சஞ்சயன் என்னும் முனிவன் கவல் கணன் என்பவனின் திருக்குமாரன் ஆவான். அதனால் இவனுக்குக் ‘கவல்கணி’ என்ற பெயரும் உண்டு. மன்னன் திருதராட்டிரரின் உற்ற நண்பன். சில நேரங்களில் திருதராட்டிரருக்காகத் தேர் செலுத்துவது முண்டு. மூன்றுகால நிகழ்ச்சிகளையும் நன்கு அறிந்து கூறக்கூடியவன்.
மன்னர்கள் நல்ல கதி அடைய தவம் மேற்கொள்வார்கள்
பனைக் கொடியையுடைய பீஷ்மர், வேதக்கொடியையுடைய துரோணர், கிருபாச்சாரியார், அறிவில் சிறந்த விதுரர், அரவக்கொடியையுடைய துரியோதனன், மற்றைய அரசர்களும் நிறைந்திருக்க, கண்ணிலான் திருதராட்டிரர் சஞ்சயனை அழைத்து, “சஞ்சயா! பொதுவாக மன்னர்கள் நல்ல கதியை அடைய தவத்தை மேற்கொள்வார்கள். அது போலப் பாண்டவர்களிடமும், “போர் வேண்டியதில்லை. நல்ல தவத்தை மேற்கொண்டு உயர்கதியை அடையுமாறு உபதேசித்து வருவாயாக” என்று கூறி அனுப்பினார்.
சஞ்சயனும், பாண்டவர்கள் தங்கியிருக்கும் உபப்பிலாவியம் சென்றான். அங்கு பாண்டவர்கள், கண்ணபிரான். பாஞ்சால மன்னன் துருபதன், மச்ச நாட்டு மன்னன் விராடன், பாஞ்சாலி, தௌமியன் மற்றும் பல முனிவர்கள், அரசர்கள் தங்கி யிருந்த சபைக்குச் சென்றான். அனை வர்க்கும் வை வணக்கம் கூறினான். அனை வரும் அவனை எதிர்கொண்டு வரவேற்று இன் சொற்கள் கூறி, அங்கிருந்த ஆசனத்தில் அமரச் செய்தனர். அவனும் அமர்ந்தான்.
தருமர் சஞ்சயனைப் பார்த்து, ”சஞ்சயரே! பிதாமகர் பீஷ்மர், ஆசார்யர் துரோணர், கிருபாச்சாரியார், அஸ்வத் தாமன், பாஞ்சாலியைத் தன் தொடையில் அமரச் சொன்ன, ஆணவமிக்க அரவக் கொடியோன், வாய்ப்பேச்சு வீரன் கர்ணன், வஞ்சனையாளன் சகுனி முதலானோர் நலமா?” என்று கேட்டார். அதற்குச் சஞ்சயன், “நீங்கள் கேட்டவர்களில் சிலர் தாங்கள் விசாரிக்கக்கூடிய அளவுக்கு அவர்கள் தகுதியற்றவர்கள், என்றாலும் நீங்கள் கேட்கின்ற காரணத்தால் அவர்களையும் சேர்த்து அனைவரும் நலமே ” என்று கூறினான்.
அதன்பின் சஞ்சயன், “திருதராட்டிர மன்னர், பாண்டவர்களுக்கென்று சில செய்திகளைக் கூறியுள்ளார்” என்றான். அதற்குத் தர்மபுத்திரர், “அந்நியர் யாரும் இங்கில்லையாதலால். மன்னர் கூறியவற்றை இங்கேயே கூறலாம்” என்று கூறினார்.
அதன்பின் சஞ்சயன், சபையினரை நோக்கி,”பாண்டவ பெருமக்களே! அரசர்களே! அந்தணர்களே, நெஞ்சார்ந்த வணக்கம். “அரிது அரிது மானிடராதல் அரிது, மானிடராகப் பிறந்தாலும் கூன், குருடு, செவிடு,பேடு, முடம் முதலான இல்லாமல் பிறத்தல் அரிது. அங்கஹீன மில்லாமல், அறிவோடு விளங்கினாலும் மண், பெண் பொன் என்ற மூவாசைகளைத் துறந்து வாழ்தல் என்பது மிக மிக அரிது. அதிலும் அரசர்க்குப் போரில் வெற்றிக்கொண்டு நாட்டை மேலும் பரப்பி ஒரு வெண் கொற்றக் குடைக்குக்கீழ் ஆள வேண்டும் என்ற ஆசை இல்லாமல் விளங்குதல் மிக மிக அரிது. அதனினும் உலக மாயையில் சிக்காது தத்துவஞானியாய் வாழ்தல் மிக மிக அரிது. இத்தகைய பேருண்மைகளுக்கு எடுத்துக்காட்டாக தருமபுத்திரரே! நீரே விளங்குகின்றீர். அழியும் உடம்பினை நிலையானதென்று எண்ணி அரவக்கொடியோன் உங்களுக்கு உரிய நாட்டைக் கொடுக்க மறுக்கின்றான். அதன் காரணமாக, அறநெறிகளையே வலிமையாகக் கொண்டொழுகும் நீங்கள் விற்பிடித்துப் போருக்கு எழுவீர்களாயின் உலகில் உயிர் பிழைத்துத் தப்புவர் யார் இருக்கின்றார்கள்?”
