சஞ்சயன் தூதாக வந்து சென்ற பின்னர் தருமபுத்திரர், சாம, தான, பேத, தண்டம் என்னும் நால்வகை உபாயங்கள் பற்றி ஆராய்ந்து நன்கு செயல்படுத்துவதில் வல்ல தூதுவன் கண்ணபிரான் தான் என்று அறிந்து, அக்கண்ணபிரானைப் பார்த்து, தருமபுத்திரர், “கண்ணா! நாங்கள் மீண்டும் ஆட்சியைப் பெறுவதற்கு எத்தகைய உபாயங்களைக் கையாளலாம் என்பதை அறிந்து கூறுவாயாக” என்று கேட்டுக் கொண்டார். அதனைக் கேட்ட கண்ணபிரான், முதலில் தருமபுத்திரரின் கருத்தைக் கூறுமாறு கேட்க அவரும், “கண்ணா! வலிமைமிக்க கொடிய போரைச் செய்தால் இருதரத்தாரும் மாண்டு போவர். அதனால் யாருக்கும் பயனில்லை. ஆதலின் செங் கண்மாலே! மலரும் மணமும் போலப் பாண்டவர்களும் கௌரவர்களும் ஒன்றி வாழ்வதற்கு என்மனம் பெரிதும் விரும்பு கின்றது. ஆதலின் எங்களின் தூதனாகக் கௌரவரிடம் நீங்களே செல்ல வேண்டும். தூதனாகச் செல்லும் தாங்கள் எங்களின் போர் விரும்பாத்தன்மையை அறிவித்து, பாதி பாகமாவது கேட்டுப் பெறுவாயாக அதனைக் கொடுக்க அவர்கள் மறுத்தால் ஐந்து ஊர்களை, ஐந்து சகோதரர்களுக்காக கேள்; அதனைக் கொடுக்க உடன்படான் எனில் ஐந்து பேர் வாழ்வதற்கு ஐந்து வீடுகளையாவது கேள். இவற்றில் எதையும் கொடுப்பதற்கு உடன்படான் எனில் போரைச் செய்வோம் என்று கூறிவந்து விடுக” என்று கூறியதன் மூலம் போரைத் தவிர்க்க வேண்டும் என்பதுதான் தன் உறுதியான எண்ணம் என்பதை அறிவித்தார்.
அடுத்து பீமனைப் பார்த்து,”மீண்டும் ஆட்சி பெறுவதைப் பற்றி உன் கருத்து யாது ? பீமா ‘சொல்’எனக் கேட்டார். உடனே பீமன், “அச்சுதா! எங்கள் பாஞ்சாலி கூறிய வஞ்சினம் குலையவும்,என் கதாயுதத்தோடு என்தோள்களின் வலிமை கெடும்படியும், பூமியை யாசித்து, அந்தத் துரியோதனன் ஆட்சியின் கீழ்ப்பணிந்து வாழ்தல் என்பதை முற்றிலும் வெறுக்கி றேன். என்னைத் தூதாக அனுப்பின், அந்தக் கண்ணிலான் மகன்கள் நூறு பேரையும் வீர சொர்க்கத்தை ஆளும்படியாகச் செய்து, இந்நிலவுலகத்தைச் சத்தியத்தாயின் தவப்புதல்வனாக விளங்கும் எங்கள் அண்ணனை ஆளும்படி செய்வேன்” என்று கோபத்தோடு கூறினான்.
போர்தான் முடிவு
கண்ணன் மூன்றாவதாக அர்ச்சுனனிடம் அவன் கருத்தைக் கேட்க, அவன், “கேசவா! தாமோதரா! மதுசூதனா! முன்னாட்களில் கெளரவர் செய்த கொடுமைகளையெல் லாம் பொறுத்துக் கொண்டமையெல்லாம் போதாதென்று இன்னமும் பொறுக்க வேண்டும் என்று தர்ம நியாயங்களைப் பேசிக்கொண்டிருந்தால் அவிழ்த்த கூந் தலைத் திரெளபதி முடிக்கமாட்டாள்; எங்களின் பகை நீடிக்கவே செய்யும் அண்ணாரின் தருமநெறிகள், அந்த மூடன் துரியோதனன் செவியில் ஏறா. அவன் நெஞ்சில் படியா; வருகின்ற போரில் துரியோதனாதியரை அழித்து, அவர்க ளுக்குத் துணையாக இருக்கின்ற கர்ணன் போன்றவர்களை ஒழித்து, இந்நிலவுலகத்தை ஒரு வெண்கொற்றக் குடையின் கீழ் இருந்து அரசாளும்படி எம் தமையனா ருக்குத் தருவதற்கென காண்டீபம் என் கையில் சித்தமாய் உள்ளது. எனவே இந்தப் பூமியைத் துரியோதனாதியோரிடம் யாசித்தல் என்பது கூடாது. போரிலேதான் பெறுதல் வேண்டும்” என்று கூறினான்.
