பதின்மூன்றாம் நாள் போர். துரோணர் அமைத்த பதும வியூகம்
குருக்ஷேத்திரப் போர் தொடங்கி அன்று பதின்மூன்றாம் நாள். பாண்டவர்களுக்கு ஒரு சோதனை நாள். பாண்டவர்களின் அன்பு செல்ல மகன் அபிமன்யு ஜயத்ரதனால் வீர மரணம் அடைந்த நாள். இனி, அன்று அஃது எவ்வாறு நடந்தது என்பதைப் பார்ப்போம்.
தருமபுத்திரரை உயிருடன் பிடிக்க முடியாமல் போனது குறித்து வருத்தத் தோடு இருந்த துரியோதனன் நேரே துரோ ணர் இருக்கும் இடத்தை அடைந்தான். அங்கு அவரைக் கண்டு, “ஆசார்யரே! நேற்றைய தினப் போரில் தருமபுத்திரர் உம் அருகில் இருந்தும் அவரைப் பிடிக்காமல் விட்டுவிட்டீர்; எங்களைக் காப்பாற்ற வேண்டிய அக்கறை உங்களிடம் இல்லை.
இருந்திருந்தால் இந்த நிகழ்ச்சி நடந்திருக்காது. எங்களுக்கு உறுதி மொழியைக் கொடுத்துவிட்டு இவ்வாறு செய்யலாமா?” என்று மனம் நொந்து கேட்டான்.
அதனைக் கேட்டு ஆசார்யர், “துரியோதனா! நீ இவ்வாறு கூறுதல் தகாது. தரும புத்திரர் தம்பி அர்ச்சுனனும் கண்ண பிரானும் யாராலும் வெல்ல முடியாத வர்கள். அவர்கள் முற்பிறவியில் நர நாரா யணர்கள். இருந்தாலும் இன்றைய தின மாலைக்குள் அர்ச்சுனனுக்கு நிகரான வீரன் ஒருவனை வீழ்த்துகின்றேன். மேலும்,எந்த ஓர் உபாயத்தைச் செய்தாவது போர்க் களத்தில் தருமபுத்திரரிடமிருந்து அர்ச்சுன னைப் பிரிக்க வேண்டும். அதற்கேற்றபடி வியூகத்தை அமைக்கப் போகின்றேன் பார்” என்று கூறினார்.
பதின்மூன்றாம் நாள் போர் தொடங்கியது. திரிகர்த்த ராஜர்கள் தலைவனாகிய சுசர்மா வீரர்களுடன் தனியே தென் திக்கிற் குச் சென்றான். நேற்றைய நாளைப் போலவே அச்சம்சப்தகர்களைக் கொல்லும் பொருட்டு அவர்களின் அழைப்பை ஏற்க மறுக்காது அர்ச்சுனன் தருமபுத்திரரை விட்டு நீங்கிச் சென்றான்.
அர்ச்சுனன் சென்று விட்டான் என்பதை அறிந்த துரோணர் யாராலும் உடைக்க முடியாத பதும வியூகத்தை அமைத்தார். அவ்வியூகத்தில் எல்லா அரசர்களும் தாமரை இதழ்கள் போலவும் அரசிளங் குமாரர்கள் தாதுக்கள் போலவும் நிறுத்தப் பட்டனர். இந்த வியூகத்தில் தாமரைப் பூவில் இருக்கும் காய் போன்ற இடத்தில் துரியோதனன் இருந்தான். அந்த வியூகத்தை அலங்கரித்த அனைவரும் செந்நிற ஆடையை உடுத்தியிருந்ததோடு செந்நிற மாலையையும் சூடியிருந்தனர். அதோடு செந்நிற அணிகலன்களையும் அணிந்திருந் தனர்.
துரியோதனன் சேனையின் நடுவே நின்றான். கர்ணன், துச்சாதனன், கிருபாச்சாரியர் போன்றோர் அவனைக் காத்து நின்றார்கள். பதும வியூகத்தின் நடுவில் துரோணர் நின்றார். மேருமலை போன்று ஜயத்ரதனனும் அங்கு இருந்தான். அவனுக்கு வலப்புறத்தில் அஸ்வத்தாமா வும், திருதராட்டிரர் பிள்ளைகள் முப்பது பேரும் இருந்தனர். அவன் இடப்பக்கத்தில் பூரி சிரவஸும் சல்லியனும் போருக்குத் தயாராக நின்றிருந்தனர்.
அர்ச்சுனன் சம்சப்தகர்களுடன் போரிடச் சென்றுவிட்டதனால் பாண்டவர்கள் பீமனை முன்னிட்டுக் கொண்டு போரிடத் தொடங்கினர். விராடன், அபிமன்யு, துருபதன் போன்ற பெரு வீரர்கள் துரோண ரிடம் போரிடும் பொருட்டு விரைந்து சென்றனர்.
அப்பொழுது அப்பாண்டவர்கள்மேல் துரோணர் அம்பு மழையைப் பொழிந்தார். பெருங்கோபத்துடன் தம்மை நோக்கி வருகின்ற துரோணரைத் தடுக்க வேண்டும் என்று தருமபுத்திரர் பலவாறு ஆலோ சித்தார். அதற்கு அளவற்ற ஆற்றல் உடைய அபிமன்யுவே தகுதியுள்ளவன் என்று முடிவு செய்தார். உடனே அவர், “மகனே! துரோணர் வகுத்துள்ள பதும வியூகத்தை உடைக்கும் வகையை நாங்கள் அறியோம். கண்ணபிரான், உன் தந்தை அர்ச்சுனன், கண்ணன் குமாரன் பிரத்யுமநன், நீ ஆகிய நால்வரே இதற்குத் தகுதி உடையவர்கள். மற்ற மூவரும் இங்கில்லை; எனவே விரைந்து சென்று அஸ்திரப் பிரயோகம் செய்து துரோணரின் பதும வியூகத்தை உடைப்பாயாக” என்று கூறினார்.
அபிமன்யுவின் சபதம்
அதற்கு அபிமன்யு, “பெரிய தந்தையே! துரோணரின் இந்தப் பதுமவியூகத்தை நான் உடைத்து உங்கள் விருப்பத்தை நிறை வேற்றுகின்றேன். ஆனால் இதனை உடைத்து உள்ளே செல்ல மட்டுமே என் தந்தை எனக்குக் கற்பித்துள்ளார். அதாவது அங்கு ஏதாவது ஆபத்து உண்டானால் அதனை விட்டு வெளியே வர எனக்குத் தெரியாது ” என்றான். அதற்குத் தரும புத்திரர், “அபிமன்யு! வியூகத்தை உடைத்து உள்ளே சென்று வழி உண்டு பண்ணிவிடு, நாங்கள் நீ செல்லும் வழியில் பின் தொடர்ந்து வருகின்றோம் ” என்றார். அதனைக் கேட்ட பீமன், “நானும், திட்டத் துய்மனும், சாத்யகியும், பாஞ்சாலர்களும், கேகயர்களும் உன்னைப் பின் தொடர்ந்து வந்து உள்ளே இருக்கின்றவர்களை அழித்து விடுவோம் ” என்றனர். இவற்றையெல் லாம் கேட்ட அபிமன்யு, “என் தந்தையும், என் மாமனும் மகிழ்வு கொள்ளுமாறு நான் வியூகத்தை உடைத்து அதனுள் புகுந்து, பகைவரை நாசம் செய்யப் போகின்றேன். அதனைச் செய்யாவிட்டால், அர்ச்சுனன், சுபத்திரை ஆகியவர்களின் மகன் அல்லேன்” என்று கூறிச் சபதம் செய்தான்.