போரினைக் கைவிட்டுத் தவம் செய்வீர்
இவற்றையெல்லாம் எண்ணிப்பார்த்து, உமது பெரிய தந்தையாகிய திருதராட்டிர மன்னர், “போரினைக் கைவிட்டுச் செய்தற்குரிய தவத்தைச் செய்வீராயின் அழியாத புகழ் பெற்று விளங்குவீர் என்று உங்கட்குக் கூறுமாறு கூறினார்” எனத் தைரியமாகச் சஞ்சயன் கூறினான்.
அதனைக் கேட்டு முரசக் கொடியோனாகிய தருமபுத்திரர் புன்முறுவல் பூத்து, “மூன்று கால நிகழ்ச்சிகளையும் அறிந்து சொல்லவல்ல சஞ்சயரே! இப்பிறப்பில் நாங்கள் பெரும் பழியைப் பெற்றுள் ளோம். அந்தப் பழிச்சொல்லோடு நாங்கள் முக்தியடைய விரும்பவில்லை; அரச நீதிப்படி, பகைவர்களை அழித்து பின் குருநாட்டை நல்லமுறையில் ஆண்ட பின்னால்தான், முக்தி பெறத்தவம் செய்யச் செல்வோம். அதனைத்தான் எங்கள் மனம் விரும்புகின்றது” என்று கூறினார்.
அதனைக்கேட்ட சஞ்சயன், “தருமபுத்திரரே! உறவினர், நண்பர்கள், ஆசார்யர் துரோணர், பிதாமகர் பீஷ்மர், கிருபாசாரியார், அறிவார்ந்த விதுரர், மைந்தர்கள் முதலாக உள்ளவர்களைக் கொல்லுதலைக் காட்டிலும் தவம் செய்யச் செல்லுதல் குற்றமாகாதே. இப்பொழுது நாங்கள் வலிமை பெற்றுள்ளோம். அந்தத் துரியோ தனனுக்கு வலிமையில்லை என்று நினைப்பீர்களேயாயின், போர்க்களத்தில் தெரிந்துகொள்ளலாம்” என்று கூறினான்.
வெகுண்டு எழுந்த பீமன்
இதனைக் கேட்ட பீமன், வெகுண்டு, “சஞ்சயரே! கண்ணிலான் மகன் இந்த நாடாளவேண்டுமென்று திட்டமிட்டு எங்களைக் காட்டிற்குத் தவம் செய்யச் செல்லுங்கள் என்று கூறுதல் எந்தத் தருமத்தின் பாற்படும்? அநியாயமாக அன்றோ உள்ளது? இதுதான் அந்தக் கண்ணிலான் போற்றும் நடுநிலைத் தர்மமா? அந்தக் குருட்டுக்கிழவனுக்குப் புறக்கண்கள்தான் இல்லையென்று இது காறும் எண்ணியிருந்தோம். இப்பொழு தல்லவோ அவனுக்கு அகக்கண்களாகிய நீதியும், நேர்மையும் இல்லையென்று தெரிகிறது. தன் மக்களுக்கு நேரப்போகும் பேரபாயத்தை அந்தக் குருடன் சிந்தித்துப் பார்க்கவே இல்லை போலும்! அதனால் தான் இந்த அபத்தமான, அறிவுக் கொவ்வாத யோசனையைக் கூறியனுப்பி யுள்ளான். “சஞ்சயரே! இந்த ஒரு கதை யினால் அந்த நூற்றுவரின் கதையை முடித்துவிடுவேன். போர்க்கள வேள்வி செய்தல்தான். எங்கட்கு எல்லாத் தவங் களைக்காட்டிலும் சிறந்த தவமாகும்” என்று அந்தக் கண்ணிலானிடம் கூறி விடுங்கள்” என்று கூறினான்.
கோபத்தோடு பேசிக்கொண்டிருந்த பீமனைக் கையமர்த்தி, அமரச்செய்தபின், தருமபுத்திரர், தூதனாக வந்த அந்தச் சஞ்சயனிடம், “முனிவரே! தொடக்க காலத்தில் அவர்கள் எத்தகைய பெருந் தீங்குகளை எங்களுக்குச் செய்தாலும், அவற்றையெல்லாம் நாங்கள், அறநெறிக் குக் கட்டுப்பட்டு வாழ்ந்தோம். இனி எங்கள் வலிமையைக் கொண்டு பகையை ஒழிப்பதைத் தவிர வேறு வழியில்லை. அது நல்லதோ, அல்லது தீயதோ எதுவாயினும் சரி, இதுதான் எங்கள் முடிவு என்று எங்கள் பெரிய தந்தைக்குக் கூறு வீராக” என்று கூறினார்.
பெரியோர்களோடு போரிடுவது அதர்மம்
அதனைக் கேட்டு, சஞ்சயன், “தருமபுத்திரரே! நீங்கள் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்; போர் செய்யும் திறமையுள்ள துரியோதனாதியரிடமும், கர்ணனிடமும் மட்டுந்தானா நீங்கள் போரிடப் போகி றீர்கள்! கங்கை புத்திரர் பிதாமகர் பீஷ்மர், ஆசார்யர் துரோணர், கிருபாசாரியார், நற்பண்புகள் வாய்ந்த உங்கள் சிறிய தந்தை முதலானவர்களிடமும் போரிட வேண்டி யுள்ளதே! இது அதர்மமான செயல் அல்லவா!” என்று ஒரு கேள்வியை எழுப்பினான்.