அடுத்து நான்காவதாக நகுலன் கருத்தை இளங்குமரன் நந்தகோபன் நயமுடன் கேட்டார். அப்பொழுது அவன், ”பரந் தாமா! பாற்கடல் வண்ணா! பத்மநாபா! நீ தூது சென்று நல்ல அறிவுரைகளைச் சொல்லி யாசித்தாலும் அந்தத் துரியோத னன் ஒரு சிறிதளவும் தரப்போவதில்லை. ஆனால் பகைவரிடம் சென்று யாசித்தோம் என்று நம்மையே அனைவரும் இகழ்வர். அந்த அற்பனின் வலிமையும் நம்முடைய வலிமையும் தெளிவாக அறிய போர் ஒன்றே சிறந்த வழி; தூது பேசுதல் எல்லாம் அத்துரியோதனனிடம் எடுபடாது” என்று திட்டவட்டமாகக் கூறினான்.
இறுதியாகக் கண்ணபிரான் இளைய சகோதரன் சகாதேவனின் கருத்தை அறிய விரும்பினார். அப்பொழுது சகாதேவன், ‘பச்சைவண்ணா! பவளவாயா! பாற்கடல் வண்ணா, பக்தர்கள் நேசா யாகாக்னியின்று தோன்றிய திரெளபதி கூந்தல் முடிந்தால் என்ன? முடிக்காது விரிந்துக் கிடந்தால் என்ன? துரியோதனன் நாடு கொடுத்தால் என்ன? கொடுக்காவிட்டால் என்ன? நீ தூது போனால் என்ன? போகாமல் இருந்தால் என்ன? கோவர்த்தன கிரியைக் குடையாகப் பிடித்து அன்று ஆநிரைகளைக் காத்த ஆயர்குலத் தலைவனே! அண்ணலே! நீ எண்ணியபடியே நடக்கும் என்பதை நான் திண்ணமாக அறிவேன். இதில் என் கருத்தை ஏன் கேட்க வேண்டும் என்று கூறினான்.
மற்றவர்கள் வெளிப்படையாகக் கூறியது போலக் கூறாது சகாதேவன் தந்திர மாகக் கூறியதன் உள் பொருளை அறியும் பொருட்டு, கார்வண்ணனாகிய அக்கமலக் கண்ணன், அச்சகாதேவனோடு தனியாக ஒரு மண்டபத்தை அடைந்து, ”சகாதேவா! பாரதப் போர் நிகழாதிருக்க நீ சொல்லு கின்ற உபாயந்தான் யாது?” எனக் கேட்டார். அதற்குச் சகாதேவன் “பூபாரம் தீர்க்க பூமியில் அவதரித்த நீயே அல்லாமல் வேறு யார் அந்த உபாயத்தை அறிவார்கள்? நான் சில சொல்லுகின்றேன். அதன்படி செய்வாயா? கர்ணன் அரசாட்சி செய்யும் படி அவனிடத்துப் பகை கொண்ட அர்ச்சு னனைக் கொல்லுதல் வேண்டும். இரண்டாவதாகத் பாஞ்சாலியின் அவிழ்ந்த கூந்தலை அரிந்து விட வேண்டும். அடுத்து மேகவண்ணா! நின்கால்களில் விலங்கை யிட்டு நான் கட்ட வேண்டும். இவற்றைச் செய்தால் மகாபாரதப்போர் வராமல் தடுக்கலாம்” என்று கூறினான்.
அதனைக் கேட்டுப் பரந்தாமன் புன்முறுவல் பூத்து, “சகாதேவா! கர்ணனை அரசாளச் செய்தல், அர்ச்சுனனைக் கொல் வித்தல், பாஞ்சாலியின் கூந்தலை அரிதல் போன்றவற்றைச் செய்தாலும், என்னை நீ கட்ட முடியுமா? ” என்று கேட்டார். அதற்கு நகுலனின் இளையவன், ‘உன்னை உன் நேராக நின்றே நான் கட்டுவேன் கண்ணா” என்றான். உடனே எம்பெருமான் பதினாயிரம் திருவுருவுகளை எடுத்துக் கொண்டு, “சகாதேவா! இப்பொழுது என்னைக் கட்டுப் பார்க்கலாம்” என்றார்.
