ஐந்தாம் நாள் போர்
வினை விதைத்தவன் வினையைத்தாளே அறுக்க வேண்டும்!
சஞ்சயன், யுத்தகளத்தில் நடைபெற்ற வற்றையெல்லாம் கண்ணற்ற திருத்ராட்மாருக்குச் சொல்லிக் கொண்டு வந்தான். நான்காம் நாள் தன் மைந்தர்கள் ஐவர் பீமனால் கொல்லப்பட்டதைக் கேட்டதும். அன்று இரவு முழுவதுமே உறங்காது அழலானார். சார், “கைகளால் நீந்தி ஒருவன் கடலைத் தாண்ட முடியாதது போலவே நான் இந்தப் புத்திர சோகம் என்னும் பெருந்துக்கக் கடலிலிருந்து மீளப் போவ தில்லை) இன்று ஐவரை வதைத்த பிமன். இன்னும் சில நாட்களில் எல்லோரையும் கொன்றுவிடுவான் போல உள்ளதே. என் பிள்ளைகளைக் காப்பாற்றக்கூடிய வீரர்கள் யாரும் நம்முடைய சேனையில் இல்லையா? பீஷ்மரும், துரோணரும். அஸ்வத் தாமனும் போன்ற சூரர்கள் இருந்தும் என்ன பயன்? இப்பொழுது இருப்பவர்களாவது மிஞ்சுவார்களோ? இல்லையோர தெரியவில்லையே” என்று கூறி மன்னர் புலம்பலானார். அதனைப் பார்த்த சஞ்சயன், “மன்னரே! மனத்தைத் தேற்றிக் கொள்க பாண்டவர்கள் அறவழி வில் செல்கின்றார்கள். அதனால் வெல்கின் றார்கள். அவர்களுக்கு அனேகத் தீங்குகளை உன் புதல்வர்கள் செய்தார்கள். அதன் பலனை இப்பொழுது அனுபவிக்கிறார்கள். நியாய நேர்மையான வழிகளில் செல்வ தால் பாண்டவர்கள் பலன் பெறுகின்றார் கள் நோயாளி உரிய மருந்தை உட்கொள்ள மறுப்பது போல, பீஷ்மர், துரோணர். விதுரர் போன்றவர்கள் சொன்ன அறிவுரை களை, அறவுரைகளை நீர் காது கொடுத்துக் கேட்கவில்லை. உன் மகன் துரியோத னனோ பெரியோர்களை மதிக்காது அவர் களை அவமதித்து மனம் போன போக்கில் நடந்தான். இப்பொழுது அனுபவிக் கின்றான். வினை விதைத்தவன் வினை யைத்தானே அறுக்கவேண்டும் ” என்று கூறிய சஞ்சயன் நான்காம் நாள் இரவில் நடந்ததைக் கூறலானான்.
நான்காம் நாள் யுத்தம் முடிந்தபின், இரவு பிதாமகரிடம் துரியோதனன் தனியாக, “பிதாமகரே! நீரும் துரோணரும்; கிருபரும், அஸ்வத்தாமாவும், கிருதவன் மாவும், பூரிசிரவசும், பகதத்தனும் போன்ற பெருவீரர்கள் இருந்தும், பாண்டவர்களை வெல்ல முடியவில்லையே! உங்களில் ஒருவரையே பாண்டவர்கள் ஐவர் ஒன்று சேர்ந்தலும் வெல்ல முடியாது. அவ்வா றிருக்க அப்பாண்டவர்கள் வெல்லக் காரணம் என்ன?” என்று கேட்டான்.
பிதாமகரின் அறிவுரை
அதற்குப் பிதாமகர், “துரியோதனா! நாங்கள் அறிவுரைகள் பல சொல்லியும் கேட்கவில்லை. அதனால் வந்த வினை தான். இப்பொழுது கூட காலம் கடந்து விடவில்லை. பாண்டவர்களிடம் சமாதானமாகப் போகலாம். ஆனால் நீ கேட்க மறுக்கின்றாய். பாண்டவர்களை அவமானப்படுத்தினாய்; கண்ணபிரானைக் கொல்லத் துணிந்தாய்; அப்படி இருக்க உனக்கு எப்படி வெற்றி வரும்? கண்ணனும், அர்ச்சுனனும் சாதாரணமான வர்கள் அல்லர். அவர்கள் முற்பிறப்பில் பத்ரிகாசிரமத்தில் நர நாராயணர்களாக விளங்கியவர்கள். எட்டெழுத்துத் திரு மந்திரத்தை உலகிற்கு அருளியவர்கள்; ஆனால் நீயோ அவர்களைப் பழிக் கின்றாய். அதனால் நீயும் நின் குலமும் தான் நாசமாகப் போவீர்கள் ” என்று கூறினார். துரியோதனனோ அதற்கு எந்தவிதப் பதிலும் கூறாது படுக்கையில் படுத்துக் கொண்டான்.