தருமபுத்திரர் முதலாக உள்ள அங்குள்ளவரின் ஆசியைப் பெற்ற அபிமன்யு, தன் தேரைச் செலுத்தும்படி தேர்ப்பாகனைக் கேட்டுக் கொண்டான். அப்பொழுது தேர்ப்பாகன், “அரசே! பதுமவியூகத்தை உடைக்கக் கூடிய பெரும் பொறுப்பைத் உன் பெரிய தந்தை தருமபுத்திரர் உம்மிடம் ஒப்படைத்துள்ளார். இந்த வியூகத்தை நீங்கள் உடைக்க முயல வேண்டாம். மேலும் துரோணர் நல்ல அனுபவசாலி. அஸ்திரப் பயிற்சியில் வல்லவர். அவரளவு உமக்குப் பயிற்சி இல்லை. எனவே வியூகத்தை உடைக்க முற்பட வேண்டாம்” என்று கூறினான்.
அதனைக் கேட்டு அபிமன்யு நகைத்துக் கொண்டு, “தேர்ப்பாகரே! துரோணருக்கோ மற்றவருக்கோ நான் அஞ்சவில்லை. கண்ணபிரானை மாமாவாகவும், அர்ச் சுனரைத் தந்தையாகவும் கொண்டுள்ள எனக்குப் பயம் என்பது எதுவுமில்லை” என்று கூறினான். அதன் பின்னர் தேர்ப் பாகனே பலமுறை தடுத்தும் அபிமன்யு கேட்காமல் போகவே, தேர்ப்பாகன் தேரினைத் துரோணர் இருக்குமிடத்திற்குச் செலுத்தினான்.
பதும வியூகத்தைப் பிளந்த அபிமன்யு
அபிமன்யு தன்னுடன் போருக்கு வருவ தைக் கண்டு துரோணர் அவனை எதிர்க்கத் தொடங்கினார். பதும வியூகத்தின் முன் வரிசையில் நிற்கும் அத் துரோணரை, அபிமன்யு, சிங்கக்குட்டி ஒன்று பெரும் வலிமையுள்ள யானையை எதிர்ப்பது போல எதிர்க்கலானான். கௌரவர் வியூகத் தைக் கண்ணும் கருத்துமாய்ப் பாதுகாத்தும், அபிமன்யு அஞ்சாமல் அப்பதுமவியூகத் தைப் பிளந்து உள்ளே புகுந்திட்டான். கெளரவப்படை அஞ்சி நடுங்கியது; சிதறி ஓடியது.
வியூகத்தின் உள்ளே நுழைந்த அபிமன் யுவை நால்வகைப் படைகளும் சூழ்ந்து கொள்ளலாயின. பின்னர் அபிமன்யுவுடன் போரிடத் தொடங்கின. இருதிறத்தினர்க் கும் கடுமையான போர் தொடங்கியது. எண்ணிலாதவர் மாண்டனர். போர்க்களம் எங்கணும் கைகளும், கால்களும், தலையற்ற முண்டங்களும், தலைகளும் பரவிக் கிடந்தன. அபிமன்யு கௌரவரின் நால் வகைப் படைகளையும் அழிக்கத் தொடங்கினான். அப்பொழுது அழிந்து போன குதிரைகளும் யானைகளும் தேர்களும், வீரர்களும் ஏராளம், ஏராளம்.
கர்ணனின் கவசத்தைப் பிளத்தல்
இதனைக் கண்ட துரியோதனன் தானே நேரில் வந்து, அபிமன்யுவுடன் போரிடலானான். அதனைக் கண்டு துரோணர், “வீரர்களே! அபிமன்யு ஆற்றல்மிக்கவன். அனைவரும் ஒன்று சேர்ந்து துரியோதன னக் காப்பாற்றுங்கள்” என்றார். அவ னைக் வார்த்தையைக் கேட்டு அஸ்வத் ருடைய வா தாமா, கிருபாச்சாரியார், கர்ணன், கிருத வர்மா, சகுனி முதலானவர் ஒன்று கூடி அபிமன்யுவை எதிர்க்கலாயினர். அவன் மீது அம்புகளை மழையெனப் பொழிந் தனர். சிங்கம் ஒன்று போரிடுவதைப் போல அபிமன்யு கௌரவர்களுடன் கடுமையாகப் போரிட்டான். அப்பொழுது ஒரு கூர்மையான அம்பின் மூலம் கர்ணனின் கவசத்தைப் பிளந்தான். இதனால் தளர்ச்சி அடைந்த கர்ணன் அங்கிருந்து வெளியேறி னான்.
கர்ணனைத் தொடர்ந்து சல்லியன் வந்தான். அபிமன்யுவினால் உக்கிரமாகத் தாக்கப்பட்டுத் தேர்த்தட்டில் மயக்கத்தோடு அமர்ந்து விட்டான். அவனுக்கு உதவியாக வந்த அவன் தம்பியரைக் கொன்றான். ஏனைய வீரர்களோடு அச்சமின்றி சளைக் காமல் போரிட்டான். அபிமன்யுவின் வீரமிக்க செயல்களைக் கண்டு துரோணரே மெச்சினார். அவன் போர் செய்கின்ற அழகை அவர் பார்த்துக் கொண்டிருந்தார்.
இதனைப் பார்த்துத் துரியோதனன் கோபத்துடன், “எல்லோருக்கும் குருவாக இருப்பவர் துரோணர். எனவே தன் மாணவனான அபிமன்யுவைக் கொல்ல விரும்பாது இருக்கின்றார். அவர் நினைத் தால் எப்பொழுதோ அவனைக் கொன்றி ருக்கலாம். அதனால் தான் அந்த அபிமன்யு. தன்னைச் சிறந்த வீரனாக எண்ணிச் செருக்குடன் இருக்கின்றான். அவனை விரைவில் கொல்லுங்கள்” என்றான்.
துரியோதனனுடைய கட்டளையை ஏற்று, கெளரவ வீரர்கள் அபிமன்யுவைச் சூழ்ந்து கொண்டனர், துச்சாதனன் சிங்க நாதம் செய்து அபிமன்யுவை எதிர்க்க எதிர் லானான் . இருவரும் உக்கிரமாகவும் ஆக்ரோஷமாகவும் கடும் போர் புரிந்தனர். இருபத்தேழு பாணங்களை ஏலி துச்சாதனனைக் காயப்படுத்தினான். அதனால் அவன் இரத்தம் சொட்டச் சொட்ட படுகாயத் துடன் விளங்கினான். அப்பொழுது அபிமன்யு, ”கர்வம், குரூரம், அதர்மம், ஆணவம் போன்ற தீய குணங்கள் நிறைந்த உனக்குச் சரியான பாடம் புகட்ட இருக் கின்றேன். என் முன் நிற்காது உயிரைக் பிடித்துக் பிடித்துக் கொண்டு ஓடிவிடு, என் முன் நிற்காதே” என்றான். ஆனால் அவன் அங்கிருந்து நகரவில்லை. அதனால் அபிமன்யு இருபத்து நான்கு பாணங்களைக் கொண்டு அவனைக் குறிபார்த்து அடித் தான். அதனால் அவன் மயக்கம் போட்டு வீழ்ந்தான். தேர்ப்பாகன் உடனே விரைந்து அவனை அங்கிருந்து அப்புறப்படுத்தி, தேரில் வைத்துக் கொண்டு அப்பால் சென்றான்.அதனைக் கண்டு பாண்டவ வீரர்கள் பெருத்த ஆரவாரம் செய்தார்கள். துச்சாதனனைப் பார்த்துக் கேலி செய்தனர்.