சகாதேவனின் வேண்டுதல்
அப்பொழுது சகாதேவன், “பதினாறா யிரம் வடிவங்கட்கெல்லாம் மூலமான முதன்மையான திருவுருவத்தை இன்ன தென்று தன் தத்துவ ஞானத்தால் உணர்ந்து அந்தப்பத்துடையடிவர்க் கெளியவனின் திருவடிகளைத் தனது மனமாகிய கயிற்றால் இறுகக் கட்டினான். உடனே எம்பெரு மான், “ஒரு நிஜரூபமாகி திருமாலாகி இருப் பதை அறிந்து கட்டிய என் கால்களை விட்டிடுக ” என வேண்டினார். சகாதேவனும் அப்பெருமானை விடுவித்து, “ஆதி மூலமே! அநாதரட்சகா! ஆபத்பாந்தவா! நிகழும் பாரதப்போரில் எங்கள் ஐவரையும் காப்பாற்றி அருளும்” என அவன் உபய பாதங்களை வணங்கி வேண்டி நின்றான். ஒப்பில்லாத அப்பெருமான் அதற்கு ஒப்புதல் அளித்து, “நாம் இரண்டுபேரும் பேசியதையும் இங்கு நடந்ததையும் யாரிடமும் சொல்லாதே” என்று சகா தேவனிடம் கூறி, அக்கண்ணபிரான் அவனோடு தர்மபுத்திரன் முன்வந்து நின்றார்.
சகாதேவனோடு வந்த கண்ணபிரான், “தருமபுத்திரர் சொன்ன கருத்தையேதான் சகாதேவனும் கூறினான். எனக்கும் அந்தக் கௌரவர்களோடு சேர்ந்து ஒற்றுமையாக வாழ்தல் வேண்டும் என்ற கருத்துத்தான் உள்ளது” என்று கூறினார்.
அப்பொழுது அவிழ்ந்த கூந்தலை யுடைய பாஞ்சாலி, “அவன் கட்டிய தூணை அவனே தட்ட ஆங்கோர் வாள் எயிறு அரியாய் – நரசிம்மராய்த் தோன்றி, இரணியனது மார்பகத்தைக் கிழித்துக் கொன்று பிரகலாதனைக் காத்த பெரு மானே! ‘ஆதி மூலமே ‘என ஒலமிட்டு அழைத்த கஜேந்திரனை, நின் திருச் சக்கரத்தை ஏவி, முதலையைக் கொன்று, அதன் வாயினின்று காத்த எம்மானே! அன்று அரசவையில் துச்சாதனன் என் துகில் உரித்து அவமானப்படுத்திய காலத்து, என் ஐந்து கணவர்களும் நெட்டை மரங்கள் என நின்று பெருமூச்சுவிட்டிருக்க, என்னுடைய மானத்தைக் காத்த எங்கள் குல நாயகனே! பகைவர்களாகிய கௌரவர்கள் எனக்குச் செய்த கொடுமைகளை அறிந்து வைத்தும், அண்ணலே ! அந்தப் பகைவரிடத்துச் சென்று குருநாட்டின் ஒரு பகுதியை யாசித்துப் பெறில் நான் விரிந்த கூந்தலை எப்போது முடிப்பது?” என்று அழுது கொண்டே கூறினாள்.
அதனைக் கேட்ட கண்ணபிரான் இளவல் சாத்தகி கோபித்து எழுந்து, “பீமன் கையில் கதை இருக்க, அர்ச்சுனன் கையில் காண்டீபம் இருக்க, பாஞ்சாலியின் மேல் அவமானம் என்ற பழி நிலைத்து இருக்க, இவற்றையெல்லாம் எண்ணிப்பாராமல் பகைவரிடத்துச் சென்று பூமியைக் கேட்டுப் பெறுதல் என்பது யார் அறிவிலிருந்து உற்பத்தியானது? கண்ணபிரானது அறிவிலிருந்தா? தருமபுத்திரர் அறிவிலிருந்தா? சொல்லுங்கள்?” எனக் காட்டமாகக் கேட்டான்.
