பதிநான்காம் நாள் போர்
கதிரவன் குணதிசை சிகரம் வந்து எழுந்தான்; கனையிருள் அகன்றது; காலையம் பொழுதும் வந்தது. காலைக் கடன்களை முடித்துக் கொண்டு கண்ணபிரான் தரும புத்திரரைக் கண்டார். அங்கு பீமன், திட்டத் துய்மன்,சாத்யகி, நகுல சகாதேவர்கள், சிகண்டி போன்றவரும் உடன் இருந்தனர். அப்பொழுது தருமபுத்திரர், “கண்ணா! நாங்கள் உன்னிடம் அடைக்கலம் புகுந் தோம். அடைக்கலம் புகுந்த பொருளைக் காப்பது உன் கடமையல்லவா! எனவே எங்களுக்கு எங்கள் அர்ச்சுனன் சபதம் நிறைவேறத் தாங்கள்தான் அருள் புரிய வேண்டும்” என்று வேண்டி நின்றார்.
கௌரவர்களின் சகட வியூகம்
அப்பொழுது கண்ணபிரான், “தருமபுத்திரரே! அர்ச்சுனனைப் போன்ற சிறந்த வில்லாளி மூன்றுலகங்களிலும் இல்லை. அவன் இன்றைய போரில் ஜயத்ரதனைக் கொல்லப் போகின்றான். இது நிச்சயம்; அவனுக்கு உறுதுணையாக நான் இருக்கின் றேன்” என்றார். அந்த நேரத்தில் அர்ச்சுனன் அங்கு வந்தான். தருமபுத்திரரின் நல்லாசியைப் பெற்றான். எல்லோரும் போர்க்களத்திற்குப் புறப்பட்டனர். நல்ல சகுனங்கள் பல தோன்றின ; அர்ச்சுனன் புறப்படுவதற்கு முன் சாத்யகியைப் பார்த்து, “அண்ணா! தருமபுத்திர அண்ணாவை விட்டு அகலாது நீதான் விழிப்புடன் இருந்து பாதுகாக்க வேண்டும்” என்று கூறினான். சாத்யகியும் அவ்வாறே செய்வதாக ஒப்புக்கொண்டான்.
பதிநான்காம் நாளாகிய அன்றைய போரில் ஆசார்யர் துரோணர் தன் சேனைகளை முதலில் சகட வியூகமாக உருவாக் கினார். அதன்பின் உள்புறமாகப் பத்மவியூகம் அமைத்தார். அந்தப் பத்மவியூகத் தின் நடுவில் மறைவாய் ஊசி வியூகத்தை உருவாக்கி வைத்தார். துரோணர் வியூகத் தின் முன்னணியில் இருந்தார்.
அர்ச்சுனனின் ஆக்ரோஷத் தாக்குதல்
அப்பொழுது துரியோதனனின் தம்பியர்களில் ஒருவனான துர்மர்ஷன் என்பவன் கெளரவச் சேனைகளுக்கு, முன்னால் “நான் அர்ச்சுனனை இன்று கொல்லப் போகின் றேன். எல்லோரையும் என் வலிமையால் கலங்க அடிக்கப் போகின்றேன். கல்லில் போட்ட மண்குடம் போல அர்ச்சுனன் இன்று அழியப்போகின்றான்” என்று வெற்றுச் சவால் விட்டுக்கொண்டிருந்தான்.
இதனைக் கேட்ட அர்ச்சுனன், துர்மர் ஷன் இடத்திற்குத் தேரை ஓட்டும்படியாக வசுதேவரிடம் கூறினான். அவரும் அவன் சொற்படியே தேரை ஓட்டினார். துர்மர்ஷன் ஒடிவிட்டான். அதன்பின் கெளரவ சேனை யினுள் நுழைந்தான். எதிர்ப்பட்ட யானை களையும், குதிரைகளையும், வீரர்களையும் கொன்று குவித்தான். கெளரவ சேனை அர்ச்சுனனின் ஆக்ரோஷமான தாக்குதலைத் தாங்கமாட்டாது சிதறி ஓடியது. சிதறிய சேனைகளைத் துச்சாதனன் திரட்டிக் கொண்டு வந்து அர்ச்சுனனுடன் கடும் போரிட்டான். அர்ச்சுனன் சிறிதும் அஞ்ச வில்லை. எதிர்ப்பட்ட யானைகள், குதிரை கள், வீரர்கள் முதலானவற்றை அடித்துக் கொன்றான். துச்சாதனனின் மீது பல அம்பு களை ஏவி படுகாயம் படச் செய்தான். பயங்கொண்ட அவன், திரும்பிக்கூடப் பார்க்காமல் ஓடியே விட்டான்.
போரிட்டுக் கொண்டிருந்த அர்ச்சுனன். அதன்பின் துரோணரின் முன் நின்றான்.
அப்பொழுது அவரை நோக்கி, “ஆசார்யரே! தங்கள் வியூகத்தை உடைக்க உள்ளேன். அதன் மூலம் என் சபதத்தினை நிறைவேற்றப் போகின்றேன். அதற்குத் தங்களின் மேலான அனுமதி வேண்டும்” என்று பவ்யமாகக் கூறினான். அதற்குத் துரோணர், “அர்ச்சுனா! என்னை வெற்றி கொள்ளாமல் ஜயத்ரதனை வெற்றி கொள்ள முடியாது” என்று கூறி, சிறிதும் தாமதிக் காமல், அர்ச்சுனன் மேல் அம்புகளை மழையெனப் பொழிந்தார். அவற்றை யெல்லாம் உடனே தடுத்த அர்ச்சுனன் பதிலுக்குப் பல அம்புகளை ஏவினான். அவற்றையெல்லாம் அறுத்துவிட்டுத் துரோணர் களைப்பு அடையாமல் தன் சிஷ்யனிடம் போரிட்டுக் கொண்டிருந்தார்.
துரோணரைப் பகற்பொழுதுக்குள் வெல்லுவது கடினம் என்று உணர்ந்த அர்ச்சுனன் அவர் தேரை வலம் வந்து அவ்விடத்தினின்று விலகித் தூரச் சென்று விட்டான். பின்னர் கெளரவர் சேனையைப் பலமாகத் தாக்கினான். கிருதவர்மா போன் றோர் அவன் வீசிய அம்புகளைத் தடுத் தனர். ஜயத்ரதனைக் கொல்ல வேண்டும் என்ற வெறியில் கடுமையாகப் போரிட்டுக் கொண்டே சென்றான். அப்பொழுது தன்னை எதிர்த்துப் போரிட்ட சுருதாயுனன், ததஷ்ணன் போன்றோரைக் கொன்றான். பின்னர் கெளரவர் சேனையின் வியூகத்தைப் பிளந்துகொண்டு உள்ளே சென்றான்.
அர்ச்சுனனுடன் துரியோதனன் போர்
துரோணரின் வியூகத்தை உடைத்துக் கொண்டு அர்ச்சுனன் உள்ளே செல்கின்றான் என்பதை அறிந்த துரியோதனன் திடுக்கிட்டு,”ஆசார்யரே அர்ச்சுனன் நீர் வகுத்த வியூகத்தை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்துவிட்டான். அவனுடன் போர் செய்யாமல் விட்டு விட்டீர். எங்க ளுக்கு நன்மை செய்யாமல் இருக்கின்றீர். இப்பொழுதாவது நம் ஜயத்ரதனைக் காப்பாற்றும்’ என்று கூறினான்.
அதற்குத் துரோணர், “கோபிக்க வேண்டாம் துரியோதனா! கோபிக்க வேண்டாம்!
அர்ச்சுனன் தேர்ப்பாகன் கண்ணபிரான். அவர் சாமர்த்தியசாலி. அவரை யாரும் வெல்ல முடியாது. நான் தருமபுத்திரரைப் பிடிக்கவேண்டியிருப்பதால், இந்த இடத்தைவிட்டு நகர முடியாது. இளமை, வீரம் முதலியன உடைய உன்னைப் போன்றவர்கள்தான் அர்ச்சுனனுக்கு ஈடு கொடுத்துப் போர் செய்யமுடியும். எனவே என்னிடம் பேசுகின்ற நேரத்தில் நீயே அவனுடன் போரிடலாமே.வியூகத்தை உடைக்காத வாறு பாதுகாக்கலாமே!” என்று கூறி, உடைக்க முடியாத பொன் மயமான கவசம் ஒன்றை அவனுக்குப் பூட்டி, அக்கவசம் உடையாமல் இருக்க ஒரு மந்திரத்தையும் கற்பித்து, அந்த அர்ச்சுனனை எதிர்த்துப் போரிடுவதற்குத் தன்னைக் குறை கூறிய துரியோதனனையே அனுப்பினார். துரியோதனன் பெரு மகிழ்ச்சி கொண்டு, அர்ச்சுனன் இருப்பிடத்தை நோக்கித் தேரைச் செலுத்த செய்தான்.
திட்டத்துய்மனைக் காப்பாற்றிய பாஞ்சாலர்கள்
துரியோதனன் அந்த இடத்தைவிட்டு நீங்கியவுடன் துரோணரைத் திட்டத்துய்மன் எதிர்க்கலானான். துரோணரும் திட்டத் துய்மனை எதிர்த்துப் போர் புரியலானார். முதலில் அவனுடைய தேர்ப்பாகனைக் கொன்றார். திட்டத்துய்மன் செயலற்று நின்ற நேரத்தில் சாத்யகி அவனுக்குத் துணையாக வந்தான். சாத்யகி, துரோண ருடன் கடுமையாகப் போரிட்டான். இதனைப் பயன்படுத்திக் கொண்டு பாஞ்சாலர்கள் திட்டத்துய்மனை அப்பால் கொண்டு சென்றனர்.
சாத்யகி உக்கிரமாகப் போரிட்டுத் துரோணரின் அரிய வில்லை அறுத்தான். வேறொருவில்லை எடுத்துக் கொண்டு துரோணர் மீண்டும் அவனுடன் போரிட்டார். சாத்யகியின் ஆற்றலைக் கண்டு துரோணரே வியந்தார். இருப்பினும் அவனைக் கொல்லும் பொருட்டுத் திவ்விய அஸ்திரம் ஒன்றை மந்திரம் சொல்லி ஏவினார். நகுல சகாதேவர்கள் அதனைத் தடுத்துச் சாத்யகியைக் காப்பாற்றினர். அப்பொழுது துரோணருக்குத் துணையாக துச்சாதனன் வந்தான். அந்த நேரத்தில் கண்ணபிரானும் அர்ச்சுனனும் ஜயத்ரதனை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அர்ச்சுனன் சென்ற வழியில் எல்லாம் கௌரவர்கள் சுழற்காற்றில் அகப்பட்ட மரங்கள் எனச் ‘சட சட’ எனச் சாய்ந்தனர். ஆயின் கண்ணபிரான் தேரை நிறுத்தாது வேகமாகச் செலுத்திக் கொண்டிருந்தார். வழியில் எதிர்ப்பட்ட அவந்தி நாட்டு மன்னன் விந்தனையும் அவன் தம்பி அனு விந்தனையும் அர்ச்சுனன் கொன்றொழித் தான். கெளரவர் சேனை மிரண்டு அலை யும் பொருட்டு வசுதேவர் தேரை அங்கும் இங்கும் ஓட்டிச் சென்றார்.வீரர்கள், யானைகள், குதிரைகள், தேர்களில் ஏறிச் சென்று கெளரவர் சேனைகளையெல்லாம் நசுக்கினர். பகற்பொழுது கழிந்து கொண்டிருந்தது.