அதற்குத் தருமபுத்திரர், “அரச நீதியை நிலை நாட்டுதல் நல்ல தவம் செய்தலுக்கு ஒப்பாகும். அந்தப் பெரிய தந்தை கருணை யில்லாது அறநெறிக்கு மாறாக நடந்தாலும், நாங்கள் வழிபடும் தெய்வமாகிய கண்ணபிரானின் கருணைத்திறம் எங்க ளுக்கு உள்ளது. அது நல்ல பயனையே விளைவிக்கும் ” என்றார்.
இவர்கள் இவ்வாறு பேசிக்கொண் டிருந்ததைக் கேட்டுக் கண்ணபிரான், ”சஞ்சயா! பெரியோர்களோடு போரிடுவது அதர்மம் என்கிறாய். அது உண்மைதான். அந்த அறிவார்த்த பெரியவர்கள்தான், சூதாட்டம் ஆடி, வஞ்சனையாக நாடு நகரங்களைத் துரியோதனாதியர் கூட்டம் கைப்பற்றிய காலத்திலும், அதன்பின் கற்பில் சிறந்த பாஞ்சாலியை, அவள் ஒற்றையாடையோடு இருக்கின்றாள் என்பதை அறிந்து வைத்தும் அந்தக் கயவர்கள், சபையின் நடுவே, துகிலுரித்து அவமானப்படுத்திய காலத்தும், நீ சொன்ன அந்த உயர்ந்த பெரிய மனிதர்கள் வாய்மூடி மௌனமாய் தலைகுனிந்து தானே இருந் தார்கள்! அந்தத் திருதராட்டிரருக்கும், அந்தத் துரியோதனாதியர்க்கும், அன்று. இந்த உயர்ந்த பெரிய மனிதர்கள் அறிவுரை கள் பல இடித்துச் சொல்லித் தடுத்திருந் தார்களேயானால் உன் பேச்சுப் பொருத்த மானதே! இன்று அவர்களைப் போர்க்களத்தில் சந்திக்கும்படியான ஓர் அசாதாரண சூழ்நிலை பாண்டவர்களுக்கு ஏற்பட்டிருக்காது. போரைத் தவிர்த்து சுகமாயிருந்திருக்கலாம். இந்த நிகழ்ச்சி களுக்கெல்லாம் காரணமே அந்தத் திருத ராட்டிரரின் சுயநலமேதான்” என்றார்.
தருமபுத்திரருக்கு நாட்டை வழங்குவோம்
பீமனும், அர்ச்சுனனும் அளவு வு கடந்த கோபத்துடன், “துரியோதனாதியர்களைப் போர்க்களத்தில் போரிட்டுக் கொன் றொழித்து, புனிதமான வெண்கொற்றக் குடையின் கீழ் நற்பண்புகள் நிறைந்த எங்கள் தமையனார் தருமபுத்திரருக்கு இந்த நாட்டை அரசாள வழங்குதலே உண்மை யான தவமாகும் என்பதை முனிவரே! அறிவீராக” என்று கூறினர்.
பாண்டவர்களும், கண்ணபிரானும் கூறியவற்றை எல்லாம் கேட்ட சஞ்சயன், மனம் தளர்ந்து, சோகமுடையவனாகி, ”வந்ததற்கு ஒரு பயனுமில்லை; நீங்கள் கூறியன அனைத்தையும் அஸ்தினாபுர மன்னர் திருதராட்டிரரிடம் கூறிவிடுவேன். நான் இங்கு கூறியவற்றில் தவறுகள் இருப்பின் பொறுத்துக் கொள்ளுங்கள். எனக்கு விடை கொடுங்கள்” என்றான்.
அப்பொழுது தருமபுத்திரர், “சஞ்சய மாமுனிவரே! அன்று வாரணாவதத்திற்கு எங்கள் பெரிய தந்தை அன்போடு அனுப்பிய அந்த அருள் திறம், இன்று மாறிப் போனாலும் இந்த முறை எம் கருத்திற்கு இசைவாராயின், எங்கள் பெரிய தந்தையின் வார்த்தையை மீற மாட்டோம். அதே போல அந்தத் துரியோ தனாதியர்கள் செய்த கொடுமைகளை மறப்போம்; மன்னிப்போம் என்ற நிலையில் இருப்போம். இந்தச் செய்திகளை எங்கள் தந்தை திருதராட்டிரருக்குக் கூறி, பிதாமகர் மர், ஆசார்யர்கள் துரோணர். பீஷ்மர், கிருபாச்சாரியார், அறிவார்ந்த சிறிய தந்தை விதுரர் முதலானவர்க்கு என் வணக்கங் களையும் மற்றவர்க்கு என் வாழ்த்துக் களையும் தெரிவிப்பீராக” என்று கூறி விடை கொடுத்தனுப்பினார்.
