பாண்டவர்கள் வெறுக்கமாட்டார்கள்
அதற்கு மேல் கண்ணபிரான். “பாண்டவர்கட்கு உரிய நாட்டைக் கொடு. அதற்கு மனம் இல்லையேல் பாதிநாடா யினும் கொடு” என்றார். பாதிநாட்டைக் கொடுக்கவும் துரியோதனன் மறுக்கவே, “ஐந்து ஊர்களையேனும் கொடுத்துப் புகழ் பெறுவாய் “என்றார். பாண்டவர் சகாயனான அக்கண்ணபிரான். அதற்கு அந்த அரவக் கொடியோன், “ஐந்து வீடுகள் என்ன ஒரு வீடுகொடுத்தாலும் அதனை வேண்டாமென்று வெறுக்கமாட்டார்கள் அந்தப் பஞ்சபாண்டவர்கள். இனிமேலும் கேட்பதில் ஒரு பயனும் இல்லை. என் பக்கலில் ஒரு சிறிதேனும் இடத்தைப் பெறும் இக்கருத்தை விட்டொழிப்பீர். என்று அடாவடித்தனமாக முடிவாகக் கூறினான்.
உங்களுக்காக வாழ்ந்து கொண்டிருக்கின்ற பீஷ்மர்
”ஒரு குலத்தில் இரண்டு அரசர்கள் பிறந்து ஆட்சியுரிமையைப் பெற்றிருந் தால், அந்த இரண்டு திறத்தாரும் பகை இன்றி ஒத்து வாழ்தல் எக்குலத்தவருக்கும் இயல்பாகும். ஆனால் புகழ்பெற்ற குரு குலத்தில் பிறந்த இந்த அரசர்களின் இயல்பு மிக மிக நன்றாக உள்ளது! தன் தந்தை சந்தனுவின் காதலை அறிந்து, அவன் விரும்பிய பரிமளகந்தியை மணமுடித்த தோடு அந்த இளையதாய் பரிமளகந்தி பெற்ற தனது இரு தம்பியர்க்கு (சித்திராங் கதன்; விசித்திர வீரியன்) இந்தக் குருநாட்டு அரசாட்சியையே கொடுத்தது மட்டுமல்லா மல் பிரம்மச்சாரியாகவே இருந்து தன்னலம் கருதாது உங்களுக்காக வாழ்ந்து கொண்டி ருக்கின்ற, உங்கள் குல முன்னோன் பிதா மகர் பீஷ்மர் இவ்விடத்தில் இந்தச் சபை யில் இருக்கின்றார். ஆனால் உன்னினும் வயதில் மூத்த தன்மையால் இந்த நாடு முழுவதையும் ஆள உரிமையுடைய தரும் புத்திரருக்கு ஐந்து ஊர்களையேனும் வழங் காமல் விட்டு விடுவாயாயின் உன்னுடைய ஆட்சி என்ன நீதியைப் பெற்றுள்ளது?
அந்தப் பீஷ்மர் எங்கே! நீ எங்கே! நல்லாட்சியா இது?” என்று கண்ணபிரான் காட்டமாகக் கேட்டார்.
அதனைக்கேட்டு, “ஆணவத்தோடும் அகங்காரத்தோடும் உள்ள உன்னை, உலகத்தையெல்லாம் தன்னுடைமையாகப் பெற்றுள்ள பரந்தாமன் கேவலம் ஐந்து ஊர்களை இருகையேந்தி யாசிக்கவும் நீ கொடுக்க மனமில்லாதவனாக இருக் கின்றாய். பெரியோர்கள் சொல்லையும் கேட்க மறுக்கின்றாய். நியாயத்தையும் அறியாய்.
“ஏவவும் செய்கலான் தான் தேறான் அவ்வுயிர்
போ ஓ/மளவும்ஓர்/நோய்”
என்பதற்கேற்ப நீ ஒரு தொற்று நோய். போரில் அனுபவம் உள்ளவன் போலப் பேசுகின்றாய். நின்னை அழிக்கும் தீயவர் களின் வார்த்தைகளின்படி ஆடுகின்றாய்” என்று பிதாமகர் உள்பட அனைவரும் துரியோதனனைக் கண்டித்துப் பேசலாயினர். கடுமையாகக்
அப்பொழுது துச்சாதனன் எழுந்து, “கண்ணன் தூதனாக வந்ததும் பெரியோர் கள் எண்ணமும் சேர்த்து ஆராய்ந்து பார்த்தால் உன்னைப் பகைவனிடம் (தருமபுத்திரரிடம் ) ஒப்படைப்பதே நோக்கமாக உள்ளது என்பது தெரிகின்றது” என்று உள்நோக்கத்துடன் கூறினான். அதனைக் கேட்டுத் திருதராட்டிரரும், துரியோதனனும், துச்சாதனனின் கூற்றை ஏற்பது போல வெளியேறலாயினர். அப்பொழுது கண்ணபிரான் திருதராட்டி ரரை நோக்கி, “நஞ்சினைப் போன்ற உன் பிள்ளைதான் போகின்றான் என்றால், அவனைப்பின் பற்றிச் செல்லுகின்ற தந்தை யாகிய உன் அறிவுதான் என்னே!’ என்று இகழ்ந்தான். அதனால் ரோஷம் பொத்துக் கொண்ட திருதராட்டிரர் மீண்டும் தன் மகனோடு அவைக்குள் வந்து அரியணை யில் அமர்ந்தார்.
சொன்ன சொல் மீறுகின்றவன் துரியோதனன்
”என் தந்தை அரியணையில் அமர்ந்த வுடன், நீ சொல்லுகிறபடி ஒருவேளை இந்த நாடு பாண்டவர்களுக்கு உரியது என்றாலும் அந்நாட்டினை ஆளத் தகுதியுடையவர்கள் வீரர்கள் தான். நாங்கள் வீரர்கள். எங்களுக்கு அதனை ஆளத்தகுதி யுண்டு. யார் வீரர்கள் என்பதை அவர்கள் போர்க் களத்தில் நிரூபிக்கட்டும்”என்று கண்ணபிரானை நோக்கித் துரியோதனன் கூறினான். உடனே கண்ணபிரான், ”போரிடுவதற்குரிய உறுதி மொழியை (சத்தியத்தை) கை அடித்துக் கொடுப்பாய்” என்று கேட்டார். சொன்ன சொல் மீறுகின்றவன் துரியோதனன் ஆதலின் கண்ணபிரான் அவ்வாறு கேட்டார்.
ஆனால் துரியோதனன் கண்ணனுக்குக் கை அறைந்து சத்தியம் செய்து கொடுக்க மறுத்து, அங்கிருந்த தூணின் மேல் கையறைந்து, ”பசுக்கூட்டங்களை மேய்த்து, வெண்ணெய் திருடித்தின்று, அதனால் ஆய்ச்சியர் கட்டிய தாம்பினால் கட்டுண்டு, மொத்துண்டு. கிடந்த இழிந்த இடையனாகிய உன்னுடைய கையில், வணங்காமுடி மன்னனாகிய நான் கை அறைந்து உறுதிமொழி (சத்தியம்) செய்து தரல் வேண்டுமென்பது மிக்க அழகுதான்! மிருகேந்திரனான சிங்கமொன்று யானைகள் பலவற்றிற்குப் பயப்படாமல் அவற்றை எதிரில் வென்று அழித்தல்போல் ராஜாதி ராஜனாகிய நான் அந்தப் பஞ்ச பாண்டவர்களை எளிதில் வென்று விடுவேன். அன்று திரெளபதியின் ஆடையை என் தம்பி துச்சாதனன் துகிலுரித்து அவமானப்படுத்திய காலத்து வீரத்தைக்காட்டாது நெட்டை மரங் களெனப் பெருமூச்சு விட்டு நின்றவர்கள் தான் அந்தப் பஞ்சபாண்டவர்கள். அத்தகைய அவர்கள் எங்களை வெற்றி பெறுதற்கு எத்தகைய புதுவலிமையைப் பெற்று விட்டார்கள்? பஞ்சபாண்டவர் களாகிய இந்தக் காட்டுவாசிகளைப் பெற்ற தந்தையர்கள் ஐவராம்; அவர்களின் அன்னையரோ இருவராம்; இந்த ஐந்து பேருக்கும் ஒரு பத்தினியாம். இத்தகைய இழி நிலையைப் பெற்ற இவர்கள் பெருமைமிக்க குருநாட்டை ஆளுதற்கு உரிமை கோருவார்களாம். நாங்கள் இவர்களுக்கு உடனே கொடுத்துவிட வேண்டுமாம். என்ன காலத்தின் கோலம்! இத்தகைய பாண்டவர்களுக்கு என்னை ஒப்பிடுவது எவ்வாறு பொருத்தமாகும்? எண்ணிப்பாரீர்” என்று கோபத்தோடு கூற, இவற்றையெல்லாம் கேட்ட கண்ணபிரான் ஒன்றும் கூறாது, ”பாண்டவர்களின் சபதம் இனி நிறைவேறும்” என்று எண்ணி உள்ளுக்குள் மகிழ்ந்தார்.