தாகம் தீர்ந்த குதிரைகள்
பகற்பொழுது (உச்சிப்பொழுது) வந்தது. ஆகையால் இருவரும் சிறிது நேரம் இளைப்பாறினார்கள். அப்பொழுது குதிரைகளுக்குத் தாகம் எடுத்தது. இதனைக் கண்ணபிரான் அர்ச்சுனனுக்குக் கூறினார். உடனே அர்ச்சுனன் ஓர் அம்பினைப் பூமியி னுள் செலுத்தினான். ஊற்று நீர் பெருக்கெடுத்து வெளியே வந்தது. சுவையுடன் இருந்த அந்த நீரைக் குதிரைகள் பருகித் தாகம் தீர்ந்தன. பின்னர் குதிரைகளை அவிழ்த்துவிட்டார். அவற்றை நன்றாகத் துடைத்தார்.உடலில் தைத்திருந்த பாணங் களைப் பிடுங்கி மருந்தினைப் போட்டார். தண்ணீரைக் குடிக்க வைத்ததோடு மட்டு மல்லாது நீராட்டவும் செய்தார். பின்னர் அக்குதிரைகளைத் தேரில் பூட்டினார். பின்னர் கண்ணபிரான் தேரைச் செலுத்தி னார். தேர் செல்லத் தொடங்கியது. எதிர்த்து வந்த படைகளை அர்ச்சுனன் கொன்று குவித்தான்.
சூரியன் மேற்கு நோக்கிச் சாய ஆரம்பித்தான். பெரிய சேனைக் கூட்டத்தைக் கடந்து கிருஷ்ணார்ச்சுனர்கள் சென்று கொண்டிருந்தார்கள். பிரளய காலச் சூரியன் போன்று இருவரும் ஒளியோடு விளங்கினார்கள். அப்பொழுது துரியோதனன், சிந்து நாட்டு மன்னனும், தன் தங்கை துச்சளையின் கணவனும் ஆகிய சயத்தி ரதனைக் காக்கும் பொருட்டுத் தன் தேரில் விரைந்து சென்றான்.
தேரையும் தேர்ப்பாகனையும் இழந்த துரியோதனன்
துரோணரால் கவசம் அணிவிக்கப்பட்ட துரியோதனன் தைரியத்துடன் அர்ச்சுனனை எதிர்க்கத் தொடங்கினான். அவனைக் கண்ட கண்ணபிரான் அர்ச்சுனனிடம் போரிடுமாறு கூறி, தன் தேரை துரியோ தனன் அருகே கொண்டு போய் நிறுத்தினார். இருவருக்கும் கடும்போர் தொடங்கி யது. தன் அம்புகளால் அர்ச்சுனன் துரி யோதனனுடைய தேரையும்,தேர்ப்பாக னையும், தேர்க்குதிரைகளையும் அழித் தான் அவனுடைய வில்லையும் தன் அம் பினால் முறியச் செய்தான். துரியோதனன் கவசம் பூட்டியிருந்ததனால் அவனைக் கொல்ல முடியவில்லை. ஆனாலும் அவன் பயங்கொண்டு ஓடியே விட்டான். துரியோதனன் தோல்வி கண்டான் என்பதை அறிந்த கௌரவ வீரர்கள் கிருஷ்ணார்ச் சுனர்களை எதிர்க்கலானார்கள். அவர்களை அர்ச்சுனன் முறியடித்தான்.
கர்ணன், பூரிசிரவஸ், சலன், விருஷ சேனன், ஐயத்ரதன், கிருபாச்சாரியார், சல்லியன், அஸ்வத்தாமன் ஆகிய எட்டுப்பேர் அர்ச்சுனனுடன் போரிட்டனர். அம்புகளைச் சரமாரியாக விட்டார்கள். அவற்றையெல்லாம் தன் அம்புகளைக் கொண்டு அழித்தான்.
ஜயத்ரதனைக் கொல்ல வேண்டும் என்ற வெறியில் செயல்பட்டுக் கொண்டிருந்த அர்ச்சுனனைக் கெளரவ சேனை கடுமை யாக எதிர்த்து நின்றது. ஆனால் அவற்றால் முடியாது தோற்றன. பூரிசிரவஸ் முதலான அனைவரும் போராடித் தோற்றனர்.
இந்நிலையில் தருமபுத்திரரை உயிரோடு பிடிக்க வேண்டும் என்று செயல்பட்டு வந்த துரோணர் தருமபுத்திரருடன் போரிடத் தொடங்கினார். இருவருக்கும் கடுமையான போர் நடந்தது. துரோணர் தருமபுத்திரரின் வில்லையும் அம்புகளை யும் அறுத்தார். தருமபுத்திரரை மறைக்கும் படி ஆயிரக்கணக்கான அம்புகளை எய்தார். தருமபுத்திரர் அவற்றையெல்லாம் சமாளித்து வேறு வில்லம்புகளை எடுத்துப் போரிட்டார். அவற்றையும் துரோணர் தன் அம்புகளால் அறுத்துவிட்டார். அதனால் தருமபுத்திரர் கோபங்கொண்டு சக்தி ஆயுதத்தை எறிந்தார். அதனைப் பிரம்மாஸ்திரம் கொண்டு பயனில்லாது செய்துவிட்டார். அதன்பின் துரோணர் தருமபுத்திரரின் தேர்க்கொடியை அறுத்தெறிந்தார். குதிரை களைக் கொன்றார். ஆயுதத்தை இழந்த தருமபுத்திரர் தேரிலிருந்து குதித்து வேறொரு தேரில் ஏறிக் கொண்டு அப்பால் சென்றார்.
அலம்புசனைக் கொன்ற கடோத்கஜன்
அந்த நேரத்தில் கடோத்கஜன் அங்கு வந்தான். அவன் அலம்புசனுடன் போரிட்டான். இந்த அலம்புசன் பகாசூரன் தம்பி யாவான். இரவானைக் கொன்றவனும் இவனே. அத்தகைய அலம்புசனுடன் கடோத்கஜன் கடுமையாகப் போரிட்டான். இருவரும் அரக்கர்கள்; ஆகையால் மாயப் போரிட்டனர். அதிலும் நெடுநேரம் போரிட்டனர். முடிவில் கடோத்கஜன் அலம்புசனை வானத்தில் தூக்கி எறிந்தான். கீழே விழுந்த அவன் எலும்பெல்லாம் முறிந்தன. அதனால் அவன் மாண்டு போனான். இவன் அண்ணன் பகாசூரனைப் பீமன் கொன்றான். இவனைப் பீமசேனன் மைந்தன் கடோத்கஜன் கொன்றான்.
இதனைக் கண்டு பாண்டவர்கள், தங்கள் சேனைகளுடன் சேர்ந்து ஆரவாரம் செய்தனர் . பின்னர் கடோத்கஜன் தருமபுத்திரரிடம் சென்று வணங்கி ஆசி பெற்றான். அவரும் அவனை அன்புடன் தழுவிக் கொண்டார். பீமன் முதலான மற்றவரும் அவனைத் தழுவிக் கொண்டு ஆசி கூறினர்.
தருமபுத்திரர் துரோணருடன் போரிடச் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென்று பாஞ்சசன்னியத்தின் ஒலி கேட்டது. அதே சமயம் அவர் கௌரவர் களின் ஆரவார ஒலியைக் கேட்டார். ஆனால் அர்ச்சுனனின் தேவதத்தம் என்னும் சங்கின் ஒலியைக் கேட்கவில்லை. அதனால் அவர் அர்ச்சுனனுக்கு ஆபத்து நேரிட்டிருக்கலாம் என அச்சம் கொண்டார். அதனால் அவர் சாத்யகியைப் பார்த்து, ”சாத்யகி! இப்போது பாஞ்சசன்னியத்தின் ஒலி கேட்டது. அதனால் அர்ச்சுனனுக்கு ஆபத்து நேரிட்டிருக்குமோ என அஞ்சு கிறேன். துரோணரால் பூட்டப்பட்ட கவசத் துடன் துரியோதனன் உற்சாகமாகச் சென் றுள்ளான். அதனால்தான் அவனுக்கு ஆபத்து நேர்ந்திருக்குமோ என எண்ணு கின்றேன். எனவே நீ உடனே அவசியம் அர்ச்சுனன் இருக்குமிடத்திற்குச் செல்வாயாக ” என்று கூறினார்.
சாத்யகி அர்ச்சுனனிடம் செல்லல்
அதற்குச் சாத்யகி. “தருமபுத்திரரே! தங்களைக் காக்கும் பொறுப்பை அர்ச்சுனன் என்னிடம் கொடுத்துள்ளார். நான் எப்படி தங்களை விட்டுப் பிரிய முடியும்?” என்று கூறினான். அதற்குத் தருமபுத்திரர், “அஞ்ச வேண்டாம் சாத்யகி, அஞ்ச வேண்டாம். திட்டத்துய்மனும் பீமனும் என்னுடன் உள்ளார்கள். மேலும் திட்டத்துய்மன் துரோணரைக் கொல்லுதற்காகவே காலத்தை எதிர் நோக்கியுள்ளான். எனவே எனக்குத் துரோணரால் ஆபத்து நேராது. ஆதலின் நீ உடனே அர்ச்சுனனிடம் செல் என்றார்.
உடனே சாத்யகி தேரில் ஏறிக்கொண்டு, ”பீமரே! நீர் நம் அரசனைக் காப்பாற்றும். நான் இந்த சேனையைப் பிளந்து கொண்டு உள்ளே நுழைந்து அர்ச்சுனன் இருக்குமிடம் செல்லப்போகிறேன்” என்று கூறிச் சென்றான்.
சாத்யகி அர்ச்சுனனை நோக்கிச் செல்லும்போது, அவனைத் துரோணர் தடுத்துவிட்டார். ஆனால் சாத்யகியோ அவரை அலட்சியமாகக் கடந்து சென்று, அங்கிருந்த கிருதவர்மாவைத் தாக்கினான். கிருதவர்மாவுக்கு உதவியாக ஜலசந்தன் என்பவன் வன் வந்த வந்தான். அவனைச் சாத்யகி கொன்றுவிட்டான். இதனைக் கண்டு கெளரவச்சேனை அச்சங்கொண்டு பின் வாங்கியது. அதன்பின் துச்சாதனன் வந்து சாத்யகியுடன் போரிட்டான். சாத்யகியின் ஆற்றலுக்கு முன் துச்சாதனனால் தாக்கு பிடிக்க முடியவில்லை. ஒடிவிட்டான். ஆனால் அவனே மீண்டும் வந்து சாத்யகி யுடன் தொடர்ச்சியாகப் போரிட்டுக் கொண்டிருந்தான். தன்னுடைய வீரம் முழுவதையும் வெளிப்படுத்தி சாத்யகி போரிட்டான். கௌரவசேனையின் முக்கிய வீரர்களையெல்லாம் கொன்ற வண்ணம் சாத்யகி அர்ச்சுனனை நோக்கி நகரத் தொடங்கினான்.
இதன் நடுவில் திட்டத்துய்மனின் உக்கிர மான தாக்குதலுக்கு ஆட்பட்ட துரோணர் சோர்ந்து போய் உட்கார்ந்தார். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு திட்டத்துய்மன் துரோணரின் தலையை வெட்ட முயன்றான். துரோணர் அதனைப் பார்த்துவிட்டு தடுத்து நிறுத்தியதோடு மட்டுமல்லாது அவன் தேர்ப்பாகனைக் கொன்றார்.
தர்மபுத்திரர் கவலை
நீண்ட நேரம் ஆகியும் அர்ச்சுனனைக் காணச் சென்ற சாத்யகி திரும்பி வாராததைக் கண்டு தருமபுத்திரர் மனங் கலங்கி னார். பின்னர் பீமனைப் பார்த்து, “அர்ச்சுனனைத் தேடிச் சென்ற சாத்யகி இன்னும் வரவில்லை. அர்ச்சுனன், கண்ணபிரான், சாத்யகி ஆகிய மூவரும் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. மனம் வேதனை யுறுகின்றது” என்றார். அதற்குப் பீமன், ”அண்ணா! மூவருக்கும் எந்தவித ஆபத்தும் நேர்ந்திருக்காது. நீர் கவலைப்பட வேண்டாம். என்றாலும் நான் போய்ப் பார்த்துவிட்டு அவர்களைப் பற்றி உங்களுக்குத் தகவல் தருகிறேன். நீங்கள் கவலைப்படவேண்டாம்’ என்று சொல்லியதோடு, திட்டத்துய்மனைப் பார்த்து,”வீரனே! தருமபுத்திரரைப் பாதுகாப்பதுதான் உன் கடமை. அண்ணா அர்ச்சுனனைப் பற்றி அறிந்து வர என்னை அனுப்புகின்றார். அவருடைய கட்ட ளையை என்னால் மீற முடியாது. நான் வரும் வரை அவரைப் பாதுகாப்பாயாக” என்று கூறினான்.