கண்ணபிரானின் உறுதி
சாத்தகி கூறியதைச் செவிமடுத்த கண்ண பிரான். “பாஞ்சாலியே! தருமபுத்திரர் கருத்துப்படி நான் பாண்டவர் தூதனாகச் சென்று, அப்பாண்டவர் சகாயனாகி, விரைவில் துரியோதனாதியரைக் கொல் வித்து,உன் சபதத்தையும், பாண்டவர் சபதத்தையும் தவறாமல் நிறைவேற்று வேன்” என்று அவள் கண்ணீரைத் துடைத்திடும் வகையில் உறுதி கூறினார். தருமபுத்திரரும் அப்பொழுது, “கண்ணா மணிவண்ணா! கார்மேக வண்ணா! உன் னுடைய ஜன்ம நட்சத்திரமான ஆவணி மாதம், அஷ்டமிதிதியோடு ரோகிணி நட்சத்திரம் சேர்ந்த இன்றைய தினமே அஸ்தினாபுரம் புறப்படுவாயாக” என,ஸ்ரீ கிருஷ்ண பகவானும் ஏகத் தூதனாய். பாண்டவர் தூதனாய் அஸ்தினாபுரம் சென்றுவரத் தன் தேர் மீது ஏறி அமர்ந்தார்.
தேர் புறப்படுவதற்கு முன், தருமபுத்திரர், “அண்ணலே! அருமருந்தே! ஆருயிர் நாயகமே! திருதராட்டிரர் முதலான அனைவர்க்கும் பிதாமகர்க்கும், ஆசார்யர்களுக்கும், அன்னை குந்தி தேவிக்கும், எங்கள் வணக்கங்களைக் கூறி அவர்களுடைய கருத்தையும் அறிந்து வாருங்கள் ” என்று கூறினார். அதன்பின் அர்ச்சுனன், “மாலே! மணிவண்ணா! உள்ளம் உருக நீ எவ்வளவு பேசினாலும், அந்தத் துரியோதனன் நாடு கொடுக்கமாட் டான். அவ்வாறு அவன் மறுத்தால் எங்கள் கையால் அவர்கள் கூட்டத்தையே விண் ணுலகுக்கு அனுப்புவோம். இது உண்மை என்று கூறி வருவாயாக” என்றான். அதன்பின் ஐவரும் கண்ணபிரானுக்கு விடை கொடுத்தனுப்பினர்.
அழகான சோலையில் எம்பெருமான்
தேரேறிச் செல்லுகின்ற காலத்தில் வழியில், நாரதர், ஜமதக்னி முதலான முனிவர்கள் எதிர்பட அவர்களை வணங்கி, “இங்கு எழுந்தருளியதற்குரிய காரணம் யாது?” என எம்பெருமான் கேட்டார். அதற்கு அவர்கள், ‘புண்ணிய முதல்வனே! உன் னைத் தரிசிக்கவும். நீ துரியோதனனிடம் கூறப்போகும் வண்ணமொழிகளைக் கேட்கவும் இங்கு வந்துள்ளோம். நீங்கள் முன்னே செல்லுங்கள். நாங்கள் பின்னால் வருகின்றோம்” என்றனர். அதனைக் கேட்டு மனமகிழ்ந்து கண்ணபிரான் அவ்வாறே வருக’ என்று கூறி, நாடு களையும் காடுகளையும் கடந்து மூன்றாம் நாளில் அத்தினாபுரத்தை அடைந்தார். அங்குள்ள தெற்குப்பக்கத்தில் இருந்த ஓர் அழகான சோலையில் அப்பெருமான் தங்கினார்.
ஸ்ரீ கிருஷ்ணன் தூது
ஸ்ரீ பகவான் கிருஷ்ணனே தூது வருகின் றார் என்பதை அறிந்த திருதராட்டிரர், ”பகவான் கிருஷ்ணனே இங்கு தூதனாக எழுந்தருளியதற்கு நான் என்ன தவம் செய்தேனோ?” என்று பெருமகிழ்ச்சி கொண்டார். அதோடு அவர், “என் முன்னோர் சேர்த்து வைத்த நவரத்தின மாலை, கிரீடம், வெண்கொற்றக்குடை, போன்றவற்றை அவர் இங்குவரும் பொழுது பரிசுப்பொருள்களாக அளிக்க வுள்ளேன்” என்று கூறினார.