தேர்ப்பாகனை இழந்த கர்ணன்
துச்சாதனனின் நிலையைக் கண்ட கர்ணன் நேரே அபிமன்யுவிடம் வந்து அவனுடன் போரிடலானான் அபிமன்யு வின் ஒரு தனி வில்லுக்கு ஆற்றாது கர்ணன் தேர்ப்பாகனை இழந்தான். அதனால் அவனும் போர்க்களத்தை விட்டு விட்டு ஓடினான். இதனைக் கண்டு கௌரவர்கள் மனம் நொந்தனர். அங்கே அப்பொழுது அபிமன் யுவின் வில்லாற்றலுக்கு ஈடுகொடுக்க முடியாது கர்ணன், கிருபாச்சாரியார்,துச்சா தனன், துரியோதனன் முதலான எல்லாரும் ஓடலானார்கள். அதனால் பாண்டவர் சேனை ஊக்கத்தோடும் மகிழ்ச்சியோடும் கெளரவர் சேனையோடு போரிட்டு அழிக்க லாயிற்று.
ஆனால் அப்பொழுது திருதராட்டிரர் மருமகனும், துரியோதனன் தங்கை துச்சளையின் கணவனும், சிந்துநாட்டு வேந்தனும், பன்றிக் கொடியுடையோனு மாகிய ஜயத்ரதன் மட்டும் பாண்டவர் களுடன், சிகண்டி, எடி, திட்டத்துய்மன், துரு பதன், விராடன் போன்றவர்களுடன் கடும் போரிட்டான். சிவபெருமானிடம் தான் பெற்ற வரத்தின் மூலம் நான்கு பாண்டவர் களையும் அப்பொழுது தடுத்து நிறுத்த லானான். (கொன்றை மாலையை வழியில் போட்டு, அதன் மூலம் பீமன் முதலி யோரை அபிமன்யுவிடம் நெருங்க வொட்டாது ஜயத்ரதன் தடுத்துவிட்டான் என்பர் வில்லிபுத்தூரார்.)
தனிமைப்படுத்தப்பட்ட அபிமன்யு
அப்பொழுது தர்மபுத்திரர் ஓர் அம்பு கொண்டு ஜயத்ரதன் வில்லை அறுத்தார். அதனால் கோபங்கொண்ட அந்த ஜயத்ரதன் பீமனோடு போரிட்டு அவனுடைய வில்லையும் கொடியையும் அறுத்தான். தருமபுத்திரரையும் தாக்கினான். பீமன் உடனே தன் தேரில் இருந்து சாத்யகியின் தேரில் ஏறிக்கொண்டு சமாளித்தான்.
பத்மவியூகத்தில் அபிமன்யு நுழைந்து விட்டான், அவனைக் காக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் மீண்டும் மீண்டும் தருமபுத்திரர், பீமன் முதலானோர் அவனை நெருங்கிச் சென்றனர். சிவபெருமானிடம் தான் முன்னர் பெற்ற வரத்தைக் கொண்டு ஜயத்ரதன் அவர்களை வெற்றிகரமாகத் தடுத்து நிறுத்திவிட்டான். ஒருவரும் அபிமன்யுவை நெருங்க முடியவில்லை. அதனால் அபிமன்யு தனிமைப்படுத்தப் பட்டான். கெளரவர்களின் எண்ணம் பலித்தது. கோபங்கொண்ட மதயானை போன்ற அந்த அபிமன்யு தான் ஒருவனா கவே இருந்து கெளரவ சேனையை ஒரு கலக்குக் கலக்கினான். பல வீரர்களைக் கொன்றான். போர்க்களத்தில் இரத்த ஆறு ஓடியது; கைகளும், கால்களும், தலை களும், முண்டங்களும், பிணக்குவியல் களும் எங்கணும் சிதறிக் கிடந்தன. நாய் களும், நரிகளும் போர்க்களத்தை மகிழ்ச்சி யோடு வேண்டியன தின்று வலம் வந்தன. சல்லியன் மகன் ருக்மரதன் என்பவன் அபிமன்யுவுடன் போரிட முற்பட அபிமன்யுவும் அவனுடன் போரிட்டு அவனைக் கொன்றான்.
தலையை இழந்த துரியோதனன் மகன்
அப்பொழுது துரியோதனன் மகனாகிய இலட்சுமணன் ஒரு மத யானையை மற்றொரு மதயானை மோதிப் போரிடுவது போன்று அபிமன்யுவிடம் மோதிப் போரிடலானான். இதனால் தடியால் அடிக்கப்பட்ட பாம்பு சீறி எழுவது போன்று அபிமன்யு சீறியெழுந்து, “இலக்குமணா! உலகத்தைக் கடைசியாக நன்றாகப் பார்த்துக் கொள்!” என்று கூறி அவன் மேல் அம்பொன்றை விட்டான். அது அவனுடைய தலையைக் கொய்து கொண்டு போனது. துரியோதனன் மகனான அவன். அத்துரியோதனன் செய்த பாவவினைகளால் வேரற்ற மரம் போல விழுந்து உயிர்விட்டான்.
இலட்சுமண குமாரன் கொல்லப் பட்டான் என்பதைக் கேட்ட கெளரவ வீரர்கள், துடிதுடித்துப் போயினர். துரியோ தனனோ தன் அரிய மூத்த புதல்வனை இழந்து வாய்விட்டு அலறினான். ”உடனே அபிமன்யுவைக் கொல்லுங்கள்” என்று ஆத்திரத்தோடு கூக்குரலிட்டான். ‘அபிமன் யுவைக் கொல்லுங்கள்’ என்று துரியோதன னிடமிருந்து ஆணை எழுந்தவுடன் துரோணர்,கிருபாசாரியார், கர்ணன், கிருதவர்மா, போன்றோர் ஒன்று திரண்டு வந்து அபிமன்யுவைச் சூழ்ந்து கொண்டு போரிடத் தொடங்கினர். ஆக்ரோஷமான போர் நடைபெற்றது. கெளரவ வீரர்கள் சிதறி ஓடினர்.
கர்ணன் மட்டும் அபிமன்யுவை விடா மல் தொடர்ந்து போரிட்டுக் கொண்டிருந் தான். கர்ணனின் உடலில் ஏராளமான இரத்தக் காயங்கள். இரத்தம் சொட்டச் சொட்டச் சோர்வுடன் அவன் போரிடுதல் கண்டு,துச்சாதனனின் மகன் அபிமன்யு விடம் போரிடலானான். ஆத்திரம் கொண்ட அபிமன்யு அவனைக் கடுமை யாகத் தாக்கினான். “அற்ப குணமுடைய உன்தந்தை என் முன் நிற்க முடியாது ஓடிப் போய்விட்டான். ஆனால் நீ என்னிடம் தப்பிக்க முடியாது து என்று கோபத்துடன் கூறிச் சரமாரியாக அம்புகளை ஏவினான். அவற்றைத் தாங்கமாட்டாது. அவள் போர்க்களத்தினின்று ஓடிவிட்டான்.
அதன்பின் அபிமன்யுவை எதிர்க்கும் பொருட்டுக் காந்தார நாட்டு மன்னன் சகுனி வந்தான். அவன் அபிமன்யு மேல் மூன்று பாணங்களைச் செலுத்தினான். இருந்தும் பலனில்லை. அப்பொழுது கர்ணன், துரோணரைப் பார்த்து, “போரில் இவள் எல்லோரையும் கொன்றுவிடுவான் போல் உள்ளது. இவன் விடும் கொடூரமான அம்புகள் என் இதயத்தைப் பிளக்கின்றன. அதனால் நாம் அனைவரும் ஒன்று கூடி விரைந்து இவனைக் கொல்ல வேண்டும். அதற்குரிய வழியைக் கூறுங்கள்” என்றான்.