அதற்குத் திட்டத்துய்மன், தான் தரும புத்திரரைப் பாதுகாப்பதாகப் பீமனிடம் உறுதி கூறினான். பின்னர் பீமன் தரும புத்திரரிடம் விடைபெற்றுக்கொண்டு பாஞ்சாலர்களும், சோமகர்களும் பின் தொடர்ந்துவர, விசோகன் தேரைச் செலுத்த பீமன் அர்ச்சுனனைத் தேடிச் சென்றான். செல்லும் வழியில் திருதராட்டிரர் புதல்வர்கள் பலர் உயிரைக் கொன்றான். அதனால் கௌரவசேனை ஒட்டமெடுத்தது.
பீமனை எதிர்த்த துரோணர்
வழியில் துரோணர் பீமனை எதிர்த்தார். பீமனோ அவரைத் தம் ஆசார்யர் என்று கூடப் பார்க்காமல் கோபத்துடன் தன் கதையைச் சுழற்றி அவர்மேல் எறிந்தான். அவர் அதனை விலக்கிவிட்டார். ஆனால் அது தேரில்பட்டு அத்தேர் உடைந்து போனது. உடனே துரோணர் வேறொரு தேரில் ஏறிக்கொண்டு மிக ஆக்ரோஷமாகப் பீமனுடன் போரிட்டார். அவன் மறுபடியும் அதை உடைத்தெறிந்துவிட்டு அப்பால் சென்றான். அதன்பின் அர்ச்சுனனை நோக்கி நடந்தான்.
பெருங்காற்றானது மரங்களை முறிப்பது போன்றும், காட்டாறு வழியிலுள்ள மரங்களை வேருடன் அடித்துச் செல்வது போன்றும் பீமன் வழியில் பட்ட கௌரவ சேனையை அழித்துக் கொண்டே சென்றான். அங்கு ஜயத்ரதனைக் கொல்ல வேண்டுமென்ற நோக்கில் அர்ச்சுனனும், சாத்யகியும் கெளரவ சேனையுடன் போரிட் டுக் கொண்டிருத்தலைக் கண்டான். கண்ட வுடன் பீமன் மகிழ்ச்சியின் எல்லையைத் தொட்டான். அவர்கள் மூவரும் சேர்ந்து மகிழ்ச்சியினால் பெரும் ஆரவாரம் செய் தனர். அந்தப் பேராரவாரத்தைக் கேட்டுத் தருமபுத்திரர் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தார். அர்ச்சுனனும், பீமனும் போரில் வெற்றி பெற வேண்டும் என, அவர்கள் எடுத்த சபதங்களை முடிக்க வேண்டும் என்றும் வாழ்த்தினார்.
பீமனின் பேராரவாரத்தைக் கேட்டு கர்ணன் போரிட ஓடிவந்தான். இருவரும் வில்லம்புகளைக் கொண்டு போரிட்டனர். பீமன் தன் அம்புகளை மழையெனப் பொழிந்தான். பீமனின் அம்புகளுக்கு இலக்கான கர்ணனின் மார்பிலிருந்து இரத்தம் கொட்டியது. ஆனால் பீமன் விடவில்லை. அவனுடைய தேரையும் தேர்ப்பாகனையும், குதிரைகளையும் கொன்றான்.
கர்ணன் உடனே விருஷசேனனுடைய தேரில் ஏறி அப்பால் சென்றான். கர்ணன் தப்பி ஓடியதைக் கண்டு பாண்டவர் சேனை மகிழ்ச்சியால் பேராரவாரம் செய்தது. அர்ச்சுனன் வில்லில் நாணொலி செய்ய கண்ணபிரான் பாஞ்ச சன்னியத்தை எடுத்து ஊத, அதனைக் கேட்டு தருமபுத்திரர் பெரிதும் மகிழச்சி அடைந்தார்.
தேரின்றித் தவித்த கர்ணன்
கர்ணன் தேரின்றி வாடி இருப்பதைக் கண்ட துரியோதனன், தம்பி துச்சலனை அழைத்து அவனுடைய தேரைக் கர்ணனுக்குக் கொடுக்கும்படி கூறினான். அவனும் தன் தேரைக் கர்ணனிடம் கொடுக்க, கர்ணன் அத்தேரில் ஏறிச் சென்றான். கர்ணனும் துச்சலனும் ஒரே தேரில் இருந்து பீமனை எதிர்த்துப் போரிட்டனர். பீமன் பத்துப் பாணங்களை ஏவி துச்சலனைக் கொன்றான். இதனைக் கண்டு கௌரவசேனை நடு நடுங்கியது. இதனைப் பயன்படுத்திக் கொண்டு அர்ச்சுனனும், பீமனும், சாத்யகியும் ஜயத்ரதனை நோக்கிச் சென்றனர்.
கௌரவசேனை துச்சலன் இறப்பினால் நிலைகலங்கிய நிலையில் இருக்கும்போது, பீமனும், அர்ச்சுனனும் சாத்யகியும் ஜயத்ரதனை நோக்கிப் போவதைப் பார்த்து, நேரே துரியோதனன் துரோணரிடம் சென்றான். அவரைக் கண்டு. “ஆசார்யரே!
பீமனும் அர்ச்சுனனும் சாத்யகியும் ஜயத்ரதனை நோக்கிச் செல்கின்றனர். அவர்கள் உம்மை மீறிச் செல்கின்றது எவ்வாறு என்பது எனக்கு விளங்கவில்லை. எனக்குத் தோல்வி நிச்சயம் என்பது மட்டும் இப்பொழுது புரிகின்றது. இதற்கு நான் என்ன செய்வது?” என்று கேட்டான்.
போர்க்களத்தைவிட்டுக் கர்ணன் ஓட்டம்
அதற்குத் துரோணர், “அந்த அர்ச்சுனன் முதலான மூவரும் மகாரதர்கள். அதனால் அவர்கள் என்னைத் தாண்டிச் சென்று விட்டனர். பாண்டவர்கள் நமக்குப் பின்புறமும், முன்புறமும் சூழ்ந்துள்ளனர். அதனால் ஜயத்ரதனை எப்படியும் பாதுகாத்தாக வேண்டும். நீ அவனைப் பாதுகாத்துக் கொண்டிரு. நான் இங்கிருந்து பாண்டவர்களையும், பாஞ்சாலர்களையும் தடுத்து நிறுத்துகின்றேன்” என்று கூறினார்.
ஆசார்யரின் கட்டளையை ஏற்றுக் கொண்டு பெரும் வீரர்கள் பின் தொடர்ந்து வர, ஜயத்ரதனை நோக்கி துரியோதனன் சென்றான். வழியில் யுதாமன்யுவும், உத்த மெளஜகம் என்பவனும் எதிர்ப்பட்டு அத்துரியோதனனிடம் போரிட்டு அவன் தேரையும்,தேர்க்குதிரைகளையும் அழித் தார்கள்.அதனால் அவன் சல்லியன் தேரில் ஏறி. ஜயத்ரதனை நோக்கிச் செல்லத் தொடங்கினான். இதனைக் கவனித்த பீமார்ச்சுனர்களும் சாத்யகியும் துரியோதனனைச் சூழ்ந்து நின்ற வீரர்களுடன் போரிடத் தொடங்கினர்.
இம்மூவரும் துரியோதனனுடன் நெருங்கிப் போரிடுவதைக் கவனித்த கர்ணனைப் பீமன் மறுபடியும் எதிர்த்தான். தனித்த நிலையில் இருவரும் கடுமையாகப் போரிட்டனர். கர்ணனுக்கு உதவி புரியும் பொருட்டு வந்த துரியோதனன் தம்பியர் களான துர்ஜயன், துர்மதனுடன் பீமன் கடுமையாகப் போரிட்டான். பீமன் அவர்களுடன் போரிட்டு அவ்விருவரையும் கொன்றான். அதனைக் கண்டு அச்சங் கொண்ட கர்ணன் போர்க்களத்தைவிட்டு ஓடத்தொடங்கினான்.
அவனுக்கு உதவியாகத் துரியோதனனின் தம்பியரான துச்சகன், துர்மகன், துர்த்தரன், ஜயன் என்பவர்கள் வேகமாகவும் ஆக்ரோ ஷத்துடனும் வந்து பீமனுடன் கடும்போர் புரிந்தார்கள். அவர்கள் அனைவரையும் கொன்று வீர சொர்க்கத்திற்கு அனுப்பி னான். அதன்பின் சித்ரன், உபசித்ரன், சித்ராக்கன், சாருசித்ரன், சிராசனன், சித்ராயுதன், சித்ரவர்மா என்ற துரியோ தனன் தம்பியர் எழுவரைக் கொன்றான். அதனால் மிகவும் அச்சம் கொண்டு கர்ணன் போர்க்களத்தைவிட்டு ஓடலானான். பீமன் அவனை இகழவே அவன் கோபங் கொண்டு மீண்டும்போர் புரியத் தொடங்கி னான். ஆனால் பீமனுக்கு எதிராகக் கர்ணனால் தாக்கு பிடிக்க முடியவில்லை. இதனைக் கவனித்த துரியோதனன் மற்ற தம்பியர்களான சத்ருஞ்சயன், சத்ருசகன், திரிடன், சித்ரசேனன், விகர்ணன் என்ற ஏழு பேரையும் பீமனுடன் மோத அனுப்பி னான். அவர்களும் பீமனுடன் போரிட்ட னர். அவர்களும் பீமனால் கொல்லப் பட்டார்கள். ஆனால் பீமன் விகர்ணன் இறப்புக்காகப் பெரிதும் வருந்தினான். ஏனென்றால், அன்று கௌரவர் சபையில் துருபதன் மகள் திரௌபதியைத் துகிலு ரித்து அவமானப்படுத்திகாலத்துப் பாண்ட வர்க்காகப் பரிந்து பேசியவன் அவன் ஒருவனே. அது மட்டுமன்றி பாண்ட வரிடம் மிகுந்த மரியாதையும் அன்பும் வைத்திருந்தான் என்பது இங்கு குறிப்பிட வேண்டிய ஒன்றாகும். தான் வெற்றி பெற்றதற்கு அறிகுறியாக பீமன் சிங்கநாதம் செய்தான். அதனைக் கேட்ட தருமபுத்திரர் பெரு மகிழ்ச்சி அடைந்தார் என்றாலும் துரியோதனனது தம்பியர்களான விகர்ணன், சித்திரசேனன் ஆகியோர் மாண்டது குறித்துப் பெரிதும் வருந்தினார்.
தொடர்ந்து கர்ணன் பீமனுடன் போரிட் டான். கர்ணன், பீமனின் தேர்ப்பாகனையும் குதிரைகளையும் கொன்றான். உடனே பீமன் கோபத்துடன் அடிபட்ட யானை ஒன்றைக் கர்ணன் மேல் வீசினான். கர்ணன் அம்புகள் மூலம் தடுத்து நிறுத்தி, ”பீமா! இனியும் நீ என்னுடன் போரிட்டால் உயிரை இழப்பாய். கிருஷ்ணார்ச்சுனர்களிடம் போய்விடு. உன்னைக் காப்பாற்றிக் கொள்வாயாக” என்றான்.