பதிலளிக்காது போன கண்ணபிரான்
கண்ணபிரான் ஒன்றும் பதிலளிக்காது போகவே, துரியோதனன் கோபம் விதுரர் மேல் திரும்பியது. அதனால் அரசர்கள் நிறைந்த சபையில், “ஆட்சியைச் சூதில் இழந்து, அதனால் காட்டில் அலைந்து திரிந்த நாடோடிக் கூட்டமாகிய பஞ்ச பாண்டவர்களின் தூதுவன் என் வீட்டில் உணவு கொள்ளாது தவிர்த்து விட்டான். அதன் மூலம் என்னை அவமானப் படுத்திவிட்டான். அத்தகையவனுக்கு எந்தச் சம்பந்தத்தின் பேரில்,யார் உத்தரவை கேட்டு அவனுக்கு விருந்து பசாரம் செய்தாய்? விதுரனே பதில் சொல். என் தந்தைக்குத் தம்பியாகப் பிறந்திருந்தும் எங்களுடைய சோற்றை இனிமையாகப் புசித்தும் எங்கள் விரோதிகளாகிய பாண்ட வர்க்கு மட்டும் நன்மை செய்கின்றாய். எங்கள் மீது உனக்குச் சிறிதளவும் பாசம் இல்லை. வெளிக்கு அன்பு காட்டுவது போல நடிக்கின்றாய். செல்வம் உள்ளவர் களிடத்தில் மட்டும் அன்பு செலுத்தி வசியப்படுத்துகின்ற தாசி தந்த மகனா தலின் உன் குலத்திற்கேற்ப செய்தாய்” என்று சிற்றப்பன் என்றும் பாராமல் தரம் தாழ்ந்து விதுரரைப் கலானான். பழித்துரைக்
கட்டுக்கடங்காத கோபம் கொண்ட விதுரர்
தன்னை அரசர் சபையில் இழித்துரைத் ததைக் கேட்டதும், விதுரருக்குக் கட்டுக் கடங்காத கோபம் உண்டாயிற்று. கண்கள் சிவந்தன. “தீயவனே! துஷ்டனே! ஆணவமிக்கவனே! நீ என்னை இழித்துப் பேசிய பேச்சுக்கு உன் நாக்கினையும் சிரசினையும் அறுத்திருப்பேன். அதனைத் தடுப்பவர் யாருமிலர். என்றாலும் உயர்ந்த குருகுலவம்சத்தில் பிறந்த ஒருவன் தன் மகனையே கொன்றுவிட்டான் என்ற பழிச்சொல்லுக்கு அஞ்சியே உன்னைக் கொல்லாது விட்டேன். பாண்டவர்களுக்கு வெளிப்படையாக நான் உதவிசெய்தால் உன்னால் என்ன செய்ய முடியும்? ஒன்றும் செய்ய முடியாது என்றாலும் வருகின்ற பாரதப்போரில் நான் எந்தப் பக்கமும் இருந்து போர் செய்யமாட்டேன்” என்று கோபத்தோடு கூறி, தெய்வாம்சம் பொருந்திய திருமால் வில்லை எடுத்து ஒடித்துப் போட்டுவிட்டுச் சபையைவிட்டு நீங்கித் தன் இல்லம் சேர்ந்தார்.
யாரும் எதிர்பார்க்காத நிலையில் விதுரர் வில்லை ஒடித்துப் போட்டதைக் கண்டதும் துரியோதனன் கூட்டம் திகைத்து நின்றது. கண்ணபிரானோ உள்ளுக்குள் ஆனந்தப் பட்டார். அங்கு இருந்த சிலர், “சிவன். விஷ்ணு ஆகியவர்களின் விற்களுக்கு இணையாக உள்ள இந்த வில்லை அவசரப்பட்டு ஒடித்துப் போட்டுவிட்டுப் போய்விட்டாரே! இனி அர்ச்சுனனின் காண்டீபத்திற்கு எதிரே நிற்கும் வில் ஏது? அதுமட்டுமல்லாது, அந்த அர்ச்சுனனுக்கு ஒப்பான வீரரும் கௌரவர் பக்கம் இல்லாது போயினரே ” என்று கூறி வருந்தினர்.
துரியோதனனின் அலட்சியம்
அப்பொழுது பீஷ்மர், துரியோதனனைப் பார்த்து,”தேவர்களே போர்க்களத்தில் வந்து நின்று எதிர்த்தாலும், வெற்றி வல்லமை படைத்த வில்லாதி வீரன் விதுரரை, அலட்சியமாகப் பேசி அவமானப்படுத்தி, அவருடைய தெய்வாம்சவில்லை அவர் கையாலே ஒடிக்கச் செய்து, பாண்டவர்களுக்குப் பெருவெற்றியை இப்போதே கொடுத்துவிட்டாயே!” என்றார். அதற்குத் துரியோதனன், பிதாமகரே! விதுரபுருடைய வில்லைவிட கர்ணனுடைய விஜயம் என்ற சிறந்த வில் உள்ளது. துரோணரிடம் ஒப்பற்ற வில் உள்ளது. ஏன் தங்களின் வில் கூட அந்த விதுரரின் வில்லைவிட சிறந்ததுதானே! இத்தகைய உயர்ந்த விற்கள் எல்லாம் இருக்கும் போது விதுரரின் ஒரு வில் இல்லாவிட்டால் என்ன குறைந்துவிடவா போகிறது” என்று அலட்சியமாகப் பேசினான்.
அப்பொழுது கர்ணன், “நான் ஒருவன் துரியோதனனின் பக்கத்தில் இருக்கும் போது பாண்டவர்கள ஜெயிப்பவர்கள் என்று பீஷ்மரே எப்படி கேட்கலாம்? அர்ச்சுனன் தேரைக் கண்ணன் செலுத்தி வந்தாலும் என்னிடத்தில் நாகக்கணை இருக்கும்போது அவன் எப்படி பிழைக்க முடியும்? என்னுடைய வீரத்தைப் போர்க்களத்தில் நீங்கள் காணலாம்’ என்று தன்னைப் புகழ்ந்து கூறிக்கொண்டான்.
பீஷ்மர் அவனை விடவில்லை. உடனே அவர், “அசுரர்களாகிய நிவாதகவச கால கேகயர்களைக் கொன்று இந்திரனுக்கு மீண்டும் விண்ணுலகத்தை அளித்த அந்த வில் வீரன் அர்ச்சுனனை நீ எவ்வாறு வெல்ல முடியும்? அவனுக்கு எப்படி ஒப்புமை ஆக முடியும்? வானத்தில் விளங்கும் முழு நிலவுக்கு எந்தக் காலத்திலும் நட்சத்திரம் ஒப்பாகாதே. அதே போலத்தான் நீயும். ஏன் வீணாக அலட்டிக் கொள்கிறாய்?” என்றார்.