அபிமன்யுவை வீழ்த்திய துச்சாதனன் மகன்
அதனைக் கேட்டுத் துரோணர் மெல்லச் சிரித்து. “அபிமன்யு மிக இளையோன்; உடைக்க முடியாத கவசங்களை அணிந் திருக்கின்றான். இவன் தந்தைக்குக் கவசம் பூட்டும் வித்தையை நான் சொல்லிக் கொடுத்தேன். அதனை இவன் தந்தை இவனுக்குச் சொல்லிக் கொடுத்துள்ளான் போலத் தெரிகின்றது. அதனால் இவன் கவசம் உடைக்க முடியாத உறுதியானது. எனவே இவனை நேருக்கு நேர் நின்று வெற்றி காண்பது என்பது இந்த ஜென் மத்தில் இயலாது. அதற்குக் குறி தவறாத பாணங்கள் மூலம் வில்லையும், தேரையும், தேர்ப்பாகனையும், குதிரைகளையும், அறுத்தெறிந்து அழித்து விடவேண்டும். நிராயுதபாணியாய் நிற்கும் அவனை அப்பொழுது பின்புறமிருந்து தாக்க வேண்டும். தருமப் போருக்கு மாறானது என்றாலும் அதைத்தான் செய்ய வேண்டும். அப்பொழுது ஒருவேளை வெற்றி பெற லாம். எதிர் நின்று அவனை எக்காலத்தும் வெற்றி பெற முடியாது” என்று கூறினார்.
துரோணர், கிருபாசாரியார், கர்ணன், அஸ்வத்தாமன், பிருஹத்பாலன், கிருதவர்மன் ஆகிய ஆறு மகாரதர்களும் அபிமன் யுவைச் சூழ்ந்து கொண்டு, யுத்த தருமங் களையெல்லாம் காலில் போட்டு மிதித்துக் கொண்டு அதைப்பற்றிக் கவலைப்படாமல் வெட்கமுமின்றி ஒரே சமயத்தில் பின்புறத் தில் இருந்து தாக்கலாயினர். துரோணரின் யோசனையை அப்படியே ஏற்றுக் கொண்ட கர்ணன்தான் பின்புறம் நின்று குறிதவறாது அம்பு எய்து முதலில் அவனுடைய வில்லை அறுத்தான். அடுத்து யுத்த தருமங்களை மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக் கின்ற ஆசார்யர் துரோணர் பின்புறம் நின்று கொண்டு அபிமன்யுவின் தேர்க்குதிரை களைக் கொன்றார். பாண்டவர்களுக்கு முதலில் வந்த ஆசார்யர் கிருபாசாரியரோ துரோணரைவிட ஒரு படி மேலே சென்று தேர்ப்பாகனைக் கொன்றார். அதனால் அபிமன்யு நிராயுதபாணியாய் போர்க் களத்தில் வில்லம்பு இன்றித் திகைத்து நின்றான். உடனே அபிமன்யு தனக்குரிய கத்தியையும் கேடயத்தையும் கையில் எடுத்துக் கொண்டு சிங்கம் போல அஞ்சாது நின்றான். கடுமையாக ஆக்ரோஷத்துடன் போரிட்டான். அவன் அப்போது காட்டிய வீரம் யுத்தக்களத்திலுள்ள வீரர்களுக் கெல்லாம் மூக்கின்மேல் விரலினை வைக்கும்படியான பிரமிப்பைத் தந்தது. தனி ஒருவனாய், நிராயுதபாணியாய் நின்ற தன்னை ஒன்று கூடி தன்னோடு போரிட்ட அந்த ஆறு மகாரதர்களிடமும் அஞ்சாது தாக்கிப் போரிட்டான். அதிலும் வாளெடுத்துதான் அவனால் தாக்க முடிந்தது. வானத்தில் பறக்கின்ற கருடனைப் போலப் பறந்து பறந்து அவர் களைத் தாக்கினான். சிறிது நேரம் கழித்து ஆசார்யர் துரோணர் ஒரு பாணத் தினால் அபிமன்யுவின் கையிலிருந்த ஒரே ஒரே ஆயுத மான கத்தியையும் வீழ்த்தினார். கர்ணனோ தன் பங்குக்குக் கூர்மையான அம்புகளைச் செலுத்திக் கேடயத்தை அழித்தான்.
அப்பொழுதும் அபிமன்யு அஞ்சவில்லை கீழே விழுந்து கிடந்த தேர்ச் சக்கரத்தை எடுத்துக் கொண்டு, சுதர்சனத் திருச்சக்கரம் ஏந்திய திருமாலினைக் போல நின்றான். அத்தேர்ச்சக்கரத்தைச் சுழற்றிச் சுழற்றிப் பகைவர்களைத் தாக்கினான். தேர்ச் சக்கரத்திலிருந்த புழுதியெல்லாம் அவன் மேல் படிந்தது. தந்தை அர்ச்சுன னைப் போலப் பயங்கரமாகப் போர் நடத்தினான். கெளாவ சேனை முழுவதும் அவனைத் தாக்கி அவன் கையிலிருந்த தேர்ச்சக்கரத்தைத் துண்டு துண்டாக்கியது. ஓடிப் போன துச்சாதனன் புத்திரன் மீண்டும் கதையை எடுத்துக் கொண்டு அபிமன்யு வைத் தாக்கினான். அபிமன்யுவும் கதா யுதத்தை எடுத்துக்கொண்டு அவனுடன் உக்கிரமாகப் போரிட்டான். கதாயுதத்தால் ஒருவரையொருவர் அடித்துக் கொண்டார் கள். இருவரும் கீழே விழுந்தார்கள். அவ்வாறு விழுந்ததில் முதலில் துச்சாதனன் குமாரன் எழுந்தான். அபிமன்யு எழுந்து கொண்டிருக்கும் நேரத்தில், துச்சாதனன் மகன் தன் கதையால் அவன் தலையில் ஓங்கி அடித்தான். முன்னர் பலரால் காயப் படுத்தப்பட்டிருந்த அந்த வீர அபிமன்யு இந்த அடியைத் தாங்க முடியாது கீழே விழுந்தான். விழுந்த அவனை நிலமகள் தாங்கினாள். அவன் உயிரும் பிரிந்தது. தாமரை ஓடையை யானை கலக்குவது போன்று பெரும் கெளரவ சேனையைத் தான் ஒருவனாகவே இருந்து அஞ்சாமல் கலக்கி நிலைகுலையச் செய்த சுபத்திரை யின் செல்வனை – அர்ச்சுனனின் செல்வத் திருமகனை – உத்தரையின் கணவனை -குருகுல வம்சத்துக்கு என்று ‘பரிட்சித்து ‘ என்ற வாரிசினைத் தந்தவனை யுத்த தர்மங்களை எல்லாம் மீறி கெளரவர்கள் கொன் றொழித்தார்கள்.
“புரந்தார்கண் நீர் மல்கச் சாகிற்பின் சாக்காடு இரந்துகோள் தக்க துடைத்து”
என்பதற்கேற்பத் தன்னைப் பெற்றவனின் கண்களில் கண்ணீர் ஆறாகப் பெருக அந்த வீரத்திரு மகன் வீரமரணம் அடைந்தான்.