பொழுது புலர்ந்தது. சூரியன் உதயகிரி யில் தன் ஆயிரம் கிரணக்கதிர்களை நீட்டிக் கொண்டு எழுந்தான். இரண்டு பக்கங்களில் உள்ள படைகளும் தயாராய் இருந்தன. கோபமும் உற்சாகமும் உடையவர்களாய் விளங்கினார்கள். பீஷ்மர் மகரவியூகம் வகுத்தார். பாண்டவர்கள் தெளமியர் ஆலோசனை பேரில் சியெனி வியூகத்தை வகுத்திருந்தனர். ‘சியெனி’ என்பது சடாயு, சம்பாதி ஆகியவர்களின் தந்தையான அநூரன் பாரி என்ற கழுகுப்பறைவையைக் குறிக்கும். எனவே இந்த வியூகம் கழுகினைப் போன்ற அமைப்புடையது எனலாம். பீமன் அந்த வியூகத்தின் முன்னணியில் இருந்தான். சிகண்டியும், திட்டத்துய்மனும் அதறகு இரண்டு கண் களாக விளங்கினர். அர்ச்சுனன் நாணொலி எழுப்பிக் கொண்டு அதன் கழுத்தில் நின்றான். துருபதன் தன் புதல்வர்களுடன் ஒன்று சேர்ந்து இடப்பக்கச் சிறகாய் இருந்தான். கேகய நாட்டரசன் வலப்பக்கச் சிறகாய் நின்றான். யுதிஷ்டிரர் அபிமன்யு வுடனும், நகுல சகாதேவர்களுடனும் பின்புறத்தில் இருந்தார்.
துரோணரைத் தாக்கிய பீமன்
பீஷ்மர் வில்லை வளைத்து அஸ்திரங் களை விட்டு, பாண்டவ சேனையைப் பெருந்துன்பத்துக்குள்ளாக்கினார். அத னைப் பார்த்த அர்ச்சுனன் பீஷ்மரைப் பலமாகத் தாக்கினான். மற்றொரு புறத்தில் சாத்யகிக்கும் துரோணருக்கும் பயங்கர மான போர் நடந்தது. சாத்யகியால் துரோணரைச் சமாளிக்க முடியவில்லை. அதனால் பீமன் அங்குவந்து துரோணரைத் தாக்கினான். யுத்தத்தின் பலம் அதிகரித்தது. துரோணருடன் பீஷ்மரும், சல்லியனும் சேர்ந்து கொண்டு பீமனைத் தாக்க லாயினார்கள். அச்சமயம் அவ்விடத்தில் சிகண்டி வந்து பீஷ்மர் தேரில் அம்பு மழை பொழிந்தான். சிகண்டி எதிரே வந்து அம்பு மழை பொழிந்ததனால் அவனுடன் போர் செய்தல் கூடாது என்று விலகிவிட்டார். காரணம் சிகண்டி ஆண் பிறப்பல்லன். முற்பிறவியில் அம்பை என்ற பெண்ணாகப் பிறந்து, பீஷ்மரைக் கொல்ல வேண்டும் என்றே சிகண்டி என்ற ஆணாக இப்பிறவியில் வளர்ந்து வருகின்றான் என்பதனால் பீஷ்மர் விலகியதைப் பார்த்து துரோணர் சிகண்டியை எதிர்த்துப் போர் புரியலானார். சிகண்டியினால் துரோண ருடைய எதிர்ப்பைத் தாங்கமுடியவில்லை. அதனால் சிகண்டி பின் வாங்கினான்.
