பதினைந்தாம் நாள் போர்.. துரோணர் வீழ்ந்தார்
பீமன் மகன் கடோத்கஜனும், அர்ச்சு னனின் அருமைப் புதல்வர்கள் இரவானும், அபிமன்யுவும் பாண்டவர்களுக்காகப் பெரும் போர் செய்து தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்து மறைந்தார்கள்.
அர்ச்சுனனைக் கொல்வதற்காகவே வைத்திருந்த இந்திரன் கொடுத்த தெய் வாம்சம் பொருந்திய சக்தி ஆயுதத்தைத் தான் கர்ணன் கடோத்கஜன் மீது எறிந்தான். அதனால் அவன் உயிர் துறந்தான். தன்னுயிர் கொடுத்துக் கடோத்கஜன் தன் சிறிய தந்தையின் உயிரைக் காப்பாற்றினான் எனலாம்.
யுத்தம் பொழுது விடிந்தும் நிற்கவில்லை. கடும்போர் நடந்து கொண்டே இருந்தது. துரோணருடைய வில் இடை விடாமல் பாண்டவர்கள் சேனையை வீழ்த்தி, பாண்டவர் உள்ளத்தில் பயம் ஏற்படுத்திக் கொண்டிருந்தது.
அதனைப் பார்த்த கண்ணன், “அர்ச் சுனா! இந்தத் துரோணரை யுத்தத்தில் வெல்லக் கூடியவர்கள் யாருமில்லை. இவர் கையில் ஆயுதத்தை ஏந்தியிருக்கும் வரையில் இவரை, யாராலும் போர் புரிந்து கொல்ல முடியாது. நியாய அநியாயங்களை எல்லாம் புறக்கணித்துவிட்டு ஏதேனும் செய்துதான் ஆகவேண்டும்; வேறுவழியில்லை; தன் அருமை மகன் அஸ்வத் தாமன் இறந்ததாகக் கேள்விப்பட்டால் துரோணர் போர் புரியமாட்டார்; துயரத் தினால் ஏந்தியிருந்த ஆயுதத்தையும் கீழே போட்டுவிடுவார். அதனால் எவரேனும் ஒரே ஒரு பொய்யைச் சொன்னால் போதும்! அந்தப் பொய்யைத் துரோணரிடம் சொல்லித்தான் ஆகவேண்டும்” என்றார்.
தருமபுத்திரர் பொய் சொல்லல்
அர்ச்சுனன், முதலான யாரும் இந்தப் பொய் சொல்ல ஒப்புக்கொள்ளவில்லை. அதருமம் செய்ய அவர்களின் மனம் இடந் தரவில்லை. தருமபுத்திரர் சிறிது நேரம் யோசித்தார். ஆணவமிக்க துரியோத னாதியர் கூட்டம் அழிய வேண்டுமானால், துரோணரும் இறந்தாக வேண்டும்; அதற்காகப் பொய் சொல்லுகின்ற இந்தப் பாவ காரியத்தைச் செய்ய ஒப்புக் கொண்டார்.அடைக்கலம் புகுந்த நண்பனாகிய கிஷ்கிந்தா சுக்கிரீவன் பொருட்டு ஸ்ரீ ராமபிரான் வாலியை மறைவாக நின்று அதருமமான முறையில் கொல்ல வில்லையா! அவ்வாறே தருமபுத்திரரும் இங்கு செய்யலானார். இதன் மூலம் தருமபுத்திரர் தன் புகழில் ஒரு கரும் புள்ளியை ஏற்படுத்திக் கொண்டார் எனலாம்.
போர்க்களத்தில் பீமன் அப்பொழுது தன் கதையைக் கொண்டு அஸ்வத்தாமன் என்ற யானையைக் கொன்றான். அதனைக் கொன்றுவிட்டு அவன், துரோணர் அருகே சென்று அஸ்வத்தாமனைக் கொன்று விட்டேன் என்று கூறிவிட்டு நாணிக் கோணிச் சென்றான். துரோணர் அச்சமயம் பிரம்மாஸ்திரம் எடுக்கும் நிலையில் இருந்தார். அஸ்வத்தாமன் இறந்து விட்டான் என்று சொல்லிவிடவே எடுத்த பிரம்மாஸ்திரத்தை நழுவவிட்டார். ஆனாலும் தயங்கினார். பீமன் சொன்னதை அவர் நம்பிவில்லை. அருகிலிருந்த தரும புத்திரரைச் சத்தியம் தவறாதவர் என்று எண்ணிக் கேட்டார். பொய் பேசுதலைக் கண்டு அஞ்சுகின்ற அத்தருமபுத்திரர் பீமனாலும், கண்ணபிரானாலும், தேற்றப்பட்டு அதனைச் சொல்ல முன்வந்தார்.
