பாண்டவர்கள், கௌரவர்கள் ஆகிய இருதிறத்தைச் சேர்ந்த மன்னர்களும் விடியற்காலையில் எழுந்து, காலைக் கடன்களை முடித்துக் கொண்டு, சூரியனை வணங்கி, கொடிய ஆயுதங்களை ஏந்திக் குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் முறையே பாண்டவர்களோடும் கெளரவர்களோடும் சேர்ந்து நின்றார்கள்.
போர்முறையில் பண்டைக்காலத்தவர் சில விதிகளைக் கடைப்பிடித்தார்கள். யுத்தத்தில் தனக்குச் சமமானவர்களையே தாக்கவேண்டும் என்பது அவற்றில் ஒன்று; அதர்மமான முறையில் போர் செய்யக் கூடாது; போரின் மத்தியில் விலகிப் போகின்றவர்களையோ, புறங்காட்டி ஓடுகின்றவர்களையோ தாக்கக்கூடாது. “பகைவரை வெகுண்டு நோக்கிய கண், அவர் வேலைக் கொண்டு எறிய, அஃதாற் றாது அந்நோக்கை அழித்து இமைக்கு மாயின் அது வீரர்க்குப் புறங்கொடுத்த லாம் ” என்று அ அறநூல் பாடியுள்ளது. யானை வீரன் யானை வீரனையும், காலாட் படை வீரர் காலாட்படை வீரனையும், மன்னர்கள் மன்னர்களையும், வீரர்கள், வீரர்களையும் தாக்க வேண்டும் என்பது எழுதாத மரபு; நிராயுதபாணியாக நிற்பவன் மீதும், ஏவலர்கள், முரசொலிப்பவர்கள் சங்கு ஊதுகின்றவர்கள், முதலானவர்கள் மீது ஆயுதங்கள் வீசுதல் கூடாது. இந்த முறையில் யுத்தம் செய்வதாகப் பாண்டவர்களும் – கெளரவர்களும் பிரதிக்ஞை எடுத்தார்கள்.ஆனாலும் அவர்களே பல சமயங்களில் மீறியும் இருக்கின்றார்கள் என்பது நிதரிசனம் என்றாலும் பொதுவாக இருவரும் பொது விதிகளைக் கடைப் பிடித்தார்கள்.
போர்க்களத்தில் பல கொடிகள்
பனைமரமும், ஐந்து நட்சத்திரங்கள் கூடிய பிதாமகர் பீஷ்மருடைய கொடியும், வாலொடு கூடிய சிம்மத்தின் உருவம் எழுதிய அஸ்வத்தாமன் கொடியும், கமண்டலமும் வில்லும் கூடிய துரோணர் கொடியும், படம் எடுத்த பாம்பையுடைய துரியோதனன் கொடியும், காளை மாட் டினை எழுதிய கிருபர் கொடியும், ஜயத்திரனது பன்றிக் கொடியும், குரு க்ஷேத்திரப் போர்க்களத்தில் அணிவகுத்துப் பறந்து நின்றன. இன்னும் பல மன்னர்களின் பல்வகையான கொடிகள் பறந்து விளங்கின.
அணிவகுக்கப்பட்ட கௌரவ சேனை யைப் பார்த்துத் தருமபுத்திரர், “அர்ச்சுன னிடம், “பகைவர்களுடைய படை மிகப் பெரியது; குறைவாக இருக்கின்ற நம் படையை பரவலாக நிற்கச் செய்து பலம் குறையாமல் போர் புரிய வேண்டும். அதற்கு ஊசிமுக வியூகமாக நம்முடைய படையை அணிவகுப்புச் செய்வாயாக” என்று கூறிக் கட்டளையிட்டார்.