இந்தக் கோரமான யுத்தம் பிற்பகலிலும் தொடர்ந்தது.இருபக்கத்திலும் வரம்பற்ற வர் மாண்டனர்; துரியோதனன் சாத்யகியை எதிர்க்கப் பெரும் படையை அனுப்பி னான். அந்தப் படையைச் சாத்யகி முற்றி லும் நாசம் செய்துவிட்டு மகாவீரனான பூரிசிரவஸோடு கடுமையாகப் போர் புரியலானான். பூரிசிரவஸ் சாத்யகியின் படையை நாசம் செய்யலானான். அவன் ஒருவனே எஞ்சி நிற்கும் வேளையில் அச்சாத்யகிக்குத் துணையாக அவனுடைய பத்துக் குமாரர்கள் வந்தனர். ஆனால் அந்தப் பத்துப் பேரையும் பூரிசிரவஸ் வீர சொர்க்கத்திற்கு அனுப்பினான். தன் புத்திரர்கள் மாண்டதைப் பார்த்துச் சாத்யகி பெருங்கோபங்கொண்டு, பூரிசிரவஸைத் தாக்கி, அவன் தேரை உடைக்க, பூரிசிரவஸ் சாத்யகியின் தேரைப் பதிலுக்கு உடைத் தான். இருவரும் தரையில் நின்று கொண்டு வாட்போரிட்டனர். வாட்போரில் பூரிசிர வஸை யாராலும் வெல்ல முடியாது என்பதை அறிந்த பீமன் உடனே அங்கு வந்து சாத்யகியைப் போரினின்று விலக்கித் தேரில் அழைத்துக் கொண்டு சென்று விட்டான்.
இருபத்தையாயிரம் பேரைக் கொன்ற அர்ச்சுனன்
அர்ச்சுனனைக் கொல்வதற்காக வந்த கௌரவப் படைகள் அனைத்தும் அவனை எதிர்த்து நெருப்பில் விழுந்த விட்டில் பூச்சிகள் போல நாசமாயின; (அன்றைய பொழுதில் இருபத்தையாயிரம் வீரர்களை அர்ச்சுனன் கொன்றான்) பாண்டவர்கள் சேனை தனஞ்செயனைச் சூழ்ந்து கொண்டு ஜெயகோஷம் போட்டன.
பின்னர் பீஷ்மர் கட்டளைப்படி கௌர வர் சேனைகள் பாசறைக்குச் செல்ல, பாண்டவர்கள் சேனைகளும் தங்கள் பாசறைக்குச் சென்றன. இன்றைய போரில் கெளரவர்கள் பக்கம் சேதம் அதிகமா யிருந்தது எனலாம்.
ஆறாம் நாள் போர்ச் சருக்கம்
வியூகம் வகுத்தல்
போர்க்களத்தில் படைகளின் பரப் பமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும் எந்தெந்த இடத்தில் யார் யார் இருந்து தலைமை வகித்துப் போரிட வேண்டும். என்றெல்லாம் முதலிலேயே நிச்சயித்துத் தாக்குதலுக்கும், காத்துக் கொள்ளுதற்குமாக ஒழுங்கான ஏற்பாடுகளைச் சேனாதிபதிகள் செய்வார்கள். அதற்கு ‘வியூகம் வகுத்தல்* என்று பெயர். படைகளின் வியூகமானது, மீன், பருந்து, பறவைகள், தாமரை போன்ற பல அமைப்பில் அமைக்கப்படும். இவை பற்றிய விவரம் பழைய தனுர் வேதங்களில் காணப்படுகின்றன.
பொழுது புலர்ந்தது. போர் தொடங்கி அன்று ஆறாம் நாள்; தருமபுத்திரர்; திட்டத்துய்மனிடம் மகரவியூகம் வகுக்கும் படி கட்டளையிட அவ்வாறே திட்டத் துய்மன் வகுத்தான்.
பீஷ்மரின் கிரெளஞ்ச வியூகம்
துருபதமன்னனும் அர்ச்சுனனும் அதன் தலையாக இருந்தார்கள்; நகுல சகாதேவர்கள் கண்களாயினர்; பீமசேனன் முக மானான்; அபிமன்யு, கடோத்கஜன், உபபாண்டவர்கள், தருமபுத்திரர் போன்றோர் அதன் கழுத்தில் நின்றனர். விராடன் பின்புறத்தில் இருந்தான். திட்டத் துய்மனும், கேகய வீரர்களும் இடப்பக்கம் விலாப்புறத்தில் இருந்தனர். திருஷ்ட கேதுவும், சேகிதானனும் வலப்பக்கம் நின்றார்கள். சிகண்டியும், இரவானும் வால்பக்கம் நின்றனர்.