அவர் “அஸ்வத்தாமா கொல்லப் பட்டான்” என்னும் பொருளில் அஸ்வத்தாமா ஹத: குஞ்சாக: என்னும் வாக்கியத் தைச் சப்தமிட்டுச் சொன்னார். சொன்னதில் ‘குஞ்சரக’ என்ற வார்த்தையை மட்டும் மெதுவாகச் சொன்னார். துரோணர் ‘குஞ்சரக’ என்ற வார்த்தையைக் கேட்கவில்லை. அஸ்வத்தாமா ஹத:’ என்பதை மட்டும்தான் கேட்டார்.
தரையைத் தொட்ட தர்மரின் தேர்
இத்தகைய பொய்யைச் சொல்லா திருந்தால் துரோணருடைய பிரம்மாஸ் திரம் பலரைக் கொன்றிருக்கும். போரின் முடிவே மாறியிருக்கும். பாண்டவர்களைக் காப்பாற்ற வேண்டுமென்பதற்காக கண்ண பிரான் தூண்டுதல் மூலம் இப்படிப்பட்ட பொய்யான தொடரைத் தருமபுத்திரர் துணிந்து சொன்னார். இவையெல்லாம் ஒரு விநாடியில் நடந்து முடிந்துவிட்டது.
தருமபுத்திரர் வாயில் இவ்வாறு பொய்யான சொற்கள் வெளியான உடனே அவருடைய தேர் அதுவரையில் பூமியைத் தீண்டாமல், எப்போதும் தரைக்குமேல் நான்கு அங்குலம் இருந்ததானது, திடீரென்று பூமியைத் தொட்டது. அதுவரை யில் சத்தியமானது, அத்தேரை பூமியை தொடாமல் வைத்திருந்தது வெற்றிக்கு ஆசைப்பட்டுப் பொய் சொன்னபடியால் அத்தருமபுத்திரரின் தேரும் பாவம் நிறைந்த மண்ணின் மட்டத்திற்கு வந்துவிட்டது.
“அஸ்வத்தாமன் இறந்தான்” என்று தருமபுத்திரர் கூறியதைக் கேட்டதும் துரோணருக்கு உயிர் மேலிருந்த பற்று நீங்கியது. அப்பொழுது பீமன் அவரைக் கடுமையான மொழிகளால் நிந்தித்தான். எவ்வுயிர்க்கும் எத்தன்மையோர்க்கும் செந்தண்மை பூண்டொழுகும் அந்தணராகிய உமக்கு க்ஷத்திரியக் கோலம் ஏன்? அந்தணர்களுக்குரிய கொல்லா விரதத்தை நீக்கிவிட்டு கொல்லும் விரதத்தைத் தினந் தோறும் மேற்கொண்டது ஏன்? அந்தக் கொல்லும் விரதத்தைக் கூட ஆணவ நெறியில் நிற்கின்றவர்களுக்கும், அதர்ம வழி யில் செல்லுகின்றவர்களுக்கும் துணையாக அன்றோ கடைபிடிக்கின்றீர்? இந்தத் தர்மம் எந்த வேதவகையைச் சார்ந்தது? எங்கள் பக்கத்தில் நியாயம் இருக்கின்றது என்று தெரிந்தும், அநியாய வழி செல்லும் பாவிகளின் பக்கம் துணை போனதற்கு காரணம் என்ன? செஞ்சோற்றுக்கடனா” என்று பலவாறு நிந்தித்தான்.