அப்பொழுது அரண்மனையில் திருத ராட்டிரர் இந்தக் குருக்ஷேத்திரப் போரில் தன் மைந்தர்களுக்கு என்ன நேரிடுமோ எனக் கதி கலங்கினார். அதனால் வேதங்களை வகுத்த வியாச பகவானை நினைத்தார். நினைத்தவுடனே அவரும் எதிரே வந்து நின்றார். வந்த தாதையைத் திருதராட்டிரர் எதிர் கொண்டு சென்று வணங்கி, முகமன் கூறி உபசரித்து இருக்கையில் அமரச் செய்தார். பின்னர் “பகவானே! போர் மூண்டு விட்டது.என் மைந்தர்கள் இந்தப் பெரும்போரில் என்ன ஆவார்களோ என அஞ்சுகின்றேன்; போர்க் களத்தைப் பார்க்கவும் எனக்குக் கண்கள் இல்லை; நான் என்ன செய்வேன்?” என்று மனம் நொந்து கூறினார். அதனைக் கேட்டு வியாசபகவான் தன் தவவலிமையால் கண் பார்வையைக் கொடுத்துப் போர்க்களத் தைப் பார்ப்பாயாக” என்றார். போர்க் களத்தை ஒரு கணநேரம் பார்த்த அவர், “ஐயனே! இந்தக் கிழ வயதில் இந்தக் போர்க்களத்தில் நடக்கும் இறப்புக்களை என்னால் பார்க்க இயலாது; பழையபடியே எனக்குக் கண்பார்வை இல்லாமல் செய்து விட வேண்டும்” என்று வேண்ட வியாச பகவானும் கண் பார்வையை நீக்கி விட்டார்; பிறகு அவர், “திருதராட்டிரனே! உனக்குப் பதிலாகச் சஞ்சயனுக்கு அறிவுக் கண்களைக் கொடுத்துள்ளேன். போர்க்கள நிகழ்ச்சிகளை அவன் கண்டு, அவ்வப் போது உனக்குக் கூறுவான். போரில் இன்று வென்றவர் நாளை தோற்பார்; நாளை தோற்பவர் மறுநாள் வெல்வார். எந்தப் பக்கமும் எந்த நேரத்திலும் எதுவும் நிகழும். எதற்காகவும் அஞ்சாதே. எல்லாம் விதிவழி நடக்கும் ‘ என்று கூறிச் சென்றார். திருதராட்டிரர் போர் எங்கே நடக்கிறது என வினவ, சஞ்சயன் ஞானக் கண்ணால் பார்த்து, ‘குருக்ஷேத்திரம்’ என்றான்.
இருபக்கங்களிலும் இருதிறத்துச் சேனை களும் அணிவகுத்து நின்றன. விராடன் மூத்த மகன் சுவேதன் தலைமையில் பாண்டவர் படையும், பிதாமகர் பீஷ்மர் தலைமையில் கௌரவர் படையும் எதிர் எதிர் நிற்கின்ற காலத்து, கண்ணபிரான், அர்ச்சுனன் வீற்றிருக்க தேரினையோட்டி போர்க்களத்தின் மையத்தில் வந்து நின்றார். அப்பொழுது அர்ச்சுனன், கண்ணபிரான் எதிரே நிற்கின்ற கௌரவர் படையைக் கண்டான். அணி தேர், புரவி, யானை ஆட்பெரும் படையோடு, தன் பாட்டனார் பீஷ்மர் சேனைத் தலைவராய் விளங்கக் கண்டான். மற்றொரு பக்கத்தில் தன் ஆசார்யர்களான கிருபாசாரியாரும். துரோணாசாரியாரும் தேர்களில் நிற்கக் கண்டான். சிறிது நேரம் பார்த்தான். தன் எதிரே நிற்பவர்கள் யார் யார்? அவர்கள் தனக்கு எந்த வகையில் உறவு முறையினர். எந்தவகையில் நண்பர்கள் என எண்ண லானான். அதன்பின் அவன் உள்ளத்தில், “குருகுல மேன்மைக்கே தன்னை அர்ப் பணித்த பிதாமகர்,தனக்குக் கல்விக் கண்ணைத் தந்த ஆசார்யர்கள், சகோ தரர்கள், உறவினர்கள், நண்பர்கள் என்கிற இவர்களையெல்லாம் கொன்று அடையப் போவது இந்தக் குருநாடுதான். அதுவும் சிலகாலம் தான் தன் தமையன் ஆளப் போகின்றான். இந்தச் சில கால நன்மைக் காக இந்தப் பெரிய சான்றோர்களை, உடன்பிறப்புக்களைக் கொல்வது பாவம் அல்லவா! நாம் செய்வது சரியான செயலா! முறையானதுதானா!” என்று எண்ணி னான். தேர்த்தட்டில் வீரத்தோடு நின்றிருந்த அவன் சோர்ந்து அமர்ந்துவிட்டான். கையில் இருந்த காண்டீப வில் தானாகக் கீழே விழுந்தது. வீரம் மறைந்தது. சோர்வு தட்டுப்பட்டது.