சஞ்சயன் அத்தினாபுரி திரும்பினான். மன்னர் திருதராட்டிரரை வணங்கி, “அரசே! நீங்கள் என்னிடம் சொல்லி அனுப்பிய கருத்துக்களையெல்லாம் பாண்டவர்களுக்குத் தெளிவாகச் சொல்லி, அவர்கள் எண்ணத்தையும் அறிந்து கொண் டேன். அவர்களுக்குரிய நாட்டைக் கொடுக்காமலிருந்தால் உன் பிள்ளைகளின் செல்வமும், வாழ்வும், அரசும் அழிந்து போகும். இது நிச்சயம், இன்னும் கூற வேண்டியவை பல உள. நாளை அரசவை யில் அனைவரும் அறியும்படியாகக் கூறுகின்றேன்” போனான். என்று சொல்லிப்
மனம் தளர்ந்த திருதராட்டிரர்
சஞ்சயன் கூறியதைக்கேட்ட திருதராட் டிரர் தளர்ந்து,மனம் சோர்ந்து, தம்பி விதுரனை அழைத்துவரச் சொன்னார். விதுரரும் திருதராட்டிரரிடம் வந்து, “அண்ணா! என்னை அழைத்ததற்குரிய காரணம் யாது? கூறுவாயாக” என்றார். உபப்பிலாவியம் சென்று பாண்டவர்களைச் சந்தித்து வந்த சஞ்சயன் ஒரு சில வார்த்தை களைக் கூறிவிட்டு, எஞ்சியவற்றை நாளை அவையில் கூறுவதாகச் சொல்லிவிட்டு. போய்விட்டான். அதனால் எனக்குத் தூக்கம் வரவில்லை. இந்த இராப்பொழு தைக் கழிக்க உன்னை அழைத்தேன்’ என்றார் .
அப்பொழுது விதுரர், “அண்ணா! செல்வத்தை இழந்தவனும், கல்விமேல் நாட்டம் கொண்டவனும், பகைவரை வெல்லும் வலிமை இல்லாதவனும், பிரிவு நோயால் வருந்துகின்றவனும் உறங்கமாட் டார்கள். உனக்குத் தூக்கம் வராதிருக்க இப்பொழுது என்ன நேர்ந்தது ?” என்று கேட்டார். அதற்குத் திருதராட்டிரர், “தம்பி விதுரரே! போர் என்று வந்துவிட்டால் என் பிள்ளைகள் என்ன பாடுபடுவார்களோ என்று எண்ணி எண்ணி, கவலைகொண்டு உறங்காமல் இருக்கின்றேன். போர் நிகழாமல் இருக்க விதுரரே! என்ன செய்யலாம் சொல்லுங்கள்” என்றார்.
பாண்டவர்க்குரிய நாட்டைக் கொடுப்பாய்
அதற்கு விதுரர், “அரசே! ஒரே வழிதான் இருக்கின்றது. உன் தம்பி பாண்டுவின் மைந்தர்களை வரவழைத்து, அவர்களுக் குரிய நாட்டினைக் கொடுப்பாயாயின் போர் என்பது வாராது. பாண்டவர்களும் உன் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடப் பார்கள். மாறாக அவர்கட்கு நாட்டைக் கொடுக்க மறுத்தாயானால் துரியோ தனாதியர் செய்த கொடுமைகளையெல் லாம் எண்ணி எண்ணி, பாண்டவர்கள் உன் பிள்ளைகள் நூற்றுவரையும் கொன்றே தீர்ப்பார்கள். பின்னர் ஆட்சியை அடை வார்கள். ஆகையால் நான் சொன்னபடி செய்வாயாக” என்றார். அதற்குத் திருத ராட்டிரர்.”தம்பி | நீ சொன்னபடியே நாளைய பிற்பகல் பாண்டவர்க்குரிய நாட்டைக் கொடுத்துவிடுவேன். இனி நீ உறங்கச் செல்வாயாக” என்று கூறி அனுப்பினார்.
திருதராட்டிரர் மறுநாள் விடியற்காலை யில் எழுந்து, புனித நீராடி, காலைக்கடன் களை முடித்துக் கொண்டு அரசவைக்கு எழுந்தருளி, பிதாமகர் பீஷ்மர், ஆசார் யர்கள் துரோணர், கிருபாசார்யர், அறி வார்ந்த விதுரர், தானவீரன் கர்ணன், வணங்காமுடி மன்னன் துரியோதனன். அவன் தம்பியர், காந்தார நாட்டு மன்னன் சகுனி, மற்றும் பல அரசர்கள், அமைச் சர்கள், சேனைத் தலைவர்கள், அறிஞர்கள், அந்தணர்கள், சூழ்ந்திருக்க அரியாசனத்தில் அமர்ந்திருந்தார்.
பரிசுத்தமான முனிவர்களில் சிறந்த சஞ்சயன், காலைக் கடன்களை முடித்துக் கொண்டு, அரசவையை அடைந்தான். அவன் வந்ததை அறிந்த திருதராட்டிரர், “சஞ்சயரே/ பாண்டவர்களிடம் நீர் கூறிய வற்றையும், அவற்றிற்குப் பெற் பதிலையும் இங்கு கூறுவாயாக” என்றார்.