பீஷ்மர் கூறியதைக் கேட்டவுடன் கர்ணன் கோபங்கொண்டு, “பீஷ்மரே! துரியோதனனைச் சார்ந்து இருந்து அவனது உணவையே உண்டு அவனது எதிரிகளாகிய பாண்டவர்கள் பராக்கிரமத்தையே புகழ்ந்து கொண்டிருக்கின்றீர் போர்க்களத்தில் என் வீரத்தை நீர் அறிந்து கொள்ளலாம். சிவனே வந்தாலும் அவனை எதிர்த்து வெல்வேன்” என்று கூறினான். “அப்படியா! போர்க் களத்திலே உன் வீரத்தைப் பார்த்துக் கொள்ளலாம் “என்று கூறி பீஷ்மர் அச்சபையை விட்டுச் சென்றார். அனை வரும் துரியோதனனிடம் விடைபெற்றுத் தத்தம் இடங்கட்குச் சென்றனர்.
பசுவான் ஸ்ரீ கிருஷ்ணனின் விசுவ ரூப தரிசனம்
துரியோதனன் சபையில் விதுரர் ஒடித்த வில் திருமாலின் வில்லாகும். அதாவது, திருமால்தான் அந்த வில்லை முதலில் இரிசகர் என்ற முனிவர்க்கு ஈந்தார். அந்த இரிசகர் ஜமதக்னி முனிவர்க்கு ஈந்தார். அந்த ஜமதக்னி முனிவர் தன் மகன் பரசுராமனுக்குத் தந்தார். சிவபெரு மானுடைய திரியகம்பம் என்ற வில்லை எளிதில் ஒடித்து இராமபிரான் சீதாப் பிராட்டியைத் திருமணம் செய்து கொண்டு தன் தங்கை தயரதனோடும் தம்பியரோடும் மற்றுமுள்ளோரோடும் மிதிலை மாநகரி லிருந்து அயோத்தி மாநகருக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தார். வழியில் பரசுராமர் கோபத்துடன் எதிர்கொண்டு, என் னுடைய வில்லை உன்னால் வளைக்க முடியுமா?” என்று கேட்க, இராமபிரான் அதனை வாங்கி எளிதில் அதனை வளைத்து, அவர் கர்வத்தை அடக்கினார். அதனால் பரசுராமர் தன் தவ வலிமை எல்லாம் இழந்து மீண்டும் தவம் செய்ய மேற்கு நோக்கிச் சென்றுவிட்டார். பரசு ராமரிடமிருந்து பெற்ற வில்லானது, இரா மரிடமிருந்து வழிமுறையாக விதுரரிடம் வந்து சேர்ந்தது என்பர்.
வருத்தப்பட்ட கண்ணபிரான்
கண்ணபிரான், கெளரவர்கள் சபையி லிருந்து வெளியேறிய விதுரரை நோக்கி, ”விதுரரே! சிவபெருமான், திருமால் ஆகிய இரண்டு பேரின் விற்களுக்கு இணையான வில் மூவுலகிலும் கிடையாது. அத்தகைய சிறப்புமிக்க இரண்டு விற்களில் ஒன்றான உன் கையிலிருந்த திருமால் வில்லைக் கௌரவர் சபையில் உடைத்த காரணம் யாது ? கூறுக ” என்று கேட்டார். அதற்கு அறமே வடிவெடுத்தாற் போன்ற அந்த விதுரர்,”பரந்தாமா! பாற்கடல் வண்ணா! வைகுந்தவாசா! ஓங்கி உலகளந்த உத்தமா! நினைக்கவும், தொழவும், எட்டாத நிலை யில் உள்ள தாங்கள் பாண்டவ தூதராக வந்து அவர்கட்காக, இருகையேந்தி இருந்தும், உரிய நாட்டைக் கொடுக்க மறுத்ததோடு மட்டுமல்லாது தங்களைப் பற்றி இழிவாகவும் கூறினான். அதனை என்னால் தாங்க முடியவில்லை. அதனால் ஒடித்து விட்டு வந்தேன்” என்றார். “உன்னுடைய வில்லை உன் கையால் முறித்தது பாண்டவர்கட்கு வெற்றிக் கனியைக் கொடுப்பதாக அமைந்து விட்டதே! அதனால் துரியோதனன் கூறிய கடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொண் டிருக்கலாம்” என்று வில் ஒடிந்ததற்காக வருத்தப்படுபவர் போலக்கூறி, பின்னர் அங்கிருந்து குந்தி தேவியின் இருப்பிடத்திற்குச் சென்றார்.
கண்ணபிரானைப் பார்த்தவுடன், குந்தி தேவி, பாண்டவர்களைப் பார்த்தது போன்று மிக்க மகிழ்ச்சி அடைந்து, வர வேற்று, உபசரித்து, “இங்கு வந்ததற்குரிய காரணம் யாது கண்ணா?” எனக் கேட்டாள். அதற்குக் கண்ணபிரான், “அத்தையே, உன்னுடைய மைந்தர்கள் மீண்டும் ஆட்சி யைப் பெறுவான் வேண்டி, அவர்களின் தூதனாக வந்துள்ளேன். இப்பொழுது துரியோதனனின் கருத்தையும் அறிந்து கொண்டேன். பாண்டவர்க்கு உரிய நாட்டைக் கொடுக்க மறுக்கின்றதோடு, போரிடவும் தயாராக இருப்பதாகக் கூறி விட்டான். நானும் பாண்டவர்கள் சார் பாகப் போர் புரிய சம்மதம் தெரிவித் துள்ளேன்” என்றார்.
கர்ணனின் பிறப்பு ரகசியத்தைக் கூறிய கண்ணபிரான்
சிறிது நேரம் மௌனமாயிருந்த கண்ண பிரான்,குந்திதேவியைப் பார்த்து, ”அத்தை! நீங்கள் கன்னிப் பெண்ணாக இருந்த காலத்தில் சூரியனுடைய அருளால் ஓர் அழகான கவசகுண்டலத்தோடு கூடிய ஆண் குழந்தையைப் பெற்று, பின்னர் பழி வரும் என்று அஞ்சி, கங்கா நதியில் ஒரு பெட்டியினுள் வைத்து அனுப்பி விட்டீர் களே! ஞாபகம் உள்ளதா?” என்று குந்தி எதிர்பாராத ஒரு கேள்வியை எழுப்பினார். முதலில் திடுக்கிட்ட குந்திதேவி, பின்னர் தன்னைச் சுதாரித்துக் கொண்டு, ”ஆம் கண்ணா! அக்குழந்தை உயிரோடு இருக் கின்றதா?” என்று ஆவலோடு கேட்டுக் குமுறிக் குமுறி அழுதாள். கண்ணபிரான் அவளைத் தேற்றி, பின்னர், “அத்தையே! அவன் உயிரோடு அங்க தேசத்துக்கு அதிபதியாகி உள்ளான். யார் எந்த நேரத்தில் எது கேட்டாலும் இல்லை யென்னாது கொடுக்கும் கொடை வள்ள லாக விளங்குகின்றான். அதனால் ‘தானவீரன்’ என்று போற்றப்படுகிறான். துரியோதனனின் உற்ற நண்பனாக விளங்கு கின்றான். பாண்டவர்களின் மூத்தவனான அவன்தான் கர்ணன். அவனை வளர்த்தவன் தேர்ப்பாகன் அதிரதன் என்பவன். பரசுராம னிடம் வில்வித்தை முதலானவற்றைக் கற்றுத் திறம்பட விளங்குகின்றான். எல்லா வற்றிற்கும் மேலாக அர்ச்சுனனைக் கொல் வதாகச் சபதம் பூண்டுள்ளான். அதற் காகவே நாகக் கணையை வைத்துக் கொண் டிருக்கின்றான்” என்று கர்ணனின் பிறப்பு ரகசியத்தை எடுத்துக் கூறினார்.