அதனைக் கேட்டு அவர் தம்பி விதுரர், ”மன்னரே! வனவாசம், அஞ்ஞாதவாசம் ஆகியவற்றைச் செய்து உயிருடன் மீண்டு வந்த உன் தம்பி மைந்தர்களுக்கு இருக்க இடம் கொடுக்கமாட்டாய். ஆனால் அவர்க ளுக்காகத் தூது வருகின்ற கண்ணனுக்குச் சிறந்த வரவேற்பு அளிப்பாய். பரிசுகளைக் கொடுப்பாய். இத்தகைய உபயோகமற்ற செயலை உன்னைத் தவிர யாரால் செய்ய முடியும்?” என்று இடித்துக் கூறினார். மேலும் அவர், ”தன் பக்தர்களாகிய பாண்டவர்களுக்கு இடம் கொடுக்க மனமில்லாத உன்னிடம் அந்தப் பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் நீ விரும்பிக் கொடுக்கும் பரிசுகளை ஏற்பாரா? நன்றாக இருக் கின்றது உன் செயல்!” என்று கூறி நகைத் தார். அங்கிருந்த துரோணர், ”மன்னரே! கண்ணபிரான் இங்கு வரும்பொழுது, உம்முடைய மனத்திற்குப் பொருந்திய வகையில் நாட்டினைப் பாண்டவர்க்கு அளிப்பாய். அதனால் அப்பெருமான் யுகாந்த காலம் வரை நல்வாழ்வு பெறும்படி மனமுவந்து அருள்புரிவார்” என்றார்.
அப்பொழுது துரியோதனன், “வீணாக, ஏன் பேசிக் கொண்டிருக்கின்றீர்கள்? கண்ணன் இங்குவரும் பொழுது அவனைப் பிடித்துச் சிறையில் வைத்தால், பாண்டவர்களும் அவர்களைச் சார்ந்த மன்னர்களும் அஞ்சி நம்முடைய நட்பினை நாடிச் சமாதானத்திற்கு வருவர்” என்று இடக் காகக் கூறினான். தனயன் கூறியதைக் கேட்ட தந்தை திருதராட்டிரர், “மூடனே! கண்ணபிரான் சாதாரணமானவரா? உன்னால் அவரைத் தொடக்கூட முடியாது. இத்தகைய சபைக்குதவாத, தீங்கான சொற் களைப் பேசுவதை நிறுத்திக்கொண்டு அப்பெருமானை எதிர்கொண்டு வரவேற்ப தற்கு நகரினை அலங்கரிப்பாயாக” என்று ன அ கட்டளையிட்டார். மாமன் சகுனி, தடுத்து “அம்மாயக்கண்ணனை வரவேற்க போகாதே” என்று கூறினான். துரியோதன னும் அதனை ஏற்றுக் கொண்டான். ஆனால் பிதாமகர் பீஷ்மர், ஆசார்யர்கள் துரோணர், கிருபாசாரியார், விதுரர், மற்ற அரசர்கள் முதலான அனைவரும் கண்ணபிரானை எதிர்கொண்டு முகமலர்ச்சியுடன் இன் சொல் கூறிவரவேற்றனர். வரவேற்பை மனமுவந்து பெற்றுக்கொண்ட எம்பெர மான், கீர்த்திமிக்க விதுரர் வாழ்மனையை அடைந்தார்.
புன்முறுவல் பூத்த கண்ணபிரான்
(குறிப்பு : – கண்ணபிரானை அஸ்தினா புரத்தில் பீஷ்மர் முதலான எத்தனையோ பேர் முகமலர்ந்து வரவேற்க, அப்பெரு மான் அவர்கள் மனைக்கும் செல்லாது விதுரர் வாழ்மனைக்குச் சென்றதற்கு ஒரு காரணம் சொல்வதுண்டு. அஃதாவது, கண்ணபிரானை பீஷ்மர், துரோணர், விதுரர் தவிர மற்றவர்கள், “தாங்கள் எங்கள் மனையில் தங்க வேண்டும்” என்று கூறினார்களாம். ஆனால் அடக்கத்தின் மான விதுரரோ, எம்பெருமானை சின்னமான வணங்கி, “கண்ணனே! இஃது தேவரீர் இருக்கை. இங்கு எழுந்தருள வேண்டும்” என்று வேண்டிக் கொண்டாராம். அதனைக் கேட்டுப் புன்முறுவல் பூத்துக் கண்ண பிரான், “பரவாயில்லையே! எனக்கும் அஸ்தினாபுரத்தில் ஒரு மனை இருக்கின் றதே ” என்று கூறிக்கொண்டே விதுரர் வாழ்மனையின் உள்ளே சென்றாராம். விதுரர் கண்ணபிரானிடம் கூறியவற்றி லிருந்து இரண்டு கருத்துக்கள் தொக்கியுள் ளதை அறியலாம். முதலாவது:- விதுரர் யான்,எனது என்னும் செருக்கு அறுத்து, “தேவரீர் இருக்கை’ எனக் கண்ணபிரா னிடம் கூறினார்.
