போர் செய்ய வேண்டும் என்ற முடிவில், இமய மலையின் தாழ்வரையில் துரியோதனன், சல்லியன், சகுனி. கிருபாசாரியார், கிருதவர்மா, அஸ்வத் தாமா, சித்திரசேனன், போன்ற அரசர்கள் ஒன்று சேர்ந்து யாரை அடுத்துச் சேனாதிபதி யாக ஆக்குவது என்று ஆலோசனை செய்தார்கள். அப்பொழுது துரியோதனன் அஸ்வத்தாமாவை நோக்கி, “எங்கள் குருவின் மைந்தனே! நாங்கள் உங்களைத் தான் நம்பியுள்ளோம். எனவே யாரைச் சேனாதிபதி ஆக்கலாம்? சொல்லுங்கள்” என்று வேண்டினான்.
அதற்கு அஸ்வத்தாமா, “மத்திர நாட்டு மன்னன் சல்லியன் சேனாதிபதியாக இருக்கட்டும். அவர்தம் மருமக்களை (நகுல சகாதேவர்கள்) விட்டு, நன்றியின் பொருட்டு நம் பக்கம் வந்துளார். மேலும் குலம், அழகு,உருவம், திறமை, போர்ப் பயிற்சி முதலான எல்லாவற்றிலும் மேம்பாடுடையவர்” என்று கூறினான். அவனுடைய கூற்றை எல்லா அரசர்களும் தாமதமில்லாமல் ஏற்றுக் கொண்டனர். உடனே துரியோதனன், சல்லியனை நோக்கி, கைகளைக் குவித்து வணங்கி, “மத்திர தேசத்து மன்னரே! வீரம் பொருந்திய தாங்கள் நம் கெளரவர் படைக்குச் சேனாதிபதியாக இருந்து வழி காட்டுதல் வேண்டும்” என்று வேண்டி னான். சல்லியனும் அதனை ஏற்றுக்கொண்டு. “மாமன்னரே! உங்கள் விருப்பத்தை நிறை வேற்றுகின்றேன். என் உயிர், பொருள் அனைத்தும் தங்களுக்கே சொந்தம் ” என்று கூறினான். அதன் பின்னர் முறைப்படி துரியோதனன் சல்லியனைச் சேனாதிபதி யாக்கினான்.
அப்பொழுது பேரிகைகளும், முரசங்களும் சங்கங்களும் முழங்கின; வீரர்கள் பேராரவாரம் செய்தார்கள். கெளரவப்படையினரின் இந்தப் பேரார வாரத்தைக் கேட்டுக் கண்ணபிரானைப் பார்த்து தருமபுத்திரர், “மாதவா! கேசவா! சல்லியன் கெளரவர் சேனாதிபதியாகி விட்டான். அதனை உணர்ந்து அதற்கேற்ற படி நம் படையினரை நாம் நடத்துதல் வேண்டும்” என்று கூறினார். உடனே கண்ணபிரான் தருமபுத்திரரைப் பார்த்து,”அரசரே நான் மத்திர நாட்டு மன்னன் சல்லியனை நன்கு அறிவேன். போரில் பீஷ்மர், துரோணர் போன்றவர் கட்கு இணையானவர். பலத்தில் பீமனை விட மேலானவர். உம்மைத் தவிர அவரை எதிர்ப்பவர் வேறு யாரும் இல்லை. எனவே நீரே அவரைப் போரில் கொல்லப் போகிறீர்” என்று உற்சாகம் ததும்பக் கூறினார். பின்னர் கண்ணபிரான் மற்றவரோடு பாசறைக்குத் திரும்பினார். பதினேழாம் நாள் போர் முடிந்து இரவு வந்தது.
சல்லியன் மாண்டான் பொழுது புலர்ந்தது
பதினெட்டாம் நாள் போர் தொடங்கலாயிற்று. எல்லா அரசர்களும், படைவீரர்களும் சல்லிய னைத் தங்கள் சேனாதிபதியாகக் கொண்டு போர்க்களத்திற்குப் புறப்பட்டனர். அப்பொழுது அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, “யாரும் தனித்தனியே நின்று போர் செய்தல் கூடாது; ஒன்று சேர்ந்தே போர் புரிதல் வேண்டும்; நம் யுத்த வீரர்கள் ஒருவர்க் கொருவர் பாதுகாத்துக் கொண்டே போர் செய்யவேண்டும். ஒற்றுமையாக இருக்க வேண்டும்’என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள். சல்லியன் வகுத்த சர்வதோபத்திர வியூகம் அப்போது சல்லியன் ‘சர்வதோபத்திரம்’ என்னும் வியூகத்தைத் தன் சேனையைக் கொண்டு வகுத்திட்டான்.
வியூகம் என்பது வீரர்கள் கண்டபடி தனித்தனி நின்று பரவியில்லாமல், ஒரு வடிவமையத் திரண்டு, வெல்லுதற்கரிதாய், பகைவரை எளிதில் அழிப்பதற்குரியதாய் விளங்கும் ஓர் அமைப்பு ஆகும். இத்தகைய வியூகங்கள் பல உண்டு. அவற்றில் சர்வதோபத்திர வியூகம் என்பது நாற்புறத் திலும் எங்கு நின்று பார்த்தாலும் ஒரே விதமான காட்சியாகத் தோன்றும்படி சேனையை அணிவகுத்தல் ஆகும். இத்தகைய வியூகத்தைப் பீஷ்மர் ஒன்பதாம் நாள் போரில் பயன்படுத்தினார்.
அத்தகைய சர்வதோபத்ரவியூகத்தின் கண் சல்லியன் போர் முகப்பின்கண் நின்றிருந்தான். கிருதவர்மா இடப்புற மாகவும், கிருபர் வலப்புறமாகவும், அஸ்வத்தாமா பின்புறமாகவும், துரியோ தனன் நடுவிலும் நின்றார்கள். அதே சமயத்தில், பாண்டவர்க்கு மைத்துனனும், பாண்டவ சேனாதிபதியு மாகிய திட்டத்துய்மன் அஸ்திரமென்னும் வியூகத்தை அமைத்தான், சல்லியன் சேனாதிபதி ஆனதைக் கண்ட தருமபுத்திரர். வியந்து கண்ணபிரானை நோக்கி “கண்ணபிரானே! சல்லியனைப் படைத் தலைமையாகக் கொண்ட வலிமைமிக்க கெளரவப்படையை குறைவான படை களையுடைய நமது சேனையைக் கொண்டு எவ்வாறு வெல்ல முடியும்? என்று கேட்டார்.
அதனைக் கேட்டு கண்ணபிரான். “தரும புத்திரரே! மகாரதர்களான பெருமைமிக்க கர்ணனையும், ஆசார்யர் துரோணரையும், பிதாமகர் பீஷ்மரையும் முறையே அழித் திட்ட அர்ச்சுனனும், திட்டத்துய்மனும், சிகண்டியும் போன்ற மகா வீரர்கள் நம் அருகில் இருக்கையில் நீ ஏன் அஞ்சு கின்றாய்? சல்லியனை எளிதில் வென்று விடலாம். மலைகளையே எடுத்தவர்க்கு சாதாரணக் கற்களை எடுத்தல் பெரிய செயலோ? இனி பீமன் துரியோதனனை நிச்சயம் கொல்லப் பேகின்றான். சகுனி மாமன் உயிரை நகுல சகாதேவர்கள் பறிப்பர். நீரே தான் சல்லியன் உயிரைப் பரிக்கப் போகின்றீர்” என்று கூறியதைக் கேட்டுத் தருமபுத்திரர் மன மகிழ்ந்தார்.