பீஷ்மர் தம் படையை கிரௌஞ்ச வடிவத்தில் அமைத்தார். சூரியன் உதயமாகப் போர் தொடங்கியது. ஆறாம் நாள் யுத்தத்தில் ஆள் சேதம் அதிகமாக இருந்தது. முதலில் துரோணருடைய தேர்ப்பாகன் கொல்லப்பட்டான். அதனால் இரண்டு திறத்துப் படைகளும் கை கலந்து வரம் பின்றிப் போர் புரிந்தன. அதனால் இரண்டு வியூகங்களுமே உடைந்து போயின. போர்க்களம் முழுவதும் உயிர் நீத்த யானைகளும், குதிரைகளும், வீரர்களும் குவிந்திருந்தனர்.
அந்த நேரத்தில் பீமசேனன், துரியோ தனன் தம்பியர்களை எதிர்த்துப் போர் புரியலானான். துச்சாதனன், துர்ஷிகன், துர்மதன், ஜயன், ஜயத் சேனன், விகர்ணன், சித்திர சேனன், சுதர்சனன், சாரு சித்திரன், சுவர்மன், துஷ்கர்ணன் போன்ற தம்பியர் கள் ஒரே சமயத்தில் பீமனைத் தாக்கி னார்கள். பீமன் அவர்களோடு கடும் போர் புரிந்தான். பொறுமை இழந்து தேரினின்று இறங்கி அவர்கள் அருகில் சென்று அவர்களோடு போரிட்டுக் கொன்றான். தேரில் பீமன் இல்லாததைக்கண்டு அஞ்சிய திட்டத்துய்மன், போர்க்களத் தினுள் போரிட்டுக் கொண்டிருந்த பீமனைக் கண்டான்; மன ஆறுதல் கொண்டான். இருவரும் தேரேறித் திரும்பும்பொழுது துரியோதனன் கட்டளைப்படி கெளரவர் சேனை இருவரையும் வளைத்துக் கொண்டது. கடும் போரிட்டது. திட்டத் துய்மன் துரோணரிடத்தில் கற்ற ஒரு ரகசிய மோகனாஸ்திரத்தை எடுத்து விடுத்து கெளரவர் சேனைகளைப் பிரதிக்ஞை இழக்கச் செய்தான். ஆனால் துரியோதனன் அதற்கு மாற்றான அஸ்திரத்தை ஏவி, கெளரவர்களை மீண்டும் நினைவுக்கு வரச் செய்தான். நினைவு பெற்ற கௌரவ வீரர்கள் திட்டத்துய்மனைத் தாக்கினார்கள்.
இதற்குள் தருமபுத்திரர் அபிமன்யு தலைமையில் பன்னிரண்டு தேர் வீரர் களுடன் படையை அமைத்துக் கொடுத்து பீமனும் திட்டத்துய்மனும் இருந்த இடத்துக்கு அனுப்பினார். அபிமன்யு வந்ததைக் கண்டதும் திட்டத்துய்மன் உற்சாகமடைந்தான். பீமனும் அதற்குள் இளைப்பாறி கேகய ராஜனுடைய தேரில் ஏறி யுத்தத்தில் கலந்து கொண்டான்.
ஆனால் துரோணர் அங்குவந்து திட்டத் துய்மனோடு கடும் போரிட்டார். திட்டத் துய்மனுடைய தேரையும், தேர்ப்பாகனை யும், குதிரைகளையும் அழித்துவிட்டார். தேரிழந்த திட்டத்துய்மன் அபிமன்யு தேரில் ஏறி யுத்தத்தை நடத்தினான். ஆனாலும் துரோணருக்கு முன் பாண்டவ சேனை நிலை குலைந்து போயிற்று.
துரியோதனனுடன் பீமன் போர்
அந்நிலையில் முதன் முதலாக பீமனும் அவன் எதிரி துரியோதனனும் போர்க் களத்தில் சந்தித்துக் கொண்டார்கள். பகையை முதலில் பேச்சில் வெளிப் படுத்திய பின் இருவரும் ஒருவரை யொருவர் தாக்கிப் போர் செய்தார்கள்; அப்பொழுது பீமனால் துரியோதனன் பல மாகத் தாக்கப்பட்டு மூர்ச்சை அடைந்து கீழே விழுந்தான். கிருபாச்சாரியார் அவனைத் தேரில் ஏற்றிக் கொண்டு சாமர்த் தியமாகக் காப்பாற்றினார். அப்போது பீஷ்மர் அங்கு வந்துவிட்டார். அங்கு, பீஷ்மர் தானே தனியாக நின்று பாண்டவ சேனைகளைத் தோற்கடித்தார்.
சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில் அன்று பயங்கரமான போர் நடந்தது. ஆயிரக் கணக்காக வீரர்கள் மாண்டார்கள். பின்னர் போர் நிறுத்தப்பட்டது. திட்டத்துய்மனும், பீமனும் உயிருடன் திரும்பியது கண்டு தருமபுத்திரருக்கு அளவற்ற சந்தோஷம் ஏற்பட்டது. அதுபோலவே துரியோதனன் கிருபரால் காப்பாற்றப்பட்டது குறித்து கௌரவர் பெருமூச்சுவிட்டனர். அன்று இருவர் சேனையிலும் பலத்த சேதம் ஏற்பட்டது எனலாம்.
ஏழாம் நாள் போர்ச் சருக்கம்
பீஷ்மரின் மண்டல வியூகம்
ஆறாம் நாள் போரில் கௌரவர்களுக் குப் பெருஞ்சேதம் நேர்ந்தது. பாண்டவர்கள் அன்று கௌரவர்கள் வகுத்த வியூகத்தை உடைத்து பெரும் நாசம் விளை வித்தார்கள். வீரர்களெல்லாம் பெருங் காயம் உற்றனர். துரியோதனனும் பெரும் புண்கள் பல பெற்றான். பீஷ்மர் துரியோ தனனுக்கு விசல்யகரணி’ என்னும் மருந்தைக் கொடுத்தார். அதனால் துரியோ தனனின் உடலில் இருந்த காயங்கள் குண மடைந்தன. அவனுக்குத் தத் தேறுதல் வார்த்தைகள் பல பீஷ்மர் சொல்லி அவனை உற்சாகப்படுத்தினார். அந்த உற்சாகத்தோடு ஏழாம் நாள் போருக்குப் புறப்பட்டார். இன்று பீஷ்மர் மண்டல வியூகத்தை வகுத்தார்.
ஒவ்வொரு யானைக்கு ஏழு தேர்களும், ஒவ்வொரு தேருக்குத் துணையாக ஏழு குதிரை வீரர்களும், ஒவ்வொரு குதிரை வீரனுக்குத் துணையாகப் பத்து வில்லாளி களும், ஒவ்வொரு வில்லாளிக்குத் துணை யாகப் பத்துக் கேடகக்காரர்களும் காப்பாக இருந்தார்கள். எல்லா வீரர்களும் உறுதியான கவசம் அணிந்திருந்தார்கள். இச்சேனையின் மத்தியில் இந்திரன் போன்று துரியோதனன் தேரில் விளங் கினான்.
வச்சிர வியூகம்
தருமர் கட்டளைப்படி திட்டத்துய்மன் பாண்டவர் சேனையை ‘வச்சிர வியூகமாக’ வகுத்தான். அன்று அநேக முனைகளில் பெரும்போர் நடைபெற்றது. அர்ச்சுனனும், பீஷ்மரும் ஒரு முனையில் பெரும் போரிடலாயினர்; மற்றொரு முனையில் துரோணரும், விராடனும் போரிட்டனர்; இன்னொரு முனையில் திட்டத்துய்ம னோடு துரியோதனன் போரிட்டுக் கொண் டிருந்தான். வேறொரு முனையில் சிகண்டி யோடு அஸ்வத்தாமா போரிட்டுக் கொண் டிருந்தான். இன்னோர் இடத்தில் நகுல சகாதேவர்கள் தங்கள் மாமன் சல்லியனோடு போராடிக் கொண்டிருந்தார்கள். போர்க்களத்தில் எந்த உறவு முறையும் பார்க்கக் கூடாது. அது நகுல சகாதேவர் களுக்குப் பொருந்தி வந்தது. எந்தவித விரோதமும் இல்லாமல் இருப்பினும் கெளரவர்களோடு சேர்ந்ததனால் தன் சொந்த அம்மானையே,தந்தைக்கு அடுத்த ஸ்தானத்தில் வைத்து மதிக்கப்பட வேண் டியவனையே எதிர்த்துப் போரிடும்படி யான ஒரு துர்பாக்கிய நிலை அந்த நகுல சகாதேவர்களுக்கு ஏற்பட்டுவிட்டது. அவர் களும் சொந்தம் என்பதைப் பாராமல் வெற்றி என்பதையே குறிக்கோளாகக் கொண்டு மத்திர நாட்டு மன்னன் சல்லிய னோடு போரிடலானார்கள். மற்றொரு பக்கத்தில் பீமசேனன், கிருதவர்மா, சித்திர சேனன், விகர்ணன், துர்மிஷன் போன்ற வர்களை ஒரு சேர எதிர்த்துப் போர் புரியலானான். மற்றோர் இடத்தில் கடோத் கஜனுக்கும், பகதத்தனுக்கும் கடும் போர் நிகழ்ந்தது. இன்னொரு முனையில் அலம்பரசன் சாத்யகியோடு போரிடலா னான். மற்றொரு முனையில் தருமபுத்திரர் சுருதாயுவை எதிர்த்துப் போரிட்டார். இவ்வாறு பல்வேறு முனைகளில் கடும் போர் நடக்கலாயிற்று.