“யான் எனது என்னும் செருக்கறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும்” (துறவு -6)
என்னும் குறளுக்கு இலக்கணமாக விதுரர் திகழ்ந்துள்ளார் என்பதனை அறிந்துகொள்ள முடிகின்றது. இரண்டா வது :- சேதன அசேதனைப் பொருள்கள் எல்லாம் அவனுடைய உடைமை ஆகும். நாமே அவனுடைய உடம்பு என்னும் போது அசேதனப் பொருளாகிய வீடும் அவனுடைய உடைமைதான். அதனால் தான் விதுரர் என் இருக்கை’ என்னாது “தேவரீர் இருக்கை’ என்றார் என்க.)
தன் மாளிகைக்கு எம்பெருமான் வருகை புரிந்ததும், விதுரர், அப்பெருமானை எதிர் கொண்டு வரவேற்று அரிய சிம்மாசனத் திருத்தி, வணங்கி, “என் தந்தை போன்ற தாங்கள் இந்தக் குடிலுக்கு விஜயம் செய்ததைப் பார்க்கும் பொழுது நான் எத்தனை பெரிய பாக்கியம் செய்தவன் ஆனேன்” என்று முகமன் கூறிப் போற்றினார். அன்று அன்போடு விதுரர் இட்ட உணவை எம்பெருமான் தன்னுடன் வந்த சேனையுடன் உண்டு மகிழ்ந்தார். அதனால்தான் ‘கிருஷ்ணன் தூது’ சொல்லும் பொழுது, ‘விதுரர் விருந்து’ எனப் பாரதம் நடைபெறும் இடங்களில் சிறப்புடை விருந்தினை அளிப்பர்.
கெளரவர்களை நாசம் செய்யும் பாண்டவர்கள்
எம்பெருமானை வரவேற்று வணங்கிய பின் விதுரர், “நந்தகோபன் திருமகனே! எங்கள் நாயகனே! தாங்கள் எழுந்தருளியதற் குரிய காரணம் யாது?’ எனக் கேட்டார். தான் பாண்டவர்க்குத் தூதனாகத் துரி யோதனன்பால் வந்துள்ளதாகக் கூறினார். அதற்கு விதுரர், “துரியோதனன் போரை உருவாக்கி உயிரை விடுவானேயன்றி நாடு நல்கான்” என்றார். “அப்படியென்றால் நிகழவிருக்கும் போரில் பாண்டவர்கள் கெளரவர்களை நாசம் செய்வார்கள்” என்று கூறி, கண்ணபிரான், விதுரரை அனுப்பி விட்டுத் தான் உறங்கச் சென்றார்.
எச்சரிக்கை செய்த துரியோதனன்
மறுநாள் காலையில், துரியோதனன், பீஷ்மர், துரோணர், விதுரர், கிருபர், கர்ணன், சகுனி முதலானோர் சூழ்ந்திருக்க, திருதராட்டிரர் அரியணையில் அமர்ந்தி ருந்தார். அப்பொழுது துரியோதனன் மன்னர்கள், மற்றும் அமைச்சர்கள் முதலானோர் யாரும் கண்ணபிரானை எதிர்கொண்டு வரவேற்கக் கூடாதென்றும், கட்டளையை மீறினால், உங்கள் நகரங்கள் எரியுண்ணப்படும் என்று எச்சரித்தான். இதனை வில்லிபுத்தூரார் அழகிய சந்தத்துடன் பாடியிருக்கும் பாடல் படித்து இன்புறத்தக்கது.அப்பாடல் :
காவல் மன்னவர் முகங்கள் தோறும் இரு கண்ப ரப்பி அமர் கருதுவோர் ஏவ லின்கண்வரு தூத னாம் இடையன் இன்று நம்மவை எய்தினால் ஓவ லின்றி எதிர் சென்று கண்டு தொழுது உறவு கூறில் இனி உங்களூர் தீவ லம்செய அடர்ப்பன் என்றுதனி சீறினான் முறையை மாறினான்.