காட்டிற்குச் சென்று தவம் செய்வதே மேல்
உடனே அவன் கண்ணனைப் பார்த்து, “பாரளந்த பெருமானே! கண்ணபிரானே. என்னை மன்னிக்க வேண்டும். இனி நான் போர் செய்யேன்; என்னுடைய அன்புக் குரிய பிதாமகரையும், ஆசார்யார்களையும், சகோதரர்களையும், உறவினர்களையும் கொன்றுதானா இந்தக் குரு நாட்டை அடைய வேண்டும். நாட்டைப் பெற்று எத்தனை நாள் ஆளப் போகின்றோம். சில காலம் தானே! அதைவிடக் காட்டிற்குச் சென்று தவம் செய்வதே மேல். முத்தியாவது கிடைக்கும்” என்று பலவாறு கூறினான்.
அறிவிற் சிறந்த பார்த்தனே! இஃது உனக்கு அழகன்று
அதனைக் கேட்டுக் கண்ணபிரான், “அர்ச்சுனா! மனம் தளராதே! உள்ளதை இல்லாததாகவும், இல்லாததை உள்ள தாகவும் காட்டும் எம்பெருமானது சக்தியே மாயை. மனம் அந்த மாயைக்கு வசப்பட்ட போது, பொருள்களின் உண்மை நிலையை உள்ளபடி அறியக் கூடிய தத்துவ ஞானம் தோன்றுவதில்லை. ஆகவே நிலையுள்ள பொருள்களை நிலையில்லாதன என்றும், நிலையில்லாத பொருள்களை நிலையுள்ள பொருள்கள் என்றும் மாறுபட்டு அறியும் படியான விபரீத ஞானம் தலையெடுக் கின்றது. ஆத்மாவுக்கு யாதொரு சம்பந்தமு மில்லாத அநித்தியமான தேகத்தைப் பற்றியே, தாயே என்றும் தாரமே என்றும் தந்தையே என்றும், சகோதரரே என்றும் எண்ணக் கூடிய பொய்யபிமானம் உண்டா கித்தலை நிற்கும், அத்தகைய மாயையினால், அதன் வசப்பட்டு, உண்மைத் தத்து வத்தை உணராமல், அறிந்து கொள்ளாமல் நீ பேசுகின்றாய். அறிவிற்சிறந்த பார்த் தனே! இஃது உனக்கு அழகன்று.
”நிலம், நீர், தீ, காற்று ஆகியவற்றால் அழிந்து படாமல், முழுமையுடையதாய். வடிவம் ஒன்றும் இல்லாததாய், என்றும் நிலைத்திருக்கின்ற ஞானம் என்னும் ஆன்மாவை, உன் அம்புகளினால் துண் டாக்க முடியுமா? நெருப்பினால் எரிக்க முடியுமா? தண்ணீரில் அழித்திக் கொல்ல முடியுமா? நனைக்கவாவது முடியுமா? காற்றில் உலர்த்த முடியுமா? இயலாது என்பது வெளிப்படை. எனவே ஆன்மா என்பது நித்யமாய், எங்கும் நிறைந்ததாய். ஸ்திரமுள்ளதாய், அநாதியாயிருக்கின்ற ஒன்றாகும் என்பதை அறிந்து கொள்க; அது மட்டுமன்று காண்டீபா! ஆன்மா பிறப்பற்றது. இறப்பற்றது; குறைதலற்றது; உயருதலற்றது; நாசமற்றது என்று தெளிகின்றவன் ஆன்மாவைக் கொல்ல முடியாது என்பதை உணர்வான்.
