களப்பலி என்பது போர்க்களத்துக்குரிய தேவதையான காளிக்குக் கொடுக்கும் பலியாகும். பலி என்பது தேவர்க்கு இடும் உணவு ஆகும். போர் ஆரம்பிப்பதற்கு முன் சிறந்ததொரு முகூர்த்தத்தில் முப்பத் திரண்டு லக்ஷணங்களையுடைய சிறந்த ஓர் ஆண்மகனை அவளுக்குமுன் பலி பலி கொடுப் பர். பலிக்குரியவன் கூட தன் அங்கங்களை ஒவ்வொன்றாக அறுத்துக் குருதி சொட்டச் சொட்ட தானே தன் அங்கங்களை அக்காளி தேவிக்குப் படைப்பதுமுண்டு. இதனைக் கலிங்கத்துப்பரணி
(வீரர்கள்) அடிக்கழுத்தினுடன் சிரத்தை அரிவராலோ;
அரிந்த சிரம் அணங்கின்கைக்கொடுப்பராலோ;
கொடுத்த சிரம் கொற்றவையைப் பரவுமாலோ;
குறையுடலம் கும்பிட்டு நிற்கு மாலோ.
[அணங்கு காளி; குறையுடலம் (கோயில்பாடியது)
என எடுத்துக்காட்டுகின்றது. இவ்வாறு பலிகொடுப்பவர் தவறாமல் வெற்றி பெறுவர் என்பது நம்பிக்கை. இந்தக் களப்பலியைப் பாண்டவர்கள் எந்த தாளில், யார் உதவியுடன், யாரைக் களப்பலி இட்டனர் என்பதை இனிக் காணலாம்.
சேனைத் தலைவரான பீஷ்மர்
சேனைத் தலைவராகப் பீஷ்மர் நியமிக்கப்பட்டபின், துரியோதனன் பீஷ்மரை வணங்கி, “சேனாதிபதியே! போர்க்களத்தில், போர் தொடங்குவதற்கு முன் எந்த நாளில், யாரை களப்பலி கொடுக்கலாம் சொல்லுங்கள் ” என்று கேட்டான். அதற்குப் பீஷ்மர், “பயன் தவறுதல் இல்லாத நல் முகூர்த்த தினத்தை அமைக்க வல்லவன் சகாதேவனேயன்றி வேறு எவரும் இல்லை. ஆதலால் இன்றே சென்று அவனிடம் கேட்டு நாள் குறித்து வாருங்கள். எதிர்ப்பக்கத்தில் அர்ச்சுனன் மகன் இரவான் என்பவன் முப்பத்திரண்டு லக்ஷணங்களையுடைய ஓர் அழகுடைய சிறந்த ஆண்மகன் உள்ளான். அவன் நம் படைகள் அனைத்தையும் ஒரு பகற் பொழுதில் கொன்று குவிக்க உறுதி பூண்டுள்ளான். அந்த வீரனை வேண்டி னால் அவன் சம்மதிப்பான். அந்த இள மைந்தனைக் களப்பலி கொடுத்திட்டால், திட்டமிட்டபடி பாண்டவரை வெற்றி கொள்வதோடு அரசாட்சியையும், நல்ல வாழ்க்கையையும் பெறலாம்” என்றார்.