கர்ணனுடன் பீமன் போர்
அதனைக் கேட்டு பீமன் கர்ணனைப் பார்த்து,”தீயவனே! என்னிடம் போரிட் டுப் பலமுறை தோற்றோடியது மறந்து விட்டாய் போலும்! உன்னிடம் அதிகம் தற்புகழ்ச்சி உள்ளது எனக் கேள்விப் பட்டிருக்கின்றேன். என்றாலும் என்னுடன் மல்யுத்தம் செய்துபார். பின்னர் உன்னை யும் கீசகன் போல ஆக்கிவிடுவேன்” என்று கோபத்துடன் கூறினான். பின்னர் இருவருக் கும் கடுமையான போர் நடந்தது. அர்ச்சு னன் செய்துள்ள சபதத்தை எண்ணி, அக் கர்ணனைக் கொல்லாது பீமன் விட்டான்.
இந்தச் சமயத்தில் அர்ச்சுனன், கர்ணனைப் பார்த்துவிட்டான். கெளரவர்களிடம் உக்கிரத்துடன் போரிட்டுக் கொண்டிருந்த அர்ச்சுனன் கோபத்துடன் திரும்பிக் கர்ணன் மேல் பாணங்களைப் பிரயோகம் செய்து பீமனைப் போரினின்று விலக்கி விட்டான். அதனால் அர்ச்சுனனும் கர்ணனும் ஆக்ரோஷமுடன் அம்புகளை மாறி மாறி விட்டுப் போர் செய்யலாயினர். அப்பொழுது அஸ்வத்தாமா கர்ணனைக் காக்க முன்வந்தான். அதனால் கர்ணன் தொடர்ந்து பீமன் மேல் அம்புகள் எய்யலானான். அப்பொழுது பீமனுக்கு உதவி யாகச் சாத்யகி அங்குவந்தான்.
சாத்யகி வந்ததை அர்ச்சுனன் பார்த்து விட்டான். அதனால் அர்ச்சுனன் கண்ண பிரானிடம், “பெருமானே! சாத்யகி இங்கு வந்ததை நான் விரும்பவில்லை. அண்ணா தருமரைக் காக்க அவனை அங்கே விட்டு வைத்திருந்தோம். அவனோ தற்போது இங்கு வந்துவிட்டான். கண்ணா! அதோ பூரிசிரவஸ் பெரும்படையுடன் வந்து கொண்டிருக்கின்றான். இவன் சாத்யகியின் தாயாதியாவான். இவன் நிச்சயம் சாத்யகி யைத் தாக்கப் போகின்றான். அங்கு துரோணரிடம் இருந்து தருமபுத்திரரைப் பாதுகாக்க வேண்டும். பொழுதோ சாய்ந்து கொண்டிருக்கின்றது. இன்னும் ஐயத் ரதனை வென்றபாடில்லை. அதனால் சாத்யகியை அண்ணா தருமர் அனுப்பியது சரியான செயலாகத் தெரியவில்லை என எனக்குத் தோன்றுவின்றது” என்று கூறி னான்.
கௌரவர் சேனை ஆரவாரம்
அந்த நிலையில் பூரிசிவரஸ் சாத்ய கியைப் பார்த்து விட்டான் ஆதலின் பூரி சிரவஸ் அவனை மேலும் போக வொட்டாது தடுத்தான்.தொடர்ந்து போரிட்டு வந்தவன் ஆதலின் சாத்யகி களைப்புற்று இருந்தான். குதிரைகளும் களைப்படைந்திருந்தன. இதனைக் கண்டவுடன் பூரிசிரவஸ் பெருமகிழ்வுற் றான்.அவன். “நான் செய்த பாக்கியத்தால் உன்னை வென்று துரியோதனனை மகிழ் வடையச் செய்யப் போகின்றேன். சிறந்த வில்லாளி என்ற கர்வம் இன்றோடு அழியப் போகின்றது” என்று கூறினான். பின்னர் அவனைத் தாக்கினான். இருவரும் முதலில் வில்லம்புகளைக் கொண்டு போரிட்டனர். அதன்பின் வாட்போரிட் டனர். அதனையடுத்து மற்போர் செய்யத் தொடங்கினர். இரண்டு யானைகள் ஒன்றோடொன்று தாக்குவது போன்று களைப்பு சலிப்பின்றிப் போரிட்டனர். நீண்ட நேரம் போர் செய்த பிறகு சாத்யகி களைப்படைந்தான். பூரிசிரவஸ் அவனைத் தூக்கிக் கீழே போட்டான். அதனைக் கண்டு கெளரவர் சேனை ஆரவாரம் செய்தது.
அதோடு பூரிசிரவஸ் விடவில்லை. சாத்யகியைத் தன் கையால் பிடித்துத் தர தரவென்று இழுத்துச் சென்றான். அவ னுடைய குடுமியைப் பூரிசிரவஸ் தம் கையால் பிடித்துக் கொண்டான். பின்னர் காலால் மார்பில் எட்டி உதைத்தான். அடுத்து ஒரு காலால் சாத்யகியை மிதித்துக் கொண்டு மற்றொரு கையால் வாளினை எடுத்து அவனை வெட்ட அக்கையை மேலே தூக்கினான். இதனைக் கண்டு விட்டான் அர்ச்சுனன். உடனே ஓர் அம்பினை விடுத்து வாளொடு கூடிய பூரிசிரவஸின் கையைத் துண்டித்தான். அதனால் பூரிசிரவஸ் பெருங்கோபம் அடைந்தான். “அர்ச்சுனா! நான் வேறொரு வனுடன் போர் செய்யும்பொழுது நீ எப்படி இடையில் புகுந்து என் கையைத் துண்டிக்க லாம். அஸ்திரப்பயிற்சியை நன்கு பெற்ற எவனும் இந்த இழி செயலைச் செய்ய மாட்டான். கண்ணபிரானின் தூண்டுதலால் தான் இதனைச் செய்துள்ளாய் போலும்!” என்று கோபத்துடன் கூறினான்.
பூரிசிரவஸுடன் வாக்குவாதம்
அதனைக் கேட்டு அர்ச்சுனன், “பூரி சிரவஸ்! வேண்டுமென்றே எங்களைக் குற்றம் சாட்டுகின்றாய். எல்லாப் போர் தர்ம அதர்மங்களை அறிந்த நீ களைப்புடன் அமர்ந்து இருந்த சாத்யகியுடன் ஏன் போரிட்டாய்? அவனை ஏன் வெட்ட முனைந்தாய். மேலும் அவனைக் காக்க வேண்டியது என் கடமை. அதுமட்டு மல்லாது மகாரதர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து நிராயுதபாணியாய் நின்ற என் மகன் அபிமன்யுவைச் சிறிதும் இரக்கம் இல்லாது பின்புறமாக இருந்து தாக்கிக் கொன்றீர்களே அது எந்த வகைப் போர்த் தர்மத்தைச் சேர்ந்தது? அப்பொழுது நீ எங்கே போயி ருந்தாய் ? அவர்களுடன் தானே இருந்தாய். அதே போல ஆயுதமின்றி, நிராயுதபாணி யாய்க் களைப்புடன் இருந்த இந்தச் சாத்யகி யைக் கொல்ல முயன்றது எந்த வகையில் நியாயம்? நீயே எண்ணிப்பார்” என்று கூறினான்.
இதனைக் கேட்டவுடன் பூரிசிரவஸ் சாத்யகியை விட்டுவிட்டான். துண்டித்துப் போன வலக்கையை இடக்கையால் எடுத்து அர்ச்சுனன் முன் எறிந்தான்; தன் தலையால் பூமியைத் தொட்டான்; தலை குனிந்து நின்றான்.
அப்பொழுது அர்ச்சுனன், “ஐயனே! என் சகோதரர்களிடம் எவ்வளவு அன்புண்டோ, அவ்வளவு அன்பு தங்கள் மேல் எனக் குண்டு.குற்றம் செய்ய முயன்றீர்கள். அதனைத் தடுத்தேன். அவ்வளவுதான். சிபிச்சக்கரவர்த்தி போன்றவர்கள் அடைந்த புண்ணிய உலகத்தை நீ அடைவாய்” என்று வாழ்த்தினான் வாகதேவரும் வாழ்த்தினார்.
களைப்பு தீர்ந்த சாத்யகி சுத்தியை எடுத்து, கண்ணன், அர்ச்சுனன், பீமன் முதலானோர் தடுத்தும் கேட்காது. மிகுந்த கோபத்துடன் தன்னை அவமானப் படுத்திய பூரிசிரவஸை வாளினால் வீழ்த்தி னான். அதனால் அவன் மாண்டான். இச் செயலைக்கண்டு எல்லோரும் வருந்தினர். சிலர் சாத்யகியைப் பழி தூற்றினர்.
மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன்குடமா?
அதனைக் கேட்டுச் சாத்யகி. “இன்று தர்மத்தைப் பற்றிப் பேசுகின்றவர்கள் துரோணர் போன்ற மகாரதர்கள் பலர் நிராயுதபாணியான வீர அபிமன்யுவை முறையற்ற முறையில் பின்புறம் இருந்து தாக்கி வதம் செய்தார்களே, அப்பொழுது இந்தத் தருமம், புண்ணியம், பாவம் எல்லாம் எங்கே போயிற்று? ஆயுதம் அற்ற, களைப்புடன் இருந்த என்னைத் தரதர வென்று இழுத்து வந்து கீழே தள்ளி, மார்பில் உதைத்து அந்தப் பூரிசிரவஸ் வெட்டத் துணிந்தபோது, இந்தப் புண்ணி யம் பாவம் எல்லாம் எல்லாம் எங்கே எங் போயிற்று? உங்களுக்கு ஒரு நீதி! எங்களுக்கு ஒரு நீதியா? மாமியார் உடைத்தால் மண்குடம். அதையே மருமகள் உடைத்தால் பொன் குடமா? பூரிசிரவஸ் மகரிஷியாக இருக்க லாம்; நல்ல அறிஞனாக இருக்கலாம். போர் விதியை மீறி என்னைக் கொல்ல வந்ததனால் நான் அவனைக் கொன்றேன். இதில் எந்த விதத் தருமமும் தவறவில்லை. ஆதலின் என்னை வீணாக நிந்திக்க வேண் டாம்” என்றான். அதற்குள் பரிசுத்தனான பூரிசிரவஸ் தன்புகழை இம்மண்ணுலகில் நிறுத்திவிட்டு விண்ணுலகடைந்தான்.
அதன்பின்னர் அர்ச்சுனன் கண்ண பிரானை நோக்கி, “பெருமானே! காலம் கடந்து கொண்டிருக்கின்றது. ஜயத்ரதன் இருக்கும் இடத்திற்கு என் தேரைச் செலுத்துங்கள்; என் சபதத்தை நிறைவேற்ற வேண்டும் என்றான். அவ்வாறே ஜயத்ரதனை நோக்கிச் செல்லுகின்ற காலத் தில் துரியோதனன், கர்ணன், சல்லியன், விருஷ சேனன், அஸ்வத்தாமா, கிருபாசாரி யார் போன்றவர்கள் எதிர்ப்பட்டு எதிர்க்க லாயினர். அப்பொழுது கர்ணன் சாத்யகி யைத் தாக்க முற்பட்டான். உட்னே அவன், கர்ணனைத் தாக்கிக் கொல்ல வேண்டு மென்று எண்ணித் தன் கருத்தைக் கண்ண பிரானிடம் கூறினான். அதற்குக் கண்ண பிரான், “கர்ணனைக் கொல்லத் தகுந்த நேரம் இதுவன்று” என்று கூறிச் சாத்ய கிக்குத் தேர் ஒன்று கொடுத்தார். தேரில் ஏறிய சாத்யகி கர்ணனை எதிர்த்து நீண்ட நேரம் போரிட்டான். இருவரும் மாறி மாறி அம்பு மழை பொழிந்தனர். அந்நிலையில் துரியோதனன் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே சாத்யகி கர்ணனின் தேரையும், தேர்ப்பாகனையும், கொடி மரத்தையும் சாய்த்தான். அர்ச்சுனன் சபதம் செய்துள்ள ந்தக் கர்ணனைக் கொல்லாமல் தால் அந்தக் கர் விட்டுவிட்டான் தேர் இல்லாமல் தரையில் தனியாக நின்றிருந்த கர்ணனை, துரியோதனன் தன் தேரில் ஏற்றிக் கொண்டு சென்றான்.