“தான் தரித்திருக்கும் ஆடையை விடுத்து வேறோர் ஆடையை அணிவது போல இந்த உடல் தரித்துள்ள ஆன்மா, இந்த உடல் போனபின் வேறொருடலில் சேர் கிறது.அதுதான் இயல்பு; இந்த ஆன்மாவை நடத்துபவன் சர்வேசுவரன் ஆகிய பரமாத்மா. ஆகையினால் இந்த ஆன்மாவை நான் என்றோ எனது என்றோ எண்ணி அகங்கரித்தல் கூடாது. அநித்திய மான இந்தத் தேகத்தை நிலை பெற்றது என எண்ணச் செய்வது மாயையாகும்.
என்னிடம் சரண் அடைவாயாக
”மேலும் எல்லாச் சீவாத்மாக்களிடத்தும் பரமாத்மா ஒரு தன்மையாய்ப் பொருந்தி இருக்கையில் சிலவற்றைப் பகை என்றும் சிலவற்றை நட்பு என்றும் கருதுவது மாயையின் செயல். அந்த மாயை நீங்கு மாயின் தத்துவஞானம் தோன்றும். அத்த கைய மாயையைத் தாண்டுவது என்பது மிகக் கடினமான செயல். யார் என்னையே சரண் அடைகின்றார்களோ அவர்கள் இந்த மாயையைத் தாண்டிவிடுகிறார்கள்; எல்லா விதமான அறங்களையும் துறந்து என்னிடம் சரண் அடைவாயாக; உன்னை எல்லாப் பாவவிளைவுகளினின்றும் நான் விடுவிக்கின்றேன் பயப்படாதே;
(“ஸர்வதர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ
அஹம்த்வாம் ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ் மாஷுச”)
-பகவத்கீதை ஸ்லோகம்)
இதனைச் ‘சரமஸ்லோகம்’ என்பர்.
“தோன்றுகின்ற தத்துவஞானமே எல்லாச் சீவான்மாக்களிடத்தும் மிக்க ருசியையுடைய பாலினிடத்து நெய் பிரியாது போல விட்டுப் பிரியாது உள்ளுறைந்து நிற்கும்.
வாய்விட்டு இன்னதெனச் சொல்லு தற்கு இயலாத அந்தத் தத்துவ ஞானமே நான். தனஞ்சயா! இதனை அறிந்து கொள்க. இனி என்னைப் பற்றிச் சொல்லுகிறேன் கேள் :
எல்லா இடங்களிலும் எல்லாமாக விளங்குபவன் நானே. என்னைக் காட்டிலும் சிறிதளவும் உயர்ந்தது இல்லை நூலில் கோக்கப்பட்ட மணிகள் போல இவ்வுலகம் முழுவதும் என்னைப் பற்றி நிற்கின்றது.
“நீரிலுள்ள ரஸம் நானே! சந்திரனிலும், சூரியனிலுமுள்ள ஒளியும் நானே! சகல வேதங்களின் முடிவும் நானே! விண்ணி லுள்ள சப்தமும் நானே! மனிதர்களின் வீரமும் நானே! பூமியின் நறுமணமும் நானே! அக்னியின் அனலும் நானே! முனிவர்களின் தவமும் நானே. ஸகல பூதங்களுக்கும் விதை நானே! அறிவாளி களிடமுள்ள அறிவும் நானே! ஆசை, பற்று இவையற்ற ஞானிகளின் பலமும் நானே! இவை மட்டுமா! அர்ச்சுனா!
