இரண்டாம் நாள் போர்ச் சருக்கம்
முதல் நாள் நடந்த போரில் உத்தரனும், சிவேதனும் மாண்டது குறித்துத் தரும புத்திரர் பெரிதும் கவலையுற்றார். பாண்ட வர் சேனை பெரும் அழிவை அன்று சந்தித்தது. அதனால் கண்ணபிரானைப் பார்த்து, ”கண்ணா! உறவினர்களை இழப் பதை விடக் காட்டிற்குச் செல்வதே மேல். அறிவுக் குறைவினால் இதையெல்லாம் சிந்திக்காமல் போருக்கு வந்துவிட்டேன்” என்று கூறி மனம் நொந்தார்.
இதனைக் கவனித்த கண்ணபிரான், “தருமபுத்திரரே! கவலைப்பட வேண்டாம். பீமன், அர்ச்சுனன், போன்றோரைத் தம்பியாகப் பெற்றுள்ள நீர் கவலைப் படலாமா? விராடன், துருபதன் போன் றோர் மிகுந்த நட்புடன் உள்ளனர். சிகண்டி பீஷ்மரை அழிப்பதற்காகவே பிறந் துள்ளான். திட்டத்துய்மனைச் சேனாதிபதி ஆக்குக. எல்லாம் நல்லன நடக்கும்” என்றார்.
சேனாதிபதியான திட்டத்துய்மன்
உடனே தருமபுத்திரர், “திட்டத்துய் மனே! தேவர்களுக்குச் சேனாதிபதியாக முருகப் பெருமான் இருந்தது போல நீ எங்களுக்கு இன்று முதல் சேனாதிபதியாக இருக்க வேண்டும். நாங்கள் உங்களைப் பின்பற்றி நடக்கிறோம்” என்றார்.
அதற்குத் திட்டத்துய்மன். “அரசே! கவலைப்படவேண்டாம் துரோண வதம் செய்யும் பொருட்டே நான் தோன்றி யுள்ளேன். போர்க்களத்தில் பீஷ்மர், துரோணர், சல்லியன், கிருபர், ஜயத்ரதன் போன்றோரை வெற்றி காண்பேன்” என்று கூறினான். தருமபுத்திரர் அப்பொழுது சேனைத் தலைவரே! முற்காலத்தில் பிரகஸ்பதியால் இந்திரனுக்கு சொல்லப் பட்டது கிரௌஞ்ச வியூகம். அந்த கிரௌஞ்ச வியூகத்தை இன்று அமைத்துப் போரில் வெற்றி காண்போம்” என்றார்.
தருமபுத்திரர் கட்டளைப்படி திட்டத் துய்மன் கிரௌஞ்சம் என்ற வியூகத்தின் அமைப்பில் தன் சேனையை அமைத்தான். குந்தி போஜனும், சைத்யனும் இரண்டு கண்கள் போல இருந்தனர். பின்பக்கம் தரும புத்திரர் தன் சேனைகளுடன் நின்றார். பீமனும், திட்டத்துய்மனும் சிறகுகள் ஆயினர். அபிமன்யு, சாத்யகி வலப் பக்கமும், நகுல சகாதேவர்கள் இடப் பக்கமும் இருந்து சிறகைப் பாதுகாத் தார்கள் கிரௌஞ்ச வியூகத்தைப் பாண்ட வர்கள் வகுத்துள்ளார்கள் என்பதை அறிந்த பீஷ்மர், துரோணருடனும், துரியோதன னுடனும் சேர்ந்து மிகப் பெரிய வியூகம் ஒன்று அமைத்தார். வியூகத்தின் முன்னணியில் பீஷ்மர் இருந்தார். துரோணர் அவரைப் பின் தொடர்ந்தார். அஸ்வத்தாமா, கிருபர், கிருதவன்மா போன்றோர் அந்த வியூகத்தின் பின்பக்கம் இருந்தனர். கௌரவப்படைவீரர்கள் மிகுந்த உற்சாகத்துடன் இருந்தனர்.
பீஷ்மரின் சிம்மநாதம்
சூரியன் உதித்தான். பீஷ்மர் சிம்மநாதம் செய்து சங்கினை எடுத்து ஊதினார். படை வீரர்களும் சங்கினை எடுத்து ஊதினர். பாண்டவர் தரப்பிலும் சங்க நாதம் செய்யப் பட்டது.
