாவிலைத் தோரணங்கள் கட்டி வைப்பதும் சிறப்பைத் தரும். மாவிலை தோரணங்களில் இருந்து வரும் தெய்வீக ஆற்றல் வீட்டில் இருக்கும் துஷ்ட சக்திகளை அழிக்கும்.
புதிய துணிமணிகள் வாங்கி வைத்திருந்தால் அதை பெரியவர்களின் கைகளிலிருந்து பெற்றுக் கொள்வது மிகவும் நல்லது. புத்தாண்டு தினத்தன்று அன்னதானம் செய்வது நன்று.
கனிகளை போல சுவையான ஒரு வாழ்வை இவ்வாண்டு முழுவதும் நாம் பெறவே கனி காணுதல் நிகழ்வு சித்திரை தமிழ் புத்தாண்டு அன்று அனுசரிக்கப்படுகிறது. மிக எளிமையாக வீட்டிலேயே வரவிருக்கும் ஸ்ரீ பிலவ புத்தாண்டை வரவேற்று பூஜைகளை செய்து இறை அருளைப் பெருவோம்.