“உயர்ந்த யானைகளில் ஐராவதம் நான்! அமிர்தத்துடன் உண்டான உச்சைச் சிரவஸ் என்னும் குதிரை நான்! ஆயுதங்களுள் வஜ்ராயுதம் நான், காமதேனு நான். படைப்புத் தொழில் புரியும் பிரம்மன் நான், பாம்புகளுள் வாசுகி நான், நாகங் களுள் அனந்தன் என்பவன் நான், தண்டித்து அடக்குபவர்களில் இயமன் நான், காற்று நான், இராமன் நான், மீன்களுள் மகரம் நான், நதிகளுள் கங்கை நான், சிருஷ்டி களின் ஆதியும், அந்தமும், மத்தியும் நான், வித்தைகளுள் ஆன்மவித்தை நான், எழுத்துக்களுள் அகரம் நான், முடிவில்லாத காலமும் நான், பிறப்பும் நான், இறப்பும் நான், உயிர்களிடமுள்ள புகழ், செல்வம், பேச்சு, ஞாபக சக்தி, புத்தி ஆகிய எல்லாமும் நான், மாதங்களில் மார்கழி நான். காலங்களில் வசந்தம் நான். ஒளி நான், முயற்சி நான், வெற்றி நான், ஸத்வ குணம் நான்; முனிவர்களுள் வியாசன் நான், ஸகல பூதங்களுக்கும் ஆதி காரணம் நான்.
அதனால் கடமையைச் செய்! விளை வைப் பற்றிக் கவலைப்படாதே! பால புண்ணியங்களை என் மேல் சார்த்து.. என்று பலவாறு உபதேசித்து எம்பெருமான் விண்ணுக்கும் பாதலத்திற்குமாக விசுவரூப மெடுத்து ஓங்கி வளர்ந்து நின்றார்.
போருக்குத் தயாரான அர்ச்சுனன்
யாவர்க்கும் துதித்தற்கு அரிதாகிய அந்தப் பேருருவத்தில் ரிஷபக் கொடியை யுடைய சிவபெருமான்; கருடக் கொடியை யுடைய திருமால், நான்முகன், முருகப் பெருமான், இந்திராதி தேவர்கள், முனி வர்கள் இருந்திடக் கண்டு அஞ்சி நின்றான்; வியந்தான்; பின்னர் அர்ச்சுனன் இருகை களையும் கூப்பி, வணங்கி, “உலகமுண்ட பெருவாயா! உலகளந்த பெருமானே! ஆலிலைப் பாலகனாய் இருந்து அவனி களைக் காத்த பெருமானே! முன் செய்த தவத்தினால் இந்தக் கிடைத்தற்கரிய விசுவரூப தரிசனம் கிடைத்தது. பெரு மானே! பரந்தாமா! இந்தப் பேருருவத்தைக் கண்டு அஞ்சுகின்றேன். முன்னம் இருந்த வடிவிலே விளங்குவீராக” என அவன் திருவடிகளில் வணங்கி, வேண்டி நின்றான். அமலன் ஆதி பிரானாகிய அப்பெருமானும் உள்ளம் உவந்து முன்னம் இருந்தது போல ஒடுங்கி நின்றான். அதன்பின் அப்பெருமான் “நீ மேற் கொண்ட விபரீத ஞானத்தை விட்டொழிப் பாயாக என்று கூறி தத்துவ ஞானம் அனைத்தையும் கூறினான். அதனால் அர்ச்சுனன், தன்னிடத்திலிருந்த மாயை அவனருளால் நீங்க அவன் தெளிவு பெற்றான். பழைய நிலையை எய்தினான். காண்டீபத்தைக் கையில் எடுத்தான். போருக்குத் தயாராய் நின்றான்.