கண்ணபிரான் கூறிய இரண்டு வரம்
தன் மூத்தமகன் உயிரோடு இருப்பது மட்டுமல்லாது, பேரும் புகழோடு விளங்குகின்றான் என்பதைக் கேட்டுக் குந்திதேவி ஆனந்தக் கண்ணீர் வடித்தாள். அவனைப் பார்க்க விரும்பினாள். அதை அறிந்த கண்ணபிரான், “அத்தையே! நீங்கள் விரும்பியபடியே கர்ணனைப் பார்த்து விட்டு வாருங்கள். ஆனால் நான் சொல் வதை நீங்கள் செயற்படுத்த வேண்டும். முதலில் அவன் பிறப்பின் ரகசியத்தைத் தெளிவாக உணர்த்த வேண்டும். பின்னர் பாண்டவர்கள் ஐவரும் பணிபுரிய, குருநாட்டின் ஆட்சியை ஏற்று நாட்டைக் காக்க நம் பாண்டவர்களுடன் சேருமாறு அழைத்தல் வேண்டும். அவன் பாண்ட வர்களுடன் சேர வரமாட்டான். வந்தால் ஏற்றுக் கொள்ளலாம். வர மறுத்தால். அவனிடம் இரண்டு வரங்களைக் கேட்டுப் பெற்று வருக. முதலாவது அவன் வைத்தி ருக்கும் நாகக் கணையை ஒருமுறைக்கு மேல் அர்ச்சுனன் மீது ஏவக்கூடாது. இரண்டாவதாக, அர்ச்சுனனைத் தவிர ஏனைய நால்வரைப் போரில் கொல்லுதல் கூடாது. இனி நீங்கள், கர்ணனிடம் சென்று வாருங்கள்” என்று கூறினார்.
கண்ணன் கூறியவற்றையெல்லாம் கேட்ட குந்தி தேவி கதறிக்கதறி அழுதாள். தன்னுடைய தீவினையை எண்ணி எண்ணி நொந்தாள். வீரத்திருமகன் கர்ணனை எண்ணி, எண்ணி, ஏங்கி இரங்கினாள். இருதலைக் கொள்ளி எறும்பு போலானாள். அந்நிலையில், கண்ணன், “அத்தையே அழாதீர்கள். உன் மக்கள் அறுவருள் கர்ணனாவது, அர்ச்சுனனாவது இறப்பது நிச்சயம். எப்படியும் உன் மைந்தர்களாக மிஞ்சுபவர் பழைய ஐந்தே. அர்ச்சுனன் இறப்பின் மற்றைய நால்வரும் உயிரோடு இரார். இது நிச்சயம். அதனால் கர்ணன் இறப்பதே மேல். இவையெல்லாம் முன் செய்தவினையின் பயன். ஆகையால் கர்ணனைப் பாண்டவரோடு சேர்த்தற்கு முயல்க. அது வெற்றி பெறாவிடின் நாகாஸ்திரத்தை அர்ச்சுனன் மேல் இரண்டா வது முறை செலுத்தாதபடியும், அர்ச் சுனனைத் தவிர்த்து சகோதரர் நால்வரையும் போரில் கொல்லாதபடியும் வரங்கேட்டு வருதலே சாலவும் பொருத்தமானது” என்று கூறி அவளைத் தேற்றினார். அவளின் துயரை மாற்றினார். பின்னர் விதுரர் அரண்மனை அடைந்தார். சூரியனும் மேற்குக்கடலில் சாய்ந்தான். இரவென்னும் நங்கை கறுப்புடை போர்த்திக் கொண்டு எங்கணும் நீக்கமற நிறைந்து இருந்தாள்.
கண்ணனைக் கொல்ல துச்சாதனன் யோசனை
அந்த இரவு நேரத்தில் துரியோதனன், தம்பிமார்கள், கர்ணன், மாமன் சகுனி முதலானோர் ஒரு மண்டபத்தில் ஒன்று கூடினார்கள். அப்பொழுது துரியோதனன் மற்றவர்களைப் பார்த்து, “கண்ணன் தனியனாக இங்கு வந்துள்ளான். நாம் இப்பொழுது செய்ய வேண்டியது யாது?” எனக் கேட்டான். அதற்கு இளவல் துச்சா தனன், “நமது சேனைகளைக் கொண்டு இந்த இரவுக்குள் கண்ணனைக் கொன்று விடுவதே சரியான செயல்”என்றான்.
அதனைக் கேட்ட இளைய தம்பி விகர்ணன், “தூதர்களைக் கொல்லுதல் கூடாது.அது அநாகரிகமானது, நரகம்தான் கிடைக்கும். ஆண்மைக்குரிய செயலும் அன்று” என்று இடித்துக் கூறினாள். “இரகசியமான இந்த இடத்தில் சின்ன பையனாகிய இவனை யார் சேர்த்தது” என்று கடிந்து கொண்ட துச்சாதனன் “விதுரன் வீட்டில் தீ வைத்து அந்த விதுரனோடு, கண்ணனையும் சேர்த்துக் கொன்று விடலாம்” என்ற யோசனையைக் கூறினான்.
அதனைக் கேட்டுக் கர்ணன், “நான் ஒரே அம்பினால் அவர்களையெல்லாம் கொல்ல இருக்கும்போது இந்த வீண் வேலை ஏன் உங்களுக்கு?” என்றான். அப்பொழுது சூழ்ச்சிப்புரிவதில் கைவந்த கலையாகக் கொண்ட சகுனி, “தூதனாக வந்த அந்தக் கண்ணனைப் பெரிய படுகுழியில் தள்ளி விலங்கை மாட்டி சிறை வைக்கலாம்” என்று ஒரு யோசனை கூற, வழக்கம் போல மாமன் கருத்தைத் துரியோதனன் ஏற்றான்.
உடனே அந்த இரவில் ஒரு மண்ட பத்தில் பெரும் பள்ளம் தோண்டினார்கள். வேதங்களின் அறிவுக்கும் எட்டாத விழுப் பொருளை, கற்பகக் கனியை, கண்ணனைச் சிறைபிடிக்க அந்த நிலவறையில் (படு குழியில்) அரக்கர்கள், மல்லர்கள், முதலானவர்களை, வில், வாள், வேல், கதை முதலியவற்றோடு இருக்க வைத் தார்கள். மேலே மூங்கில் பிளப்புக்களை வரிசையாக வைத்து, அதன் மேல் பள்ளம் தெரியாமல் இருக்க, கனத்த ஆடைகளைப் பரப்பினர். அதன் மேல் இரத்தினபீடம் வைத்தார்கள். மேலே பூ மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட விதானம் ஒன்று அமைத்தார்கள். உள்ளே பள்ளம் இருப்பது தெரியாதவாறு எல்லா ஏற்பாடுகளையும் எச்சரிக்கையுடன் செய்தார்கள்.
அறிந்தும் அறியாதவன் போலக் கண்ணபிரான்
மறு நாள் காலையில் கண்ணிலான் மகன் துரியோதனன் எல்லோரும் கூடியிருக்கும் சபைதனில் கண்ணபெருமானை அழைத்து வரும்படி தூதுவர்களுக்குக் கட்டளை யிட்டான். சிற்றஞ்சிறு காலையில் எழுந்து நீராடி, ஸந்தியா வ வந்தனம் போன்ற அனுஷ்டானங்களைக் குறைவறச் செய்து முடித்து நின்ற பெருமானைத் தூதுவர்கள் வணங்கி, அழைக்க, க்க, அப்பெருமானும் தம்பி சாத்தகியோடு துரிதமாக அரண்மனை வாயிலை அடைந்தார். சாத்தகியை வெளியிலே நிறுத்திவிட்டு நிலவறையில் மல்லர் வைகிய பெரிய அவையில் புன்முறுவலுடன் நடந்தனவெல்லாம் அறிந்தும் அறியாதவர் போல நுழைந்தார். வஞ்ச நெஞ்சன் துரியோதனன் எதிர் கொண்டு வரவேற்று, பொய்யாசனத்தில் அமரச் சொல்ல, தன் அகடிதகடா சாமர்த்தி யத்தினை உலகெலாம் அறியவேண்டி எம் பெருமான் அதன் மேல் செம்மாந்து அமர்ந்தார்.