ஜயத்ரதனைக் காக்க துரியோதனன் வேண்டுதல்
தன் தேரில் இருந்த கர்ணனிடம், துரியோதனன், “கர்ணா! இது நமக்குச் சரியான நேரம். உன் பலத்தைக் காட்டி, சூரியன் அஸ்தமிக்கும் வரை அர்ச்சுனன் ஜயத்ரதனை அண்டவிடாமல் தடுத்து நிறுத்தினால் போதும். அஃதாவது சூரிய அஸ்தமனம் வரை ஜயத்ரதனை அர்ச்சுன னிடமிருந்து காப்பாற்றியாக வேண்டும். அதன்படி காப்பாற்றிவிட்டால், சபத நிறை வேறாத அர்ச்சுனன் நெருப்பில் விழுந்து உயிர் துறப்பான். பின்னர் மற்ற பாண்ட வர்கள் உயிர் துறப்பர். நாடு நம் வசம் எளிதில் வந்துவிடும்” என்றான். அதனால் கர்ணனும், துரியோதனனும் சேர்ந்து அர்ச்சுனனுடன் கடும் போர் புரிந்தனர். அர்ச்சுனன் அவ்விருவருக்கும் கொடுத்துக்கொண்டே கெளரவ சேனை யைக் கலக்கிக்கொண்டிருந்தான். சூரியன் மறையும் நேரம். ஜயத்ரதனைப் பின்னால் நிற்க வைத்துவிட்டு கிருபாசாரியார், அஸ்வத்தாமா, சல்லியன், போன்ற பெரு வீரர்கள் இருந்து அர்ச்சுனனுடன் பெரும் போரிட்டனர். அதிலும் அர்ச்சுனனைக் கொல்ல வேண்டும் என்ற முனைப்புடன் போரிட்டனர். அவர்களுடன் துரியோதன னும் கர்ணனும் சேர்ந்து கொண்டு போரிட்டனர். ஆனால் அர்ச்சுனன் மனம் தளரவில்லை.
பழைய வனவாசத் துன்பங்களையெல்லாம் நினைத்துக் கொண்டு ஊக்கத்தோடு அம்புகளை மழையெனப் பொழிந்தான். கெளரவ சேனைகளின் தலைகளையெல்லாம் அறுத்து மண்ணில் தள்ளினான். ஜயத் ரதனின் பன்றிக் கொடியை வீழ்த்தினான். அதனைக் கண்டவுடன் ஜயத்ரதன் மரணம் தன்னை நெருங்கி வருவதை உணர்ந்தான். ஜயத்ரதனும் கோபத்துடன் உக்கிரமாகப் போரிட்டான்.
அப்பொழுது ஒரு பெரிய திருப்பம் ஏற்பட்டது! கண்ணபிரான் தன்னுடைய சக்தியினால் திருச்சக்கரத்தை எடுத்துச் சூரியனை மறைத்துவிட்டார். எங்கணும் இருள். சூரியன் மறைந்துவிட்டான்; அதனைக்கண்டு கௌரவர்கள் மகிழ்ச்சி யுடன் ஆரவாரம் செய்தார்கள்; பாண்டவர் களோ அளவற்ற துன்பத்தை அடைந்தார் கள். அப்பொழுது எல்லோரும் சூரியன் எப்படி மறைந்தான் என்று வானத்தை நோக்கி அண்ணாந்து பார்த்துக் கொண்டி ருந்தனர். அவர்களுடன் ஜயத்ரதனும் வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். கண்ணபிரான் அதனைக் கண்டு, ”அர்ச்சுனா! சிந்து நாட்டு மன்னன் ஜயத்ரதன் தன் தலையை மேலே தூக்கி வானத்தைப் பார்த்துக் கொண்டிருக்கின் றான். உடனே அம்பினைத் தொடுத்து அவன் தலையைத் துண்டித்து பூமியில் விழாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும். அதனை முதலில் செய்க” என்று கூறினான்.
அர்ச்சுனன் கண்ணபிரான் கூறியபடியே அம்பினை ஏவினான். அந்த அம்பு ஜயத் ரதன் தலையைத் துண்டித்து, கீழே விழாதபடி தூக்கிச் சென்றது. மேலும் சில அம்புகளை விட்டு அதனைக் கீழே விழாமல் தாங்கச் செய்துவிட்டு, “கண்ணா! இப்பொழுது நான் என்ன செய்ய வேண்டும்” என்றான்.
அதற்குக் கண்ணபிரான், “அர்ச்சுனா! ஜயத்ரதன் தந்தை விருத்தாட்சத்திரன் என்பவன் கடுமையாகத்தவம் செய்து இந்த ஜயத்ரதனை மகனாகப் பெற்றான். அப்பொழுது அசரீரி, “புகழ்பெற்ற ஒருவன் உன் மகனின் தலையைத் துண்டிப்பான்’ என்றது.
விருத்தாட்சத்திரனின் சாபம்
அதனைக் கேட்ட அந்த விருத்தாட் சத்திரன் கோபங்கொண்டு, “எவன் என் பிள்ளையின் தலையைப் பூமியில் தள்ளு கின்றானோ அவன் தலை சுக்கு நூறாகக் கடவது” என்று சாபமிட்டுள்ளான். இப்பொழுது அந்த விருத்தாட்சத்திரன் சமந்தபஞ்சத்திற்கு வெளியில் தவம் செய்து கொண்டிருக்கின்றான். அவன் மடியில் உன் அம்பின் மூலம் இந்தத் தலையைக் கொண்டு போய்த் தள்ளு. மாறாக உன் அம்புகளிலிருந்து அத்தலை கீழே விழுமா னால் உன் தலை சுக்கு நூறாகச் சிதைந்து விடும். ஜாக்கிரதை ” என்றார்.
அதன்படியே அர்ச்சுனன் மிகுந்த எச்சரிக் கையாக மேலும் பல பாணங்களை அனுப்பி, அந்த அரிய தலையை அலாக் காக அப்படியே தூக்கிக் கொண்டு செல் லும்படி செய்து, தவம் செய்து கொண்டிருக் கின்ற விருத்தாட்சத்திரன் மடியில் அவன் அறியாதபடி விழவைத்தான். தன் மடியில் தன் மகன் தலை விழுந்ததை அறியாத அந்த முனிவன், சந்தியா வந்தனம் செய்ய எழுந்தான். மடியில் இருந்த அவன் மகன் தலை பூமியில் ‘தொப்’ என்று விழுந்தது. அந்தக் கணமே அந்த முனிவன் தலை சுக்கு நூறாகியது.
ஜயத்திரதனைக் கொன்ற அர்ச்சுனன்
எல்லோரும் இதனைக் கண்டு ஆச்சரிய மடைந்தனர். “கெடுவான் கேடு நினைப் பான்” என்றபடி அம்முனிவன் மற்றவருக்இட்ட சாபம் அவன் தலைக்கே எமனாய் வந்தது! அர்ச்சுனன் ஜயத்ரதன் தலையைத் ன் உடல் தலை டன் அவன் உடல் துண்டாடியவுடன் யில்லாது தனியே பூமியில் சாய்ந்தது. வசுதேவர் தன் திருச்சக்கரத்தை வாங்கிக் வா கொண்டார். சூரியன் மேற்குத் திக்கில் ‘தகதக’ என்று ஒளிக்கதிர்களை வீசிக் கொண்டிருக்க அனைவரும் அந்த அற்புதக் காட்சியைக் கண்டு யக் கண்டு வியந்தனர். “எல்லாம் கண்ணனின் மாயை” என்றனர். பீமன் சாத்யகி போன்றோர் வெற்றிச் சங்கை ஊதினர். இதனைக் கேட்டுத் தருமபுத்திரர் மகிழ்ச்சி அடைந்தார். அர்ச்சுனன் தான் எடுத்த சபதத்தை நிறைவேற்றிவிட்டான் புத்துயிர் பெற்று மகிழ்வுடன் ஆரவாரம் செய்தது. என்பதை அறிந்து பாண்டவர் சேனை
அதன்பின் பாண்டவர்கள் துரோணருடன் போரிட்டனர். அஸ்வத்தாமாவும் உடன் வந்து போரிட்டான். ஆனால் அர்ச்சுனனுக்கு அவர்கள் இருவரையும் கொல்ல மனம் வரவில்லை. இருந்தாலும் அவர்களும் அவனுடன் போரிட முடியாது அப்பால் சென்றனர்.
தருமபுத்திரரிடம். அர்ச்சுனன் ஜயத்ரதனைக் கொன்ற விவரத்தை எடுத்துக் கூறினான். அவர் தன் தேரிலிருந்து இறங்கி வந்து அர்ச்சுனனையும் கண்ணபிரானையும் தழுவிக்கொண்டார் கண்ணபெருமானைப் பார்த்து,”பரந்தாமா! பாற்கடல் வண்ணா! பவளவாயா! காக்கும் பெருமானே! உம்முடைய அருளால் ஜயத்ரதனை அர்ச்சுனன் கொன்றான். எங்கள் தலைவர் நீரே; எங்களை நீங்கள்தான் காக்க வேண்டும். நாங்கள் உங்கள் உடைமை” என்று மனமகிழ்ந்து கூறினார்.
கண்ணபிரான் எபிரான் அதனைக் கேட்டு. “தரும புத்திரரே! உம்முடைய கடுந் தவத்தி னாலும், தர்மத்தினாலும், பொறுமை யாலும், கபடமின்மையாலும் தான் ஜயத்ரதனைக் கொல்ல முடிந்தது. இவையே அர்ச்சுனனின் வெற்றிக்கும் காரணமாய் அமைந்தன” என்று தருமபுத்திரருக்கு அரிய புகழாரம் சூட்டினார். யுதிஷ்டிரர் அதனைக் கேட்டு ஆனந்தக் கண்ணீர் விட்டு மீண்டும் தம்முடைய அரிய தம்பியை அணைத்துக் கொண்டார். பீமனையும் சாத்யகியையும் வெகுவாகப் பாராட்டினார். பாண்டவ சேனை உற்சாகமுற்றது; அதனால் கடுமையாகப் போரிடத் தொடங்கியது.
துரியோதனன் மயக்கம்
மைத்துனன் ஜயத்ரதன் மாண்டான் என்பதனைக் கேட்டுத் துரியோதனன் மயக்கமுற்றான். நிலை தடுமாறினான். கண்ணீர்விட்டு அழுதான். மனம் தளர்ந் தான். பின்னர் துரோணரிடம் சென்று. “ஆசார்யரே! பீஷ்மர் முதற்கொண்டு நம்மைச் சார்ந்தவர்களுக்குப் பெருத்த அழிவு ஏற்பட்டுள்ளதைப் பாருங்கள். யாரா லும் வெற்றி பெற முடியாத உம் சீடன், என் அருமை மைத்துனன், சிந்து நாட்டு வேந்தன், என் தங்கை துச்சளையின் கணவன் ஜயத்ரதனை, இன்று உம்முடைய அரிய சீடன் அர்ச்சுனன் கொன்றுவிட்டான். நான் இனி என் செய்வேன்!
என்னை நம்பி போரிட்ட பூரிசிரவஸ் போன்ற மாபெரும் மன்னர்களும் மாண்டு போனார்கள். என் அருமைத் தம்பியர்கள் அநேகர் இன்று பீமன் வசப்பட்டு மாண்டு போனார்கள். இந்தப் பாவத்திற்கு ஆயிர மாயிரம் யாகங்கள் செய்தாலும் அதற்குப் பிராயச்சித்தம் ஆகாது. ஆசார்யரே! இனி நானே போரிட்டுப் பாண்டவர்களை வெல் வேன். இல்லையெனில் என் நண்பர்கள், சுற்றத்தினர்கள், தம்பியர்கள் அடைந்த அவ்வுலகை அடைவேன்” என்று பலவாறு கூறிப்புலம்பினான்.