திட்டத்துய்மன் துரோணரை கொல்லல்
மகன் இறந்துவிட்டான் என்று கேட்ட தனால் ஏற்கெனவே உயிர் மீது பற்றுவிட்ட அவர், இந்த நிந்தனைச் சொற்களைக் கேட்கவே அஸ்திரங்களையெல்லாம் எறிந்துவிட்டு யோக நெறியில் அமர்ந்து விட்டார். அந்தச் சமயத்தில் திட்டத்துய்மன் வாளெடுத்துக் கொண்டு தேர்மீது ஏறி, எல்லாரும் தடுத்துப் பார்த்தும், கேட்காது அவரை வெட்டித் தலையை வேறுபடுத்தி விட்டான். பாரத்வாஜபுத்திரருடைய ஆத்மா ஜகஜ்ஜோதியாய் விண்ணுலகம் சென்றது.
“பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்”
என்ற திருக்குறள் நெறிக்குப் புறம்பானது தருமரின் செயல் எனலாம். இந்த அப்பட்டமான பொய் தருமபுத்திரரின் வாழ்க்கையில் ஒரு களங்கம் ஏற்படுத்தி விட்டது என்றே சொல்லலாம். அதனால் தருமபுத்திரர் பொய் சொன்னதைப் பற்றி அர்ச்சுனன் மிகுந்த வேதனை அடைந்தான்.
தன் தந்தை துரோணர் அநியாயமாகத் திட்டத்துய்மனால் கொல்லப்பட்டார் என்பதைக் கேட்ட அளவில் அஸ்வத்தாமா வெகுண்டெழுந்தான். “தருமபுத்திரர் கபடத்தால் என் தந்தையைக் கொன்று விட்டார். அதனால் அவரையும், பாண்ட வர்களையும் பாஞ்சாலர்களையும் பழி வாங்கப் போகிறேன்” என்று கூறி நீரைத் தொட்டு ஆசமனம் செய்து உரிய மந்தி ரத்தை உச்சரித்து நாராயண அஸ்திரத்தை ஏவினான்.
நாராயண அஸ்திரப் பிரயோகம்
அந்த அஸ்திரமானது கொடு நாக்குகளை யுடைய பாம்புகள் போல வானத்தில் எங்கணும் மின்னின; அவற்றிலிருந்து சக்கர வடிவான கதை ஆயுதங்கள் வெளிப் பட்டன; கத்திகளும்; இரும்புருண்டைகளும் வெளிப்பட்டன. எல்லாம் சேர்ந்து வானத்தை மூடிவிட்டன. எங்கு பார்த்தாலும் ஆயுதங்களாகவே தென்பட்டன. அவற்றையெல்லாம் கண்ட பாண்டவ சேனை கலக்கம் கொண்டது. இங்கும் அங்கும் ஓடத் தொடங்கின. உடனே கண்ணபிரான் தன் இரண்டு கைகளாலும் ஜாடை காட்டி, “ஆயுதங்களுடன் வேறு எவருடன் சண்டை செய்யாதீர்கள் ஆயுதங் களைக் கீழே போட்டுவிடுங்கள் யானை, தேர், குதிரை போன்றவற்றிலிருந்து இறங்கிவிடுங்கள். நீங்கள் நிராயுத பாணியாய் நின்றால் நாராயணாஸ்திரம் ஒன்றும் செய்யாது” என்று கூறினார்.
கண்ணன் உரக்கக் கூறியதைக் கேட்டு அனைவரும் நிராயுதபாணியாய் நின்றனர். பீமன் தேரில் ஏறவே நாராயணாஸ்திரம் அவன் கையைத் தாக்கியது. வற்புறுத்தல் பேரில் இறங்கவே அவனும் தப்பித்தான். நாராயண அஸ்திரத்தினின்று தப்பித்தமை கண்டு அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அஸ்வத்தாமனுக்குத்தான் பெரு நஷ்டம், பாண்டவர்கள் ஆரவாரம் செய் தார்கள். பாண்டவர் சேனை மகிழ்ச்சிக் கடலில் மூழ்கியது. அதன்பின் அஸ்வத் தாமன் அக்கினியாஸ்திரத்தை அர்ச்சுனன் மீது விட்டான். அதனை அர்ச்சுனன் பிரம்மாஸ்திரத்தைவிட்டு அதன் வேகத்தைத் தணித்து ஒன்றுமில்லாது செய்துவிட்டான். மேலும் பல அஸ்திரங்களை விட்டும் ஒன்றும் பயனில்லாது போயிற்று.
