துரியோதனன் கோபம் சுண்ணபெருமானின் இந்த வார்த்தைகள் எல்லாம் துரியோதனனுக்குப் பெருங் கோபத்தை உண்டாக்கின. கோபத்தால் புருவங்கள் நெரிந்தன; கண்கள் சிவந்தன. பாம்பு போன்ற சீற்றத்துடன் அவன். “மாயக்கண்ணா! ‘தொடையை அடி’ என்று குறிப்புக் காட்டியவன் நீ அல்லவா! கபட மான முறையில் போர் செய்ய வைத்தாய். ஆயிரக் கணக்கானவரைக் கொன்றாய். சிகண்டியைக் கொண்டு பிதாமகரை விழ வைத்தாய்; சத்தியவிரதனான தருமபுத்திர ரைப் பொய் கூறவைத்து, துரோணரை நிராயுதபாணியாக்கினாய். நிராயுதபாணி யாய் இருந்த துரோணரை அந்தத் திட்டத்துய்மன் வாளால் வீழ்த்திய போது தடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாய்! கர்ணனின் நாகாஸ்திரத்தை வீணாக்கினாய். நீ தர்மமான முறையில் போர் நடத்த வில்லை. எங்களை வஞ்சனையால் வீழ்த்தி விட்டாய்” என்றான். அதர்மம் வெல்லாது அதற்குக் கண்ணபிரான், “துரியோதனா! அதர்மவழியில் அத்துமீறி நடந்தாய். அதன் பலனை இன்று அனுபவிக்கின்றாய். அதர்மவழியில் சென்றதால்தான் ஞான வான்களாகிய பிதாமகர் பீஷ்மர், ஆசார்யர் துரோணர் போன்றவர்களை இழந்தாய். நான் தூது வந்தபோது “ஈ இருக்குமிட மெனினும் யான் அவர்க்கு அரசு இனிக் கொடேன்” என்று ஆணவம் பேசினாய்.
பீமனுக்கு நஞ்சு கொடுத்தாய்; அவனைக் கழுமரமுடைய தடாகத்தில் தள்ளினாய். பாண்டவர்களை அரக்கு மாளிகையில் வைத்துக் கொளுத்தினாய்; திரௌபதியைச் சபையில் அவமானப்படுத்தினாய். வஞ்சனையாக சூதாட்டம் ஆடி நாட்டைக் கவர்ந்தாய்; பாண்டவர்களைப் பன்னி ரெண்டு ஆண்டுகள் ஈவு இரக்கமின்றிக் காட்டுக்கு அனுப்பினாய். ஓராண்டு விராட நாட்டில் மறைந்து வாழச் செய்தாய். இப்படி பல அதர்மங்களைச் செய்தாய். அதன் பலனை இன்று அனுபவிக்கின்றாய். தர்மத்தை எக்காலத்தும் அதர்மம் வெல் வாது என்பதை இனியாவது நன்றாகப் புரிந்து கொள்'” என்றார். அதே சமயத்தில் பாண்டவர்கள், தங்கள் உறவினர்கள் எல்லாம் இறந்துவிட்டனரே என்று கவலை கொண்டார்கள். ஏக்கமும் ஏற்பட்டது.
கண்ணபிரான் அவர்கட்குத் தகுந்த ஆறுதல் வார்த்தைகளைக் கூறினார். அதன் பின்னர் பாண்டவர்களும், பாஞ் சாலர்களும் மனம் தேறினர். வெற்றிச் சங்கங்களை முழக்கினர். பேராரவாரம் செய்தனர். துரியோதனனுடைய பாசறையை நோக்கிப் பாண்டவர்கள் சென்றார்கள். திட்டத்துய்மனும், சிகண்டி யும். திரௌபதியின் புதல்வர்களாகிய உபபாண்டவர்களும் பின் விளைவு தேராராகி அவர்களைப் பின் தொடர்ந்தனர். துரியோதனனின் பாசறைக்குள் பாண்ட வர்கள் புகுந்தனர். அங்கிருந்தவர்கள் அவர்களை வரவேற்றனர். அனைவரும் தேரினின்று இறங்கிப் பாசறைக்குள் சென்றார்கள். கண்ணபிரான் கட்டளைப்படி அர்ச்சுனன் காண்டீபம் என்னும் தன் வில்லையும், அம்புகளையும் எடுத்துக் கொண்டு தேரினின்று இறங்கினான்.
அவனைத் தொடர்ந்து கண்ணபிரானும் இறங்கினார். உடனே தேரின் மீது இருந்த அர்ச்சுனனின் குரங்குக் கொடி மறைந்தது. தேரானது தீப்பற்றி எரியத் தொடங்கியது சற்று நேரத்தில் தேர் சாம்பலானது. அங்கிருந்தவர்கள் அக்காட்சியைக் கண்டு வியந்தனர். தேர் சாம்பலானதற்குரிய காரணம் “தேர் சாம்பலானதற்குரிய காரணம் யாது ?” என அர்ச்சுனன் கண்ணபிரானை வியப்போடு கேட்டான். அதற்கு அப்பெருமான், “அர்ச்சுனா! இந்தத் தேரானது முன்பே துரோணர், கர்ணன் போன்றவரால் எரிக்கப்பட இருந்தது. நான் அதன்மேல் அமர்ந்திருந்த காரணத்தால் அது நடைபெறவில்லை. அதுமட்டுமன்று இப்பொழுது எரிந்திருக்கின்ற காரணத்தால் ஒரு பெரிய துன்பம் உங்களுக்கு வர உள்ளது. ஜாக்கிரதையாக இருங்கள்” என்றார்.