எங்கு பார்த்தாலும் எம்பெருமான்
அச்சுதன், அமலன், அரங்கன், ஆதி பிரான் அரியாசனத்தில் அமர்ந்தவுடன் அந்நிலவறையை மூடியிருந்த அம்மூங்கிற் பிளப்புகள் ஒரு பெருத்த பேரொலியுடன் முறிந்து போயின. அப்பெருமானை அவ் வாசனம் நிலவறையில் கொண்டு சென்றது. அப்பொழுது இந்திராதி தேவர்களும் நாகர்களும் அச்சமடைந்தனர். ஆயுதங் களை ஏந்திய மல்லர்கள், அரக்கர்கள் முதலானவர்கள் அனைவரும் இறந்து ஒழியும்படி அழித்துமிதித்தார். துவைத்தார். அவரது திருவடிகள் பாதாளத்தில் சென்றன. திருமுடியோ வானத்தில் எங்கணும் பரவி நின்றது. திருமேனியோ எட்டுத் திசை யிலும் பரவி நின்றது. தான் ஒருத்தனே எங்கணும் வியாபித்திருப்பவன் என்பதைப் பிரத்தியட்சமாய் காண்பிப்பான்போல எம்பெருமான் உயர்ந்தும், பரந்தும் நின்றருளினார்.
துரியோதனன் செய்த வஞ்சனையை நன்கு அறிந்த அப்பெருமான், கோபா வேசம் கொண்டு திருப்பாதங்களினால் மிதித்தலினாலும், தனது திருவடி நகங்கள் கொண்டு தூக்கி எறிதலினாலும், அரக்கர் களோடு மல்லர்களும், பப்பரர்களும் மாண்டொழிந்தனர். உடலங்கள் பாதலத் தில் வீழ்ந்து சிதைந்தன. சில சில கைகள் விண்ணுலகத்திலுள்ள அரிசந்தனம், கற்பகம், பாரி ஜாதம், மந்தாரம், சந்தனம் என்ற பஞ்ச விருக்ஷங்களை முறித்தன; சில கைகள் கடல் நீர் எழுவதையும் முகந்து எடுத்தன; சில கைகள் அஷ்டகிரிகளையும் உடைத் தன; சில கைகள் பொன் மயமான மேரு மலையைப் பம்பரம் போலச் சுழற்றின; சில கைகள் அட்டதிக்கு யானைகளைத் தாக்கிக் கீழே தள்ளின. சில கைகள் கண்ணபிரான் அணிந்திருந்த அணிகலன் களைத் திருத்தின. சில கைகள் வலம்புரிச் சங்கங்களை எடுத்து ஒலிக்கச் செய்தன. சில கைகள் வில், வாள், வேல், அம்பு, கதை, சூலம், உலக்கை போன்ற ஆயுதங்களைக் கண்களில் தீப்பொறி பறக்க எறிந்தன.
தேவர்களோ, “உலகமுண்ட பெரு வாயா! ஓங்கி உலகளந்த உத்தமனே! தேவாதி தேவனே! பேரருளே! பாண்டவ தூதா! எங்கள் குற்றங்களை மன்னியும் ” என்று வேண்டி நின்றனர்.
ஒடுங்கிய விசுவரூபம்
துரியோதனன் நீங்கலாக சபையிலிருந்த அரசர்களும் பிதாமகர் பீஷ்மரும்,துரோ ணரும், விதுரரும் மற்றும் பலரும் “கேசவா! நாராயணா! மதுசூதனா! தாமோ தரா! ஸ்ரீதரா! இருடிகேசா! பத்மநாபா! கமலக் கண்ணா! துவாரகை வாசா! பரந்தாமா! வேதங்கள் நீ! அவற்றின் விழுப் பொருளும் நீ! ஐம்பூதங்களும் நீ! கருடக் கொடியோய்! அரவணையாய்! எங்களை மன்னித்தருள்க” என வேண்டி நின்றனர். நான்முகனும். இந்திராதி தேவர்களும் தோத்திரம் செய்தனர். அதனால் அப்பெரு மான் கோபம் அடங்கி, தன் விசுவ ரூபத்தையும் ஒடுக்கிக் கொண்டார்.
“அரவக் கொடியோய்! உன் செயல் மிக நன்றாக உள்ளது! உனக்கு ஏன் இந்த கீழ்த்தரமான புத்தி வருகின்றது? உன்னுடைய கொடுமை ஒழிய உன்னை உன்குலத்தாரோடு இன்றே முடிக்குவன். பாண்டவர்கள் அன்று செய்த சப்தங்கள் நிறைவேறுவான் வேண்டியும், படைக் கலம் ஒன்றையும் எடுக்கமாட்டேன் என்று உறுதி கொடுத்தமையாலும் உன்னைக் கொல்லாது விட்டிட்டேன். நீ எக்காலத்தும் திருந்தமாட்டாய்” என்று கூறி, அத்துரியோ தனன் தவிர மற்ற அனைவரும் பின்வந்து வழியனுப்ப, எம்பெருமான் அச்சபையை விட்டு வெளியேறினார். வழி விடுவதற்குத் தொடர்ந்து வந்த அரசர்களுடன் இன்னுரை யாடி, அவர்களைத் தொடராது, நிற்கச் செய்து, பின், சூரியன் புத்திரன் கர்ணனோடு தனியிடத்திற்குச் சென்றார்.
தனியிடத்திற்குச் சென்ற கண்ணபிரான், கர்ணனைப் பார்த்து, “கர்ணா! உண்மை யில் நீ தேரோட்டி அதிரதன் மகன் இல்லை அவனுடைய வளர்ப்பு மகன் தான். உன்னைப் பெற்ற தாய் குந்திதான்” என்று கூறவே கர்ணன் வியப்புடன் கண்ணனைப் பார்த்து,”கண்ணா! என்னுடைய பிறப்பில் ரகசியம் உள்ளதா? அதனைச் சொல்வா யாக. கண்ணா சொல்வாயாக “என வேண்டி நின்றான். அதன்பின் கண்ண பிரான், தருமர் முதலான தம்பியரைப் பெறுவதற்கு முன்னால், ஏ ஏன் திருமணம் ஆவதற்கு முன்னால், துருவாச முனிவர், குந்தி, தனக்குச் செய்த பணிவிடைகளைக் கண்டு மகிழ்ந்து ஒரு மந்திரத்தைச் சொல்லிக் கொடுத்து, ”யாரை நினைத்து இந்த மந்திரத்தைச் சொல்கிறாயோ அவர் அருளினால் உனக்கு ஒரு குழந்தை பிறக்கும் ” எனக் கூறிச் சென்றார். ”அதனைச் சோதனை செய்தற் பொருட்டு அவர் சென்ற உடனே சூரியனை நினைத்து அந்த மந்திரத்தைக் கூறினார். அப்பொழுது சூரியன் அருளால் நீ குந்தியிடத்துப் பிறந்தாய். பின்னர் உலகோர் பழிக்கு அஞ்சி உன்னைப் பெட்டியில் வைத்து கங்கையாற்றில் விட்டு விட்டாள். அதனை உன் தந்தை அதிரதன் கண்டு எடுத்துக் கொண்டு போய்த் தன் பிள்ளையாகவே எந்தக் குறையுமில்லாமல் வளர்த்தான். அதனால் நீ பாண்டவர்களுக்கு மூத்தவன்; எனவே நீ குந்தியிடம் சேர். அதன் காரணமாக பாண்டவர் ஐவரும் உன்னைத் தமையன் என்று அறிந்து உனக்கு நாட்டைக் கொடுத்து உன் கீழ்ப் பணிபுரிவர். அப்பொழுது இந்தக் குருநாட்டை நீயே தனிப்பட ஆளலாம்” என்று கர்ணனின் பிறப்பின் ரகசியத்தை எடுத்துக் கூறினார்.
ஆனந்தக் கண்ணீர் வடித்த கர்ணன்
அதனைக் கேட்டு கர்ணன் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வடிந்தது. மெய் சிலிர்த்தது. திக் பிரமையுற்றான். பின்னர் ஒருவாறு தேறி, பிறப்பின் ரகசியத்தை அறிவித்த கண்ணபிரானை நோக்கி, “கார் வண்ணா/ கமலக்கண்ணா! தாமோதரா! மதுசூதனா! நின்னால் என் பிறப்பினை உணர்ந்தேன். நான் யார் என்று தெளிவாக அறிந்து கொள்ளாத காலத்தில், தேரோட்டி மகன் என என்னை இழித்துரைத்த காலத்தில், துரியோதனன் என்னைக் கீழ் மகன் என்று நினைக்காது,என்னைத் தனக் குரிய உயர்ந்த நண்பனாக்கிக் கொண்டான். பிறர் பழிக்க முடியாதபடி அங்க நாட்டு அரசனாக்கினான். வறியவர்களுக்கெல்லாம் வாரி வாரி வழங்கும் உரிமையைக் கொடுத்துத் ‘தானவீரன்’ என்ற புகழினைப் பெறச் செய்தான். சமவுரிமை தந்து, அரச வாழ்வினைத் தந்து அன்பினையும் ஈந்தான், அத்தகைய உயிர் நண்பனை விட்டு. பாண்டவர் பக்கம் சேரின் என்னை உலகோர் பழிப்பர்; செஞ்சோற்றுக் கடன் மறந்த பாவியாகமாட்டேன். அது மட்டு மல்லாது துரியோதனன் செய்த நன்றியை மறக்கின் ரெளவாதி நரகம் தான் கிடைக்கும்.