கிருஷ்ணார்ச்சுனர்களும் பாண்டவர் களும் தாம்விட்ட எல்லா தெய்வாம்ச அஸ்திரங்களிலிருந்தும் தப்பியதைக் கண்டு அஸ்வத்தாமன் மனம் நொந்து போனான். போர் செய்வதிலும் நாட்டமில்லாது போனான். வில்லம்பைக் கீழே எறிந் தான். தேரில் இருந்து குதித்தான். போர்க் களத்தைவிட்டு நீங்கிச் சென்றுவிட்டான்.
வழியில் வியாசரைக் கண்டு, “ஐயனே! நான்விட்ட நாராயணாஸ்திரம் முதலான எல்லாம் பயனற்றுப் போய்விட்டன. அவற்றோடு முக்கிய அக்கினியாஸ்திரமும் பயனற்றுப் போய்விட்டது, மனம் வருந்து கின்றது. இதற்கு என்ன காரணம்?’ என்று கேட்டான். அதற்கு வியாசர், “அஸ்வத் தாமா! நர நாராயணர் என்று புகழ்பெற்ற அவ்விருவரே கிருஷ்ணார்ச்சுனர்கள் ஆவர். அவர்கள் தெய்வாம்சம் பொருந்தியவர்கள்; திருமந்திரத்தைப் பத்ரிகாசிரமத்தின் நர நாராயணராய் இருந்தபோது உலகிற்கு அருளிய அவர்களை யாராலும் வெற்றி கொள்ள முடியாது. அதனால் நீ கவலைப் படவேண்டாம் ” என்று கூறி வியாசர் விடைபெற்றுச் சென்றுவிட்டார்.
கெளரவர்களும், பாண்டவர்களும் தத்தம் பாசறையை அடைந்தனர். அன்று இரவுப் பொழுதைக் கழித்தனர்.
கர்ண பருவம்.. பதினாறாம் நாள் போர்… கர்ணன் சேனாதிபதி ஆதல்
பதினாறாம் நாள் காலை; துரியோதனன் முதலான கெளரவர்கள், சகுனி, கர்ணன், அஸ்வத்தாமா போன்றோர் தங்கள் தங்கள் ஆசனங்களில் அமர்ந்து இருந்தனர். அப்பொழுது, இதுவரை சேனாதிபதியாக இருந்த ஆசார்யர் துரோணர். திட்டத் துய்மனால் கொல்லப்பட்டதால், அந்தச்சேனைத் தலைவர் பதவிக்கு யாரை நியமிக்கலாம் என்று ஆலோசனை செய்யலாயினர்.
அங்கிருந்தவர்கள் பற்பலக் கருத்துக் களைக் கூறினார்கள். அவர்கட்குப் பின்னர் அஸவத்தாமா எழுந்து நின்று, “அரசே! நம் பக்கம் துரோணர் போன்ற மகாரதர்கள் வீர மரணம் அடைந்துவிட்டனர். பிதாமகர் பீஷ்மரோ அர்ச்சுனனால் அமர்த்தப்பட் டுள்ள அம்புப் படுக்கையில் படுத்துக் கொண்டுள்ளார். அவர்களுக்குப்பின், உத்தம குணமுள்ளவனும் கைம்மாறு கருதாத கொடை வளம் உடையவனும், அஸ்திரப் பயிற்சி மிக்கவனும் ஆகிய ‘தானவீரன்’ கர்ணனைச் சேனாதிபதி ஆக்கலாம்; திறமைசாலியான கர்ணன் நம் பொருட்டுப் பகைவர்களை வெற்றி கொள்ளும் பெரிய சக்தியைப் பெற்றிருப்பவன்” என்று கூறினான். இந்த வார்த்தைகளைக் கேட்டுத் துரியோதனன் பெருமகிழ்ச்சி கொண்டான்.