வெண்ணிறக் குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் கண்ணபிரான் அர்ச்சுனன் முறையே பாஞ்சசன்னியம், தேவதத்தம் என்னும் சங்குகளை எடுத்து ஊதினார்கள், தரும புத்திரர், அநந்த விஜயம் என்ற சங்கையும், பீமன் பௌண்டரம் என்னு என்னும் சங்கையும், நகுலன் சந்தோஷம் தாஷம் என்ற சங்கையும், சகாதேவன் ‘புஷ்பகம்’ என்ற சங்கையும் எடுத்து ஊதினார்கள். திட்டத்துய்மன், சாத்யகி யகி போன்றவர்களும் தங்கள் தங்கள் சங்குகளை ஊதினார்கள்.
இருதிறத்துச் சேனைகளும் இரண்டாம் நாளில் உக்கிரமாகப் போரிடலாயின ; சிங்கம் போன்ற திட்டத்துய்மன் துரோணா சாரியாரை நெருங்கி அவர்மேல் மழை யென அம்புகளைப் பொழிந்தான். ஆனால் துரோணர் அஞ்சாமல் வில்லெடுத்து அம்புகள் பல ஏவி திட்டத்துய்மனது வில்லை அறுத்தார். அதனால் அவன் மனம் வருந்திப் போர்க்களத்தில் பின்னிட லானான். இதனை அறிந்ததும் பாண்டவர் சேனை சிதறியோடியது. இதனைக் கண்டு பீமன் கோபத்துடன் துரோணர் மேல் பாய்ந்து சுடும் போரிட்டான். அதனால் துரோணர் திணறலானார். அவர் படைகள் சிதறியோடின. அந்நிலையில் கலிங்க மன்னன் சக்ரதேவன் என்பான், யானைப் படைகள் துணை கொண்டு பீமனுடன் மோதிக் கடும்போர் செய்தான். தேரை விட்டு இறங்கிய பீமன் தன் இருகைகளால் தன்னை எதிர்க்க வந்த யானைகளை அலாக்காகத் தூக்கி வானத்தில் எறிந்தாள். இவ்வாறு பீமன், கலிங்கமன்னனின் யானைப் படையைச் சிதறடித்தான். அதனால் பல யானைகள் பூமியில் விழுந்து பிளிறிக்கொண்டு இறந்தொழிந்தன; பல யானைகள் அங்கங்கள் சிதைந்து, நீர்ப் பிண்டமாயின; பல யானைகள் உருவம் தெரியாமல் அழிந்தன; இந்த யானைகளை வீழ்த்தியதோடு, பீமன் கலிங்க மன்னனை யும் கொன்றொழித்தான்.
பீஷ்மர் இதனைக் கண்டு மனம் பொறாமல் பீமன்மேல் போர் தொடுக்க லானார். பீமன் பீஷ்மர் மேல் ஒரு வேலினை எறிந்தான். பீஷ்மர் உடனே தன் அம்பினால் அவன் வேலினைத் துண்டித்த தோடு, பீமனுடைய தேரைத் தரையில் முறிந்து விழும்படி செய்தார். அதோடு அவர் விடவில்லை; அத்தேரில் பூட்டியுள்ள குதிரைகளையும் துண்டித்தார். இதனைப் பார்த்துப் பீமன் பெருத்த ஆரவாரம் செய்து தன்னுடைய கதாயுதத்தினால் பீஷ்மரின் தேர்ச்சாரதியைக் கொன்றான். தன்னை எதிர்த்த கெளரவ வீரர்களைக் கொன் றொழித்தான். தேர்ச்சாரதியை இழந்த பீஷ்மர் பீமன் மேல் போர் தொடுத்தார். பாண்டவர் சேனைகளை அழிக்கலானார்.
இதனைக் கண்டு அபிமன்யு பீமனுக்குத் துணையாகத் தேரைச் செலுத்திவந்து, பகைவர் வீசிய அம்புகளையெல்லாம் அழித்தான். இதனால் துரியோதனன் கோபித்து, சேனைகளை அனுப்பி, அபிமன்யுவோடு பீமனையும் வளைத்துக் கொள்ளச் செய்தான். அதனைக் கண்டு அர்ச்சுனன் கோபித்து, பல அம்புகளைச் செலுத்திக் கெளரவர் சேனைகளை ஒரு கலக்கு கலக்கினான். சிதறவும் அடித்தான். அதனால் கெளரவர் பல்லாயிரவர் மாண்டனர். சிலர் புறமுதுகிட்டோடினர்; பலரை நாசம் செய்தான்.
