பதினெட்டாம் நாள் போர்… சல்லியன் சேனாதிபதி ஆதல்
கர்ணன் இறப்போடு பதினேழாம் நாள் போர் முடிந்தது. மறுநாள் சூரியன், தன்னுடைய மகன் கர்ணனைக் கொன்ற தற்காக மகிழாமல், வருந்தித் துடிக்கின்ற பாண்டவர்கள் தீய ஆணவமிக்க துரியோ தனனைக் கொல்வதைக் காணும் பொருட்டு, தன் வருத்தமெல்லாவற்றையும் மறைத்துக் கொண்டு தன் ஆயிரங்கிரணக் கதிர்கள் ஒளி வீச பதினெட்டாம் நாள் காலை தோன்றினான். கிருபாச்சாரியார் அறிவுரை துரியோதனன் தன் உயிர் நண்பன் கர்ணன் இறந்ததனால், ஒரு பெரிய வலிமை மிக்க துணையை இழந்தவனைப் போலச் சோர்வுற்றுக் காணப்பட்டான்.
போரில் நாட்டமற்றும் விளங்கினான். ‘அப்பொழுது கிருபாசாரியார் துரியோதன னிருக்குமிடத்திற்கு வந்தார். அவனைப் பார்த்து, “அரசே! அரசர்களுக்குத் தர்மமான யுத்தத்தைவிட, சிறந்த பேறு எதுவு மில்லை. அங்கு தந்தை, தாய், சகோதரன், சகோதரி என்ற உறவே இல்லை. போரில் புரந்தார் கண் நீர்மல்க சாகிற்பின், அத் தகைய இறப்பினை இறந்தாயினும் பெற்றுக் கொள்ளலாம்.” என்று முன் னோர்கள் கூறியுள்ளனர். அதிலும் முகத் திலும் மார்பிலும் படுகின்ற விழுப் புண்ணைப் பெற்று இறப்பதுதான் மிகச் சிறந்தது என அக்காலத்தவர் கருதினர்.
அதற்கு மாறாகப் புறமுதுகிடுதல் அதர்ம மாகும். ”துரியோதனா! பிதாமகர் பீஷ்மர், ஆசார்யர் துரோணர், தான வீரன் கர்ணன், சிந்து நாட்டு அதிபதி ஜயத்ரதன் போன்ற மகாரதர்கள் நம்மை விட்டுப் போய் விட்டார்கள். யாரை நம்பியிருந்தோமோ அவர்களெல்லாம் சொல்லி வைத்தாற் போல ஒன்றன்பின் ஒருவராக வரிசையாக மாண்டு போனார்கள். இனி அர்ச்சுனன், பீமன் போன்றவர்களை எதிர்க்கக்கூடிய ஆற்றல் மிக்க மகாரதர்கள் யாரும் நம்மிடம் இல்லை. இனி பீமன் சபை நடுவில் சொன்னதைப் போலச் செய்வான். ஏற்கனவே துச்சாதனனிடம் அவன் நடந்து கொண்ட விதத்தைப் பார்த்தோம். ஆதலின், மன்னா! நீ இனி உன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
பொது வாகத் தன்னைவிட வலிமைமிக்கவனிடம் சமாதானம் செய்து கொள்ளலாம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இப்போது நாம் பாண்டவர்களைவிட வலிமையில் குறைந் துள்ளோம். ஆதலின் சமாதானம் செய்து கொள்வதுதான் நல்லது. “தருமபுத்திரன் உண்மையிலே தர்ம சிந்தனையுடையவன்; அவன் யாரையும் பகைவராகக் கொள்ள மாட்டான். பெரியோர்களிடம் பணிவுடன் நடப்பான். எனவே அவனுடன் சமாதானம் செய்து கொள்ளலே விவேகமானது” என்று சில அறிவுரைகளை நிதானமாகக் கூறினார்.
அதனைக் கேட்ட துரியோதனன், “ஐயா! ஆசார்யரே எனக்கு நன்மை செய்யும் எண்ணத்துடன்தான் தாங்கள் இந்த அறிவுரைகளைக் கூறியுள்ளீர்கள். நோயில் விழுந்தவனுக்கு மருந்துகள் வேண்டா. அது போலத் தங்களின் அறிவுரைகள் இப்பொழுது எனக்கு இனிமையைத் தரா. சமாதானத்திற்கு நாம் சென்றால் என்னால் நாட்டை விட்டுத் துரத்தப்பட்ட தரும புத்திரர் நம்மை எவ்வாறு அன்போடு வரவேற்பார்? மேலும் அர்ச்சுனனும், கண்ணபிரானும் என்னால் வஞ்சிக்கப்பட்ட வர்கள். எனவே என் சமாதானத் தூதை அவர்கள் ஏற்கமாட்டார்கள். அது மட்டுமல்லாது அபிமன்யு மறைவால் அந்த அர்ச்சுனனும், கண்ணபிரானும் பெரிதும் துயரம் அடைந்துள்ளார்கள். அதனால் அவர்கள் இருவரும் எனக்கு ஆதரவாக இருக்கவே மாட்டார்கள்.
பீமனோ சொல்லவே வேண்டியதில்லை. அவன் மிகவும் கொடியவன். கடுமையான சபதத்தை அவன் செய்துள்ளான். கௌரவர் நூற்றுவரையும் தான் ஒருவனே கொல்ல வேண்டும் என்ற வெறியில் உள்ளான். போரில் மரணம் அடைந்தாலும் அடைவானே தவிர கொண்ட சபதத்தை விடமாட்டான். நகுல சகாதேவர்கள் என்னிடம் எப்பொழுதும் விரோதம் பாராட்டுபவர்கள்; எமனைப் போன்றவர்கள். அதற்கு மேலாக அன்று அரசவையில் திரெளபதி அவமானப் பட்டதை அந்தப் பாண்டவர்கள் சிறிதள வும் மறக்கவே இல்லை. அவர்கள் அனை வரும் என் அழிவையே விரும்புகிறார்கள்.
அதனால் சமாதானம் எப்படி சாத்திய மாகும்? “எல்லா அரசர்களுக்கும் நடுவில் ஆயிரம் கிரகணக்கதிர்களை வீசும் சூரியன் போல வாழ்ந்து கொண்டிருந்த நான் எப்படி பாண்டவர்களிடம் அடங்கி இருக்க முடியும்? எவ்வாறு அவர்களிடம் அடிமை போல வாழ முடியும்? ஆகையால் எவ்வகையில் பார்த்தாலும் சமாதானம் என்பது இன்றைய நிலைக்குப் பொருந்தவே பொருந்தாது. அதனால் போர் செய்து பகைவர்களைக் கொல்வதுதான் ஒரே வழி. முடியா விட்டால் வீர சொர்க்கம் அடையலாம்” என்று கூறி, கிருபாசாரி யாரின் சமாதான யோசனையை ஏற்க மறுத்துவிட்டான். அங்கிருந்த அனைவரும் அரசன் கூறிய யோசனைதான் இன்றைக்கு ஒத்து வரக்கூடியது என்று கூறி ‘யுத்தம் செய்தலையே’ ஏற்றுக் கொண்டார்கள்.