துரோணர் அதனைக் கேட்டு மனவருத்தத்துடன், “துரியோதனா! யாராலும் வெற்றி பெற முடியாத பீஷ்மர் சாய்ந்த பொழுதே பாண்டவர் சேனையை வெற்றி கொள்ள முடியாது என்ற முடிவுக்கு வந்தேன். அர்ச்சுனனுக்கு ஈடாக மூவுலகங் களிலும் இல்லை. இதனைப் பலமுறை உனக்குச் சொல்லியுள்ளேன். நன்றாகத் தெரிந்து கொள். அன்று சகுனி உருட்டிய சூதாட்டக்காய்கள் நம்மை நோக்கித் தீட்டப்பட்ட கூர் அம்புகள். ஆனால் அன்று நீ உணரவில்லை. உணர்ந்த பீஷ்மர், விதுரர் போன்ற பெரியோர்கள் சொன்ன அறிவுரை களை அலட்சியப்படுத்தினாய். நண்பர்களின் அறிவுரைகளை ஏற்காது அவமதித் தாய். இன்று நாம் எல்லோரும் ஒன்றுபட்டு எதிர்த்தும் ஒரு காண்டீபத்திடமிருந்து சிந்து நாட்டு மன்னன் ஜயத்ரதனைக் காப்பாற்ற முடியவில்லை. இருப்பினும் உன் பொருட்டு மீண்டும் பாண்டவர்களை எதிர்த்துப் போரிடுகின்றேன்” என்றார்.
இதனைக் கேட்டுத் துரியோதனனுக்கு முன்னைப் போலவவே துரோணர் மேல் கோபம் வந்துவிட்டது. ‘கர்ணா! யாராலும் உடைக்க முடியாத வியூகத்தை அர்ச்சுனன் உடைத்துவிட்டான். ஜயத்ரதனையும் கொன்றுவிட்டான், சிங்கமானது சீறி சிறிய விலங்குகளைச் சிதைத்தது போல அர்ச் சுனன் நம் படைகளை நாசம் செய்து விட்டான். துரோணர் முயற்சி அற்றவராய் அர்ச்சுனனுக்கு இடம் கொடுத்ததால்தான் இத்தகைய பெரு நாசம் நமக்கு நேர்ந்தது. அர்ச்சுனனிடம் அவர் நயத்தக்க கண்ணோட்டத்தை உடையவராகவே இருக்கின்றார். மைத்துனர் ஜயத்ரதன் தன் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அஞ்சித்தான் தன் நாட்டிற்கு போக அனுமதி கேட்டார். அனுமதி கொடுத்திருந்தால், அவர் உயிர் பிழைத்திருக்கலாம். அவரைக் காப்பதாக உறுதி அளித்த இந்தத் துரோணரும் கைவிட்டார். அவருடைய முயற்சியின்மை யால்தான் என்னுடைய தம்பிமார்கள் பலர் மாண்டு போயினர். ஜயத்ரதனும் கொல்லப் பட்டான்” என்று கூறி மனம் வருந்தினான்.
அதனைக் கேட்டுக் கர்ணன், “அரசே! ஆசார்யரை நிந்திக்க வேண்டாம். அவர் தம் சக்திக்கு ஏற்பவே போரிட்டார். அர்ச்சுனன் வாலிப மிடுக்கானவன். மிகுதியான பயிற்சி பெற்றவன். அடுத்தடுத்து பல போர்களைச் செய்தவன். அதனால்தான் அவன் யாராலும் தகர்க்க முடியாத, துரோணர் வகுத்த வியூகத்தைத் தகர்த்து விட்டான். அவை மட்டுமல்ல. அவ்ன் சிறந்த தெய்வக் கலன்களைப் பெற்றவன்.
கர்ணன் பேச்சு
”மேலும் போரில் ஜயத்ரதன் கொல்லப் பட்டது விதியின் செயலே! அவர்கள் பக்கம் தெய்வத்தின் அருள் வீசுகின்றது. சூதாட்டத்தில் தோற்றார்கள்; வனவாசம் செய்தார்கள்; அஞ்ஞாத வாசம் புரிந்தார் கள். சொல்லொணாத் துன்பம் அடைந்தார்கள். அப்படிப்பட்டவர்கள் இன்று வெற்றிக் காற்றைச் சுவாசிக்கின்றார்கள் என்றால் அது தெய்வத்தின் கடைக்கண் பார்வை அவர்கள் பக்கம் இருப்பதுதான். மிகுதியான படைகளையுடைய நாம் குறைவான படைகளையுடைய பாண்டவர் களால் தோற்கடிக்கப்படுகின்றோம் என் றால் அதுவும் அவனுடைய செயலே” என்று கர்ணன் விதியின் வலிமையை எடுத்துக் காட்டிப் பேசினான். ஜெயத்ரதன் வதையை வில்லிபுத்துரார் சற்று மாறுதலாகக் கூறுகின்றார்.அதனுடைய சுருக்கத்தை ஈண்டு காண்போம்.
சம்சப்தகர்களை வென்று அர்ச்சுனன் பாசறைக்குத் திரும்புகின்றான். அபிமன்யு ஜயத்ரதனால் கொல்லப்பட்டான் என்ற செய்தி அறியாமலே வந்து கொண்டிருந்தான். கண்ணபிரானும் அவனிடம் சொல் லாமல் தேரோட்டிக் கொண்டு வந்தார்.
அப்பொழுது கண்ணபிரான் தேவேந்தி ரனை அழைத்து, “அபிமன்யு இன்று ஜயத் ரதனால் கொல்லப்பட்டதை அறிந்தால் அர்ச்சுனன் உயிர்விட்டு விடுவான். ஆதலின் அவன் அதிர்ச்சியடையாதவாறு தகுந்த ஏற்பாடு செய்யவும் “என்று அர்ச்சுனன் அறியாதவாறு கூறியிருந்தார்.
கண்ணபிரானுடைய வார்த்தையைக் கேட்டு இந்திரன் ஒரு வயோதிக அந்தண வேட கொண்டு, அர்ச்சுனன் வரும் வழியில், நெருப்பினை வளர்த்து, “என் மகனே நீ போய்விட்டாயே! நீ போனபின் நான் உயிர்வாழ மாட்டேன்” என்று கூறிப் புலம்பி அந்நெருப்பில் விழுவதற்குமுன், அந்நெருப்பினைச் சுற்றிவலம் வந்து கொண்டிருந்தான். பாசறைக்கு வேகமாக வந்து கொண்டிருந்த அர்ச்சுனன் அதனைக் கண்டான். இரக்க சுபாவம் கொண்ட அவன் தேரை நிறுத்தி, இறங்கி அந்த அந்தணன் அருகில் சென்று “நெருப்பில் விழக்கூடிய அளவுக்கு உனக்கு என்ன துன்பம் நேர்ந்தது சொல்” என்றான். அதற்கு அந்த அந்தணன், “என் ஒரே மகன் இறந்துவிட்டான். அவன் போனபின் நான் ஏன் உயிர் வாழ்தல் வேண்டும்? அதனால் நெருப்பில் பாய்ந்து இறக்கத் துணிந்து விட்டேன்” என்றான்.
அந்தணருக்கு ஆறுதல் கூறிய அர்ச்சுனன்
அதனைக் கேட்டு அர்ச்சுனன், “என் தந்தை போன்றவரே! இது சரியான செயல் அன்று. புத்திரர் இறப்புக்காகத் தந்தை உயிர் துறப்பது என்றால் உலகம் அழிந்து விடுமே. இதனைக் கைவிடுங்கள். உயி ருடன் இருந்தால் மேலும் பல புத்திரர் களைப் பெறலாமே. மன ஆறுதல் கொண்டு உங்கள் முடிவினைக் கைவிடுங் கள் ” என்று வேண்டிக்கொண்டான். மேலும் அவன், “இறத்தலும் பிறத்தலும் உலக நியதி. அது உறங்குவதும் பின் எழுவதும் போன்றது; எல்லாம் விதி வழி நடக்கும். விதி மிகுந்த வலிமையுடையது அன்றோ? அந்தணரே! நீர் எல்லாம் தெரிந்த ஞானவானாக இருக்கின்றீர். நீங்களே இவ் வாறு நடக்கலாமா? புதல்வன் இறந்தான் என்ற காரணத்திற்காக யாராவது உயிரை விட்டிருக்கின்றார்களா? சொல்லுங்கள்’ என்று பலவாறு கூறித்தடுக்கலானான்.
எல்லாவற்றையும் கேட்டுக் கொண்ட அம்முனிவன்,”என்னைத் தடுக்கின்றாயே! உன் மகன் இறந்தால் நீயும்தானே உயிர்துறப்பாய் “என்று பதில் கேள்வி போட்டான்.
அர்ச்சுனனின் சத்தியம்
அதற்கு அர்ச்சுனன், “என் மகள் இறந்தால் நான் நிச்சயம் உயிர்துறக்க மாட்டேன். விதிவழி நடந்தது என்று விட்டு விடுவேன்” என்றான். அவ்வாறே கண்ணன் தடுத்தும் கேளாது அர்ச்சுனன் சத்தியம் செய்து கொடுத்தான். அதன்பின் பாசறை சென்றான். அங்கு தன் அன்பு மகன் அபிமன்யு, ஜயத்ரதனின் சூழ்ச்சியால் மாண்டான் என்பதை அறிந்தான். மனம் குமுறினான். அழுதான். தருமரை நிந்தித் தான். புத்திரசோகம் பெரிதல்லவா! யாரா லும் தாங்க முடியாது. அவனாலும் தாங்க முடியவில்லை. அதனால் தீயில் விழுந்து உயிர் விட முடிவு செய்தான். தன் தம்பியர் நகுல சகாதேவரை நெருப்பினை வளர்க்கச் செய்தான். அவர்களும் மனம் வெதும்பி, கண்களில் நீர்வழிய நெருப்பினை வளர்த் துக் கொடுத்தனர். தன் காண்டீபத்தைக் கையிலேந்தித் தீயில் பாய்ந்து உயிர் விடுவான் வேண்டி, கண்ணபிரான், தரும புத்திரர், சகோதரர்கள், சாத்யகி, திட்டத்துய் மன் போன்றோர் முன்னிலையில் அத்தீயினை வலம் வந்து கொண்டிருந்தான்.
அப்பொழுது நெருப்பில் விழவொட்டாது அர்ச்சுனனால் தடுக்கப்பட்ட அந்த ணன் விரைவாக ஓடி வந்தான். “அர்ச்சுனா? நிறுத்து என்ன காரியம் செய்தாய்! எனக்குக் கொடுத்த சத்தியத்தை மீறுகின்றாயே,இது உனக்குத் தர்மமா! என் புத்திரன் இறந்தால் நான் நெருப்பில் விழுந்து உயிர் விடக் கூடாது. ஆனால் உன் மகன் இறந்தால் நீ மட்டும் நெருப்பில் விழுந்து உயிர் துறக்க லாம். இது என்ன தர்மம்! எனக்குக் கொடுத்த சத்தியத்தை எண்ணிப்பார்” என்று கூறினான். அதனால் அர்ச்சுனன் நெருப்பில் விழுவதைத் தவிர்த்தான். அதனால் துயரத்தைவிட கோபம் அதிக மானது. அதனால் அவன், “இ ”இஃது விண்ணவர் மீது ஆணை! கண்ணபிரான் மீது ஆணை! இந்தக் காண்டீபத்தின் மீது ஆணை. நான் இப்பொழுது கூறுகின்றேன். என் தங்கப்புதல்வன் அபிமன்யு போர்க் களத்தில் வீர மரணம் அடைந்ததற்குக் காரணமாக இருந்த அந்தச் சிந்து நாட்டு வேந்தன் ஜயத்ரதனை நாளை கதிரவன் மறைவதற்குள் கொன்று பழிக்குப் பழி வாங்குவேன். இல்லையெனில் இதே தீயினில் மாய்ந்து உயிர் துறப்பேன். இஃது சத்தியம்” என்று சபதம் செய்தான்.