உக்கிரமான போர்
கெளரவர் சேனை அர்ச்சுனனால் அழிவதைக் கண்டு துரியோதனன் கோபித்து பீஷ்மரை வேண்ட, பீஷ்மர் அர்ச்சுனன் மேல் போர் தொடுத்தார். இருவரும் சமநிலையில் நெடுநேரம் உக்கிரமாகப் போரிட்டனர். இரு பக்கங் களிலிருந்து எண்ணற்ற பாணங்கள் விடப் பட்டன; ஒருவருடைய அம்புகள் மற்றவ ருடைய அம்புகளை வெட்டித் தடுத்தன; சில சமயம் பீஷ்மர் விடும் பாணங்கள் கண்ணபிரான் திருமார்பிலும் பாய்ந்தன; அதனைக் கண்டு பார்த்தனுக்குக் கோபம் பொங்கி எழுந்தது. பார்த்தன் பீஷ்மரைப் பலவாறாகத் தாக்கினான். இருவருடைய ரதங்களும் ஒருவரை ஒருவர் தாக்கும்போது இருமருங்கும் செல்லும்போது கொடி யினால்தான் யாருடைய தேர் எங்கே உள்ளது என்பதை அறிய முடிந்தது. அந்த அளவுக்கு இருவரும் உக்கிரமாகப் போரிட்டனர். விண்ணவர்களும் இயக்கர் களும், கந்தர்வர்களும் விண்ணகத்தி லிருந்து விழிகள் மலர வியந்து பார்த்துக் கொண்டிருந்தனர்.
இவர்கள் இவ்வாறு ஆக்ரோஷமாகவும், ஆவேசமாகவும் போரிட்டுக் கொண் டிருக்கும் காலத்து மற்றோர் பக்கத்தில் துரோணரும்,சேனாதிபதி திட்டத்துய் மனும் எதிரெதிர் நின்று கடுமையாகப் போரிட்டனர். இருவருடைய பாணங்களும் வேகமாக வந்து இருவரையுமே தாக்கின. கோபங்கொண்ட திட்டத்துய்மன் தேரினின்று கீழே குதித்து, தம் கதாயுதத்தால் துரோணரைத் தாக்கினான். துரோணர் அந்தக் கதாயுதத்தை அழித்து விட்டதோடு அவனை நடக்கவும் விடாமல் அம்பு களைப் பொழிந்தார். திக்குமுக்காடிக் கொண்டிருந்த அவனை, பீமன் அங்குவந்து தன் தேர் மேல் ஏற்றிக்கொண்டு அப்பால் சென்றான். தன்னை எதிர்க்க வந்த கலிங்க மன்னனது சேனையை பீமன் அடித்துத் துவம்சம் செய்தான். அதனால் கலிங்க சேனை அலறலாயிற்று.
இரண்டாம் நாள் போர் ஓய்ந்தது
அச்சேனைக்கு உதவியாக பீஷ்மர் அங்கு வந்தார். அவரை அபிமன்யுவும், சாத்யகி யும் தடுத்து கடும்போர் செய்தனர். கௌர வர் சேனை அர்ச்சுனனாலும், பீமனாலும் நாசமடைவதைக் கண்ட பீஷ்மர் சூரியன் அஸ்மதித்ததைக் காரணமாகக் காட்டி போரை நிறுத்திக் கொள்ளலாம் என்று துரோணரிடம் சொல்லி இரண்டாம் நாள் போரினை நிறுத்தினார். இவ்வாறு இரண்டாம் நாள் போர் நடந்தது.
முதல் நாள் போரில் பாண்டவர்கள் பக்கம் சேதம் அதிகமாக இருந்தது. இன் றைய இரண்டாம் நாள் போரில் கெளரவர் பக்கம் சேதம் அதிகமாயிருந்தது. அதனால் கெளரவர்கள் மனக்கவலையுற்றனர்.
மூன்றாம் நாள் போர்ச் சருக்கம் கௌரவர்களின் கருட வியூகம்
இரண்டு நாட்கள் போர் முடிந்தன. மூன்றாம் நாள் பொழுது புலர்ந்தது. போருக்கு வேண்டிய ஆயத்தங்களைப் பீஷ்மர் செய்யத் தொடங்கினார். துரியோ தனன் பக்கம் உடனே வெற்றி கிட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் அன்று கருட வியூகம் வகுத்தார். அந்த வியூகத்தின் முகத்தில் தாமே நின்றார்.