துரியோதனன் அதனைக் கேட்டு உடனே ஓர் அன்னவடிவமான ஊர்தியில் சகாதேவன் இல்லத்தை அடைந்தான். பகைவர்,நண்பர் என்று வேறுபாடு காட்டாது நடுநிலையோடு விளங்கும் சகாதேவனி டம்,தான் வந்ததற்குரிய காரணத்தைக் கூறினான். உடனே அவனும் நல்ல பஞ்சாங்கத்தைப் பார்த்து விட்டு, “மார்கழி மாதத்தில் சூரியனைச் சந்திரன் கூடிய அமாவாசையன்று இரவில் களப்பலி கொடுத்தால் போரில் வெல்லலாம் ” என்றான். அதனைக் கேட்டு அறிந்து கொண்டபின் அங்கிருந்து நேராக அர்ச்சுனன் மகன் இரவானிடம் சென்றான். அவனிடம் தான் வந்ததற்குரிய காரணத்தைத் துரியோதனன் கூறினான். அந்த இரவானும் பகைவனென்று எண்ணாது முதலில் வந்து கேட்டதால் தன்னைக் களப்பலி கொடுத்திடுமாறு கூறிவிட்டான். துரியோதனன் மகிழ்ச்சி நிறைந்தவனாய் அஸ்தினாபுரம் திரும் பினான்
காலத்தை மாற்றிக் காட்டும் மாயக் கண்ணன்
துரியோதனனுக்குச் சகாதேவன் களப் பலிக்கு நாள் வைத்துக்கொடுத்ததையும் அக்களப்பலிக்கு இரவான் உடன்பட்ட தையும் கண்ணபிரான் அறிந்த கொண்டார். அதனால் அப்பெருமான் குறித்துக் கொடுத்த அமாவாசையை முன் நாளுக்கு வரும்படி செய்யவும், இரவானைத் தமது களப்பலிக்குப் பயன்படுத்திக் கொள்ளவும் எண்ணி, முடிவு டிவு செய்து கொண்டு, முந்தின நாளாகிய சதுர்த்தசியன்றே அமாவாசை வரும்படி தமது திவ்விய சக்தியால் வரச் செய்து, முனிவர்களை அழைத்து “சதுர்த்தசியாகிய இன்றைக்கே அமாவாசை” என்று கூற கண்ணன் கட்டளைப்படி சதுர்த்தசி அன்றே அமாவாசை என அவர் களும் கொண்டாடினர். அப்பொழுது சூரிய சந்திரர் ஆகிய இருவரும் ஒருங்கே வந்து, “சதுர்த்தசியாகிய இன்றைக்கு அமாவாசை எப்படி ஆயிற்று” என்று றிக் காட்டும் காலத்தையும் மாற்றிக் மாயக் கண்ணனைக் கேட்டனர். அப்பெருமான் அப்பொழுது சமயோசிதமாக, “சூரிய சந்திரர் ஆகிய நீங்கள் கூடிவந்த நாளினை ஏன் அமாவாசை என்று சொல்லக்கூடாது? அப்படித்தானே நாமும் கூறி வருகிறோம்” என்றார். அவர்களும் அன்று அமாவாசையே’ என்று கண்ணபிரானிடம் கூறிச் சென்றனர். இவ்வாறு தான் செய்த திதி மாற்றங்களுக்கு உடனிருந்து உதவிய முனிவர்களைப் பாண்டவர்களிடம் சொல்லி அவர்களைப் பாராட்டினார்.
துடித்துப்போன இரவான்
உத்தம இலக்கணமுடையவனைப் பலி கொடுக்க வேண்டும் என்ற முறைப்படி தன்னையே களப்பலியாகக் கொடுக்கும்படி பாண்டவர்களிடம் கண்ணபிரான் கூறினார். அதனைப் பாண்டவர்கள் ஏற்க வில்லை. தன்னையே களப்பலி தரக் கண்ணபிரான் கூறியதைக் கேட்டுத் துடித்து போன இரவான், நேராகக் கண்ணபிரானிடம் வந்து, “மாலே மணிவண்ணா! அமாவாசை யன்று, தான் களப்பலியாவதாகத் துரியோதனனுக்கு வாக்குக் கொடுத்தது உண்மைதான். நான் வாக்களித்தபடி அமாவாசை வந்தும் துரியோதனன் வாராமையால் என்னைப் பலியிடுங்கள்” என்று கூற, கண்ணபிரான் அதனை ஏற்றுக்கொண்டார். உடனே இரவான். “கண்ணா! கமலக்கண்ணா! பலியாக என்னைக் கொடுத்திட்டாலும் உக்கிரமான போரில் பகைவர் அழிவதைச் சில தினங்கள் பார்த்து, பின் நான் இறத்தல் வேண்டும். இதற்குத் தாங்கள் அருள் புரிய வேண்டும்” என்றான். கண்ணபிரான் அதனை ஏற்றுக் கொண்டார். அதன் பின்பு பாண்டவர்கள் இரவில் பகைவர் அறியாதபடி தங்கள் பிறப்பிடமான குரு நாட்டிற்குச் சென்று மாற்றிய அமாவாசை தினமான அந்த இரவிலேயே சுத்த வீரனான இரவானை போர்க்களத்துக்கு உரிய உண்மையான காளிதேவியின் எதிரிலேயே கொண்டு போய் நிறுத்தினார்கள். செய்ய வேண்டிய வழிபாடுகளையெல்லாம் செய்து முடித்தபின், இரவான் அத்தேவி யின் எதிரில் நின்று தனது உடம்பின் அங்கங்களையெல்லாம் அறுக்க வேண்டிய முறைப்படி தானே அறுத்து, பலி கொடுத்தான். ஆண்மைமிக்க இரவான் காளியின் முன்னிலையில் தன் உறுப்புக் களையெல்லாம் அறுத்து பலிகொடுத்து, யாவரும் காணுமாறு உள்ளொளிபெற்று சிறிதும் துயரமின்றி மகிழ்ந்து இருந்தான்.