உடனே அவன் “என் உயிர் நண்பனே! அங்க நாட்டு வேந்தனே! கர்ணனே! வயதிலும், ஆற்றலிலும் மிக்க பிதாமகர் பீஷ்மரும், ஆசார்யர் துரோணரும் வகித்து வந்த சிறப்பான உயர்ந்த சேனாதிபதி பதவியை இனி நீ ஏற்றுக் கொள்வாயாக. இதற்கு முன்னர் உன் விருப்பப்படி தான் ஆசார்யர் துரோணரைச் சேனாதிபதி ஆக்கி னேன். இப்போது அவர் மைந்தன் அஸ்வத் தாமன் ஆலோசனைப்படி உன்னை இக் கௌரவர் படைக்குச் சேனாதிபதி ஆக்கு கிறேன். அப்பதவியை ஏற்றுக் கொள். ஏற்றுக் கொண்டு எதிரிகளை உன் திறமை யின் மூலம் அழிப்பாயாக” என்று மகிழ்ச்சி யுடன் கூறினான்.
அதன்பின் சாஸ்திர முறைப்படி அங்க நாட்டு வேந்தன் தானவீரன் கர்ணனுக்குச் சேனாதிபதி பட்டம் சூட்டினான். அந்தணர் கள் ஆசி கூறி அபிஷேகம் செய்வித்தனர். வந்திருந்த மன்னர்கள் எல்லோரும் கர்ணனைப் புகழ்ந்து பேசினர். ‘வெற்றி! வெற்றி’ என்று எல்லாரும் விண்ண திரும்படி முழங்கினர்.
அப்பொழுது கர்ணன் மிகுதியான மகிழ்ச்சி அடைந்தான். பின்னர் தன் உயிர் நண்பனான துரியோதனனை நோக்கி, “அரசே! இந்தக் குருக்ஷேத்திரப் போரில் நிச்சயம் பகைவர்களைக் கொல்வேன். இஃது உறுதி. நீங்கள் தைரியமாக இருங் கள்; வெற்றிக் கனியைப் பறித்து உங்க ளிடம் கொடுப்பேன். என்னைத் திடமாக நம்பலாம். இந்தக் குருநாட்டை நீ நீண்ட நாட்கள் ஆட்சி செய்வாயாக. உன் பொருட்டு போர்க்களத்தில் எதையும் செய்வேன் என்று கூறினான். படைத் தலைமை ஏற்ற கர்ணன் புதுப் பொலி வுடன் திகழ்ந்தான். அப்பொழுது வீரர்கள் எழுப்பிய வாழ்த்தொலி விண்ணை எட்டியது.
கர்ணன் வகுத்த மகர வியூகம்
பெரிய வில்லைக் கையில் ஏந்தி, கர்ணன் தேரில் ஏறிக்கொண்டு போருக்குப் புறப்பட்டான். அவன் ஏறிச் சென்ற தேரில் வெண்மையான குதிரைகள் பூட்டப்பட்டி ருந்தன. போர்க் களத்தை அடைந்த அவன் அன்று தன் சேனைகளை மகர வியூகமாக அணிவகுத்தான்; மகரத்தின் வாயினிடத் தில் கர்ணனும்; கண்களில் சகுனியும், உலூகனும், தலையில் அஸ்வத்தாமாவும், கழுத்திலே துரியோதனனும், தம்பிமார்களும், இடையிலே பெருஞ்சேனையோடு முன் இடக்காலில் நாராயண கோபால ரோடு கிருதவன்மாவும், வல வலக்காலில் தென்னாட்டவரோடு கூடி கிருபாச்சாரி யாரும்;பின் இடக்காலில் தம் பெருஞ் சேனையுடன் சல்லியனும்; பின் வலக்காலில் ஆயிரந்தேரோடு முந்நூறு யானைகளுடன் சுசேனனும், வால்பகுதியிலே பெருஞ்சேனை சூழ்ந்த சித்திரசேனரும் நின்றிருந்தனர்.
கர்ணனுடைய மகர வியூகத்தைக் கண்ட தருமபுத்திரர், அர்ச்சுனனிடம், “அர்ச்சுனா! கர்ணன் சேனாதிபதியாகி மகர வியூகம் வகுத்துள்ளான். வலிமை குன்றி இருக்கும் கெளரவ சேனைக்குத் தற்போது கர்ணன் சேனைத் தலைவன் ஆகி இருக்கின்றான். எனவே அவனைக்கொன்று வெற்றி பெறுக. அவ்வாறு நீ செய்தால் பதின் மூன்றாண்டுகளாக என் மனத்தில் ஆழ மாகப் பதிந்துள்ள முள்ளை எடுத்தது போலாகும் ”என்று மனம் நொந்து கூறினார்.