பூமியில் விழுந்து கிடக்கின்ற அபிமன்யுவைக் கண்டு கௌரவர்கள் அதிக மகிழ்ச்சியுற்றனர். ஆரவாரம் செய்தனர். ஆனால் பாண்டவர் சேனைகளோடு தரும நெறி உணர்ந்தவர்களோ கண்ணீர்விட்டு அழுதனர். “துரியோதனனைச் சேர்ந்தவர்களான துரோணர்,கர்ணன், அஸ்வத்தாமன், கிருபர் முதலான ஆறு மகாரதர்கள் ஒன்று சேர்ந்து யுத்தத் தர்மத்தை மீறி அக்கிரமாக, பின்புறம் நின்று கொன்றுவிட்டார் களே” என்று அத்தர்ம தேவதை அங்க மெலாம் வாயாக இருந்து அலறினாள்.
யுத்ஸீயின் கோபம்
“யுத்த நெறிப்படி போர் நடத்தாமல் இளஞ்சிங்கம் அபிமன்யுவை அநியாய மாகக் கொன்றுவிட்டீர்களே” என்று கார் உள்ளளவும் கடல் உள்ளளவும் பழி தூற்றும்படியாக நடந்து கொண்டீர்களே!” என்று அந்தத் துரோணர் முதலான ஆறு மகாரதர்களை நோக்கிச் சபிப்பன போல வானத்துப் பறவைகள் கூக்குரல் இட்டன. “இது தருமம் அன்று; அதர்ம மே” என்று வானம் இடி இடித்தது. சுழற் காற்று வீசியது. இரத்த மழை பொழிந்தது.
இவற்றையெல்லாம் கண்டு கொள்ளாது கெளரவர்கள் மகிழ்ச்சி கொண்டிருக்கின்ற நேரத்தில் திருதராட்டிரருக்குப் பணிப் பெண் மூலமாகப் பிறந்த யுயுத்ஸீ என்ப வன் மிகுந்த கோபங்கொண்டு, “யுத்த தருமத்தை அறியாத க்ஷத்திரியர்களே! நெருங்கி நிற்கும் பேரபாயத்தை அறியா மல் வீணாக ஆரவாரம் செய்து மகிழ்ந்து கொண்டிருக்கின்றவர்களே! இச்செயல் தகாது, தகாது. வெட்கப்படுவதற்குப் பதிலாகக் கும்மாளமாச் செய்கிறீர்கள்! இந்தச் சந்தோஷம் இன்னும் இரண்டொரு நாளைக்குத்தான் எல்லாம் பூண்டோடு அழியப் போகின்றீர்கள்” என்று கூறி ஆயுதங்களை எறிந்துவிட்டுப் போரினின்று விலகிப் போனான்.
அன்றைய போரில் கிருஷ்ணார்ச்சுனர் களுக்கு ஒப்பான அபிமன்யு பதினாயிரம் வீரர்களையும் துரியோதனன் மகன் இலட்சுமண குமாரனையும் கோசல நாட்டு மன்னனையும், மற்றும் பலரையும் கொன் றொழித்து வீரசொர்க்கம் அடைந்தான்.
அந்தி சாய்ந்தது. வீரர்கள் தத்தம் பாசறைக்குச் செல்லும்போது பூமியில் பொலிவிழந்து விழுந்துகிடக்கும் அபி மன்யுவைப் பார்த்துக் கொண்டே சென்ற னர். அபிமன்யு மறைவுடன் பதின்மூன்றாம் நாள் யுத்தம் முடிவடைந்தது.
அர்ச்சுனனின் சபதம்
அபிமன்யு வீர சொர்க்கம் அடைந்தான் என்ற செய்தி காட்டுத் தீ போல எங்கணும் பரவியது. போர் வீரர்கள் அனைவரும் தருமபுத்திரரைச் சூழ்ந்து கொண்டு கண்ணீர் விட்டு அழுதனர். அந்நிலையில் தருமபுத்திரரின் துயரம் சொல்லொணாதது. அப்பொழுது அவர், “மாபெரும் வீரர் களான துரோணர், சல்லியன், கிருபா சாரியார் போன்றவர்களையெல்லாம் எதிர்த்து நின்று எங்கள் இளஞ்சிங்கம் வீர அபிமன்யு வீரமரணம் அடைந்துள்ளான். ஒருவராலும் உடைக்கமுடியாத பத்ம வியூகத்தை உடைத்துத் தள்ளினான். துச்சா தனனை, கர்ணனைப் புறமுதுகிட்டோடச் செய்த அவன் அந்தக் கீழ்மகன் துச்சாதனன் மகனாலேயே கொல்லப்பட்டுவிட்டானே! நான் இனி, அர்ச்சுனன், கண்ணபிரான் ஆகியோர் முகத்தில் எவ்வாறு விழிப் பேன்? பேராசையுள்ள நான் இளைஞனான அவனை யாராலும் உடைக்க முடியாத பதுமவியூகத்தை உடைக்க அனுப்பி விட்டேனே!அவனே மாண்ட பிறகு இனி, எங்களுக்கு இந்த உலகில் என்ன வேலை உள்ளது?” என்று கூறிக்கதறினார்.
அப்பொழுது வேதவியாசர் அவ்விடம் எழுந்தருளினார். மிகுந்த துக்கத்துடன் தருமபுத்திரர் அவரை வணங்கி நின்றார். எழுந்து தக்க ஆசனம் வழங்கினார். தன் னுடைய துயர நிலையை முழுவதையும் அவரிடம் எடுத்துக் கூறி அழுதார். “ஆசார்யர் துரோணர் முதலான எல்லோ ரும் ஒன்று சேர்ந்து அதர்மமான முறையில் எங்கள் வீர அபிமன்யுவைத் தாக்கிக் கொன்றுவிட்டார்களே! அதுமட்டுமா செய்தார்கள்! அந்தத் திருமகனைக் காக்கச் சென்ற எங்களை, ஜயத்திரதனைக் கொண்டு தடுத்து விட்டார்களே! வீணாக அவன் மடிந்து விட்டானே! இந்தச் சோகம் எங்களால் தாங்க முடியாததாகும்.
எவ்வளவு முயன்று மளத்தைத் தேற்றிப் பார்த்தும் எங்களால் முடியவில்லை. அவனைப் பெற்ற தந்தை அர்ச்சுனன் இந்தத் துயரச்செய்தி கேட்டால் எந்நிலை யுறுவானோ? இன்னும் பல்லாண்டு வாழ வேண்டிய இளைஞனை எந்த விதக் கருணையும் இல்லாது இயமன் கொண்டு சென்றுவிட்டானே!” எனப் பலவாறு வருந்திக் கூறினார்.
தர்மரைத் தேற்றிய வேத வியாசர்
அவருடைய துயரநிலையை அறிந்த வேத வியாசர், “யுதிஷ்டிரா! நீ அறிவுடைய வன். எல்லாச் சாஸ்திரங்களிலும் வல்ல வன். விதியை யாரால் மீற முடியும்? “ஊழிற் பெருவலி யாவுள?” என்பதனை எண்ணிப்பார். அபிமன்யுவின் இறப்பை நினைக்க, நினைக்க துக்கந்தான் மேலிடும். எனவே அதனை மறக்க முயற்சி செய். உயிருடன் இருப்பவர்களை நினை” என்றிவ்வாறு கூறி அதன் பொருட்டுப் பல கதைகளையும் கூறித் தேற்றினார். பின்னர் தருமபுத்திரரிடம் விடைபெற்றுச் சென்றார்.
