கெளரவர்களை வெற்றி கொண்டு பாண்டவர்கள் திட்டத்துய்மனோடும். சாத்தகியோடும், கண்ணபிரானோடும், எழு நூறு யானைகளோடும், நாலாயிரம் தேர்க ளோடும், நாலாயிரம் குதிரைகளோடும், பதினாயிரம் காலாட்படைகளோடும் துரியோதனனைத் தேடிச் செல்லலாயினர். நான்கு திக்குகளிலும், நகரங்களிலும் எல்லாவிடங்களிலும் துரியோதனனைத் தேடியும் காணாராகி மயங்கி இருக்கும் வேளையில் வேடர்கள் சிலர் துரியோதனன் ஒளிந்துள்ள இடத்தைக் கூறினர்.
உடனே கண்ணபிரான், “இறந்தவர்களைப் பிழைக்கச் செய்வதற்காகத் துரியோதனன் மடுவினுள் புகுந்துள்ளான்” என்று கூற. பாண்டவர்களும், கண்ணபிரானும் துரியோ தன் இருக்குமிடத்தை அடைந்தனர். அப்பொழுது பீமன், “துரியோதனா! நீயோ மூன்றுலகங்களும் போற்றிட நாட்டை ஆண்டு வந்த பேரரசன். அத்தகைய பெருமைமிக்க நீ, எந்த அறிவு கொண்டு, வீரத்தையெல்லாம் விட்டு, இந்த மடுவினுள் உள்ள தண்ணீரில் புகுந்து கொண்டிருக்கின்றாய். சொல்.
எங்களுக்கு நாள் தோறும் பெருந்துன்பங்களையெல் லாம் இழைத்து வீரம் பேசிக் கொண்டிருந்த கோழையே! உன் படையில் மாண்டுபோன வரை மீண்டும் உயிர்ப்பிப்பதற்குரிய மந்திரத்தை உச்சாடணம் செய்யவா இந்த மடுவினுள் புகுந்து கொண்டாய்? நீ உயிருடன் இருந்தால் அல்லவா அதனை முற்றச் செய்ய முடியும்! ”நீசனே! யுத்தமுறைப்படி நீ வென்றால் இந்த நாட்டை மீண்டும் ஆளலாம். போரில் இறந்தாயானால் வீர சொர்க்கம் அடைய லாம். இவ்விரண்டையும் விட்டு விட்டு எங்கும் நீ ஓடி ஒளிய முடியாது, நான் உன்னைச் சும்மா விடமாட்டேன்.
உடனே என்னுடன் போர் செய்ய எழுந்துவா. வணங்காமுடி மன்னனே! நீரை விட்டு வெளிவரவில்லையென்றால், நீரை வற்றச் செய்ய எங்கள் அர்ச்சுனனிடம் அக்னி யாஸ்திரம் உள்ளது. அது முன்னொரு காலத்தில் முருகப் பெருமானின் திரு அவதாரமாகிய உக்கிர பாண்டியன் (வடிம்பலம்ப நின்ற பாண்டியன் எனவும் கூறுவர்) விடுத்த வேலினால் அன்று கடல் நீர் வற்றியது போல இன்று இந்த மடுவின் நீரை வற்றச் செய்துவிடும். எனவே எழுந்துவா” என்று கூறிய சொற்கள் துரியோதனன் காதில் எட்ட, அவன் மந்திரம் கூறுவதைவிட்டுவிட்டுக் கரை யேறி பீமன் எதிரே வந்து நின்றான்.
கண்ணபிரானின் காட்டமான பதில் தன்னுடைய முயற்சியை வீணாக்கிய தால், தோள்களைத் தட்டிக் கொண்டும், பற்களை நெறுநெறு எனக் கடித்துக் கொண் டும், கதையைச் சுழற்றிக் கொண்டும் மேலே வந்த துரியோதனன் வீமனை நோக்கி, “இந்த கதையால் உன்னைக் கொல்லுவேன். வாயை அடக்கு ‘ என்று கோபத்தோடு கூறினான். பின்னர் கண்ணபிரான் முதலானவரைப் பார்த்து, “பல்வகை வாகனங்களோடும்; பல்வகை ஆயுதங்களோடும் பலராய்த் திரண்டு நிற்கின்ற உங்களோடு, வாகனம் எதுவு மின்றி, துணையாருமின்றி, கதை தவிர வேறு படைக்கலம் இல்லாமல் தன்னந் தனியே தரையில் நிற்கும் நான் போர் செய்ய வேண்டுமென்றால் அது எப்படி சாத்தியமாகும் ? யுத்த முறைக்கு ஏற்ற தல்லவே ” என்று கூறினான்.