ஸாத்வானும், கிருபரும் அந்த வியூகத் தின் இரண்டு கண்கள் ஆயினர். அஸ்வத் தாமாவும், கிருதவர்மாவும் தலைப்பக்கம் நின்றனர். பூரிசிரவஸ், சல்லியன், பகதத்தன். ஜயத்ரதன் போன்றோர் அந்த வியூகத்தின் கழுத்துப் பகுதியில் நின்றனர். துரியோதனன் தன் தம்பியருடன் பின்புறம் இருந்தான். இவ்வாறு கௌரவசேனை அணிவகுக்கப்பட்டது.
கெளரவர்களின் கருட வியூகத்தைக் கண்ட பாண்டவர்களும், தம் சேனையை அரைச் சந்திர வடிவில் அணி வகுத்தனர். பீமன் பற்பல ஆயுதங்களுடன் வலப்பக்கக் கொம்பைப் பாதுகாத்தான். இடப்பக்கத்துக் கொம்பை அர்ச்சுனன் பாதுகாத்தான். திட்டத்துய்மன், சிகண்டி போன்றோர் மத்தியிலும், தருமர், சாத்யகி, அபிமன்யு, நகுலசகாதேவர்கள் பின்புறத்தை ஒட்டியும் ஆயுதங்கள் ஏந்திப் பாதுகாத்தனர்.
இவ்வாறு அணிவகுக்கப்பட்ட சேனை கள் ஒன்றையொன்று தாக்கின. பீஷ்மர், துரோணர் முதலியோர் அர்ச்சுனனிடம் போரிடலாயினர். மறுபக்கத்தில் துரியோதனன் தன் தம்பியரோடு வந்து பீமனை வளைத்துக் கொண்டான் பீமனும் தன் அம்புகளால் பகைவர் சேனையை அழித் தான்; அந்தச் சமயத்தில் கடோத்கஜன் அங்குவந்து, தான் விடுத்த அம்பினால் துரியோதனன் தேரினை அழித்தான். அவன் கவசத்தைப் பிளந்தான். மார்பில் பல அம்புகளை ஏவினான். அம்புகள் மார்பில் பாயவே துரியோதனன் மூர்ச்சையுற்றுத் தரையில் வீழ்ந்திட்டான், அர்ச்சுனனோடு போரிட்டுக் கொண்டிருந்த பீஷ்மர் இதனை அறிந்து. அவ்விடத்தைவிட்டு நீங்கி, துரியோதனனைத் தூக்கிக் கொண்டு வந்து காப்பாற்றினார். மூர்ச்சை தெளியவைத்தார்.
துரியோதனனை மீண்டும் படைவகுப் பிலேயே நிறுத்திவிட்டு, பீஷ்மர் வில்லி னைப் பிடித்துக் கொண்டிருந்த பீமனைக் கோபித்து அவன்மேல் பல பாணங்கள் ஏவினார். அவன் நிலை தடுமாறி நின்றான். இந்தச் சமயத்தைப் பயன்படுத்திப் பீஷ்மர் பாண்டவர் சேனையைச் சிதற அடித்தார். பாண்டவர் சேனை தவிப்பதை அறிந்த அர்ச்சுனன் கண்ணளோடு அங்கு வந்தான். சிகண்டியும் அங்கு வந்தான். இருவரும் பீஷ்மரைப் பலமாகத் தாக்கினார்கள். ஆனால் பீஷ்மர் அவற்றையெல்லாம் முறி யடித்து உக்கிரமான முறையில் போரை நடத்தினார். அர்ச்சுனனுக்கும் சிகண்டிக்கும் பீஷ்மரின் தாக்குதலை நிறுத்த முடிய வில்லை. அந்த அளவுக்குப் பீஷ்மரின் தாக்குதல் பலமாக இருந்தது.
இவ்வாறே போனால் பாண்டவர் சேனை முற்றிலும் சிதறிவிடும் கௌர வர்கள் வெற்றி பெற்றுவிடுவார்கள்” என்று எண்ணிய கண்ணபிரான் திடுமெனத் தேரினின்று இறங்கி, தான் செய்த சபதத்தை மீறி, “இந்தச் சக்கரத்தினால் இந்தப் பீஷ்ம ரைக் கொல்லுவேன்” என்று கூறிச் சுதர்சனச் சக்கரத்தை ஏந்தி, பீஷ்மரை நோக்கி ஓடி வந்தார்.