அப்பொழுது சஞ்சயன், ”யான் உபப்பி லாவியம் சென்று, கண்ணபிரான் தங்கி யிருக்கும் இல்லத்தை அடைந்தேன். எம் பெருமான் உள்ளே வர எனக்கு அருள் புரிந்ததும், நான் உள்ளே சென்றேன். அங்கு கிருஷ்ணார்ச்சுனர்கள் ஒரே கட்டிலில் அமர்ந்திருக்க, உருக்குமணி ஆலவட்டம் வீசவும், திரெளபதி வெண்சாமரை இரட்ட வுமாக விளங்கும் கண் கொள்ளாக் காட்சி யைக் கண்டு வணங்கி நின்றேன். அவர்கள் அமரச் சொன்ன ஆசனத்தில் அமராது தரையின் மேல் அமர்ந்து கொண்டே அந்தக் கரிய திருமேனியையுடைய கிருஷ்ணார்ச் சுனர்களைக் கண் குளிரக்கண்டு மகிழ் வெய்தினேன். இவர்கள் இருவரும் ஒன்று சேரின் இவர்களை எதிர்ப்பவர் இம்மூ வுலகிலும் யாரும் இல்லை என்று நினைத்தேன்.
அஞ்சாத பாண்டவர்கள்
அப்பொழுது யாவரும் போற்றும் படியான கண்ணபிரான், துணிந்த பொரு ளாக, ‘எதிரிகள் மேல் பாய்ந்து செய்யும் போருக்குப் பாண்டவர்கள் அஞ்சவில்லை; நட்புறவோடு, பாண்டவர்கள் கோபம் தணியுமாறு நாட்டைத் திருப்பித் தருதல் தான் நியாயம்: நட்புறவோடு நாடு கொடுக்க அத்துரியோதனனுக்கு மன மில்லையேல், பகைவரை வென்றொழித் தாவது அரசு ஆளவேண்டும்; அதுதான் ஆண்மைக்கு அழகு, எந்த வழிக்கும் வாரா மல் முனிவனாகிய உன்னைத் தூதனுப்பிய செயல் சினமாகிய கொழுந்துவிட்டு எரியும் நெருப்பிற்கு மேலும் நெய்யை விட்டிடுதல் போன்றதாகும். நன்மை தீமைகளை ஆராய்ந்து பாராது அறிவில்லாமல் சொன்ன பெரியதந்தையின் கவைக்குதவாத சொற் களை ஏற்றுக்கொண்டு, பாண்டவர்கள் தவத்தை மேற்கொண்டு எக்காலத்திலும் எக்காரணத்தை முன்னிட்டும் செல்லார்” என்று கூறினார். காடு
கௌரவர்கள் சபையில் சஞ்சயன்
அப்பெருமானுக்குப் பின் காண்டீபத்தை ஏந்திய அர்ச்சுனன் என்னை ஏறிட்டு முறைத்துப் பார்த்து, “எங்கள் ஐவரையும், எங்கள் பாஞ்சாலியையும் அவமானப் படுத்திய அந்தத் துரியோதனாதியர்களாகிய கீழ் மக்களைக் கொன்று, எங்கள் சபதங் களை நிறைவேற்றி, பின்னர் துளபமாலை அணிந்த எங்கள் சுண்ணபெருமானை வணங்கிப் போற்றி, நாட்டை மனம் திருப்தியுற ஆண்டு, அதன்பின் இந்த அரசாட்சியை எங்கள் பிள்ளைகளுக்குக் கொடுத்து, அன்றைக்கு, இன்று எங்களுக்கு அன்பாகச் சொல்லி அனுப்பிய அந்தப் பெரிய தந்தையின் சொல்லுக்கு மதிப்பு கொடுத்து நடப்போம். யானை, தேர், குதிரை முதலானவற்றின் மேல்போதற்குத் தகுதி வாய்ந்த எங் எங்கள் தமையனாரைக் கட்டாந்தரையில், கல்லிலும், முள்ளிலும் நடந்து காட்டிற்குப் போகச் சொன்ன அந்தப் பாவிகளின் அங்கங்களையெல்லாம் என் தமையன் பீமனார் வலிமைமிக்க தன் கொடிய கதையால் தாக்கித் துண்டுக ளாக்கிச் சின்னாபின்னம் செய்து, நாய் களுக்கும், நரிகளுக்கும் பேய்களுக்கும், காக்கைகளுக்கும் உணவாகப்போட்டுத்தன் வீரத்தைக் காட்டாமல் எங்கள் கோபத்தீ தணியாது. எங்கள் திரெளபதி அன்று எடுத்த சபதம் ஒரு நாளும் பொய்க்காது நாங்கள் நாடு கேட்பின் அது போரில் முடியும் என்று கூறி நீங்கள் தடுத்து விட்டால் அன்று சபையில் நாங்கள் எடுத்த சபதங்கள் பொய்த்துவிடுமோ என்று மனத்துயர் கொண்டிருந்தேன். அது இப்போது நீர் கூறிய சொற்களால் நீங்கி விட்டது, நான் இப்பொழுது கூறியவற்றை யெல்லாம் கெளரவர் சபையில் ஒன்று விடாமல் கூறுவாயாக” என்று அர்ச்சுனன் சிறிதும் அஞ்சாமல் எடுத்துக் கூறினான்.
அதனைக் கேட்டுப் பீஷ்மர், திருதராட்டிரரைப் பார்த்து,” மன்னனே! இந்தக் கண்ணபிரானும், அர்ச்சுனனும் எந்த உலகத்தில் இருந்தாலும், தரும நெறி தவறிய தீயவர்களை அழித்து, அந்தத் தரும நெறியைப் பின்பற்றும் சாதுக்கள் பக்கம் துணையாக இருந்து காப்பாற்றும்படியான, முன்னர் நரநாராயணர்களாய் இருந்து, இப்பிறவியில் கிருஷ்ணார்ச்சுனர்களாக அவதரித்தவர்கள் அவர்.