பின்னர், “பாசறையில் நாம் தங்கக் கூடாது. வெளியில்தான் தங்க வேண்டும் ” என்று கண்ணபிரான் கூற, பாண்டவர்கள் அதனைக் கேட்டு ஒகவதி நதிக்கரையை அடைந்து அன்றிரவு அங்கேயே தங்கினார்கள். பொழுது புலர்ந்தது, பெரியப்பா திருதராட்டிரர், பெரியம்மா காந்தாரி ஆகியவர்களைச் சந்திப்பதற்கு அஞ்சி, பாண்டவர்கள் கண்ணபிரானை அவர்க ளிடம் அனுப்பினார்கள். திருதராட்டிரரை வணங்கிய சுண்ணபிரான், அவரின் இரண்டு கைகளையும் பற்றிக் கொண்டு வருந்தினார். பின்னர் திருதராட்டிரரிடம், “அரசே! நடந்தவை அனைத்தையும் நீவிர் அறிவீர். சூதாட்டத்தினால் நாடு நகரங் களைக் கைப்பற்றிய துரியோதனாதியர், பாண்டவர்களைப் பன்னிரெண்டு ஆண்டு கள் வனவாசமும், ஓர் ஆண்டு அஞ்ஞாத வாசமுமாக இருக்கச் செய்துவிட்டனர். நான் பாண்டவர்கள் தூதனாக வந்தபோது, “ஐந்து கிராமங்களையாவது பாண்ட வர்க்குக் கொடு”என்று இருகை ஏந்தி யாசித்தேன். அதற்கே உன் மகன் துரியோ தனன் சம்மதிக்கவில்லை. அவனுக்கு அறிவுரைகள் கூறாது அன்று நீர் அமைதி காத்தீர். அவன் விருப்பப்படி நடக்க விட்டீர். அதன் காரணமாக உம்முடைய குலமே அழிந்துவிட்டது.
உம்முடைய செயலால்தான் இந்த நிலை ஏற்பட்டது. எனவே பாண்டவர்கள் மேல் வீணாகக் கோபம் கொள்ளாதீர்கள். பாண்டவர்கள் தங்களிடம் மிகுந்த அன்புடையவர்கள்; பக்தியுமுடையவர்கள். தங்கள் உறவினர் களை இழந்து துக்கப்படுகின்றார்கள். உங்களைக் காண வெட்கப்படுகின்றார்கள்” என்று கூறினார். துரியோதனனைப் பார்த்து கண்ணீர் பின்னர் காந்தாரியைப் பார்த்து, “அன்னையே! துரியோதனன் தங்களை ஆசி வேண்டிய காலத்தில் “தர்மம் ஜெயிக்கும்” என்றீர்கள். உங்கள் வார்த்தை பலித்தது. ஆட்சி செய்கின்ற காலத்தில் உன் மகன் சான்றோர்களின் அறிவுரைகளைக் காது கொடுத்துக் கேட்கவேயில்லை.
அதனால் அவன் அதர்மமாகவும், ஆணவ மாகவும் நடந்து கொண்டான். எனவே பாண்டவர்களைக் கோபிக்காதீர்கள் என்று கூறினார். துரியோதனன் வீழ்ந்து கிடக்கும் இடத்திற்கு அஸ்வத்தாமா, கிருபாசாரியார், கிருதவன்மா ஆகிய மூவரும் சென்றனர். கீழே விழுந்து கிடந்த துரியோதனனைக் கண்டு கண்ணீர் வடித்தனர். விம்மி விம்மி அழுதனர். அப்பொழுது துரியோதனன் அவர்க ளிடம், பீமன் தன்னைத் தொடையில் அடித்து வீழ்த்தியதையும், தரையில் வீழ்ந்த தன்னை இரக்கமில்லாது தன் காலால் தன் தலையை உதைத்ததையும் எடுத்துக்கூறி வருந்தினான். அதனைக் கேட்டு அம்மூவரும் வருந்தினர். அப்பொழுது அஸ்வத்தாமன் துரியோதனனிடம், “ஐயா! அரசே! இப்பொழுது என்னைச் சேனாதிபதி ஆக்கினால் பாண்டவர்களை இன்றிரவே கொல்வேன் ” என்று உறுதி கூறினான். துரியோதனன் அதற்கு உடன்பட்டு, கிருபாசாரியாரைக் கொண்டு அவனைச் சேனாதிபதியாக்கினான். மூவரும் பாண்ட வர்களைக் கொல்லும் பொருட்டு ஒரு காட்டுப் பகுதிக்குச் சென்றனர். அம்மூவரும் போனபின் சஞ்சயன் அங்கு வந்தான்.
அவனைக் கண்டு துரியோ தனன் அழுதான். அவனிடம் தன் இறப்புச் செய்தியைத் தன் தாய் தந்தையர்க்குச் சொல்லி, பின்னர் அவர்களின் மனத் துயரத்தைப் போக்குமாறு கூறினான். சஞ்சயனும் அவனுக்கு ஆறுதல் கூறி அவ்வாறே செய்வதாகச் சொல்லி அஸ்வத் தாமா முதலானோர் சென்ற இடம் நோக்கிச் சென்றான்.
சல்லிய பருவம் முற்றியது.