(உத்தியோகப்பருவம் -164)
இவ்வாறு அரசர்க்கும், அமைச்சர்க்கும் கட்டளையிட்டுச் சீறுகின்ற துரியோதனன் பால், தம்பி சாத்தகியோடு கண்ணபிரான் திருதராட்டிரர அரசவைக்கு வந்தார். வந்த அவரை, திருதராட்டிரர், பிதாமகர் பீஷ்மர், ஆசார்யர்கள் துரோணர், கிருபர், நல்விதுரர், முதலானோர் எதிர்கொண்டு வரவேற்றனர். வணங்கினர்; ஆனால் சூரியன் மகன் கர்ணன் ஒன்றும் தோன்றாது ஒளி குன்றி தலைகுனிந்து இருந்தான். சகுனியோ தன்னுடைய ஏற்பாட்டின்படி நில்லாது எல்லோரும் கண்ணபிரானை வரவேற்பதைப் பார்த்து மனங்கொதித்தி ருந்தான். ஆக, துரியோதனன், துச்சாதனன், கர்ணன், சகுனி என்ற இந்த நால்வர் கூட்டணி தவிர மற்ற அனைவரும் யதுகுல திலகனை, தேவகிமைந்தனை எதிர் கொண்டு வரவேற்றனர். எம்பெருமானும் தமக்கிடப்பட்ட ஆசனத்தில் வந்து அமர்ந் தார்.
ஆசனத்தில் அமர்ந்த துரியோதனன் கண்ணபிரானை நோக்கி, “கண்ணபிரானே! நேற்றைய தினம் அஸ்தினாபுரம் வந்தி ருந்தும் என் இல்லத்திற்கு வருகை புரியாது விதுரர் வாழ்மனைக்குச் சென்றதேன்” எனக் கேட்டான். அதற்குக் கண்ணபிரான், ”மன்னனே! உன் வீடு, என் வீடு என்ற பேதம் நான் பார்ப்பதில்லை. பேதம் ஏன்? அவசியம் இல்லையே! வில்லில் வல்ல விதுரர் வழியில் எதிர் கொண்டு, “தேவரீர் இருக்கைக்கு எழுந்தருளுங்கள் ” என்று அன்போடு அழைத்தார். அது மட்டும் காரணம் அன்று பாண்டவர் தூதனாய் நான் வந்துள்ளேன். பாண்டவர் தூதனாய் வந்த நான் உன் அரண்மனையில் தங்கி, நீ இடும் உணவு உண்டு, பின் உனக்கு மாறாகப் பேசுவது அழகன்று. ஆக இக்காரணங்களினால் தான் நான் வரவில்லை” என்று கூறினார்.
கண்ணபிரான் – துரியோதனன் மோதல்
பின் துரியோதனன், “கண்ணபிரானே! நீ தூதனாய் வரக்காரணம் என்ன?” என்று கேட்டான். அதற்குக் கண்ணபிரான். “மன்னனே! நின் சகோதரர்களான பாண்ட வர்கள் நீங்கள் குறிப்பிட்ட பன்னிரண்டு ஆண்டு வனவாசமும், ஓர் ஆண்டு அஞ்ஞாத வாசமும் பல துன்பங்களுக் கிடையில் வெற்றிகரமாக முடித்து இங்கு வந்துள்ளார்கள். அப்பாண்டவர்களை வரவழைத்து அவர்களுக்குரிய நாட்டினைக் கொடுத்து அவர்களோடு நெருங்கி வாழ்தல் உனக்கு நன்மை பயக்கும்” எனக் கூறினார். அதனைக் கேட்டு துரியோதனன் வெகுண்டு, “அக்காலத்தில் சூதாடி தாட்டை இழந்து காட்டுக்குப் போனவர் களை இப்போது அழைத்து வந்து என்னிடமிருக்கும் நாட்டைப் பிரித்து அவர்கட்குக் கொடுக்க நினைத்தால் நான் என்ன அந்த அளவு எளியனா? அப்பாண்ட வர்கள் கானகத்தில் வாழ்வதுதான் அவர் களுக்கு நன்மை. நன்மை. எத்தகைய எத்தகைய இனிய வார்த்தைகள் எவர் சொன்னாலும் நான் மனப்பூர்வமாக ஈ இருக்கும் இடம் கூட அவர்கள் தங்குவதற்கு எக்காலத்தும் கொடுக்க மாட்டேன்” என்று சீறினான்.