சம்சப்தகர்களையெல்லாம் அழித்து விட்டு அர்ச்சுனன் மாலைப் பொழுதில் திரும்பிக் கொண்டிருந்தான். வழியில் துர் நிமித்தங்கள் தோன்றின. அவற்றை அர்ச் சுனன் கண்டு மனம் துணுக்குற்றான். பின் அவன், “கண்ணா! என் மனம் ஏனோ தெரியவில்லை அஞ்சுகின்றது! நடக்கக் கூடாத ஏதோ ஒன்று நடந்துள்ளதுபோல உள்ளதே!” என்று மனத்தில் எழுந்த ஓர் அச்சவுணர்வோடு கூறினான். எல்லாம் அறிந்த கண்ணபிரான் ஒன்றும் கூறாது தேர் ஒட்டிக் கொண்டு வந்தார்.
பாசறை அருகில் அர்ச்சுனன் தேர் வந்து நின்றது. தேரினின்று இறங்கிய அவன் பாசறை சூனியமாக இருப்பதைக் கண்டான்; திடுக்கிட்டான். பின்னர் இருவரும் பாசறைக்குள் நுழைந்தனர். அவர்களைப் பார்த்துவிட்டு அங்கிருந்த அனைவரும் ஒன்றும் பேசாது, தலை குனிந்து நின்றனர். அவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. தன் சகோதரர்களெல்லாம் பெருந்துக்கத்தோடு இருப்பதைக் கண்டான். எல்லோரும் அங்கிருக்கக் கண்ட அவன் அபிமன்யுவை மட்டும் காணாது தவித்தான். “அபிமன்யு எங்கே! அவனுக்கு ஏதாவது ஆபத்தா? வழியில் நன்னிமித்தம் தோன்றவில்லை. துரோணர் லும் உடைக்க முடியாத யாராலும் வேறு பதும வியூகத்தை அமைத்துவிட்டார் என்று கேள்விப் பட்டேன். அந்த வியூகத்தை பிளக்கத்தான் அவனுக்குத் தெரியும், வெளியே வரத் தெரியாது. அதனை நான் அவனுக்குக் கற்றுக் கொடுக்கவில்லை. அவன் எங்கே? உண்மையைச் சொல் லுங்கள்” என்று ஆத்திரத்துடனும், ஆர்வத் துடனும் கேட்டான். அப்பொழுதும் யாரும் வாய்திறக்கவே இல்லை.
கண்ணபிரான் ஆறுதல்
கண்ணபிரான் அர்ச்சுனன் தாடையில் கைவைத்து, “அர்ச்சுனா! வீரர்களின் வாழ்வு அவர்களின் அஸ்திரப் பிரயோகத்தில்தான் இருக்கின்றது. வீரமுடைய செம்மல்களுக்கு வீர சொர்க்கம் நிச்சயம். தங்கமகன் அபிமன்யு வீர மரணம் அடைந்துள்ளான். நீர்க்குமிழி போன்றது வாழ்க்கை என்பது அவனளவு நிஜமாகிவிட்டது. இது குறித்து வருந்தாதே. மனத்தைத் தேற்றிக் கொள். கவலைகளைக் குறைத்துக் கொள். அது மட்டுமன்று உன் சகோதரர்களை நீதான் தேற்றவேண்டும்”என்று ஆறுதல் கூறி னார்.
தன் மகன் – அன்பு மகன் – வீரத் திருமகன் – வீர மரணம் அடைந்து விட்டான் என்பதைக் கேட்டவுடன் அர்ச்சுனன் மயங்கி வீழ்ந்தான். பின்னர் கண்ணபிரான் மெல்ல அவனுக்கு மூர்ச்சை வரும்படி செய்தார். எழுந்த அவன் பெருந்துயரக் கடலில் மூழ்கினான். வாய்விட்டுப் புலம்பலானான். “வாய்விட்டு அழுதால் நோய் விட்டுப் போகும்” என்பார்கள். பெருந் துக்கம் நேர்ந்த காலத்து வாய்விட்டு அழுதால்தான் அத்துயரம் குறையும். அந்நிலையில் அர்ச்சுனனும் வாய்விட்டுப் புலம்பலானான். இந்தப் புலம்பலை, கல் மனத்தையும் கரைக்கக்கூடிய வகையில் சந்தப் புலவர் வில்லிபுத்தூரார் உருக்கமான நிலையில் எட்டுப் பாடியுள்ளார். அவை : பாடல்களைப்
1) போரினில் துணைவ ரோடும் புயங்ககே தனனை வென்று பார் எனக்கு அளித்தி நீயே என்றுளம் பரிவு கூர்ந்தேன் நேர் உனக்கு ஒருவர் இல்லாய் நீகளம் பட்டாய் ஆகில் ஆர்இனிச் செகுக்க வல்லார் ஐவருக்கு உரிய கோவே.
2) சக்கரம் பிளந்த வாறும் தரியலர் உடைந்த வாறும் துக்கர மான கொன்றைத் தொடையலால் வளைத்த வாறும் மெய்க்காந் துணிந்த வாறும் மீண்டு உருத்து அடர்த்த வாறும் உக்கர முடன்என் முன்னே ஓடிவந்து உரைசெய்யாயோ?
3) பன்கை அரசன் பெற்ற பாவைமா மதலை தன்னை முன்னுற முனையில் தோற்றேன் மூர்க்கனேன் முடியா துண்டோ? உன்னையும் இன்று தோற்றேன் உன்னுடன் தொடர்ந்து வாராது இன்னமும் இருந்தது ஐயா! என்னுயிர்க்கு இறுதி உண்டோ?
4) கதிரவன் உதிக்கும் முன்னே கண்துயில் உணர்த்தி என்னை அதிர் அமர்க்கோலம் கொள்வான் அறிவுறுத்து உரைக்க வல்லாய் முதிர் அமர் முருக்கி மீண்டேன் இத்தனை போது முன்போல் எதிர்வரக் காண்கிலேன் இங்கு இல்லையோ என் செய்தாயோ?
5) தந்திரம் யாவும் இன்றித் தனித்து நீ தானே போர் செய்து அந்தரம் அமையும் என்றுஇவ் அகலிடம் துறந்த ஐயா! மைந்துடன் நம்மைக் காண மகன்மகன் வருகின்றான் என்று இந்திரன் ஏவ உன்னை இமையவர் எதிர்கொண்டாரோ?
6) தேர் அழிந்து எடுத்த வில்லும் செங்கதிர் வாளும் இன்றி ஓர் உதவியும் பெறாமல் ஒழிந்துயிர் அழிந்த மைந்தா! போர் அமர் உடற்றி நீ அப்பொன்னகர் அடைந்த போதுஉன் பேர் அமர் ஆண்மை கேட்டுப் பிதாமகன் என்சொன் னானோ?
7) மற்புயக் குன்றில் ஒன்று வாளுடன் வீழப் பின்னும் பொற்புறப் பொருத நீஅப் பொன்னுலகு அடைந்த காலை அற்புதப் படைகள் வல்லாய்! அபிமனே! அமரர் ஊரும் கற்பகக் காவும் வானில் கங்கையும் காட்டி னாரோ?
8) வளைத்தவில் நிமிரா வண்ணம் வாளியால் மாவும் தேரும் துளைத்துமுன் காலாள் ஆகத்துரோணனைத் துரந்த வீரா! திளைத்தவெஞ் சமரில் நொந்து தனஞ்சயன் சிறுவன் மேனி இளைத்ததுஎன்று இந்தி ராணி இன்னமுது ஊட்டி னாளோ.
(இப்பாடல்கள் எட்டும் அவலச்சுவையின் உச்சத்துக்கு இட்டுச் செல்லு தலைக்காணலாம்.)