சிவபெருமானிடம் பெற்ற வில்
பின்னர் கண்ணபிரானோடு அர்ச்சுனன் கயிலை சென்று சிவபெருமானிடம் இருந்து ஜயத்ரதனைக் கொல்வதற்கு வேண்டிய வில்லினையும், கணையையும் பெற்று வந்தான். மறுநாள் போர்க்களத்தில் புகுந்து துரோணருடைய சகட வியூகத்தை உடைத்து அதிரடிதாக்குதல் நடத்திக் கொண்டுவந்தான்.
கெளரவ்ர்களும் யாரும் காண முடியாத படி ஒரு நிலவறையுள் ஜயத்ரதனை வைத்துப் பாதுகாத்தனர். அதுமட்டு மல்லாது அர்ச்சுனனை ஜயத்ரதனிடம் வரவொட்டாது கடுமையாகப் போர் நடத்தினர். சூரியன் மறையும் நேரம் வந்து விட்டது. பாண்டவர்கள் சோர்வடைய ஆரம்பித்தனர். ஜயத்ரதனைக் கொல்ல முடியாமல் போய்விடுவோமோ என்று அஞ்சினர். எவற்றையும் திறமையாக முன்னின்று முடிக்கும் பெருமானாகிய கண்ணபிரான் தன் சக்கரத்தை வானத்தில் வீசி சூரியனை மறைத்தார். அதனால் உலகெங்கும் இருள் கவ்விக் கொண்டது. கௌரவர்கள் மகிழ்ச்சி ஆரவாரத்தோடு குதித்தனர். பாண்டவர்கள் திகைத்துப் போயினர். சோர்வடைந்தனர். இருள் வந்தது காரணமாக அர்ச்சுனன் அமைக்கப் பட்ட தீயைக் காண்டீபத்தைக் கையில் ஏந்தி வலம் வந்தான். அவன் தீயில் குதிக்கும் காட்சியைக் காண்பான் வேண்டி துரியோதனாதியர் ஜயத்ரதனோடு ஒரு குன்றின் உச்சியில் நின்று கொண்டிருந் தனர். ஜயத்ரதனைக் கண்ணன் கண்டு விட்டார. உடனே திருச்சக்கரத்தைச் சூரியனிடமிருந்து விலக்கிக்கொண்டார். இருள் நீங்கியது. சூரியன் தன் ஆயிரங்கதிர் களை வீசிக்கொண்டு பகலவனாக விளங் கினான். அடுத்த கணம் கண்ணபிராள் அர்ச்சுனனைப் பார்த்து, “அதோ பார் ஜயத்ரதன் ! இதோ உன் கையில் காண்டீபம்; எடு வில்லை; தொடு அம்பை; அந்த ஜயத்ரதன் தலையைத் துண்டித்துக் கீழே விழாது சமந்தக பஞ்சகத்திற்கு வெளியில் தவம் செய்து கொண்டிருக்கும் இவன் தந்தை மடியில் போட்டு விடு” என்றார். அர்ச்சுனனும் கண்ணன் கூறியபடியே ஜயத்ரதன் தலையைத் தவம் செய்து கொண்டிருந்த அவன் தந்தையின் மடியில் போட்டான். சந்தியா வந்தனம் செய்ய அவன் எழ அத்தலை தரையில் விழ, அவன் கொடுத்த சாபத்தினால் அவன் தலை சுக்கு நூறாக உடைந்து போயிற்று. ஆக ஜயத்ரதன் அர்ச்சுனனால் இவ்வாறு கொல்லப்பட்டான்.
இவ்வாறு வில்லிபுத்தூரார் பாரதம் சிற் சில மாறுதல்களுடன் ஜயத்ரதன் வதத்தைக் கூறுகின்றது.
கடோத்கஜன் மாண்டான்
ஜயத்ரதன் கொல்லப்பட்டதனால் கோப வெறிகொண்டு துரியோதனன் பாண்டவர் படையில் புகுந்து கரும்புத் தோட்டத்தைக் காட்டு யானை அழிப்பது போல வெறித் தனமாய் போரிடலானான்.
பாண்டவர் சேனையை நாசம் செய்யத் தொடங்கினான். இயமனைப் போன்று வீரர்களைக் கொன்று குவித்தான். அதனால் பாண்டவர் சேனை நிலை கலங்கியது. தடுமாறியது.
இதனைக் கண்டு பீமன், விராடன். துருபதன் ஆகியோர் ஓடிவந்து துரியோதனனோடு கடுமையாகப் போரிட்டனர். அப்பொழுது சிங்கம் போல முழங்கிக் கொண்டு கடோத்கஜன் அங்கு வந்தான். அவனும் பீமன் முதலியவரோடு சேர்ந்து துரியோதனனைக் கடுமையாக எதிர்த்துப் போரிடலானான். துரியோதனனும் ஈடுகொடுத்துப் போரிட்டு வந்தான். இதனைத் தருமபுத்திரர் பார்த்தார். அவரும் நேரடியாகத் துரியோதனனுடன் மோதி னார். துரியோதனன் கோபங்கொண்டு பத்து அம்புகளால் தருமபுத்திரரைத் தாக்கி னான். ஓர் அம்பின் மூலம் அவருடைய முரசக் கொடியை அறுத்தான். பின்னர் அவரின் தேர்ப்பாகன் இந்திர சேனனை மூன்று பாணங்களால் தாக்கினான். குதிரை களையும் கொன்றான்.
மூர்ச்சையாகி விழுந்த துரியோதனன்
கோபங் கொண்டு தருமபுத்திரரும் துரியோதனனைப் பத்து அம்புகளால் தாக்கினார். அதனால் அவன் மூர்ச்சை யாகித் தேர்த்தட்டில் வீழ்ந்தான். அதனால் “துரியோதனன் மாண்டான்” என்று எங்க ணும் கூக்குரல் எழுந்தது.
துரோணர் இதனைக் கேட்டு அலறி அடித்துக் கொண்டு விரைந்து வந்து அங்கு சேர்ந்தார். அப்பொழுது அர்ச்சுனனும் சாத்யகியும் துரோணரை எதிர்த்தனர். அவர்களோடு நகுலன், சகாதேவன், திட்டத்துய்மன், போன்றோரும் கலந்து கொண்டு துரோணரைக் கடுமையாக எதிர்க்கலாயினர். இதற்குள் துரியோதனன் மூர்ச்சை தெளிந்து எழுந்தான். எழுந்து மீண்டும் தருமபுத்திரருடன் போரிட்டான்.
இரவு பொழுது தொடங்கியது. போர்க்களத்தில் நரிகள் ஊளையிட்டன; கோட்டான்கள் சுத்தின; யானை குதிரை போன்றவை பேரொலி செய்தன. ஒருவர் முகம் மற்றொருவருக்குத் தெரியவில்லை. அப்பொழுதும் போர் நிற்கவில்லை. துரோணர் ஆக்ரோஷமாகப் போரிட்டு அனைவரையும் புறமுதுகிட்டோடச் செய்தார்.
அப்பொழுது பீமன் மிகக்கடுமையாகப் போரிட்டு, துர்மதன், துஷ்கர்ணன் என்பவர் களைக் கொன்றான்.இதனால் கோபங் கொண்ட துரோணர், பாண்டவர் சேனையை நிலை குலையச் செய்தார். அந்த நேரத்தில் சாத்யகியை அஸ்வத்தாமன் எதிர்த்துப் போரிட்டான். கடோத்கஜன் வந்து அஸ்வத்தாமாவைத் தடுத்து நிறுத்தி னான்.
அஸ்வத்தாமனுடன் கடோத்கஜன் போர்
அப்பொழுது அஸ்வத்தாமா, கடோத் கஜன் மகன் அஞ்சனபர்வா என்பவனைக் கொன்றான். இதனால் கோபங்கொண்ட கடோத்கஜன் அஸ்வத்தாமாவைக் கடுமை யாக எதிர்த்துப் போரிட்டான்.
அஸ்வத்தாமாவோ பாண்டவர் சேனையை யும்.பாஞ்சாலர்களையும், அரக்கர்களை யும் கொன்று குவித்தான். அதனைக் கண்ட பீமன், திட்டத்துய்மன் போன்றோர் கடுங் கோபத்துடன் வந்து அவனுடன் மோதினர். போர்க்களம் எங்கும் இருள் மயமாகவே விளங்கியது. அன்றைய போரை நிறுத்தும் படி துரியோதனரும் துரோணரும் எவ் வளவோ கூறியும் எடுபடவில்லை. தொடர்ந்து போர் நடக்கலாயிற்று. அந்தக் காரிருளிலும் கடும்போர் நடந்து கொண்டிருந்தது.
தீவட்டிகளைப் பிடித்துக் கொண்டு கடும் போர் புரிந்தனர். கௌரவர்களும் பாண்டவர்களும் ளும் தத்தம் தேர்களில் ஐந்து விளக்குகளையும்,யானையின் மீது மூன்று விளக்குகளையும், குதிரையின் மீது ஒரு விளக்கையும் ஏற்றி வைத்துக்கொண்டு போரிடலாயினர். அதனால் போர்க்களம் பிரகாசமுடையதாய் எங்ஙணும் இருந்தது. ஆகப் பாரதப் போர் அன்று இரவு முழுவதும் போர் நடக்கலாயிற்று.
அந்த நேரத்தில் துரியோதனனைப் பார்த்துக் கர்ணன், “நண்பனே! ஒரு பக்கம் உயர்ந்து விளங்கும் வில்லாளியான அர்ச் சுனன் நம் சேனையை நிலை கலங்க வைக் கிறான். மற்றொரு பக்கம் சாத்யகியோ கடுமையாகப் போரிட்டுக் கொண்டிருக் கின்றான். இன்னொரு பக்கம் திட்டத்துய்மன் துரோணருடன் போராடிக் கொண் டிருக்கின்றான். நாம் சாத்யகியையும், திட்டத்துய்மனையும், அபிமன்யுவை ஒன்று சேர்ந்து கொண்டு கொன்றது போல ஒன்று சேர்ந்து சூழ்ந்துகொண்டு கொன்று விட வேண்டும்.இதற்குரிய ஏற்பாட்டைச் செய்க” என்று கூறினான்.
‘இது நல்ல யோசனை’ என்று முடிவு செய்து, சகுனியின் தலைமையில் பதினாயிரம் தேர்ப்படையை அர்ச்சுனனைக் கொல்லும்படி அனுப்பினான். அவனும் அவ்வாறே சென்றான். அதனைக் கண்டு கோபித்த சாத்யகியை, கர்ணன் விரைந்து சென்று எதிர்த்தான். தனி ஒருவனாக நின்று சாத்யகி கௌரவப் படையைக் கொன்று குவித்தான். உடனே துரியோதனன் அங்கு சென்று அச்சாத்யகியுடன் கடுமையாகப் போரிட்டான். சாத்யகி துரியோதனனின் தேர்க் குதிரைகளைக் கொன்றான். அதனால் துரியோதனன் கிருதவர்மா தேரில் ஏறிக் கொண்டான்.
சிதறி ஓடிய கௌரவ சேனை
அர்ச்சுனனுக்கும், சகுனிக்கும் கடுமையான போர் நடைபெற்றது. அர்ச்சுனன் சகுனியின் வில்லை அறுத்தான். குதிரை களைக் கொன்றான். உடனே அவன் போர்க் களத்தினின்று நீங்கினான். அதன்பின் அர்ச்சுனன் கெளரவ சேனையைத் துரத்தி துரத்தி அடித்தான். எங்கு பார்த்தாலும், பல திக்குகளிலும் அச்சேனை சிதறி ஓடியது. கெளரவ சேனை சிதறுவதைக் கண்ட கண்ணபிரானும் அர்ச்சுனனும் வெற்றிச் சங்கை எடுத்து ஊதினர்.