“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை, செய்ந்நன்றி கொன்ற மகற்கு’ (குறள் ) என்பன போன்ற நீதி எனக்கும் சேர்த்துத் தான் சொல்லப்பட்டிருக்கிறது” என்று கூறி கண்ணன் வேண்டுகோளை ஏற்க மறுத்து விட்டான்.
கண்ணபிரான் தான்வந்த வேலை முடிந்தது என்று மனதில் எண்ணி,எதுவும் பதில் பேசாது, அவனிடம் விடைபெற்றுக் கொண்டு அவ்விடம் விட்டு நீங்கினார்.
கண்ணபிரானின் ராஜ தந்திரம்
கர்ணனின் பிறப்பு ரகசியத்தை அவனிடத்தில் கூறி அவனைத் தெளிவு படுத்தியபின், கண்ணபிரான், வில்லாற்றல் மிக்க துரோணரின் மகன் அஸ்வத்தாமனை ஓரிடத்தில் தனியாக அழைத்துச் சென்றார். அங்கு அவனைப் பார்த்து, “அஸ்வத்தாமா! பாண்டவர்கள் குறித்தபடி வனவாசத் தையும், அஞ்ஞாதவாசத்தையும் முடித்து வந்துள்ளனர். அவர்கட்கு இந்தத் துரியோ தனன் ஐந்து ஊர்களையேனும் கொடுக்க மறுத்துவிட்டான். “ஈ இருக்கும் இடம் எனினும் யானவர்க்கு அரசு இனிக் கொடேன்” என்று நிர்த்தாட்சணியமாகப் பதில் சொல்லி விட்டான். இவ்வாறு துரியோதனன் கூறியதற்கு நீயே சாட்சி யாவாய்.” என்று கூறிவிட்டு மேலும் அப்பெருமான், “உன்னைப் போன்ற பெருவீரர்கள் இரு பக்கத்திலும் இல்லை. எனவே உன்னைத் துரியோதனன் சேனைத் தலைவன் ஆக்குவான். ஆனால் அதனை நீ ஏற்காதே. ஏனெனில் நீ பாண்டவர்களிடம் அன்பு கொண்டவனாயிற்றே” என்று பேசிக் கொண்டிருக்கும் பொழுதே அஸ் வத்தாமன் அறியாமல் மாயக் கண்ணன் தன் கையிலிருந்த மோதிரத்தைக் கீழே நழுவ விட்டான். அதுவும் தரையில் வீழ்ந்தது. அதனைக் கண்ட அஸ்வத்தாமன் அம் மோதிரம் தானாக விழுந்துவிட்டது என்று எண்ணி, கண்ணனின் சூழ்ச்சி அறியாமல் கீழே குனிந்து அம்மோதிரத்தைக் கையி லெடுத்து, கண்ணபிரானின் தாமரைக் கையில் கொடுக்க முன்வந்தான். ஆனால் அப்பெருமான் அம்மோதிரத்தை வாங்கிக் கொள்வதற்கு முன்னே “தூயவனே! வானில் சூரியமண்டலம் சுற்றி வட்ட மிட்டுள்ளது பார்” என்று கூறி வானத்தைப் பார்த்தார். அஸ்வத்தாமனும் தன் கையில் வைத்திருந்த மோதிரத்துடன், அக்கண்ண னுடன் சேர்ந்து வானத்தைப் பார்த்தான். பின்னர் அந்த மோதிரத்தைக் கண்ணன் கையில் தந்தான்.
இதனை மற்ற அரசர்களுடன் துரியோ தனனும் கண்டான். துரியோதனன் மட்டும் தவறாகப் புரிந்து கொண்டான். “அஸ்வத் தாமன் தானாகச் சென்று கண்ணபிரான் மோதிரத்தைக் கையில் கொடுத்து. அவன் எதிரில் நின்று பாண்டவர்க்கு உதவி செய்வ தாகச் சத்தியம் செய்து கொடுத்துள்ளான். ஆகையால் இவன் எந்த உறவைத் தேடி வந்தாலும் இவனை நம்புதல் கூடாது. நம்பினால் நமக்குத்தான் தீங்கு” என்று எண்ணி, மற்றவர்களிடமும் “அஸ்வத் தாமன் நம்பிக்கை துரோகம் செய்கிறான். என்று கூறிச் சென்றுவிட்டான். தான் நினைத்த செயல் கைகூடியது என்ற திருப்தியுடன் அஸ்வத்தாமனை அனுப்பி விட்டுக் கண்ணபிரான் சென்றுவிட்டார். பின்னர் இதனைக் கேள்விப்பட்டு அஸ்வத்தாமன். சித்தம் கலங்கி, “துரியோதனன் என்னை நம்பமுடியாதபடி இந்தக் கண்ணன் செய்துவிட்டானே ” என்று சிந்தனையில் ஆழ்ந்தான். மனம் கலங்கினான்.
கர்ணனைக் காணச் சென்ற குந்திதேவி
அஸ்வத்தாமனைத் துரியோதனனின் நம்பிக்கைக்குரியவனல்லாதவனாகச் செய்துவிட்டபின் கண்ணபிரான் விதுரர் வாழ்மனை சென்று, அங்கு உணவுண்டு, பின்னர் குந்திதேவியின் திருமாளிகை யினை அடைந்தார். கர்ணன் தன் மூத்த மைந்தன் என்பதை அறிந்த குந்திதேவியை அக்கர்ணனுடைய திருமாளிகைக்குப் போய் வருமாறு அனுப்பினார். அவளும் ஆனந்தத்தோடு தன் மகன் கர்ணனைக் காணச் சென்றாள்.
தன் இல்லம் வந்த அன்னை குந்தி தேவியை எதிர்கொண்டு வரவேற்று அவள் திருப்பாதங்களில் வணங்கி, கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிய உள்ளே அழைத்துச் சென்று உயர்ந்ததோர் ஆசனத்தில் வீற்றிருக்கச் செய்து, கண்ணாரக் கண்டாள்; பெற்றதாய் என எண்ணி மனம் குளிர்ந்தான். அவளும் தன் மூத்தமகனைக் கண்டவுடன் கண்களில் நீர் வழிய அன்போடு நோக்கினாள். “பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ?” என்ற நிலையில் இருவரும் இருந்தனர். பின்னர் ஒருவாறு தேறிக் கர்ணன், குந்தி தேவியைப் பார்த்து, “அன்னையே! தாங்கள் இந்தத் திருமாளிகைக்கு எழுந்தருளியதற்குக் காரணம் யாதோ? அடியேன் அறிந்து கொள்ளலாமா?” என்று பவ்யமாகக் கேட்டான்.
அதற்கு அவள் மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு, துருவாசர் முன் சொன்ன மந்திரத்தைக் கொண்டு கன்னியாய் இருக் கும் காலத்தில் அவனை ஈன்றதையும், பழிக்கு அஞ்சி, பெட்டியில் வைத்துக் கங்கையாற்றில் தான் விட்டதையும்,தேர்ப்பாகன் எடுத்து வளர்த்ததையும், கண்களில் கண்ணீர் ஆறாகப் பெருகக் கூறினாள்.