இருபக்கங்களிலும் சேனைகள் அணிவகுக்கப்பட்டு நின்றதும், அதனால் அர்ச்சுனனுக்கு ஏற்பட்ட மனக்கலக்கமும், அதனைத் தீர்க்கக் கண்ணபிரான் உப தேசித்த கரும யோகமும் உலகம் பிரசித்தி பெற்றவை ஆகும். அப்போது கண்ண பிரான் வாக்கில் தோன்றிய ‘பகவத் கீதை’ என்னும் உபதேச மொழிகள் எந்தத் தொழிலில் ஈடுபட்டவர்களுக்கும், எத்தகைய குணங்களையுடையவர்களுக்கும்; “எத்தகைய இனத்தவர்க்கும், ஓர் அருமை யான வழிகாட்டியாகும். அம்மொழிகள் எல்லோருக்கும் உதவும்படியான, அருமை யான சாஸ்திரமாகச் சான்றோர்களால் மதிக்கப்பட்டு வருகின்றது. இந்த மகா பாரதத்தில் ஒரு பாகமாக வரும் இந்தப் பகவத் கீதை, எந்தெந்த சமயத்தில் எந் தெந்தக் கடமையைச் செய்ய வேண்டுமோ அதனைச் சரிவரச் செய்ய வேண்டும் அதன் பயனை எம்பெருமானுக்குச் சமர்ப்பித்து விட வேண்டும். பயனை எதிர்பார்க்கக் கூடாது” என்ற முக்கியமான கருத்தை வலியுறுத்துகின்றது.
பார் அளந்த பரந்தாமனுடைய திருவாயி லிருந்து வந்த இந்தப் பகவத் கீதை என்னும் ஒப்பற்ற அரிய சாஸ்திரத்தை எல்லோரும் பாராயணம் செய்ய சய்ய வேண்டும்.
இந்தப் பகவத் கீதையில் கண்ணபிரான் அறுநூற்றிருபது ஸ்லோகங்களைச் சொல்லி யுள்ளார். அர்ச்சுனன் ஐம்பத்தேழு ஸ்லோ கங்களைச் சொல்லியுள்ளான். சஞ்சயன் அறுபத்தேழு ஸ்லோகங்களைச் சொல்லி யிருக்க; திருதராட்டிரர் மட்டும் ஒரே ஸ்லோகம் கூறியுள்ளார். இந்தப் பகவத் கீதை என்னும் தெய்விக நூலில் எழுநூற்று நாற்பத்தைந்து ஸ்லோகங்கள் அடங்கி யுள்ளன.
தரும புத்திரர் ஆசி பெறுதல்
கண்ணன் தேர்த்தட்டில் இருந்து அருளிய கீதோபதேசத்தைக் கேட்டு, அர்ச்சுனன் மனத் தெளிவு அடைந்தான். உடனே எழுந்து நின்று, கையில் காண்டீ பத்தை ஏந்தினான். அதனைக் கண்டு பாண்டவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்; பாண்டவ வீரர்கள் ஆரவாரம் செய்தார்கள்; தத்தம் சங்குகளை எடுத்து ஊதினார்கள்; பேரிகைகளும், முரசங்களும் முழங்கின; போர்க்களம் எங்கும் பேரொலி எழுந்தது. இந்திராதி தேவர்கள் போரினைக் காண விண்ணில் திரண்டார்கள்.
அப்பொழுது தருமபுத்திரர் தன் தேரில் எழுந்து நின்று இருபக்கத்துச் சேனை களையும் நன்றாகப் பார்த்தார். தன்னுடைய ஆயுதங்களையும், கவச உடையையும் தேர்த்தட்டில் வைத்தார். தேரிலிருந்து இறங்கினார். நிராயுத பாணியாகக் கைக் கூப்பிய வண்ணம் கிழக்கு நோக்கி எதிர்த்திசையிலிருந்த கௌரவர் சேனையை நோக்கிச் செல்லலானார்.