தருமபுத்திர அண்ணா கூறியதைக் கேட்ட அர்ச்சுனன் மகரவியூகத்திற்கு மாற்றாக தம் சேனையை அர்த்த சந்திர வியூகமாக அணிவகுத்து நிறுத்தினான். வியூகத்தின் வலப்புறம் பீமனும், இடப்புறம் திட்டத்துய்மனும், நின்றனர். அர்ச்சுனனும், தருமபுத்திரரும் நடுவில் நின்றனர். நகுல சகாதேவர்கள் பின்புறம் நின்றனர். அப்பொழுது பாண்டவசேனை சங்கங்களை முழங்கி ஆரவாரம் செய்தது. பின்னர் இரு தரப்பினரும் கடுமையாக மோதினர்.
நகுலனைப் பின்னுக்குத் தள்ளிய கர்ணன்
காசி நாட்டு மன்னன் கேமதூர்த்தி என்பவனைப் பீமசேனன் கொன்று கெளரவர் சேனையை நாசப்படுத்தினான். பின்னர் பீமனும் அஸ்வத்தாமனும் கடுமை யாக மோதிக்கொண்டனர். கடும் போரிட்ட பின் இருவரும் விலகி வேறிடம் சென் றனர். சகாதேவன் துச்சாதனனுடன் போரிட்டு வெற்றி பெற்றான். மற்றோர் இடத்தில் கர்ணனுக்கும் நகுலனுக்கும் சரியான போர் மூண்டது. ஆனால் கர்ணனின் அசாத்யமான ஆற்றல் முன் நகுலனால் ஈடுகொடுக்க முடியவில்லை. அதனால் அவன் பின் வாங்கினான். தன் தாய்க்கு கொடுத்த வாக்கு நினைவுக்கு வரவே (அர்ச்சுனனைத் தவிர ஏனைய பாண்டவர்களைக் கொல்லக்கூடாது) அவனைக் கொல்லாமல் விட்டான். அதனால் நாணம் கொண்ட அந்நகுலன் தருமபுத்திரன் தேரில் ஏறிச் சென்று விட்டான்.
மற்றோர் இடத்தில் கிருபாசாரியாரை எதிர்த்துத் திட்டத்துய்மன் போரிட்டுத் தோல்வியடைந்தான். அதனால் பாண்டவ சேனை பெருந்துன்பம் அடைந்து தடுமாறியது. வேறோரிடத்தில் தருமபுத்திரர் துரியோதனனோடு போரிட்டு அவனது தேரை அழித்தார். பின்னர் அவன் வேறு தேரில் ஏறிக்கொண்டு தருமபுத்திரரோடு கடும்போரிட்டான். இருவரும் சம நிலை யில் போரிட்டனர் அப்பொழுது தரும புத்திரர் யமதண்டம் போன்ற சக்தி ஆயுதம் ஒன்றை அத்துரியோதனன் மார்பின் மேல் செலுத்தினார். அந்தச்சக்தி ஆயுதம் துரியோ தனன் மார்பில் பாய்ந்து அவனது கவசத்தைப் பிளந்தது. பின்னர் நடுமார்பை நன்றாக அடித்தது. அதனால் துரியோதனன் மயங்கி வீழ்ந்தான். அப்பொழுது அசரீரி, ”தருமரே! துரியோதனனை பீமன் கொல்ல வேண்டியிருப்பதால் இவனை ஒன்றும் செய்யாதே, விட்டுவிடு” என்று கூறவே, தருமபுத்திரரும் அவனைக் கொல்லாது அவ்விடம் விட்டுச் சென்றார்.
அன்றைய போரில் அர்ச்சுனன் கௌரவர்களைத் தாக்கிப் பெருவெற்றி பெற்றான். சூரியன் மறைந்தான்; போர் நிறுத்தம் செய்து இருதிறத்து வீரர்களும் தத்தம் பாசறைகளை நோக்கிச் சென்றனர். இவ்வாறு பதினாறாம் நாள் போர் முடிவுற்றது.
மகாபாரதம் – 51 பதினைந்தாம், பதினாறாம் நாள் போர்… நகுலனைப் பின்னுக்குத் தள்ளிய கர்ணன்