ஏற்கெனவே கண்ணபிரான் மூலம் தான் குந்தி மைந்தன் என்பதை அறிந்தவன் ஆதலால் அவள் கூறியதை ஏற்றுக் கொண் டான். ஆனாலும் அவன், “அன்னையே! என்னைப் பொறுத்தருள்க; பணப்பித்துப் பிடித்த மாதர் பலர், என்னிடம் வந்து தாங்கள் தான் என்னுடைய தாயார் என்று கூறிப் பணத்தைப் பறித்துச் சென்றனர். அதனால் என் குறையை நாகர்களிடம் முறையிட்டேன். அவர்கள் தெய்வத் தன்மையுள்ள ஆடை ஒன்றை வழங்கி, ”உன்னுடைய உண்மையான தாய் தவிர வேறு யார் அணிந்தாலும், அவர்கள் வெந்து சாம்பலாகிப் போய்விடுவார்கள்” எனக் கூறிக் கொடுத்துச் சென்றார்.
“அதன்பின் யாரும் இங்கு வந்ததில்லை; நீங்கள் வந்துள்ளீர்கள்” என்று கூறி அந்த ஆடையைக் கொடுத்தான். ‘அது நன்மைக்கே” என்று கூறி, குந்தி அதனை வாங்கி உடம்பில் அணிந்து கொண்டு கன்னிப் பருவத்தில் அவனைப் பெற்ற நாளில் இருந்தது போலவே, தாய்மைத் தன்மையோடு விளங்கினாள்.
அவ்வாறு குந்தியிருந்தமையைக் கண்டு, அளவற்ற மகிழ்ச்சிக் கடலில் கர்ணன் மூழ்கினான். உடல் பூரித்தான், அவளும் அளவற்ற மகிழ்ச்சி கொண்டாள். தன்னிலை மறந்து இருவரும் சிறிது நேரம் இருந்தனர்.
குந்தி தேவி வேண்டுதல்
அப்பொழுது குந்தி, “மகனே! கர்ணா! உன்னுடைய தம்பியர்கள் பாண்டவர்கள் உன்னை வணங்கிப் பணிவிடை செய்ய குரு நாட்டை நீ ஆட்சி செய்யும்படி பாண்டவர் பக்கம் சேர்வாயாக” என்று வேண்டினாள். அதனைக் கேட்டு, கர்ணன், ”என்னருமைத் தாயே! அன்னையே! துரியோதனனுக்கும் எனக்கும் உள்ள நட்பினை நீங்கள் அறியமாட்டீர்கள். ‘தேர்ப்பாகன் மகன்’ என்று இந்த அர்ச்சுனன் முதலாகவுள்ள இந்த மன்னர் எல்லோரும் இகழ்ந்துரைத்த காலத்து, அவர்களையெல்லாம் வெகுண்டு நோக்கி அதோடு நில்லாது, தன்னை வணங்கும் அரசர்களை எல்லாம் என்னை வணங்கச் செய்தான். அதற்காக என்னை அங்கநாட்டு அரசனாக்கி ஒரு பெரிய அந்தஸ்தைக் கொடுத்தான் அது மட்டுமன்று தாயே! தன்னெச்சில் தானுண்ணாத்தன்மையாகிய அவன் என்னெச்சில் என்னோடு இயைந்து உண்டான் இவை மட்டுமா! இன்னும் சொல்கின்றேன் கேள் :-
கதறி அழுத கர்ணன்
“இராசாதிராசன் துரியோதனன் தேவி லக்ஷணையும், நானும் ஒரு நாள் தனியாக இருந்து சூதாட, துரியோதன மன்னன் வேட்டையாடிப் போய், களைத்து விரைவாக வந்தது கண்டு அவன் மனைவி, ‘நான் போகின்றேன்’ என்று கூறி ஆட்டத்தின் இடையில் எழுந்தாள். அரசன் வந்து கொண்டிருப்பதை அறியாத நான், அவள் போகாமல் தடுக்க வேண்டி “நடு ஆட்டத் தில் எங்கே போகின்றாய்” என்று கூறி அவள் பூந்துகிலைப் பிடித்து இழுத்தேன். அதனால் அவள் அணிந்திருந்த மேகலா பரணம் அறுந்தது. அதிலிருந்த நவரத்தின மணிகள் நாற்றிசையும் சிதறி விழுந்தன. கீழே சிதறிய நவரத்தின மணிகளை நான் பொறுக்க முனைந்தேன். அப்பொழுது அத்துரியோதனன் என் ஆருயிர் நண்பன் என் அருகே வந்து நவரத்தின மணிகள் சிந்தியதற்குரிய காரணத்தைக் கேட்காது, அகமும் முகமும் மலரக் கருணையுடன் அந்த நவரத்தின மணிகளை உங்களுட னிருந்து பொறுக்கட்டுமா, அல்லது கோக் கட்டுமா? என்றான். தேவி வெலவெலத்து நிற்க நான் திக்பிரமை பிடித்து நின்றேன். அவன் இதுவரை என்மேல் சந்தேகப் படவே இல்லை. என்ன நடந்தது என்று ஒரு கேள்வியும் கேட்கவில்லை. அத்தகைய என் ஆருயிர் நண்பனுக்கு என்னுயிரைப் போர்க்களத்தில் கொடுத்தால் என்ன குறைவு ஏற்படும்? அந்த ஆருயிர் நண்ப னுக்கு, அத்துரியோதனனுக்குப் போர்க் களத்தில் செஞ்சோற்று. அருங்கடன் கழிப்பது எனக்கு அறமும் பெரும் புகழும் ஆகும். இல்லையெனில் எனக்கு நரகம் தான் கிடைக்கும். மேலும் பாண்டவர்களை என் விரோதிகளாகவே நினைத்துப் பழகி விட்டேன். அதனால் அவர்களுடன் சேர் வது என்பது இந்த ஜன்மத்தில் நடவாது. ஆதலின் உங்கள் வேண்டுகோளை ஏற்க இயலாதவனாயிருக்கின்றேன். என்னை மன்னியுங்கள்” என்று கூறிக் கதறி அழுதாள்.
கர்ணன் கூறியதைக் கேட்டு மனம் சோர்ந்த குந்தி தேவி, கண்ணன் உரைத்த படி ‘என் அருமை மகனே! எனக்கு இரண்டு வரங்கள் தரவேண்டும்.ஒன்று உன்னிடத்திலுள்ள நாகக்கணையை ஒரு தடவைக்கு மேல் அர்ச்சுனன் மீது விடக் கூடாது. இரண்டாவது அர்ச்சுனனைத் தவிர மற்ற நால்வரையும் போர்க்களத்தில் கொல்ல முயற்சி செய்யக்கூடாது” என்றாள். அதற்குக் கர்ணன், “தாயே! அம்மா! நாகக்கணையை அர்ச்சுனன் மீது ஒரு தடவைக்கு மேல் எக்காரணம் கொண்டும் நிச்சயமாக விடமாட்டேன். இஃது உறுதி. அர்ச்சுனன் அல்லாத ஏனைய நால்வரையும் எக்காலத்திலும் கொல்ல மாட்டேன் இஃது உறுதி” என்று அன்னை கேட்ட இரு வரங்களையும் அளித்தான்.
கர்ணன் கேட்ட இரண்டு வரம்
அன்னை கேட்ட இரு வரங்களை அளித்த பின் கர்ணன் அன்னை குந்தியிடம் ”என்னிடமிருந்து இரு வரங்களைப் பெற்ற தாங்கள், எனக்கு இரு வரங்கள் தர வேண்டும்” எனக் கேட்க அவளும் கொடுப்பதாக ஒப்புக் கொண்டாள். உடனே கர்ணன். “அம்மா! முதலாவது போர்க் களத்தில் ஒருவேளை அர்ச்சுனனின் அம்பு என் உடலில் ஊடுருவி, நாள் மண்ணில் சாய்கின்றபொழுது, அம்மா! நீங்கள் என்னை ‘மகனே’ என்று தாங்கிக் கொண்டு நான் உன் மூத்த மகன் என்பதை உலகறியச் செய்ய வேண்டும். எனக்குரிய நீர்க்கடன், இறுதிக்கடன்களை என் தம்பியரைக் கொண்டு செய்விக்க வேண்டும். இரண்டா வது நான் உன்னுடைய மகன் என்பதனை என் தம்பியர்க்கு நான் இறக்கும் வரையில் சொல்லக்கூடாது. அந்த உண்மையை நீ உரைத்து விட்டால் என் தம்பியர்கள் ப்பர் தங்களுக்குரிய நாட்டை எனக்கே அளிப்பர். அதனை நான் என் நண்பன் துரியோதனனுக்கே அளிப்பேன். அப்பொழுது பாண்டவர்கட்கு அரசு இல்லாதொழியும்” என்றான். குந்தியும் அவ்வாறே செய்வதாக ஒப்புக்கொண்டு, அவனிடம் விடை பெற்றுக் கொண்டு கண்ணிலான் கண் பெற்று மீண்டு இழந்த நிலையில் குந்தி தன்னிருப்பிடம் சேர்ந்தாள். அங்கு கண்ணனிடம் நிகழ்ந்த அனைத்தையும் எடுத்துக் கூறினாள். அதனைக் கேட்டுக் கண்ணன், “தான் எண்ணிய எண்ணம் இனிதாக முடிந்தது” என்று முடிவு செய்தார். பின்னர் குந்தியிடம் விடை கேட்டார்.