அதன்பின் பாண்டவர்கள் ஐவரும் யாமளநூல் முறைப்படி யானை முதலாக உள்ள வேண்டிய பலிகள் ஈந்து, வெற்றியையும் வேண்டி, களப்பலியூட்டப்பட்ட குமரனுடன் (இரவான்) தாம் தங்கியிருந்த மனைக்கு வந்து சேர்ந்தனர்.
படையெழுச்சி
மறுநாள் உதயாதி நாழிகையில் கண்ண பிரான், பாண்டவ சேனைத் தலைவனாகிய சுவேதனிடம், “இன்றையதினம் அதிரதர், மகாரதர், சமரதர், அர்த்தரதர் முதலான எல்லோரும் வெற்றியைக் கொடுப்பதான வஞ்சி மாலையைச் சூடி குருக்ஷேத்திரத் திற்கு புறப்பட்டுச் செல்லவேண்டும் என்றார்.
இங்கு அதிரதர், மகாரதர், சமரதர், அர்த்தரதர் என்பதற்குரிய விளக்கத்தைக் காணலாம். தேர் வீரர்கள் நான்கு வகைப் படுவர், (1) அதிரதர், (2) மகாரதர், (3) சமரதர், (4) அர்த்தரதர்.
(1) அதிரதர் : முழுத் தேரரசர்; தாம் ஒரு
தேரில் நின்று, தம் தேர், குதிரை, பாகன் களுக்கு அழிவு வாராமல் பாதுகாத்துக் கொள்ளுவதோடு தனியனாய் நின்று பல்லாயிரம் தேர் வீரர்களை எதிர்த்துப் போர் புரிந்து வெற்றி பெறுதல். பீமன், அர்ச்சுனன், அபிமன்யு, சுவேதன் என்ற நால்வரும் இந்த அதிரதாதியர்கள் ஆவர்.
(2) மகாரதர் : அதிரதரில் தாழ்ந்தவர்
மகாரதர். இவர் பதினோராயிரம் தேர் வீரரோடு போரிடும் ஆற்றலுடையவர்கள். இந்த வரிசையில் தருமபுத்திரர், சாத்தகி, திட்டத்துய்மன், சிகண்டி, விராட மன்னன் என்போர் அடங்குவர்.
(3) சமரதர் : ஒரு தேர் வீரனோடு தாமும்
ஒரு தேர் வீரனாய் நின்று எதிர்க்க வல்லார். இந்த வரிசையில் துருபதராஜன், யுதாமன்யு, உத்தமோசா (இவ்விரண்டு பேரும் துருபதனுக்கு உறவினர்) என்பவர் அடங்குவர்.
(4) அர்த்தரதர் : ஒரு தேர்வீரனை
மற்றொரு தேர் வீரன் எதிர்க்கும்பொழுது, ஒருவேளை தேர் முதலியனவற்றை இழந்து போகக் கூடியவர் ஆவர். இந்த வரிசையில் கடோத்கஜன், நகுல சகாதேவர்கள் அடங்குவர். இவ்வாறு சேனைகளை நால்வகையாகப் பிரித்து, பின் போரினைக் குருக்ஷேத்திரத்தில் நடத்தும் பொருட்டுச் சேனைகளோடு புறப்படுங்கள் எனத் தருமபுத்திரர், பிரிவு சேனைத்தலைவர்களிடம் கூறினார்.