யுத்தமுறை பற்றிப் பேசுகின்ற துரியோ தனா ! வீரத்தோடு போரிட்ட அபிமன்யு என்ற தனி ஒருத்தனை நிராயுதபாணியாக நின்ற அவனை,துரோணர், கர்ணன் போன்ற பலமகாரதர்கள் ஒன்று சேர்ந்து கொன்ற அந்த மட்டமான, கீழ்த்தரமான செயலை போலப் பாண்டவர்கள் செய்ய மாட்டார்கள். இதனை முதலில் நன்றாகத் தெரிந்துகொள் “மன்னனே! உன்னுடைய அரசவையில் அன்று கூறிய வஞ்சின மொழிப்படி உன் தம்பியர் தொண்ணூற்றொன்பதின்மரை யும் கொன்ற வாயுபுத்திரனாகிய பீமன் ஒருவனே தனியனாய் இருந்து உன்னுடன் போரிடுவான். இப்போரில் வென்றவர்கள் இந்நாட்டை ஆளலாம்” என்று கண்ண பிரான் காட்டமாகப் பதில் கூறினார்.
அதனைக் கேட்ட துரியோதனன் வாயடைத்துப் போய், “போரிடுவதற்குரிய களம் எது?” என்று மட்டும் கேட்டான். அதற்குக் கண்ணபிரான், “முன்பு பரசுராமர் க்ஷத்திரிய மன்னர்களை இருபத்தொரு தலைமுறை அழித்துவிட்டுப் பின் நரமேத யாகம் செய்த இடமாகிய ‘ஸ்யமந்த பஞ்சகமே’ போர் செய்தற்குரிய இடமாகும்” என்று கூறினார்.
(குறிப்பு : ‘ஸ்யமந்த பஞ்சகம்’ என்பது நான்முகனுக்குரிய இடமாகும். க்ஷத்திரிய மன்னர்களை இருபத்தொரு தலைமுறை பரசுராமன் ஒழித்திட்டான் என்றும், தான் செய்த பிரதிக்ஞையின் படி, அம்மன்னரது இரத்த வெள்ளத்தால் ‘ஸ்யமந்த பஞ்சகம்’ என்ற ஐந்து குளங்களை ஏற்படுத்தி, அவற்றில் தன் தந்தை ஜமதக்னி முனிவர்க்கு ஜலதர்ப்பணம் செய்திட்டான் என்றும், தன்னால் கொல்லப்பட்ட மன்னர்களது தலைகளை ஆகுதியாக நெருப்பில் பெய்து ஒரு வேள்விச் சடங்கை முடித்து, அந்த யாகத்தின் முடிவில் தனக்குச் சுவாதீனமாகவுள்ள பூமி முழுவதையும் காசியப முனிவருக்குத் தானம் செய்துவிட்டு, மகேந்திர மலைக்குச் சென்றிட்டான் என்றும் என் நூல்கள் கூறும்.)
கண்ணபிரான் இவ்வாறு கூறியதும், துரியோதனன் பீமனை நோக்கி, “பீமா! எந்த ஆயுதம் கொண்டு போரைச் செய்யப் போகின்றாய்?” என்று கேட்டான் அதற்கு பீமன், உன்னைப் போல் கதையையே எடுத்துக் கொள்கிறேன். வேறெந்த ஆயுதத் தையும் எடுக்கமாட்டேன்” என்றான். அதனைக் கேட்டவுடன் வணங்காமுடி மன்னனாகிய துரியோதனன் கதையை எடுத்துக் கொண்டு தம் கால்கள் சிவக்க ஸ்யமந்தபஞ்சகம் நோக்கி நடந்து சென்றான்.