பீஷ்மரின் மலர்ந்த முகம்
பீஷ்மர் அதனைக் கண்டு கலக்கமடைய வில்லை.மாறாக மலர்ந்த முகத்துடன் பேரானந்தம் கொண்டு, “மாதவா வருக! மதுசூதனா வருக! கேசவா வருக! வாசு தேவா வருக! தாமோதரா வருக | உன்னை வணங்குகிறேன் அடியேனுக்காகவே தேரி லிருந்து நீ குதித்தாய்; நீயே என் உயிரைக் கொள்வாயாக; அதன் மூலம் எனக்குப் பெரும் புகழ் அளித்தவன் ஆவாய்; உன் கையினால் நான் கொல்லப்பட்டால் எனக்கு மீளாப்பதவி (முத்தி) கிடைக்கும்” என்று கூறினார்.
இதனைப் பார்த்த அர்ச்சுனன் வேகமாக ஓடி வந்து, கண்ணனைப் பற்றிக் கொண்டு, “கண்ணா / கோபம் கொள்ள வேண்டாம்! கெளரவர்களை நிச்சயம் அழிப்பேன், இஃது உறுதி. தாங்களே சொன்ன வார்த் தையை மீறலாமா” என்று வேண்டி நின்றான். அதன்பின் கண்ணபிரான் கோபத்தை நீக்கிக் கொண்டு தேரில் ஏறி அமர்ந்தார். குதிரைகளைச் செலுத்தலா னார். அதன்பின் அர்ச்சுனன் கெளரவர் சேனையைப் பலமாகத் தாக்கிப் பெருநாசத்தை உண்டாக்கினான். அன்று கௌரவர்கள் சேனை தோல்வியுற்றது. அதன்பின் சூரிய அஸ்தமனம் ஆனதால் இருதிறத்துச் சேனைகளும் தங்கள், தங்கள் பாசறைக்குப் போய்ச் சேர்ந்தன.
கண்ணன் ஆயுதம் எடுத்ததன் காரணம்
இந்த மூன்றாம் நாள் போரில் நாம் கவனிக்க வேண்டியது ஒன்றுண்டு.
போரில் ஆயுதம் எடேன்’ என்று துரியோ தனனுக்குத் துவாரகையில் உறுதிமொழி கொடுத்த பகவான் இந்த மூன்றாம் நாள் போரில் தான் கொடுத்த வாக்கை மீறி திருச்சக்கரத்தைக் கையில் ஏந்திப் பீஷ் மரைக் கொல்லமுன் வந்ததே ஆகும்.
‘பகவானே வாக்குத் தவறலாமோ?” என்ற கேள்வி இங்கு எழுகின்றது. அதற்குரிய சமாதானம் :
பீஷ்மர் – “கண்ணபிரான் போரில் ஆயுதம் எடுப்பதில்லை” என்று துரியோ தனனுக்கு உறுதிமொழி தந்ததைக் கேள்வி யுற்ற அவர், “கண்ணனை எப்படியும் போரில் ஆயுதம் எடுக்க வைப்பேன்” என்று துரியோதனனிடம் சபதம் செய் திருந்தார். இதனை எம்பெருமான் அறிந்தி ருந்தார். ஆதலின், அப்பெருமான், “என் சபதம் தவறினாலும் தவறட்டும், என் அன்பனாகிய பீஷ்மரின் சபதம் தவறுதல் கூடாது ” என்று தம் திருவுள்ளத்தில் எழுந்த திருவருளால் இப்படி சக்கராயுதத்தைக் கையில் ஏந்தினார் என்க.
மேலும் பரமாத்வாகிய கண்ணபிரான் வாக்குத் தவறினால் யாதொரு தீங்கும் நேராது.ஏனெனில் அவர் சுதந்திரமானவர்; பாவ புண்ணியங்களுக்கு அப்பாற் பட்டவர். ஆனால் அவர் உடைமையான, ஆத்ம கோடிகளில் ஒருவரான பீஷ்மர் வாக்குத் தவறினால் அத்தீவினையின் காரணமாக மறுமையில் அவருக்கு நரகம் கிடைக்கும்.