கம்பீரத்தோடு நடந்து சென்ற சுவேதன்
தருமபுத்திரர் கட்டளையிட்டவுடன், அபிமன்யு, கடோத்கஜன், இரவான் பாஞ்சாலி குமாரர்கள் உபபாண்டவர்கள், துருபதன், திட்டத்துய்மன், சிகண்டி, திட்டகேது, யுதாமன்யு, உத்தமோசா, மச்ச நாட்டு மன்னன் விராடன், அவன் இளைய மகன் உத்தரன், விராடன் தம்பி சதானிகன், பன்றிக் கொடியையுடைய வராககேது ; கேகய நாட்டு அரசர்; குந்திபோஜ மன்னன்; தெலுங்கு அரசர்; சோனக அரசர்; மகதர், துருக்க தேசத்தரசர், சோழர், சேரர், பாண்டியர் முதலானவர்கள் வாத்தியங்கள் முழங்க ஆதிசேடனும், அட்டதிக்குப் பாலர்களும் படை பாரத்தால் அயர்ந்திட, புழுதிகள் பரந்து வானை மறைத்திட விரைவாக நடந்துவர, அந்த வேகத்திற்கு ஏற்ப சேனாதிபதி சுவேதன் கம்பீரத்தோடு நடந்து சென்றான்.
சுபயோக சுபதினத்தில் பாண்டவர்கள் உபப்பிலாவியத்தை விட்டு நீங்கினர். எதிரில் நல்ல அறிகுறிகள் தோன்றின; பாண்டவர்களைப் பெற்ற தந்தையர்க ளாகிய தேவர்கள் (இயமன், வாயு, இந்திரன், அசுவினி தேவர்கள்) வாழ்த்துரை வழங்கவும், மகளிர் பலர் வாழ்த்தவும், திரெளபதியோடும், கண்ணபிரானோடும் இரவு பகலாக நடந்து குருக்ஷேத்திரத்தில் பெரிய பாடி வீடு எழுப்பி, அதில் அந்த ஐவரும் தங்கினர்.
மனோதிடம் இல்லாத பாண்டவர்கள்
இவ்வாறு பாண்டவர்கள் குருக்ஷேத்திரப் பாசறையில் தங்கள் சேனையுடன் தங்கி யிருக்கும் காலத்துக் கௌரவர்கள், சதுர்த்தசியை அமாவாசையாக்கி, அன்றே இரவானைக் களப்பலி கொடுத்து போர் செய்வதற்குக் குருக்ஷேத்திரத்திற்குப் பாண்டவர்கள் வந்துள்ளதை அறிந்து, துரியோதனன் பீஷ்மரை நோக்கி, “அந்தப் பாண்டவர்கள் மனோதிடம் இல்லாதவர் கள்; அதனால்தான் நமக்குப் பயந்து ய மாற்றித் திதியை தங்களது புதல்வன் இரவானையே பலி கொடுத்திட்டனர். வேறு யாரும் கிடைக்கவில்லை போலும்!” என்று கூறிவிட்டு, பின், “நால்வகை வீரர்கள் யார் யார்? சேனைத் தலைவரே கூறுக” என்று கேட்க பீஷ்மர் கூறலுற்றார்.
(1) ஆசார்யர் துரோணர், அஸ்வத்தாமன், பூரிசிரவஸ், நான் ஆகிய நால்வரும் அதிரதர் வகையைச் சேர்ந்தவர்கள்.
(2) துர்மர்ஷன், பகதத்தன், சோமதத்தன், இந்த மூவரும் மகாரதர்கள்.
(3) கிருபாசாரியர், சகுனி, ஜயத்திரதன், கிருதவன்மா சல்லியன் ஆகிய ஐவரும் சமரதர்கள்.
(4) துரியோதனன் தம்பிமார்கள் தொண் ணூற்றொன்பது பேர், கர்ணன், அவன் மூத்தமகன் விருஷஸேதன் ஆகிய இவர்கள் நான்காவது வகையாகிய அர்த்தரதரில் சேர்ந்தவர்கள்.