“ஆண்டாண்டு அழுதாலும் மாண்டார் வருவாரே” என்றபடி அர்ச்சுனன் மனத்தை ஒருவாறு தேற்றிக் கொண்டு, ஆனாலும் கோபத்தைவிடாமல், தன் சகோதரர் களுடன் அங்கிருப்பவர்களைப் பார்த்து, ”என் ஆருயிர்ச் செல்வனை, தர்மமற்ற முறையில் கொன்றவனை நான் நிச்சயம் கொல்வேன். நான் இங்கு இருந்திருந்தால் நிச்சயம் காப்பாற்றி இருப்பேன். உங்களை நம்பி என் மகனை விட்டுச் சென்றதைக் குறித்து என்னை நானே நொந்து கொள் கிறேன். அவனைக் காக்க முடியாத உங்க ளுக்கு கவசங்கள் ஏன்? ஆயுதங்கள் ஏன்? தேர் ஏன்? தேர்க் குதிரைகள் ஏன்? தேர்ச் சாரதி ஏன்?” என்று கோபமாகக் கேட்டான். மீண்டும் புத்திர சோகத்தால் கண்ணீர் சொரிந்தான். எண்ணி எண்ணி ஆறாத்துயருற்றான். ஆத்திரமும் துயரமும் கொண்ட அர்ச்சுனன், “இந்தத் தகாத செயலைச் செய்தவன் யார்? அவன் எப்படி பகைவர் நடுவில் அகப்பட்டுக் கொண் டான்? சொல்லுங்கள்” என்று கேட்டான்.
ஜயத்ரதனைக் கொல்ல சபதம்
அப்பொழுது தருமபுத்திரர், “அர்ச்சுனா! நம்மை விதி பிடித்தாட்டுகின்றது. அதுதான் என்னால் இப்பொழுது சொல்ல முடியும். என்னை உயிரோடு பிடிக்க வேண்டும் என்று கடந்த இரண்டு நாட்களாக ஆசார்யர் துரோணர் முயன்று வருகின்றார். அதற் காகவே யாராலும் உடைக்க முடியாத பதும் வியூகத்தை வகுத்தார். அந்தப் பத்ம வியூகத்தை உடைக்கும் வழி எங்களுக்குத் தெரியாது. அதனைப் பிளக்கத் தெரியும் என்றதனால் பாவியாகிய நான்தான் நம் வீரத் திருமகனை அனுப்பினேன். அந்த வீரச் சிறுவன் உடைக்க முடியாத பத்ம வியூகத்தை உடைத்துவிட்டான். அவனைப் பின் பற்றிச் செல்ல நாங்கள் பெருமுயற்சி செய்தோம். ஆனால் ஜயத்ரதன் எங்களை உள்ளே செல்ல முடியாதவாறு தடுத்திட் டான். பிறகு கிருபாசாரியார்,ஆசார்யர் துரோணர், கர்ணன், அஸ்வத்தாமா, கிருத வர்மா, பிருகத்பலன் ஆகிய ஆறு மகா ரதர் களும் ஒன்று சேர்ந்து அவனைத் தாக்கினர். அதன் மூலம் யுத்த தர்மத்தையே மீறினர். நம் மகனும் அஞ்சவில்லை. ஆக்ரோஷத் துடனும், உக்கிரமாகவும் போரிட்டான். பின்னின்று அவனுடைய தேரையும், கவசத்தையும் அழித்தனர். பின்னர் அத்திரு மகன் வில்லையும் இழந்தான். அதன்பின் வாளினால் போரிட்டான். அடுத்துத் தேர்ச் சக்கரத்தையே சக்கரமாகக் கொண்டு போரிட்டான். அந்த நேரத்தில் துச்சாதனன் மகன் உள்ளே புகுந்து கதாயுதப் போர் நடத்தினான். இருவரும் சோர் வடைந்து வீழ்ந்தனர். முன்னே எழுந்த துச்சாதனன் மகன் தன் கதையால் எழுந்திருக்க முயன்ற அபிமன்யுவின் தலையில் பலமாக அடித்துக் கொன்றான். உன் அரிய திருமகன் வீர மரணம் அடைந்துவிட்டான் ஐயா! இனி என் செய்வேன் ஏழையேன்!
தன் வீரத்தாலும், புன்முறுவலாலும் அனைவரையும் மகிழ்வித்துக் கொண்டிருந்த அந்தச் செல்வத் திருமகன் இன்று இல்லையாகிவிட்டான். எங்களை அந்த நயவஞ்சகன் ஜயத்ரதன் தடுத்திராவிட்டால் நாங்கள் அபிமன்யுவை நிச்சயம் காப்பாற்றி இருப்போம்” என்று சொல்லிச் சொல்லிக் கதறினார். கண்ணீர் விட்டு அழுதார். அவரைப் பார்த்து அங்கிருந்தவர்களும் அழலாயினர்.
அர்ச்சுனனும், “மகனே!” என்று அலறிக் கீழே வீழ்ந்தான். புத்திர சோகம் பொல்லா தது அன்றோ!”.
பின்னர் எழுந்தான். பற்களை நறநற வென்று கடித்தான்; புருவங்கள் நெரிந்தன; கண்கள் சிவந்தன. கோபத்தின் உச்சியில் ஏறி நின்ற அவன், “எங்களையெல்லாம் தடுத்து நிறுத்தி என் அருமை மகன் கொல்லப்படுவதற்குக் காரணமாய் இருந்த அந்தச் சிந்து நாட்டு மன்னன், ஆணவம் பிடித்த அந்த துரியோதனன் மைத்துனன் ஜயத்ரதனை நாளை சூரிய அஸ்த மனத்துக்குள் கொல்லுவேன். இது என் மேல் ஆணை. நான் வணங்கும் கண்ணன் மேல் ஆணை. இது சத்தியம். அதற்குள் கொல்லாவிட்டால், என் உயிரை மாய்த்துக் கொள்வேன். அதுமட்டுமன்று மறுபிறப் பில் எனக்குப் புண்ணிய உலகங்கள் கிடைக்காமல் போகட்டும், ரெளவராதி நரகத்தில் உழல்வேன் ஆக” என்று கடுஞ் சபதம் செய்தான். பின்னர் அதற்கு அறிகுறி யாகத் தன் காண்டீபத்தை நாணேற்றிப் பேரொலி எழுப்பினான். தேவதத்தம் என்னும் சங்கினை எடுத்து ஊதினான். அந்த நாணொலியையும், சங்கின் ஒலியை யும் கேட்டு உலகமே அதிர்ந்தது. துரியோ தனன் முதலாக உள்ள கௌரவர்கள் அனைவரும் நடுநடுங்கிப் போனார்கள்.
அர்ச்சுனன் செய்த சபதத்தை அறிந்த ஜயத்ரதன் நடு நடுங்கிப் போனான். அவன் துரியோதனனிடம், ”அரசே! அர்ச்சுனன் நாளைய சூரிய அஸ்தமனத்துக்குள் என்னைக் கொல்லச் சபதம் எடுத்துள்ளான்.
அவன் கண்ணபிரான் உதவியால் நிச்சயம் நிறைவேற்றுவான். இதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை. அதனால் என்னை என் நாட்டிற்கு அனுப்பிவிடுங்கள். நான் போய்விடுகிறேன். அப்பொழுதுதான் நான் அர்ச்சுனனிடமிருந்து தப்ப முடியும். எனக்கு விடை கொடுங்கள். இன்னும் சொல்லப் போனால் என் நாட்டிற்குக் கூடப் போகவில்லை. அங்கேயும் அர்ச் சுனன் பாணம் வந்து என்னைத் தாக்கும். அதனால் நான் எங்கேயாவது ஓடிப் போய் விடுகின்றேன்” என்று அஞ்சி நடுநடுங்கிக் கூறினான்.