மகனைப் பறிகொடுத்த விராடன்
துரோணருக்கும், விராடனுக்கும் நடந்த யுத்தத்தில் விராடன் தோற்றுப் போனான். அதோடு தேரையும், தேர்ச் சாரதியையும் இழந்தான். ஆனாலும் ஊக்கம் குன்றாது தன்புத்திரன் சங்கனுடைய தேரில் ஏறிப் போரிடலானான். அன்று விராடன் அருகி லேயே அவன் மகன் சங்கன் மாண்டான். ஏற்கனவே, சிவேதனையும், உத்தரனையும் முதல் நாள் போரில் பலி கொடுத்த விராடன் இந்த ஏழாம் நாள் போரில் மற்றொரு மகனாகிய சங்கனையும் பறி கொடுத்தான். போர்க்களத்தில் இது சகஜம் என்றாலும் விராடன் அடைந்த துயரம் அளவிட்டுச் சொல்ல முடியாத ஒன்றாகும்.
மற்றொரு முனையில் சிகண்டி அஸ்வத் தாமாவிடம் கடும் போரிட்டு தன் தேரையும் தேர்க் குதிரைகளையும், தேர்ப் பாகனையும் இழந்தான். அதனால் அவன் கீழே குதித்துக் கத்தியை எடுத்து அஸ்வத்தாமா விடம் மோதினான். அஸ்வத்தாமா விடுத்த அம்பினால் சிகண்டி கத்தியை இழந்தான். அதோடு அஸ்வத்தாமா விடுத்த அம்பு களினால் அடிபட்ட அச்சிகண்டி சாத்யகி யின் தேரிலேறிச் சென்றான்.
திட்டத்துய்மனுடன் போரிட்ட துரியோதனன் சிறிது நேரத்தில் தேரையும்,தேர்க் குதிரைகளையும் இழந்தான். அதனால் அவனோடு வாளேந்திப் போரிடலானான். இருந்தாலும் இருவரும் பெருங்காயங்கள் பட்டுப் போரினின்று நீங்கினர். கிருத வர்மா பீமனைத் தாக்கிப் போரிட்டும் அவனால் வெற்றி பெற முடியவில்லை. தோல்வியைத் தழுவினான். அதனால் அவன் சகுனியின் தேரை நோக்கி ஓடினான்.
பகதத்தன் யானை மீது ஏறிக் கடோத்கஜனோடு போரிட்டுப் பெரு வெற்றி பெற்றான். கடோத்கஜன் புறங்காட்டிக் களத்தினின்று தப்பியோடினான். அதனால் கெளரவர் சேனை பெருமகிழ்ச்சி அடைந் தது. சல்லியனுக்கும் அவன் சகோதரியின் மக்கள் நகுல சகாதேவர்களுக்கும் நடந்த போரில் நகுலன் தேர் இழந்தான். அதனால் அவன் சகாதேவன் தேரில் ஏறி இருவரும் ஒரு தேரில் இருந்து கொண்டு பெரும் போரினைச் செய்தார்கள். சகாதேவன் விடுத்த அம்புகளினால் சல்லியன் மூர்ச்சை அடைந்தான். ஆனால் தேர்ப்பாகன் சல்லி யனை வேறோர் இடத்திற்குக் கொண்டு போனான். எனவே துரியோதனன் சேனை தைரியமிழந்தது. மாத்ரி புத்திரர்கள் வெற்றிச் சங்கை எடுத்து ஊதினார்கள்.