தன்னை நான்காவது வரிசையாக அர்த்த ரதரில் சேர்த்தது குறித்துக் கர்ணனுக்குப் பெருங்கோபம் வந்தது. அதற்குரிய காரணம் என்ன? என்று பீஷ்மரைக் கேட்டான் துரியோதனன் முன்னிலையில் பீஷ்மர், “தற்புகழ்ச்சி மிக்கவன் ஆணவத் திற்கு வரம்பு தெரியாதவன்; பிறரை எப்பொழுதும் தூஷிக்கும் சுபாவம் உடைய வன். இவை தவிர பிறவி சம்பந்தமான கவச குண்டங்களை இழந்துவிட்டதால் போர்க்களத்தில் தீரமாகப் போரிட முடி யாது போனவன். பரசுராமருடைய சாபத் தினால் ஆபத்துக் காலத்தில் நனைவை இழந்து பரிதவிப்பவன்; அர்ச்சுனனுடன் பலமுறை தோற்றவன்; இந்தக் காரணங் களால்தான் இக்கர்ணன் அதிரதர் வரிசையில் சேர்க்கப்பட்டான்” என்று பதில் கூறினார். அருகிருந்த துரோணரும். “இக்கர்ணன் அகங்காரம் கொண்டவன் எடுத்தெறித்து யாரையும் பேசக் கூடியவன், எதையும் ஆராயாது செய்பவன்; தன் அஜாக்கிரதையினால் தோல்வியைத் தழுவு பவன்” என்றார்.
வயதாகிவிட்டதால் மூளை தளர்ந்த பீஷ்மர்
இவ்விருவர் கூறியதைக் கேட்டதும் கர்ணனுக்குக் கடுங்கோபம் வந்துவிட்டது. ”பிதாமகரே! ஒரு குற்றமும் செய்யாத என்னை எப்போதும் அவமதித்தும், நிந்தித்தும் வருகின்றீர். துரியோதனனுக்காக அவற்றையெல்லாம் பொறுத்துக் கொண் டேன். உங்களுக்குக் கௌரவர்களிடம் அன்பு கிடையாது. இது மன்னனுக்குத் தெரியாது. துரியோதனனுக்கும் எனக்கும் உள்ள நட்பைப் பிரிக்கப் பார்க்கிறீர். அதனால் உண்மையான வீரத்தைக் குறைத்து மதிப்பிடுகிறீர். இது நியாயம் அன்று. அக்கிரமமும் ஆகும்” என்று பீஷ்மரைப் பார்த்துக் கூறிவிட்டு, பின்னர் துரியோதனனைப் பார்த்து, “நண்பரே! இந்த பீஷ்மரை நம்பாதே! நம்முடைய போர் வீரர்களுக்குள் பேதம் விளைவிக்கப் பார்க்கிறார். என்னைப் பற்றித் தவறாகச் சொல்லி, உன் ஊக்கத்தைக் குலைக்கப் பார்க்கிறார்.வயதாகி விட்டதனால் இவருக்கு மூளை தளர்ந்துவிட்டது. ஆணவம் பிடித்த இவர் யாரையும் மதிப்ப தில்லை. இவரை அவசரப்பட்டுச் சேனாதி பதியாக்கிவிட்டாய். எனவே இப்பொழுது சொல்கிறேன்.இவருடைய தலைமையில் நடக்கும் யுத்தத்தில் நான் ஆயுதம் எடுத்துப் போர் புரியமாட்டேன். பீஷ்மர் வீழ்ந்த பின்னரே நான் ஆயுதம் எடுப்பேன்” என்று கூறினான்.
கோபத்தை அடக்கிக் கொண்ட பீஷ்மர்
பீஷ்மர், கர்ணன் தன்னை நிந்தித்துக் கூறியதைக் கேட்டுப்பின், அவனைப் பார்த்து, ”கர்ணா! மிக நெருக்கடியான காலமாக இருக்கிறபடியால், உன் கடுஞ் சொற்களையெல்லாம் பொறுத்துக் கொண்டேன். அதனால் நீ உயிருடன் இருக்கிறாய். உன்னை நண்பனாகப் பெற்றதால்தான் கெளரவர்கள் இந்த நிலையை அடைந் தார்கள்” என்று கூறித் தன் கோபத்தை அடக்கிக் கொண்டார்.