அதனைக் கேட்ட துரியோதனன், “மைத் துனரே! அஞ்ச வேண்டாம். உங்களுக்கு ஒன்றும் நேராது. உங்களை அர்ச்சுனனிட மிருந்து நாங்கள் காப்பாற்றுகிறோம். பலமிக்க சேனைகளின் நடுவில் நீ இருக்கும்போது உன்னை அர்ச்சுனன் எவ்வாறு கொல்ல முடியும்? ஆகலின் கவலைப்படவேண்டாம்” என்று ஆறுதல் கூறினான். அந்த ஆறுதல் மொழிகளால் சற்றுச் சமாதானம் அடைந்தான்.
ஜயத்திரதனைக் காப்பாற்றப் போவ தாகத் துரியோதனன் கூறியதைக் கண்ணன் அறிந்தார். அவர் அர்ச்சுனனைப் பார்த்து, ‘அர்ச்சுனா! என்னை ஒரு வார்த்தை கூடக் கேட்காமல் நாளை சூரிய அஸ்தமனத்துக் குள் சயத்திரதனைக் கொல்லப் போவதாகச் சபதம் பூண்டுவிட்டாய். உன் சபதத்தை அறிந்த கெளரவர்கள் மிகுந்த எச்சரிக்கை யுடன் இருக்கின்றனர். நாளைய போரில் பாதி சகட வியூகமாகவும், பாதி பத்மவியூக மாகவும் அமைக்க உள்ளனர். இவற்றை உடைத்து உள்ளே முன்னேறுதல் மிகக் கடினம். மேலும் கர்ணன், பூரிசிரவஸ், அஸ்வத்தாமா, கிருபாச்சாரியார், சல்லியன், விருஷசேனன், போன்றவர்கள் அவனுக்குக் காவலாக உள்ளனர். இந்த அறுவரை வெற்றி பெறுவது என்பது மிகக் கடினம். அப்படியிருக்க ஜயத்ரதனை நீ குறிப்பிட்ட காலத்துக்குள் எப்படி கொல்ல முடியும். எதனையும் சிந்தித்துத்தான் செயற்படுத்த வேண்டும் ” என்று கூறினார்.
தங்கைக்குக் கண்ணபிரான் ஆறுதல்
அதனைக் கேட்டு அர்ச்சுனன், “கண்ணா! நாளை எப்படியும் ஜயத்ரதனின் தலை பூமியில் விழத்தான் போகிறது. இது நிச்சயம். இனி அவனை யாராலும் காப்பாற்ற முடியாது. நான் நாளைச் சந்தேக மில்லாமல் வெற்றி பெறுவேன். ஏனெனில் நான் அர்ச்சுனன்; என் கையில் உள்ளது காண்டீபம்; எனக்குத் தேரோட்டுவது தாங்கள்; பார்த்தசாரதியாகிய தாங்கள் என்னுடன் இருக்கும்போது எனக்கு எப்படி தோல்வி வரும்? அவனைக் கொல்லுதற்கு வேண்டியன அனைத்தையும் தாங்கள்தான் செய்யப் போகிறீர்கள்” என்று கூறினான்.
அதன்பின் கண்ணீரும், கம்பலையுமாகி அழுது கொண்டு நிற்கும் சுபத்திரையைக் கண்ணபிரான் கண்டார். அப்பொழுது அவர், “தங்கையே! சுபத்திரையே! உன் மகன் அபிமன்யு வீர மரணம் அடைந் துள்ளான். உன் துயரத்தை மாற்றிக் கொள். பெற்ற தாயால் துயரத்தைக் கட்டுப்படுத்த முடியாது என்பது எனக்குத் தெரியும். என்றாலும் விதி வந்து முன் நிற்கின்றதே. அதை யாரால் மாற்ற முடியும்? ஞானத் தினால் முனிவர்கள் அடையும் உயர்ந்த நிலையைத் தன் ஒப்பற்ற வீரத்தினால் உன் மகன் அடைந்துள்ளான். நீ வீரனுக்குப் பிறந்தவள், தன்னிகரற்ற வீரனை மணந்த வள். அப்படியிருக்க நீ கவலைப்பட லாமா? உன் வீரத் திருமகனைக் கொன்ற வனை உன் கணவன் நாளை, பழிக்குப் பழி வாங்கப் போகிறான். அது நிச்சயம் நடக்கும். கணவனை இழந்து தவிக்கும் அவலைப் பெண் உத்தரையின் கண்ணீரை மாற்று; அவளுக்கு ஆறுதல் கூறு” என்று பலவிதமாக ஆறுதல் கூறித் தேற்றினார்.
புலம்பி அழுத சுபத்திரை
கண்ணபிரான் கூறிய ஆறுதல் உரைகள் அவளை ஆற்றுவிக்கவில்லை. அவள் சோகக் கடலில் மூழ்கிப் புலம்பலானாள். “ஒளி பொருந்திய முகம்; தாமரை போன்ற கைகள்; காளை போன்ற கம்பீர நடை; குதூகலப் பார்வை; இன் சொல்லையுடைய பவளம் போன்ற திருவாய்;” என்றெல்லாம் அவனுடைய திருமுகத்தை நினைத்து நினைத்துப் புலம்பலானாள். “கண்ணே/நேற்று அன்னமென விளங்கும் பஞ்சு மெத்தையில் படுத்திருந்தாய். ஆனால் இன்றோ கவனிப்பாரின்றி, நாங்களெல் லாம் துயரக் கடலில் மூழ்கப் புழுதியில் தனித்துக் கிடக்கின்றாய். இதனை எப்படி சகிப்பேன். கனவில் கண்ட பொருள் போலச் சில காலம் எங்கள் கண்களில் இருந்து இன்று மறைந்து விட்டாய். “நீர்க்குமிழி அன்னது வாழ்க்கை “, “நெருநல் உளனொருவன் இன்றில்லை” என்பனவெல்லாம் உன் விஷயத்தில் இவ்வளவு சீக்கிரம் பலிக்கும் என நாங்கள் எண்ணவே இல்லை” என்று பலவாறு கூறிப் புலம்பினாள். அப்பொழுது திரௌபதி அங்கு வந்தாள். சுபத்திரையைக் கண்டாள். “ஐயகோ! மகனே எங்களை விட்டுப் பிரிந்தாயே ” என்று இருவரும் புலம்பினார்கள். இருவருக்கும் வேண்டிய ஆறுதல் மொழிகளைக் கூறிவிட்டுக் கண்ணபிரான் அங்கிருந்து சென்றார்.
அன்று இரவு கெளரவர்களும் தூங்கவில்லை; அதே போலக் கண்ணபிரானும் தூங்கவில்லை. இருவரும் மறுநாள் என்ன செய்வது? எப்படி வெற்றி கொள்வது என்று பலவாறு யோசிக்கலானார்கள். “அர்ச்சுனன் செய்த சபதத்தை செவ்வனே நிறைவேற்றி முடிப்பது எவ்வாறு” என்று கண்ணபிரானும், “அர்ச்சுனன் சபதத்தை உடைத்து சயத்ரதனை எவ்வாறு காப்பாற்று வது” என்று கெளரவர்களும் அன்று இரவு யோசிக்கலானார்கள்.
மகாபாரதம் – 49 பதின்மூன்றாம் நாள் போர்… அபிமன்யுவை வீழ்த்திய துச்சாதனன் மகன் | Asha Aanmigam