அதனால் தன் சிறந்த பக்தனாகிய பீஷ்ம ருக்காக, அந்தக் கங்கை மைந்தன் சபதம் பொய்க்கக் கூடாதென்று கருதி, அவரை முக்தியடையச் செய்ய வேண்டுமென்று எண்ணி, தம் பெருங்கருணைத் திறத்தால், அப்பெருமான் வரம்பு கடந்து போனார் எனலாம். அன்பர்கள்பால் உள்ள பரமாத்மாவின் கருணையுள்ளத்தை இதன் மூலம் அறியலாம்.
நான்காம் நாள் போர்ச் சருக்கம் கெரளரவர்களின் வியான வியூகம்
யுத்த நிகழ்ச்சிகள் நாள்தோறும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். அடிப்பதும் கொல்லுவதும், புறங்காட்டி ஓடச் செய் வதும் தவிர வேறு ஒன்றும் அங்குமில்லை. கதையில் இதனால் சுவாரஸ்யம் இல்லா மல் போகலாம். என்றாலும் பாரத யுத்த நிகழ்ச்சியே தனி அலாதியானது. ஒவ்வொரு நாளும் நடக்கின்ற நிகழ்ச்சிகள் சுவாரஸ்யம் மிகுந்தவையாய் இருக்கும்.
மறுநாள் பொழுது புலர்ந்தது. அன்று நான்காம் நாள் எல்லாச் சேனைகளும் தம்மைத் தொடர்ந்து வரப் பீஷ்மர் புறப் பட்டுச் சென்றார். துரோணர், துரியோ தனன், சித்ரசேனன் போன்றோர் அவரைத் தொடர்ந்து சென்றனர். யானைகளுடைய பெரும் பிடரியில் பலவிதமான நிற முடைய கொடிகள் அசைந்தன. எங்கு பார்த்தாலும் தேர்களும், யானைகளும், குதிரைகளும் காணப்பட்டன. அந்தச் சேனையானது காட்டாற்று வெள்ளம் போன்று வேகத்துடன் அர்ச்சுனனை எதிர்க்கத் தயாரானது. அன்று வியானம் என்ற வியூகத்தைப் பீஷ்மர் வகுத்திருந்தார்.
தூரத்தில் இருந்து அர்ச்சுனன் பீஷ்மர் தலைமையில் பெரும்படை ஒன்று தன்னை எதிர்க்க வருவதைக் கண்டான், வெள்ளைக் குதிரைகள் பூட்டிய தேரில் வாசுதேவரின் துணையுடன் அனுமக்கொடி பறக்கப் புறப்பட்டான். யுதிஷ்டிரர் போன்றோரும் அந்த வியூகத்தைப் பார்த்தனர். இத்தகைய வியூகம் இதற்கு முன் அமைக்கப்பட்ட தில்லை என்று சொல்லும்படி அந்த வியூகம் அமைந்திருந்தது. இரண்டு பக்கத் துப் படைகளும் போருக்குத் தயாராய் உற்சாகத்துடன் நின்றன. போர் தொடங்க ஆயத்தமாகப் பேரிகைகள், முரசுகள் முழங்கின. ன. பல இன்னியங்கள் ஒலித்தன.
அபிமன்யுவுடன் போர்
அஸ்வத்தாமனும், பூரிசிரவசும், சல்லி யனும், சித்திரசேனனும் சலனுடைய மகனும் ஆகிய ஐவரும் அபிமன்யுவைச் சூழ்ந்து கொண்டு தாக்கினர். ஐந்து யானை களை ஆற்றல் மிக்க ஒரு சிங்கம் எதிர்ப்பது போல இளங்குமரன் அபிமன்யு எதிர்த்துப் போர் புரிந்தான். இப்படி ஐந்துபேர் ஒருவ னைத் தாக்குவதைப் பார்த்து அர்ச்சுனன் கோபங்கொண்டு அங்குவந்து சேர்ந்தான். அவனுடன் திட்டத்துய்மன் பெரியதொரு படையுடன் வந்து சேர்ந்தான். அப்பொழுது சலன் மகன் கொல்லப்பட்டதால் சலனும் சல்லியனும் திட்டத்துய்மனைப் பலமாகத் தாக்கினர். அப்பொழுது திட்டத்துய்மன் வில்லைச் சல்லியன் ஒரு ஒ பாணத்தால் அறுத்தான்; அதனால் அபிமன்யு கோபித்துச் சல்லியன் மேல் பெரும் பாணங்களை மழையெனப் பொழிந்தான். அபிமன்யுவின் ஆவேசத்தைப் பார்த்த வுடன், “சல்லியனுக்கு ஆபத்து வந்து விட்டது” என்று கருதித் துரியோதனன் தன் தம்பியர்களுடன் வந்து சல்லியனைக் காத்தான். அப்பொழுது பீமசேனன் அங்கு வந்தான். அவன் மீது யானைகளை மோதவிட்டான். தன்னை எதிர்த்த யானைப் படைகளைப் பீமன் தாக்கி அழித்தான்.