இதனை அறிந்த துரியோதனன், துரோணரையும் கர்ணனையும் பார்த்து, “உங்கள் முன்னிலையில் அர்ச்சுனன் ஜயத்ரதனைக் கொன்றான். அதனால் கோபங்கொண்டு நீங்கள் இரவுப் போரைத் தொடர்ந்து நடத்துகின்றீர்கள். இப்போரில் நம் படை சிதறி ஓடுகின்றன. எதிரிகளை ஆற்றலுடன் தாக்காமல் இருக்கின்றீர்கள்” என்று கோபத்துடன் கூறினான்.
இவ்வார்த்தைகள் துரோணருக்கும் கர்ணனுக்கும் கோபம் உண்டாகச் செய்தன. அதனால் அவர்கள் பாஞ்சால சேனையைத் தாக்கினார்கள். அச்சேனைகள் அஞ்சி ஓடலாயின. பீமன் அச்சேனையை மடக்கிப் பிடித்து வந்தான். வசுதேவர் மகிழ்ச்சி அடைந்து அர்ச்சுனனையும் பீமனையும் ஒரு சேர கெளரவ சேனையை எதிர்க்கும் படி கட்டளையிட்டார். இருவரும் ஒன்று சேர்ந்து கடுமையாகப் போரிட்டன. அப்படியும் பாண்டவர் படைபயங் கொண்டு ஓடியது.
சடாசூரன் மகனுடன் போர்
அப்பொழுது அர்ச்சுனன், “கண்ணா! பாண்டவர் சேனையோடு அண்ணா தரும புத்திரரும் அச்சம் கொண்டுள்ளார்.
அதனால் கர்ணனை வதம் செய்ய வேண்டும்’ என்று கேட்டான். அதற்குக் கண்ணபிரான், “கர்ணனைக் கொல்ல இதுவன்று நேரம். இப்பொழுது கடோத் கஜன்தான் அவனிடம் போரிட வேண்டும். இந்திரனால் வழங்கப்பட்ட சக்தி ஆயுதம் கர்ணனிடம் உள்ளது. உன்னைக் கொல்லும் பொருட்டு அதனை அவன் வைத்துள்ளான். ஆகையால் நீ அவனிடம் போரிட வேண்டாம். கடோத்கஜன் அவனுடன் போர் புரி யட்டும்” என்றார்.
உடனே அர்ச்சுனன் கடோத்கஜனை அழைத்தான். அவன் வந்து அர்ச்சுனனையும், கண்ணபிரானையும் வணங்கி னான். கண்ணபிரான் அப்பொழுது, ”கடோத்கஜா! உன் வீரத்தை வெளிப்படுத்தும் சமயம் வந்துள்ளது. நீ மாயைகள் பல புரிந்து போர் செய்வதில் வல்லவன். கர்ணன் இந்த இரவு நேரத்தில் பாண்டவர் படையைக் கொன்று குவிக்கின்றான். இந்த தருணத்தில் நீதான் அவனை வெல்ல வேண்டும். எனவே நீ கர்ணனுடன் கடுமையாகப் போரிட்டு அவனைக் கொன்றுவிடு” என்று கேட்டுக் கொண்டார். கடோத்கஜ னும் அதற்கு ஒப்புக் கொண்டான்.
அவர்களை வணங்கி, கர்ணன் இருக்கும் போர்க்களம் நோக்கி ஓடினான்.
இதனைத் துரியோதனன் கவனித்து விட்டான். தம்பி துச்சாதனனை அழைத்து, “தம்பி கடோத்கஜன் பெரும்படையுடன் கர்ணனை எதிர்க்கும் பொருட்டு விரைந்து செல்கின்றான். பெரும்படையுடன் சென்று அவனைத் தடுத்து நிறுத்து” என்றான். அந்த நேரத்தில் சடாசூரன் மகன் அலம்பலன் துரியோதனனை அடைந்தான். அவன், துரியோதனனிடம், “நீ விரும்பினால் நான் பாண்டவர்களைக் கொல்வேன். என் தந்தை சடாசூரனின் மரணத்திற்குக் காரண மாயிருந்த பீமன் முதலான இப்பாண்ட வர்களை நான் கொன்று பழி தீர்த்துக் கொள்ளுகின்றேன். இவர்களின் இரத்த பலியாலும், மாமிசத்தாலும் என் தந்தைக் குப் பூசை செய்வேன்” என்று கோபமாகக் கூறினான். அதைக்கேட்ட துரியோதனன் அவனை நோக்கி, “இப்பொழுது கடோத் கஜனை எதிர்த்துப் போரிடு” என்றான். அவ்வாறே அலம்பலன் கடோத்கஜனை எதிர்க்கலானான்.
துரியோதனனுக்கு எச்சரிக்கை
இருவரும் கடுமையாகப் போரிட்டனர். இருவரும் மாயையில் வல்லவர்கள். அதனால் மாயப்போர் செய்தனர். இறுதி யில் கடோத்கஜன், அலம்பலனைத் தூக்கித் தரையில் அடித்தான். வாள் மூலம் தலையை வெட்டித் தள்ளினான். அவன் தலையை எடுத்துக் கொண்டு போ. துரியோதனனின் தேரில் வைத்து, துரியோதனனை நோக்கி, “துரியோதனா! உன் உறவினர் சடாசூரன் மகன் அலம்பலன் கொல்லப்பட்டிருப்பதைப் பார்; உன்னு டைய முடிவும் இவ்வாறே அமையப் போகின்றது. அதனால்தான் அலம்பலனின் தலையை உன் முன் கொண்டுவந்து வைத்தேன். இது உனக்கு விடப்பட்ட எச்சரிக்கை ” என்று கூறிவிட்டு நேரே கர்ணனுடன் போரிடலானான்.
இருவரும் நீண்ட நேரம் போரிட்டனர். சாதாரணமாகப் போரிட்டால் கடோத்கஜ னைக் கொல்ல முடியாது என்று எண்ணி, கர்ணன் அவன் மேல் சக்திவாய்ந்த திவ்வி யாஸ்திரங்களைப் பொழிந்தான். அதற்கும் அவன் அசைந்து கொடாது மாயப் போர் செய்து கௌரவர் படையை அழிக்கலா யினன். அவனுடைய அன்றைய மாயைப் போரைக் கண்டு கௌரவர்கள் அஞ்சி நடுங்கினர்.
அப்பொழுது அலாயுதன் என்பவன் கடோத்கஜனோடு போரிட வந்தான். இருவரும் உக்கிரமாகப் போரிட்டனர். இறுதியில் கடோத்கஜன் அலாயுதனை உயரத் தூக்கி, தரதரவென்று சுழற்றித் தரையில் போட்டான். பின்னர் அவன் தலையை அறுத்தான். வெற்றிக் களிப்பி னால் சிங்கநாதம் செய்தான். அவனுடைய தலையைத் துரியோதனன் முன் கொண்டு போய் வைத்தான். கடோத்கஜன் அலாயுத னைக் கொன்றது கண்டு துரியோதனனோடு கௌரவப் பெருஞ்சேனையும் ஆத்திரம் கொண்டது. அவனைப் பழிவாங்கத் துடித்தது.
கடோத்கஜன் வீழ்ச்சி
மீண்டும் கடோத்கஜன் கர்ணனுடன் போரிடத் தொடங்கினான். அவனுடைய பேராற்றலுக்கு முன்னால் கர்ணன் எதிர் நிற்க முடியாமல் நிலைகலங்கிப் போனான்.
அப்பொழுது கர்ணன் இந்திரன் கொடுத்த ‘வைஜெயந்தி’ என்ற சக்தி ஆயுதத்தை எடுத்து வேறுவழி இல்லாமல் இந்த இரவு வேளையில் வேண்டிய மந்திரங்களைச் சொல்லிப் பிரயோகம் செய்தான். அந்தச் சக்தி ஆயுதம் கடோத் கஜனின் மாயப் போரை நீக்கியதோடு, அவன் மார்பையும் பிளந்தது. கடோத்கஜன் கோரமாய்ச் சப்தமிட்டுக் கீழே விழுந்து மாண்டான்.
இதனைக் கண்டு கௌரவ வீரர்கள் ஆரவாரம் செய்தார்கள். சங்கங்களை எடுத்து முழக்கினார்கள். பின்னர் கர்ணன் துரியோதனன் தேரில் ஏறிச்சென்றான்.
பாண்டவர்கள் கண்ணீர்விட்டுக் கதறி னர். ஏற்கெனவே இரவான், அபிமன்யு, போன்றவர்களை இழந்த அவர்கள் கடோத்கஜன் மாண்டதைக் கேட்டதும் பெருந் துயரம் அடைந்தனர். கண்ணபிரான் மட்டும் அப்பொழுது பெருமகிழ்வுடன் இருந்தார். அதனைக் கண்டு, “எல்லோரும் துயரத்துடன் இருக்கத் தாங்கள் மட்டும் மகிழ்ச்சியுடன் இருக்கக் காரணம் என்ன?” என்று அர்ச்சுனன் கேட்டான். கண்ணபிரானைக்
கண்ணபிரான் மகிழ்ச்சி
அதற்குக் கண்ணபிரான், “அர்ச்சுனா! இந்திரன் வழங்கிய சக்தி ஆயுதத்தை உன்னைக் கொல்லத்தான் கர்ணன் வைத்திருந்தான். அதனை உன்மீது வீசியிருந்தால் நீ ஒன்றும் செய்யமுடியாது. நானும் ஒன்றும் செய்ய முடியாது. அதனால் உன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும். அப்படி நேர்ந் தால் பாண்டவர்கள் உயிரோடு இருக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட அந்தச் சக்தி ஆயுதத்தை இப்பொழுது கர்ணன் கடோத் கஜன் மீது வீசியதனால், கடோத்கஜன் உயிர் துறந்தான். அதன் மூலம் நீ உயிர் பிழைத்தாய். மேலும் ஒரு முறை வீசிய அந்தச் சக்தி ஆயுதத்தை மீண்டும் வீச முடியாது. கர்ணனும் இந்த நிகழ்ச்சியினால் உன்னைக் கொல்ல முடியும் என்ற நம்பிக்கையை இழந்தான். அதனால்தான் மகிழ்வு கொண்டேன்” என்று கூறினார்.
என்றாலும் அர்ச்சுனன், பீமன், தரும புத்திரன் முதலானோர் கடோத்கஜன் இழப்புக்குப் பெரிதும் வருந்தினர் தரும புத்திரர் மிகுதியான கோபங்கொண்டு “கர்ணனை நிச்சயம் கொல்வேன்” என்றார்.
அப்பொழுது வியாச பகவான் அங்கு வந்தார். அவர், “தருமபுத்திரரே! கோபப்படவேண்டாம். கர்ணனை அர்ச்சுனன் நிச்சயம் கொல்வான். நீங்கள் அந்தக் கவலையை விடுங்கள். கடோத்கஜனின் உயிரை வாங்கிய சக்தி ஆயுதத்தைக் கர்ணன் அர்ச்சுனன் மீது வீசியிருந்தால் அவ்வாயுதம் அர்ச்சுனனைக் கொன்றி ருக்கும். கடோத்கஜன் தன்னுயிர் கொடுத்து தன் சிற்றப்பன் உயிரைக் காத்துள்ளான். அவனைப் போற்றுங்கள். வருத்தப்படா தீர்கள். விதி வழி எல்லாம் நடக்கும். வெற்றி உங்களுக்கே. இன்றைக்கு ஐந்தாம் நாள். இந்தக் குருநாடு உங்கள் வசமாகும்” என்று கூறி அவ்விடம் விட்டு அகன்றார்.
ஆக இவ்வாறு பதிநான்காம் நாள் இரவோடு சேர்ந்து போர் நடந்து முடிந்தது.
மகாபாரதம் – 50 பதிநான்காம் நாள் போர்… போர்க்களத்தைவிட்டுக் கர்ணன் ஓட்டம்… கடோத்கஜன் வீழ்ச்சி