கண்ணபிரான் புறப்பட்டார்
அப்பொழுது குந்தி தேவி, “கண்ணா| அனாத ரட்சகா! ஆபத்பாந்தவா! என் மைந்தர்களாகிய பாண்டவர்கள் ஐவரும் உன்னிடம் அடைக்கலம் புகுந்துள்ளனர். அவர்களைக் காப்பது உன் கடன்; என் மைந்தர்களுக்கு, எதிர்வரும் பகையைப் போக்கிக் கொள்ளுதலே தர்மமாகும் என்பதைத் தெரிவிப்பாயாக” என்று கூறி விடை கொடுத்து அனுப்பினாள். பின்னர் விதுரரிடம் சென்று விடை கேட்க, அவர், “போரில் வீரம் காட்டுதலே சிறந்தது எனப் பாண்டவர்களிடம் கூறுவீர்களாக” என்று கூறி விடைகொடுத்து அனுப்ப, கண்ணபிரான் சாத்தகியோடும் சேனையோடும் அங்கிருந்து புறப்பட்டார்.
கண்ணபிரான் தேரேறி, துரியோதனன தவிர பின்னே தொடர்ந்து வந்தவர்களை ஒவ்வொருவராக நிற்கச் செய்து, நீர் நிறைந்த அகழி சூழ்ந்த, அஸ்தினாபுரத்துக் கோட்டையை விட்டு, நீங்கி, காடெலாம் கடந்து, பாண்டவர் வாழ்கின்ற உபப்பிலா வியம் போய்ச் சேர்ந்தார்.
அங்கு பாண்டவர்கள், பாஞ்சாலி ஆகியவரைச் சந்தித்து, கர்ணனின் பிறப்பின் ரகசியத்தை எடுத்துக்கூறி அவனிடம் அவன் தாய் குந்தி உறுதி மொழிகள் பெற்றதைத் தவிர மற்ற “ஈ இருக்கும் இடம் எனினும் யான் அரசாள அவர்கட்கு இடம் கொடேன்'” என்று துரியோதனன் சொன்னது, விதுரர் வில்லை முறித்துப் போட்டது. வஞ்சனையாகத் தன்னை நிலவறையில் தள்ளியது, அசுவத்தாமனைப் பற்றித் துரியோதனனுக்கு அவநம்பிக்கை ஏற்படச் செய்தது போன்ற விஷயங்களை மட்டும் கூறினார். மேலும் அப்பெருமான், பீஷ்மர், துரோணர் போன்ற பெரியோர் களும் பரசுராமர், கண்வர், நாரதர் முதலான முனிவர்களும் சபையிலிருந்த மற்றவரும், “கண்ணன் கேட்பது தகுதியுடைத்து. ஆகவே பாண்டவர்க்கு உரிய நாட்டைக் கொடுப்பாய்” என்று கூறியும், நான், சாம, தான, பேத, தண்டம் என்னும் உபாயங்கள் மூலம் எடுத்துக் கூறி தெளிய வைத்தும்; இறுதியாக ஐந்து ஊர்களையாவது கொடு என்று யாசித்தும், அவன் ஒத்துக் கொள்ளாது “ஈ இருக்கும் இடம் எனினும் யான் அவர்க்கு அரசு இனிக்கொடேன்” என்று கூறிப் போருக்குத் தயாராகிவிட்டான். என்பதை எடுத்துக் கூறினார். “நமது சுற்றத்தார்களாயினும் அஞ்சிடாமல் பகைவர்களைக் கொல்லுதலே அரச நீதி” என்று உம்முடைய தாய் கூறி அனுப்பினாள். வில்லில் வல்ல விதுரரோ, “அந்தத் துரியோதனாதியர் நூறு பேரும் வீர சொர்க்கம் அடையும்படி போர் செய்தலே க்ஷத்திரிய தருமம்” என்று கூறியருளினார். அவர்களுடைய கருத்துத்தான் எனக்கும். போர் செய்யும்போது பல துன்பங்கள் வரும். அதனையெல்லாம் பொறுத்துக் கொள்ளல் வேண்டும்” என்று கூறி முடித்தார்.
கோபம் கொண்ட தருமபுத்திரர்
கண்ணபிரான் கூறியவற்றையெல்லாம் கேட்ட தருமபுத்திரரோ, அடக்க முடியாத கோபங்கொண்டு, “இனி நான் எதிர்வரும் பகையை முற்றிலுமாக முறியடிப்பேன், பகைவரை அழிப்பேன்” என்று உறுதி கூறினார். அதன்பின் இன்னும் தன் பக்கம் சேராத தரணிபர்க்கெல்லாம் தருமபுத்திரர் ஓலைகளை எழுதி அனுப்ப அவர்களும் நால்வகைப் படைகளோடு விரைந்து வந்தனர்.
தனக்குத் துணை புரிய வந்த மன்னர் களிடம் தருமபுத்திரர், “மன்னர்களே! நான் கண்ணனை, உரிய நாட்டைத் திருப்பித் தரும்படி துரியோதனன்பால் தூது அனுப்பினேன். ஆனால் துரியோதனன் எள்ளளவு கூட இடம் கொடுக்க மறுத்துவிட்டான். போருக்குத் தயாராக இருப்பதாகக் கூறி விட்டான். ஆதலின் உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் இப்பொழுது அவசியம் வேண்டும்” என்றார். அந்த மன்னர்களும் தங்கள் தங்கள் வலிமையை எடுத்துக் காட்டிக் கெளரவரை நிச்சயம் வெல்வோம் என்றனர். அவர்கள் சொன்ன அந்த உறுதி மொழிகளைக் கேட்ட அளவில் தருமபுத்திரர் பகையையொழித்தவராய்ப் புத் துணர்வு பெற்று, மச்ச நாட்டு மன்னன் விராடனின் மூத்தமகன் சுவேதனை, தன் ஏழு அக்குரோணி சேனைக்குச் சேனாதிபதி ஆக்கினார். அதற்குரிய முடியைச் சூட்டு வித்தார். பின்னர் பல்வகை வாத்தியங்கள் முழங்க, கௌரவருடன் போரிட இருப்பதை எல்லார் முன்னிலையிலும் வெளிப் படுத்தினார்.
அதே சமயத்தில் துரியோதனன், கண்ண பிரான் சென்றபின் இன்னும் தன்பக்கம் சேராத மன்னர்க்கெல்லாம் தன் பக்கம் சேரும்படி ஓலைகளையும், தூதுவர் களையும் அனுப்பினான். அவர்களும் நால்வகைப் படைகளோடு ஏழுகடல் என்ன நாற்புறமும் சூழ அஸ்தினாபுரம் வந்தார்கள். தனது பதினொரு அக்குரோணி சேனைக்கும் சேனாதிபதியாக, துரியோதனன் கங்காபுத்திரரும் தன் ஆசான் பரசுராமனை வென்றவரும் ஆகிய பிதாமகர் பீஷ்மரையே நியமித்தான்.
மகாபாரதம் – 41 சொன்ன சொல் மீறுகின்றவன் துரியோதனன்… பசுவான் ஸ்ரீ கிருஷ்ணனின் விசுவ ரூப தரிசனம்