துரியோதனன் நிலை சங்கடமாகி விட்டது. அதனால் பீஷ்மரிடம், “பிதா மகரே! இருவரிடமும் நான் உதவி பெற வேண்டியவனாக இருக்கின்றேன். இரு வரும் பெரிய வீரச் செயல்களைச் செய்யப் போகிறீர்கள். விடிந்தால் போர். இந்த நிலையில் நீங்கள் இருவரும் வரம்பு மீறிப் பேசிக்கொள்ளுதல் அழகன்று” என்று கூறிச் சமாதானப்படுத்தினான்.
தான் செய்த சபதத்தின்படியே பாரத யுத்தத்தில் முதல் பத்து நாட்கள் போரில் கர்ணன் கலந்து கொள்ளவில்லை. பத்தாம் நாள் உடம்பெல்லாம் அம்புகள் பாய்ந்து யுத்தக்களத்தில் பீஷ்மர் வீழ்ந்தபின், அவரிடம் வந்த கர்ணன் தன் பிழையைப் பொறுக்குமாறு வேண்டி, அவருடைய ஆசீர்வாதத்தைப் பெற்றான். பிறகு கர்ணனே முன் மொழிந்து துரோணரைச் சேனாதிபதியாக்கினான். அப்போது கர்ணன் யுத்தத்தில் சேர்ந்து கொண்டான். துரோணரும் இறந்தபின், கர்ணன் கௌர வர்களின் சேனாதிபதியாகவே இருந்து போர் நடத்தினான். என்பது பின்னால் நடந்த கதை.
பீஷ்மரையும்,கர்ணனையும் சமாதானப் படுத்திய பின்னும் கர்ணன், போரில் கலந்து கொள்ளமாட்டேன் என்பதில் உறுதியாக இருந்ததனால் துரியோதனன் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டிய தாயிற்று. அதனால் துரியோதனன் பீஷ் மரிடம் ‘படைகளுடன் புறப்படுங்கள்* என்றான். பீஷ்மர் முன்னே செல்ல பதினொரு அக்குரோணி சேனைகளும் அவர் பின்னே நடந்தன. அக்காட்சி யுகாந்த காலத்துக் கடல் கொந்தளித்து நடப்பது போல் இருந்தது.
மகத தேசத்து மன்னன், காந்தார நாட்டு மன்னன் சகுனி, மத்திர தேசத்து மன்னன் சல்லியன், விந்தன், அநுவிந்தன் என்னும் அவந்தி மன்னர்கள், பகாசூரன் தம்பியாகிய அலம்பசன், சகஸ்ரபாகு, கலிங்கமன்னன். காம்பிலி தேசத்து அரசன், சோமதத்தன். போஜமன்னர்கள், கௌட தேசத்தரசர்கள், சேர, சோழர், பங்களம், சீனம், ஒட்டம் கொங்கம், கொப்பம். கூபகம், சிங்களம் முதலான நாட்டு மன்னர்கள், அவரவர் களுக்குரிய அமைச்சர்கள், படைத் தலைவர்கள், சூழ்ந்து வரத் துரியோதனன் புறப்படலானான். மேலும் பூரிசிரவஸ், பகதத்தன், விசுத்தசேனன் முதலான வர்களும் புறப்பட்டார்கள்.
குருக்ஷேத்திர பூமியை நோக்கிச் சென்றனர்
பின்னர் துரியோதனன் தன் தாய் காந்தாரியையும், தந்தை திருதராட்டிர ரையும் வணங்கி, அவர்களின் ஆசி பெற்றான். கர்ணன், பீஷ்மர், துரோணர், அசுவத்தாமன், கிருபாசாரியார், தம்பி மார்கள், நண்பர்கள், பெண்டிர்கள் சூழ்ந்து வர, பதினொரு அக்குரோணி சேனையுடன் போரிட வேண்டிய குருக்ஷேத்திர பூமியை நோக்கிச் செல்லலானார்கள்.