தன் தமையனார் தேரினின்று இறங்கிக் கைகூப்பிய வண்ணம் கௌரவர் சேனையை நோக்கிச் செல்வதை அர்ச்சுனன் பார்த்தான். அச்சம் கொண்டான். காரணம் புரியவில்லை. என்றாலும் அவரைப் பின் தொடர்ந்து செல்லலானான். அவர்கள் இருவரும் செல்வதைப் பார்த்து, அவர்கள் இருவரையும் தொடர்ந்து கண்ணபிரான், பீமன், நகுலன், சகாதேவன் ஆகியோர் தொடர்ந்து சென்று தருமரிடம் “எதிரியின் படை நடுவில் நிராயுதபாணியாய்ச் செல்லக் கூடாது” எனக் கூறினர். அவர் அதனைக் கேட்காது சென்று கொண்டிருந் தார். அதனால் அவர்களும் அவர் பின் சென்றனர். இதனைத் துரியோதனாதியர் கண்டனர். “அச்சத்தின் காரணமாகத் தம்பிகளுடன் சரண் அடைய வருகின்றார் எனவும்”. இது குருகுலத்திற்கு அபகீர்த்தி தரும் எனவும் பேசிக் கொண்டனர். ஆனால் தரும புத்திரரோ அவற்றை யெல்லாம் பொருட்படுத்தாது தம் குல முதல்வரான பிதாமகர் பீஷ்மரை அணுகி அவருடைய திருவடிகளைப் பற்றிக் கொண்டு வணங்கினார். “அண்ணலே! கெளரவர் சேனையுடன் போர்புரிய தங்கள் அனுமதியும், ஆசியும் வேண்டுகிறேன்” என்று அப்பொழுது கூறினார். அதனைக் கண்டு மகிழ்ந்த பீஷ்மர், “பரதகுலத் தோன்றலே! நீ என்னிடம் அனுமதி கேட்ட தற்காகப் பெருமகிழ்ச்சி அடைகிறேன். நான் துரியோதனன் பொருட்டுக் கெளரவர் சார்பில் போரிடுகின்றேன். ஆனாலும் தருமம் உங்கள் பால் உள்ளது. தருமத் திற்குத் தோல்வியில்லை. மகிழ்வுடன் போய் வா” என்று கூறி அனுப்பினார். அதே போலத் தருமபுத்திரர் துரோணர், சல்லியன் ஆகியோரிடமும் ஆசிபெற்றார்.
உடன் வந்த கண்ணபிரான், பீஷ்மரைப் பார்த்து, ”பெரியோய்! உங்கள் பேரர் களாகிய பாண்டவர்களை எதிர்த்துத் தாங்கள் போரிடுதல் தகுமா? அவர்களால் பெருவீரரான தங்களை வெல்ல முடியுமா?” என்று கேட்டார். (பீஷ்மர் தான் நினைத்த பொழுது உயிரை விடுதல் முதலிய வரங்களைப் பெற்றவர் ஆதலாலும்; யாவராலும் வெல்ல முடியாத பராக்கிரமசாலியாதலாலும் அவரைக் கண்ணன் இவ்வாறு கேட்டார்.)
நான் விரும்பும்போது உயிர் துறப்பேன்
அதற்கு உலகப்பற்றுக்களை விட்ட பீஷ்மர், “கண்ணா! கார்மேகவண்ணா! கமலக்கண்ணா! துரியோதனனின் கடனைத் தீர்க்கும் பொருட்டுக் கெளரவர் பக்கம் சார்ந்து போரிட வேண்டியுள்ளது. ஆனா லும் தெய்வத்திற்கும், மனசாட்சிக்கும் விரோதமில்லாமல் போர் செய்வேன். முற் பிறப்பில் அம்பை என்ற பெயரிலே இருந்து என்மீது கோபங்கொண்டு என் னைக் கொல்ல வேண்டுமென்று முயன்று வருகின்ற சிகண்டி என்னும் அலி என்முன் போரில் வந்து வில்லை வளைத்து அம்பை எய்ய நிற்பாளாகில், நான் என் கையில் உள்ள வில்லைக் கீழே போட்டுவிடுவேன். போர் செய்யமாட்டேன். அந்தச் சிகண் டியை முன்னிட்டுக் கொண்டு அர்ச்சுனன் போர் செய்வானேயாகில் நான் தரையில் சாய்வேன். பிறகு நான் விரும்பும்போது உயிர் துறப்பேன்” என்று பாண்டவர் தன்னை வெல்வதற்குரிய உபாயத்தை எடுத்துக் கூறினார். கண்ணபிரான் அவரிடம் விடை பெற்றுக் கொண்டு ஆசார்யர் துரோணரிடம் சென்றார்.