அந்த விலங்குகள் பெருங்கணக்கில் மாண்டு வீழ்ந்தன. யுத்தக் களத்தில் மலைகள் குவிந்து கிடப்பன போல் அந்த யானைகளின் பிணங்கள் எங்கணும் குவிந்து கிடந்தன.
பீமனுக்குத் துரியோதனனையும், அவன் தம்பியரையும் கண்டதும் ஆக்ரோஷம் பொங்கி எழுந்தது. அப்பொழுது துரியோதனன் தம்பியர்களான ஜலசந்தன், சுக்டசனன், உக்கிரன், வீரபாகு, சுலோ சனன் என்பவர்களைக் கொன்று குவித் தான். அதனால் துரியோதனன் கோபங் கொண்டு பீமன்மேல் அம்புகளைச் செலுத்தி, அவன் வில்லை ஒடித்தான். பீமன் மற்றொரு வில்லை எடுத்து அதில் கத்தியைப் போன்ற அம்பைச் சேர்த்து துரியோதனனின் வில்லை அறுத்தான். துரியோதனன் கோபமாக வேறொரு வில்லை எடுத்து பீமன் நடுமார்பில் படுமாறு கூரிய அம்பினைச் செலுத்தினான். அதனால் பீமன் மூர்ச்சையுற்றான்.
இருளில் பலம் அதிகம் கொண்ட கடோத்கஜன்
இதனைக் கண்டவுடன் பாண்டவ வீரர்களும், அபிமன்யுவும் துரியோதனன் மேல் சரமாரி அம்பு பொழிந்தனர். தன் தந்தையின் நிலையைக் கண்ட கடோத் கஜன் கோபங்கொண்டு, ஆவேசமுற்ற வனாய், பெரும்போர் ஒன்றினைத் தொடங்கினான். அதனைப் பார்த்த பீஷ்மர், “இந்த அரக்கனோடு இன்று போரிட முடியாது. நம்முடைய சேனை களைத்துப் போயுள்ளது. அரக்கனுக்கோ இருளில் பலம் அதிகம் ; நாளையதினம் பார்ப்போம்” என்று துரோணரிடத்தில் கூறி அன்றைய தினப் போரை நிறுத்திக் கொண்டார். துரியோதனன் தம்பியர் ஐவரை இழந்தவனாய் பெருந்துக்கத்தில் மூழ்கி, கண்களில் கண்ணீர் ஆறெனப் பெருகி வழிய பாசறைக்குச் சென்று சோர்ந்து அமர்ந்து விட்டான்.
போரில் நடக்கும் நிகழ்ச்சிகளையெல் லாம் வியாச பகவான் அருளால் பெற்ற ஞானக்கண் மூலம் சஞ்சயன் இருந்த இடத்திலேயே இருந்து பார்த்துக் கொண்டு, பின்னர் திருதராட்டிரருக்குக் கூறி வந்தான். அப்பொழுது தன் மைந்தர்கள் ஐவர் கொல்லப்பட்டதைக் கேட்டுப் பெரிதும் கலக்கமடைந்தார். அதனைப் பார்த்த சஞ்சயன், “இந்தத் துக்கம் உம்முடைய உறுதியற்ற மனத்தால்தானே வந்தது. இப்பொழுது வருந்திப் பயன் என்ன? இனி நடக்கும் நிகழ்ச்சிகளை உறுதியான மனத்துடன் கேளுங்கள்” என்றான். ”விதுரர் கூறிய வார்த்தைகள் உண்மையாகி வருகின்றன” என்று சொல்லிக் கொண்டு திருதராட்டிரர பெருந்துக்கக் கடலில் மூழ்கினார்.
மகாபாரதம் – 45 இரண்டாம், மூன்றாம், நான்காம் நாள் போர்ச் சருக்கம் கெரளரவர்களின் வியான வியூகம்