கண்ணபிரானின் எச்சரிக்கை
துரியோதனனின் அக்கிரமமான வார்த்தைகளைக் கேட்ட கண்ணபிரான். சபையிலிருந்த மன்னர்களைப் பார்த்து, “இந்தத் துரியோதனன் கூறும் வார்த்தைகள் முறையானதுதானா? நியாயம்தானா? தர்மத்தின் பாற்பட்டதா?” என்று கேட்க, அவர்கள் ஊமைகளாய் வாய் மூடி மௌனி களாயிருந்தனர். அதனால் கண்ணபிரான் அம்பிகையின் மகனாகிய திருதராட்டிரரை நோக்கி, ‘அரசனே! துரியோதனன் கோபத்தினால் கூறிய வார்த்தைகளின் விளைவு உன்னைத்தான் சாரும். நீ தற்போது குரு நாட்டு மன்னன். பாண்ட வர்க்கு உரிய நாட்டை நீ கொடுத்தால் உன்னை எதிர்த்துக் கேட்கின்றவர்கள் யார்? துரியோதனன் பேச்சை ஏற்காது பாண்டவர் களுக்குரிய நாட்டைக் கொடுத்தால் உன்னை மூன்றுலகங்களும் போற்றும்” என்று கூறினார். மேலும் அப்பெருமான் “உன்னுடைய பிள்ளைகள், மைத்துனர் சகுனி செய்த வஞ்சனையினால் பாண்ட வர்கள் அழிந்துவிடாமல், உன்னுடைய ஆசியினால் நீங்கள் குறித்த கால எல்லையை முடித்துவிட்டு இப்பொழுது வெளிவந்துள்ளனர். ஆகவே முன்னர்க் கூறியபடி உரிய நாட்டைக் கொடுத்து விடுங்கள். கொடுக்க மறுத்தால் அப்பாண்டவர்களே போர் செய்து உரியநாட்டைப் பெற்றுக் கொள்வர். இஃது உறுதி. உண்மையும் கூட பின்னால் வரப் போகின்ற அபாயத்தை நீக்கிக்கொள்ள வேண்டும் என் எண்ணத்தினால் என்ற எச்சரித்துக் கூற வேண்டி நான் தூதனாக வந்துள்ளேன். இது தவிர அவர்கள் உமக்குச் சொல்லி அனுப்பிய வார்த்தைகளும் உள, அவற்றைக் கேட்பீராக.
பிதாமகர் பீஷ்மர்; ஆசார்யர்கள் துரோணர்,கிருபர், சிறிய தந்தை விதுரர், அன்னை குந்தி, பெரிய தந்தையாகிய நீர் (திருதராட்டிரர்) முதலியோரது திரு வடிகளே எங்களுக்குப் பாதுகாக்கக் கூடிய அரண்; கடல் சூழ்ந்த உலகத்தில் பாதி யாவது கேளுங்கள். மனமில்லையென்றால் எந்த அளவு குறைவாகக் கொடுக்கின்றார் களோ அதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வோம். இந்த இரண்டும் இல்லாது போரிடுவதற்குச் சம்மதித்தால் அதற்கும் தயார். ஆனால் ஒருக்காலும் திரும்பிக் காட்டிற்குப் போவதென்பது நடக்காது” என்று உறுதியாக அறுதியிட்டு இறுதியாகக் கூறி என்னை அனுப்பியுள்ளார்கள். “இனி உங்களுடைய நிலைதான் என்ன என்பதை எண்ணிப் பார்த்துக் கூறுங்கள்” என்று கூறினார்.
துரியோதனனுக்கு கண்ணபிரான் அறிவுரை
அதற்குத் திருதராட்டிரர், “கண்ண பிரானே! என் சொல்லை இவன் கேட்க மாட்டான். நீயே அவனுக்கு மனத்தில் பொருந்தும் படியாகக் கூறுவாயாக ” என்றார். “நீங்கள் வளமாக வாழ்வு பெற்று வளமான வாழ்க்கை நடத்த உன் உடன் பிறந்தோர்களைக் காட்டிற்கு மீண்டும் அனுப்புதல் என்ன நியாயம்? அது அரச நீதியாகாது. அப்பாண்டவர்க்கு உரிய நாட்டைக் கொடுத்து அவர்களோடு கலந்து வாழின் போரிடுதலை அவர்கள் கனவிலும் நினைக்கமாட்டார்கள்” என்று கண்ணபிரான் துரியோதனனுக்கு அறிவுரை கூறினார்.
மகாபாரதம் – 40 கிருஷ்ணன் தூது சருக்கம் பாண்டவர் கருத்தை அறிதல் Asha Aanmigam