அதன்பின் நகுல சகாதேவர்களும் சாத்தகியும் ஒருமுகமாக நின்று வில்லை வளைத்து, சல்லியன் உடம்பு மறையும்படி, அம்புகளைத் தொடுத்தார்கள். சல்லியனோ அந்த மூன்று வீரர்களின் மூன்று விற்களை யும் தனித்தனியாக அறுத்து ஏளனமாகச் சிரித்தான். அவன் செயலைப் பார்த்துக் கோபித்து பீமன் அவனுடன் போரிட்டுப் புறங்காட்டி ஓடச் செய்தான்.
அவன் தேரை அழித்தான்; அவன் வேறொரு தேர் ஏறி வருவதற்கு முன் அவனுடைய கௌரவ சேனைகளை அழித்தான். கௌரவ சேனையைக் கலக்கிக் கொண்டு வந்த பீமன்; அஸ்வத்தாமனைக் கண்டு கோபத்தால் கண்கள் சிவக்க, அவனை எதிர்த்து நின்றான். பல அம்பு களைச் சொரிந்தான். அப்போது காண்டீ பத்தை ஏந்திய அர்ச்சுனன் அங்கு வந்தான். அஸ்வத்தாமன் அர்ச்சுனனைப் பார்த்து, அவன் தேர்மீதும், அவன் பாகன் கண்ண பிரான் மீதும் அநேக பாணங்களை விடுத்தான்.
அர்ச்சுனனோ அவனோடு எதிர் போரிட்டு, அவனது தேரை அழித்து நடந்து போகச் செய்தான். உடனே அஸ்வத்தாமன் வேறொரு தேர் மேல் ஏறி வர அர்ச்சுனன் அதனையும் அழித்தான். உடனே அஸ்வத் தாமன் ஒரு கதையை எடுத்துக் கொண்டு அர்ச்சுனன் மீது பாய நின்றான். அர்ச் சுனனோ அம்புகள் பல செலுத்தி, அக்கதையை ஒரு நொடியில் அழித்தான்.
தான் விடுத்த கதையை அழித்துவிடவே அஸ்வத்தாமன் கோபங்கொண்டு இரும் புலக்கை ஒன்றை வீசி, ‘வல்லையேல் இதனை இரண்டாக்கு ‘ என்றான். அர்ச்சுனனோ அலட்டிக் கொள்ளாமல் ஒரு கண நேரத்தில் அதனை அழித்தான். அதனால் அஸ்வத்தாமன் வெட்கிச் சிங்கத்தின் முன் யானை அஞ்சுவது போல நடுங்கினான்.
அதனைக் கண்டு கிருபாசாரியர் கோபித்து அர்ச்சுனன் மீது போர் தொடுத்து, தோல்வியுற்று, தேரை இழந்து அவ்விடம் விட்டு அகன்றார். பின்னர் கிருதவன்மா துரியோதனன் தம்பியரோடு வந்து போர் செய்தான். அவனும் தன் குதிரைகளையும், தேரையும், தேர்ப்பாகனையும், வில்லை யும், கொடியையும் இழந்து வெட்கத்தோடு தலைகுனிந்து, அப்பால் சென்றான்.
அவன் உடன்வந்த துரியோதனன் தம்பியர் அனைவரும் பீமன் வெங்கதைக்குப் பலியானார்கள். அந்த நேரத்தில் சாத்தகியும், தரும புத்திரர் முதலாக உள்ள பாண்டவர்கள் ஐவரும் தம் மேல் படையெடுத்து வருதலைக் கண்ட சல்லியன், கோபத் தோடு வில்லை வளைத்துப் போரிட்டுச் சாத்தகியைத் தேரைவிட்டு ஓடச் செய்தான்.
நகுலன் உடம்பினின்று இரத்தம் பெருகச் செய்தான். சகாதேவனும் புறங்காட்டி ஓடினான் தருமபுத்திரர் நெற்றியின் மீது இரத்தம் பெருகச் செய்தான். தருமபுத்திரருடைய நெற்றியில் இரத்தம் பெருகுதலைக் கண்டு மனந்தாளாமல் பீமன் தனது சத்துருகாநிதி என்னும் கதையால், சல்லியனின் மணிகள் பதித்த கிரீடத்தைக் கீழே தள்ளினான். அதனைக் கண்டு துரியோதனன் கோபித்து, அநேக வீரர்களுடன் வந்து போரிட்டான். பின்னர் அவன் பீமனிடம் தோல்வியுற்றுப் பாசறைக்கு மீண்டான்.