“அதனால்தான் அர்ச்சுனன், இந்திராதி தேவர்களுக்காக விண்ணுலக வாசிகளான நிவாதகவச காலகேயர்களை அழித்து இவ்வுலகத்துக்கு வந்து, தன் தமையனா ராகிய தருமபுத்திரரிடம் நலமுடன் வந்து சேர்ந்தான்.அத்தகைய வீரமுடைய அர்ச்சுனன் அந்தத் திருமாலின் துணையைப் பெற்றிருப்பானாயின் அவ்விருவரையும் வெல்லுபவர் யார் இருக்கின்றார்கள்? ஆகவே கொடியவர்களின் வார்த்தைக்குக் கட்டுப்படாமல் எங்களைப் போன்ற சான்றோர்களின் வார்த்தைகளை மீறாமல், உன் தம்பி புதல்வர்கள் பாண்டவர்க்கு உரிய அரசாட்சியைக் கொடுத்து வாழ்வா யாக” என்று கூறினார்.
நரநாராயணர்
(குறிப்பு :- முன்னொரு காலத்தில் குரு சிஷ்ய கிரமத்தை உலகத்தில் அனைவர்க் கும் உணர்த்தும் பொருட்டு, நரன் என்னும் சிஷ்யனும் நாராயணர் என்னும் குருவு மாகப் பத்ரிகாசிரமத்தில் தோன்றி, அந்தக் குரு, நரனாகிய சிஷ்யனுக்கு உலகம் உய்யும் பொருட்டுத் திருமந்திரப் பொருளை உபதேசித்தார். அந்தக் குரு நாராயணர் ஆகிய திருமால்தான் இந்தத் துவாபரயுகத்தில் கண்ணபிரானாக வட மதுரை சிறைச் சாலையிலும், அந்தச் சிஷ்யன் நரன் தான் குந்திமைந்தனாக அர்ச்சுனன் என்னும் திருநாமத்தோடு அஸ்தினாபுரக் காட்டிலும் அவதரித்தனர். இவர்களை நர நாராயணர் யணர் எனக் குறிப்பிடுவர். இதனைப் பெரிய திருமொழி (நாலாயிரத்திவ்விய பிரபந்தம்) “நர நாராயணனாய் உலகத்தற நூல் சிங்காமை விரித்தவன் எம்பெருமான்” எனக் கூறுகின்றது.
பீஷ்மர் இவ்வாறு கூறியவுடன் கர்ணன் வெகுண்டு, “மன்னவ! நான் அந்த அர்ச்சுனனைக் கொல்ல வேண்டுமென்றே நாகக்கணையுடன் காத்துக் கிடக்கின்றேன். அதனை அறியாது இந்த முதியவர் அர்ச் சுனனை ஜெயிப்பவர் யாருளர்! என்று கூறி, என்னைப் பரிகசிக்கின்றார்” என்று கூறினான். அதனைக் கேட்டவுடன் பீஷ்மர், ”திருதராட்டிரரே! இந்தக் கர்ணன் வாய்ப் பேச்சில் வீரன். அதனை மறுக்கமுடியாது. பாஞ்சாலியின் திருமணத்தின் போதும், சித்திரசேனன் துரியோதனனைத் தேர்க்காலி லிட்டுக் கட்டி வானத்தில் தூக்கிச் சென்ற போதும்; விராடனுடைய ஆநிரைகளை மீட்கவந்த போதும் இவன் அர்ச்சுனனை எங்கே வென்றான்? புறங்காட்டி, பின்னங் கால்கள் பிடரியில் அடிக்க; நன்றாகவே ஓடினான். ஓடினான். இதில் ஒன்றும் குறைவில்லை. இவைதான் அவனுடைய செயல் திறன் ” என்று குத்திக் காட்டிப் பேசினார்.
அதன்பின்னர் துரோணாசிரியர் எழுந்து, ”மன்னா’ இப்போது உன் தந்தை முறையுடைய பீஷ்மர் கூறிய வார்த்தைகளைக் குறித்துச் சந்தேகப்படவேண்டியதில்லை. அவர் சொல்கின்றவற்றை ஏற்றுக்கொள். அதுதான் நல்லது” என்று கூறினார்.
பாண்டவர்க்கு வலிமை அளிப்பவர்கள்
தகுதியுடைய சான்றோர்களாகிய பீஷ் மர், துரோணர் முதலானவர்களின் பயனுடைய வார்த்தைகளைத் திருதராட்டிரர் ஏற்காது மாற்றானின் வலிமையை அறிய வேண்டி,”பாண்டவர்க்கு வலிமை அளிக்கும் அரண் எது? சொல்வாயாக ” என்று சஞ்சயனைக் கேட்டார். பிள்ளைகள் மேல் வைத்த பித்தினால் அவர்கள் கூறியவற்றை ஏற்காது, மைந்தர்கள் கூறியவற்றை அமுதம் என ஏற்றதைக் கண்டு, பீஷ்மரும், துரோணரும் தங்கள் உயிர்மேல் இருந்த ஆசையை விட்டனர். (அஃதாவது போர் எப்படியும் மூளும். அப்போரில் தாங்கள் மாள்வது உறுதி.)