ஆசார்யர் துரோணரிடம் சென்ற கண்ண பிரான், “ஆசார்யத் துரோணப் பெருந்தகையே! தங்கள் மாணவர்களுடன் போரிடுவது தங்களுக்குத் தகுதியானது தானா? அவர்களால் பெரு வீரரான தங்களை வெல்ல முடியுமா?” எனக் கேட்டார்.
அதற்குத் துரோணர், “பரந்தாமா! பாற் கடல் வண்ணா! பாரளந்த கண்ணா! துரியோதனனின் கடனைத் தீர்க்கும் பொருட்டுக் கெளரவர் பக்கம் போரிடு கின்றேன். ஆனாலும் தெய்வத்திற்கும், மனசாட்சிக்கும் விரோதம் இல்லாமல் போரிடுவேன், நான் அஸ்திரங்களைக் கீழே வைத்து, யோக பலத்தினால் உடல் பற்றற்று மரணத்தினை விரும்பினாலன்றி போரில் என்னை யாரும் கொல்ல முடி யாது. அதற்கு நம்பத் தகுந்த மனிதரிடம் இருந்து உண்மை அல்லாத வார்த்தையைப் கேட்பின் அஸ்திரங்களைப் போர்க்களத் தில் எறிந்துவிடுவேன். அப்போது உயிரை இழப்பேன்” அதன்பின்னர் தருமர் என் என்று கூறினார். சல்லியனிடம் ஆசி பெற்றார். கண்ணபிரான் கர்ணனை நாடிச் சென்று, “கர்ணா! பீஷ்மர்மேல் கொண்ட கோபத்தினால் நீ போரில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று கேள்விப் பட்டேன்; அப்படியென்றால் நீ பாண்டவர் களிடம் சேர்ந்து விடலாமே” என்றார். அதற்குக் கர்ணன், “கண்ணா! துரியோத னனுக்கு விருப்பம் இல்லாத எந்தச் செயலையும் நான் செய்யமாட்டேன்” என்று கூறி அவர் கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டான். பின்னர் தருமபுத்திரர் முதலான பாண்டவர்களும், கண்ண பிரானும் மீண்டும் தங்கள் இருப்பிடம் வந்து சேர்ந்தனர்.
தன்னிருப்பிடம் வந்து சேர்ந்த பின்னர் தருமபுத்திரர் இருபக்கச் சேனைகளின் நடுவிலே நின்று கொண்டு, ”எங்களை விரும்புகின்றவர்கள் இப்பொழுது கூட எங்கள் பக்கம் சேரலாம்” என்று உரத்த குரலில் கூறினார். அதனைக் கேட்டுத் திருதராட்டிரருக்குப் பணிப்பெண் மூல மாகப் பிறந்த ‘யுயுத்சு’ என்பவன் துரியோ தனாதியரைவிட்டு நீங்கிப் பாண்டவர் பக்கம் சேர்ந்து கொண்டான். பாண்ட வர்களும் அவனைத் தம் பக்கம் சேர்த்துக் கொண்டனர்.
எதிரணியினர் என்று கருதாது பீஷ்மர், துரோணர், சல்லியன் முதலானவரிடம் ஆசி பெற்று வந்த தருமபுத்திரரின் பெருந் தன்மையை வியந்து அனைவரும் பாராட்டினர். பாண்டவர்கள் போருக்குத் தயாராகிவிட்டார்கள் என்பதை அறிந்து திட்டத்துய்மன் மகிழ்ச்சி அடைந்தான். இனி நடக்கவிருக்கும் முதல் நாள் போரைக் காண்போம்.
மகாபாரதம் – 43 பீஷ்ம பர்வம்… பகவத் கீதைச் சருக்கம் | Asha Aanmigam