அப்பொழுது முரசு முதலான வாத்தி யங்கள் முழங்கி பேரோலி செய்தன; சேனைகள் ஏழுகடல்கள் பூமி மீது நடந்து வந்தன என்று சொல்லும்படி நடந்து வந்தன. அச்சேனைகள் எழுப்பிய புழுதி மேலெழுந்து சூரியன் ஒளியை மறைத்து இருளை உண்டாக்கியது. ஆனால் அவர்கள் ஏந்தி வந்த ஆயுதங்களின் ஒளி, புழுதி உண்டாக்கிய இருளை நீக்கியது. பகலிலும் இரவிலும் நடந்து சென்ற சேனையின் எதிரே பல துன்னிமித்தங்கள் தோன்றின. அவற்றைப் பற்றியெல்லாம் கவலைப் படாது தன் சேனைகளோடு துரியோதனன் போர்க்களத்தை அடைந்தான். குருக்ஷேத் திரம் வந்தவுடன் சேனைகள் வரிசை வரிசையாகப் பல பாடி வீடுகள் அமைத்து அவற்றில் தங்கலாயின.
பலராமன் அவ்விடம் விட்டு நீங்கினான்
அப்பொழுது பலராமன் தருமபுத்திர ருடைய பாசறைக்குச் சென்று, “தரும புத்திரரே! இனி இந்த அரசாட்சி உனக்குரியது. துரியோதனாதியர் போரில் மாளல் நிச்சயம். ஆனால் என் நண்பன் துரியோ தனன் இறந்திடுதலை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அதனால் நான் இங்கு இருக்கப்போவதில்லை” என்று கூறி, அறிவார்ந்த விதுரருடன் தெய்வத் தன்மை பொருந்திய தீர்த்தங்களில் நீராடுதற்பொருட்டு அவ்விடம் விட்டு நீங்கினார்.
போர் புரிகின்ற குருக்ஷேத்திரத்தில் இருதிறத்துப் படைகளும் எதிர் எதிராகப் பாசறைகள் அமைத்துத் தங்கியிருந்தன. அப்பொழுது துரியோதனன் பீஷ்மரை நோக்கி, “சேனைத் தலைவரே! இருதிறத் துப் படைகளையும் கொல்லுவதற்குச் சாதாரணமாக ஒருவருக்கு எத்தனை நாட்கள் பிடிக்கும்?” என்று கேட்டான்.
அதனைக் கேட்டு பீஷ்மர், ‘துரியோதனா ! சூரியன் மகன் கர்ணன் இந்தப் படைகளை ஐந்து தினங்களில் கொல்வான். ஆசார்யர் துரோணருக்கு மூன்று நாட்கள் பிடிக்கும். நான் ஒரு நாளில் முடிப்பேன் அஸ்வத்தாமன் ஒரு நாழிகையில் அழிப் பான். ஆனால் அர்ச்சுனனோ ஒரு கணப் பொழுதில் இந்த இருதிறத்துச் சேனை களோடு வேறு எந்த உலகத்துச் சேனையையும் சேர்த்துக் கொல்லுவான்.. என்று கூற, துரியோதனன் முகம் வாடியது. அங்கிருந்து நீங்கினான்.
பின்னர் உலூக முனிவனை பாண்டவரிடம் மீண்டும் அனுப்பி, “போர் எப்போது தொடங்கலாம்” என்று கேட்டு வருமாறு துரியோதனன் அனுப்பினான். அவ்வாறே உலூக முனிவர் பாண்ட வரிடம், செல்ல, அவர்கள் அவனிடம், “எங்களுடைய வஞ்சினங்கள் விரைவில் நிறைவேற வேண்டும். ஆகவே துரியோ தனனிடம் நாளையே போர் தொடங்க லாம்’ என்று கூறுவாயாக” என்று சொல்ல, அவனும் துரியோதனனிடம் “மறு நாள் போரைத் தொடங்கலாம் என்று கூறி னார்கள்” என்றான்.
இந்தக் குருக்ஷேத்திரப் பூமியில் இந்த இருதிறத்துப் படைகளும் போரிடப் போதலை மனத்தில் உணர்ந்து கொண்டே கழிந்து செல்லும் இரவு இன்னும் நீங்கின பாடில்லை என்று சொல்லிக் கொண்டு அந்த இருதிறத்தாரும், படுக்கையினின்று எழுதலை அறிந்து, நிகழப் போகும் போரினைத் தானும் பார்ப்பதற்கு வசதியாகச் சூரியன் உதயகிரியில் தோன்றினான்.
மகாபாரதம் – 42 படையெழுச்சிச் சருக்கம் களப்பலியூட்டுதல்… சேனைத் தலைவரான பீஷ்மர் Asha Aanmigam