இனி இந்த அரசனுக்கு உண்மையான நிலவரத்தைக் கூறித் தெளிவுறுத்தல் பயனற்றது என நினைத்துச் சஞ்சயன். ”மன்னரே! சொல்லுகின்றேன் கேள்” எனச் சொல்லலானான்.
(1) இடும்பன், பகாசூரன், கீசகன், உப கீசகர்கள் போன்ற வலிமைமிக்கவர்களைக் கொன்றழித்த வாயு புதல்வன் பீமன்.
(2) சிவபெருமானோடு அஞ்சாது போரிட்டுப் பாசுபதாஸ்திரம் பெற்றவன்: நிவாதகவசர் காலகேகயர்களை வென்று இந்திரனுக்குச் சரிசமமாகத் தேவலோக சிம்மாசனத்தில் அமர்ந்தவன்; நாம் கவர்ந்த விராட நாட்டுப் பசுக்களைப் போரிட்டு மீட்டவன்; காண்டீபத்தை ஏந்தி நிற்கும் அர்ச்சுனன்,
(3) கோவர்த்தன கிரியைக் குடையாகப் பிடித்துப் பசுக்களைக் காத்தது போன்று பாண்டவர்களைக் காக்க துவாரகாபுரி யிலிருந்து வந்திருக்கும் கண்ணபிரான்,
(4) சிங்கத்தைப் போன்ற ஆற்றல் மிக்க மாத்ரிதேவியின் புதல்வர்கள் சகாதேவர்கள், நகுல
(5) புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? ஆகாது என்றபடி, அர்ச்சுனனைப் போன்றே போராற்றல் மிக்க அவன் மகன் அபிமன்யு,
(6) திரிபுரமெரித்த விரிசடைக்கடவு ளாகிய சிவபெருமானுக்கு ஒப்புமையாகச் சொல்லக்கூடிய இரவான்,
(7) வலிமைமிக்க யானையைப் போன்ற பீமனுக்கும், இடும்பிக்கும் பிறந்த கடோத்கஜன்,
(8) கற்பின் நங்கையான பாஞ்சாலியின் மகன்களாகிய உபபாண்டவர்கள் (இளம் பஞ்சபாண்டவர்கள்),
(9) கேசவற்கு இளையவன் சாத்தகி,
(10)நெருப்பிலே தோன்றிய இயம னைப் போன்ற ஆற்றல் மிக்க பாஞ்சால மன்னன் திட்டத்துய்மன்,
(11) அலி வடிவாகத் துருபதனிடத்துப் பிறந்து வளர்ந்த சிகண்டி,
(12) துருபதமன்னனின் உறவினனான உதாமன்,
(13) விராடன் மகன் சுவேதன், உத்தரன்,
(14) சராசந்தன் புதல்வன் சகாதேவன்,
(15) சிசுபாலன் மகன்.
(16) சோழ மன்னன்,
(17) பாண்டிய மன்னன்.
கோட்டைக்குள் இருக்கும் தருமபுத்திரரை யாரால் வெல்ல முடியும்?
இவர்களோடும், இவர்களுக்குத் துணை யாக வரும் நால்வகைப்படைகள்; எல்லாம் சேர்த்து ஏழு அக்குரோணிப் படைகள்; அந்தப் படைகள் முழுவதும் தருமபுத்திர ருக்கு உதவ சித்தமாயிருக்கின்றன. இவர் களுக்கு இவைமட்டும் தான் அரண் என்று எண்ணாதீர்கள். அதற்கு ஒருபடி மேலே “தருமபுத்திரரின் சத்தியம், பொறுமை, அமைதி, கண்ணபிரானின் கருணை முதலானவையும் பொருந்தியிருக்கின்றன. இவ்வளவு வலிமையான தகர்க்க முடியாத கோட்டைக்குள் இருக்கும் தருமபுத்திரரை யாரால் வெல்ல முடியும்? அவ்வாறு வெல்ல முடியும் என்று எண்ணுகின்றவர் கள் பித்தர்களே” என்று கூறி முடித்தான்.
இவ்வளவையும் கேட்ட திருதராட்டிரர், “இவர்களை வெல்ல நீ சொல்லிய யாவுமே வேண்டியதில்லை; காண்டீபத்தை ஏந்திய மாவீரன் அர்ச்சுனனும், ‘சத்ருகாதி நிதி’ என்னும் கதையை ஏந்திய வன்மை மிக்க பீமனும், போர்க்களத்தில் புகுந்தார் களாயின் என் பிள்ளைகள் அனைவருமே இறந்தொழிவர். இது நிச்சயம்” என்று கூறி மனம் தளர்ந்து சோர்ந்து போனார்.
கௌரவர்களின் படை வலிமை
பாண்டவர்களின் படைவலிமையைக் கேட்டுச் சோர்ந்து போன திருதராட்டிரரின் உள்ளக் கவலையைக் கண்டு, அவனைத் தேற்றுவான் வேண்டி, அவர் மகன் துரியோதனன், “தந்தையே! பாண்டவர் களின் படைபலம் கேட்டு மனம் தளர்தல் நல்லதா? மனம் தளரவேண்டிய அவசி யமே இல்லை. அவர்களை விட நம்மு டைய படை பலம்தான் மிக அதிகமானது. வலிமை வாய்ந்தது சொல்லுகின்றேன் கேள்” என்று கூறலானான்.