கலக்கமடைந்த துரியோதனனின் சேனை
பிற்பகலில் தருமபுத்திரர் சுருதாயுவை எதிர்த்துப் போர் புரியலானார். அப்பொ ழுது சுருதாயு தருமபுத்திரரின் கவசத்தை அம்புகளால் உடைத்தெறிந்தான். கோபங் கொண்ட தருமபுத்திரர் சுருதாயுவின் மார்பில் நன்றாகப் பதியும்படி அம்பினை ஏவினார். முடிவில் சுருதாயு தேரையும், தேர்ப்பாகனையும், தேர்க் குதிரைகளையும் இழந்து யுத்தக்களத்தைவிட்டு ஓடியே விட்டான். அதனால் துரியோதனனுடைய சேனை முற்றிலும் கலக்கமடைந்தது.
அப்பொழுது கிருபாசாரியாரை எதிர்த் துச் சேகிதானன் என்பவன் கடும் போரிட் டுத் தேரினை இழந்தான். பின் கதாயுதத்தை எடுத்து, கிருபாசாரியாருடைய குதிரை களையும், சாரதியையும், தேரினையும் நாச மாக்கினான். அதனால் இருவரும் தரையில் இருந்து கொண்டு போர் புரியலானார்கள். கிருபாசாரியார் விட்ட அம்புகள் சேகிதான னைப் பெரிதும் துன்புறுத்தின. அதனால் சேகிதானன் ஒரு கதாயுதத்தை எடுத்து கிருபாசாரியார் மேல் வேகமாக எறிந்தான். அதனைக் கிருபர் தம் பாணத்தால் அடித்து நொறுக்கினார். பின்னர் இருவரும் வாட் போர் செய்யலாயினர். அதனால் இருவரும் காயமடைந்தனர். இந்த நிலையில் பீமசேனன் வந்து சேகிதானனையும், சகுனி வந்து கிருபாசாரியாரையும் தத்தம் தேர்களில் ஏற்றிக் கொண்டு தங்கள் தங்கள் பாசறைக்குச் சென்றனர்.
தோற்று ஓடிய துரியோதனன் தம்பியர்
திருஷ்டகேது, பூரிசிரவசின் மேல் தொண்ணூற்றாறு பாணங்களை விட்டு அவன் மார்பில் பாயச் செய்தான். மார்பில் தைத்த பாணங்களுடன் பூரிசிரவஸ் இளஞ் சூரியனைப் போல ஜொலித்தான். அப்போ தும் அவன் தளராது போரை நடத்தித் திருஷ்ட கேதுவைப் புறங்காட்டி ஓடச் செய்தான். அதே சமயத்தில் துரியோதன னின் தம்பியர் மூவர் அபிமன்யுவை எதிர்த்துக் கடும் போரிட்டுத் தோற்றுப் புறங்காட்டி ஓடலாயினர். “இவர்களை பீமன் கொல்ல வேண்டும்” என்று சபதம் செய்துள்ளதனால் அபிமன்யு அவர்களைக் கொல்லாது விட்டான்.
ஆனால் பிதாமகர் பீஷ்மர் அபிமன்யுவை விடவில்லை. அவனுடன் கடும் போரிட்டார். இருவரும் வெற்றி தோல்வி யின்றிப் பெரும் போரிட்டனர். அதனைப் பார்த்த அர்ச்சுனனும், அவனுடைய சகோதரர்களும் அ அவனுக்கு உதவியாக வந்து, பீஷ்மரைத் தடுத்துப் போரிட் டார்கள். அப்பொழுது சூரியன் மறைந்தான். ஏழாம் நாள் போர் அத்துடன் முடிக்கப்பட்டது. எல்லா வீரர்களும் தங்கள் தங்கள் பாசறைக்குச் சென்றனர். அடிபட்ட காயங்களுக்கு மருந்து போட்டுக் கொண்டு இளைப்பாறினார்.
பின்னர் இருபக்க பாசறைகளிலும் ஆடியும், பாடியும் மகிழ்ச்சியுடன் இருக்கலாயினர். அப்பொழுது தான் போர் வீரர்களுக்குப் புத்துணர்வு உண்டாகும், புதுப்பொலிவுடன் போரிடுவர்.
மகாபாரதம் – 46 ஐந்தாம், ஆறாம், ஏழாம் நாள் போர்… தோற்று ஓடிய துரியோதனன் தம்பியர்