எதிர்த்து வருகின்ற துரியோதனன் படைகளையெல்லாம் பொடிப் பொடியாக உதிரச் செய்தும், பல வேந்தர்களுடைய படைகளையெல்லாம் பின்னடைந்து போக அவற்றையழித்தும், தன்னைப் பெற்ற வனாகிய வாயுவைப் போல பீமன் போர் புரியுங்காலத்தில், சகாதேவன், தந்திரத்தில் வல்ல சகுனியின் மார்பில் தைக்கும்படி ஒரு பாணத்தைத் தொடுத்து விடுமுன்பே, துரியோதனன் சகாதேவன் மேல் ஒரு கூரிய வேலினை எய்தான்.
அந்த வேல் சகாதேவன் மார்பைத் துளைக்க, அவன் மூர்ச்சையாகித் தேரின் மேல் சாய்ந்தான். அதனைப் பீமன் கண்டு ஒரு வேலெறிந்து தன் தம்பி சகாதேவனைப் போலவே துரியோதனனையும் மூர்ச்சித்துப் போகச் செய்தான். துரியோதனனை மூர்ச்சிக்கச் செய்த பீமன்மேல் அஸ்வத்தாமன் ஓர் வேலினை ஏவ, அதனை அழித்து, அந்த பீமன், அந்த அஸ்வத்தாமன் மீது ஓர் அம்பு ஏவி அவனைத் தன் தேரின் மேல் மூர்ச்சித்து விழச்செய்தான்.
இதனைக் கிருபர் கண்டார். கோபங்கொண்டு தன் சேனை யுடன் போரிட்டுத் தோல்வியுற்றுக் களத்தை விட்டு நீங்கினார். மயக்கம் தெளிந்து எழுந்த சகாதேவன் மாமன் சகுனியின் மகன் உலூகனுடன் போரிட்டு அவனைக் கொன்றான். தன் மகன் மாண்டதைக்கண்டு, சருனி கண்ணீர் சிந்தி அழுதாள். ஒரு முகூர்த்த நேரம் பேசாமல் இருந்தான்.
ஒரு கத்தியை எடுத்துக் கொண்டு சகாதேவன் மீது பாய்ந்தான். சகாதேவன் தன் அம்பினால் அதனை இரண்டு துண்டாக்கினான். பின்னர் இருவரும் மாறி மாறிப் போரிட் டனர். சகுனியை கொன்ற சகாதேவன் அப்போது சகுனியைப் பார்த்து சகாதேவன், “நரி போன்றவனே! அன்று சூதாட்டத்தில் வென்றபோது என்ன வெல்லாம் பேசினாய். அதன் பயன் இன்று மகனை இழந்து அனுபவிக்கிறாய். இந்தக் குருக்ஷேத்திரப் த்திரப் போருக்குக் க்குக் காரண கர்த்தனே நீதான். உன் பேச்சைக் கேட்டவர் அனைவரும் தங்கள் சுற்றத்தாருடன் கொல்லப்பட்டனர். குலத்துக் கோடரிக் காம்பான கண்ணிலான் மகள் துரியோ தனனும், நீயும் மட்டும்தான் உயிரோடு உலவுகின்றீர்கள். இப்போது நீயும் மாளப் போகிறாய்” என்று கூறி அச்சகுளியைத் தாக்கினான்.
யாரும் நெருங்க முடியாத அளவு அம்பு மழையைப் பொழிந்து சகுனியின் தேரையும், தேர்ப்பாகளையும், தேர்க்குதிரைகளையும், வில்லையும், கொடியையும் குடையையும் அறுத்தான். பின்னர் அம்பொன்றினாலே அவன் தலையை அறுத்தான். சகுனி விண்ணதிர மண்ணதிர பொய்ம்மை புலம்ப, அதர்மம் தலைகுனியக் கீழே விழுந்தான். சகுனி இறந்து விழுந்ததைக் கண்டு அவனுடைய படைவீரர்கள் பயந்து ஓடத் தொடங்கினார்கள்.
பாண்டவ வீரர்கள் பெருமகிழ்ச்சியுற்று ஆரவாரம் செய்தார் கள். வெற்றிச் சங்குகள் ஊதினார்கள். பாண்டவ வீரர்கள் சிலர் சகாதேவனைக் கண்டு ”வஞ்சனையாளன் சகுனியைக் கொன்ற நீ பெருவீரனே” என்று கூறிப் பாராட்டினார்கள். துரியோதனன் தன் மாமன் சகுனி, பாண்டவர்களின் இளையவன் சகாதேவனால் மடிந்ததை அறிந்து பெரிதும் துயர முற்றான். பின்னர் தெளிந்து, கோபித்து, பாண்டவர்கள் ஐவரையும் கொல்வதற்காக நால்வகைப் படைகளுடன் போருக்கு எழுந்தான். துரியோதனன் படைவீரர்களோடு போரிட வந்ததைப் பார்த்த அர்ச்சுனன்.
“பீஷ்மர், துரோணர், கர்ணன், சல்லியன் போன்ற பெருந்தலைகளையும், சகுனி மாமனையும் இழந்த பின்னும் கூட நல்ல புத்தி வாராமல் எதனை நினைத்துக் கொண்டு போரிட வந்துள்ளான்” என்று வியப்புடன் கேட்டான். அதற்குக் கண்ண பிரான், “அனைவரையும் சாகடித்து விட்டான் அல்லவா! இன்று அவனே சாவதற்காக வருகின்றான்” என்று கேலியாகக் கூறினார். உடனே பீமனும், அர்ச்சுனனும், துரியோதனனை எதிர்த்து உக்கிரமாகப் போரிட்டார்கள். அவனுடன் வந்த படைகளையெல்லாம் கொன்றார்கள். எல்லாப் படைகளையும் இழந்த துரியோ தனன் சிங்கத்தோடு மோதி தோற்றோடும் யானை போல ஒருவரும் அறியாதபடி கதாயுதம் ஒன்றை ஏந்திப் புறங்காட்டிப் போனான்.