(1) க்ஷத்திரிய அரசர்களைத் தன்னுடைய மழுவாயுதத்தால் இருபத்தொரு தலை முறை வெட்டிச் சாய்த்த பரசுராமனையே அம்பையின் பொருட்டுப் புறமுதுகிடச் செய்த பிதாமகர் பீஷ்மர்.
(2) நம்முடைய முதற் குருவாகிய கிருபாச்சாரியார்.
(3) அடுத்து நமக்குக் குருவாக வாய்த்த ஆசார்யர் துரோணர்,
(4) அந்த ஆசார்யர் துரோணர் மகன் அஸ்வத்தாமன்,
(5) தான வீரன் கர்ணன் (பாண்டவர் களுக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கு பவன்)
(6) சிந்து நாட்டு மன்ன மைத்துனன் ஜயத்திரதன்,
(7) மத்திர நாட்டு மன்னன் சல்லியன்,
(8) என் உயிர் அனைய மாமன் சகுனி (காந்தார நாட்டு மன்னன்),
(9) பதினாயிரம் யானை பலமுடைய வன், சுப்ரதீபகம் என்ற யானையையுடைய வன்; பிராக்சோதிஷபுரத்தரசன், நரகாசூரன் மகள் பகதத்தன்.
(10) அதிரத வீரன் சோம தத்தன் மகள் பூரி சிரவஸ், (11) கண்ணபிரான், துரியோதனனுக்குக் கொடுத்த யாதவகுமாரர்களா கிய நாராயண கோபாலர்கள் பதினாயிரம் பேர்; அவர்களின் படைத்தலைவன் கிருத வன்மா.
(12) சஞ்சத்தகர் – அறுபதினாயிரம் பேர்,
(13) கண்ணபிரான் தமையன் பலராமன்,
(14) துச்சாதனன் முதலான வீரமிக்க தம்பியர், ஆக மொத்தம் பதினொரு அக்கு ரோணி சேனை நம்மிடம் உள்ளது. பாண்ட வர்களிடம் ஏழு அக்குரோணி சேவைதான் உள்ளது. பதினொரு அக்குரோணி சேனை ஏழு அக்குரோணி சேனையை எளிதாக வென்றுவிடும்.”இவை மட்டுமல்லாது என்னிடம் மேலும் சில உபாயங்கள் இருக்கின்றன” என்று கூறிய துரியோதனன் மேலும், ”பேரிடி ஒலியோடு ஆலங்கட்டி மழை பெய்விக்கவும், எவ்விடத்திலும் காற்று வீசாது ஓடுங்கச் செய்யவும், நீர் நிலைகளைத் தரையாக மாற்றவும், தரையை நீர் நிரம்பிய தடாகங்களாக மாற்றவும். பாலை நிலத்தில் நீர்வரச் செய்யவும். பேய்களும். பூதங்களும், கைகூப்பி ஏவின தொழில்களைச் செய்ய வுமான பிறரால் செய்தற்கரிதான பல்வகை யான உபாயங்களை ஒரு முனிவன் அருளால் அறிந்துள்ளேன். அதனால் வணங்காமுடி மன்னனாகிய நான் பாண்ட வர்கள் பாதங்களில் வீழ்ந்து வணங்கி உயிர்வாழமாட்டேன். ஆகலின் நீ அஞ்சுவ தில் அர்த்தமே இல்லை; சோர்வை நீக்குக” என்று பலவாறு தேறுதல் வார்த்தைகளைக் கூறினான்.
நம்பிக்கை அற்றவராய் திருதராட்டிரர்
துரியோதனன் கூறியவற்றையெல்லாம் கேட்ட திருதராட்டிரர் நம்பிக்கை அற்றவராய்,”மகனே/ தெய்வசக்தியின் முன் உன் மனித சக்தி என்ன செய்யும்? உன்னால் பாண்டவர்களை வெல்ல முடியாது என்பது மட்டுமன்றி நீயும், உன் தம்பியரும் பிழைப் பதே அரிதாகும். காரிருள், சூரியனை வெல்ல முடியுமா? அது போலத்தான் உன்னுடைய நிலையும். முடிவாகச் சொல்கின்றேன். நாட்டினை முன்போல இருபகுதியாக்கி உனக்கு ஒரு பகுதி, பாண்டவர்க்கு ஒரு பகுதி எனக் கொடுத்து விடுகிறேன். அப்பொழுது தான் இந்தப் பிரச்சினை தீரும்’ என்றார்.
அதனைக் கேட்டுத் துரியோதனன். ”தந்தையே! சூதாட்டத்தில் நாட்டினை இழந்து காட்டுக்குச் சென்ற அந்தப்பாண்டவரை அழைத்து, சில துணைப்படைகளைச் சேர்த்துக் கொண்டு, நம்மை வெல்லுகின்ற வன்போலப் பயமுறுத்தும் அந்தக் கண்ண னின் தந்திரத்தை அறியாமல் எனக்கு எல்லோரும் புத்தி சொல்லிக் கொண்டிருக் கின்றீர்கள். உங்கள் பேச்சைக் கேட்டு நாட்டில் ஒரு சிறு பகுதியையும் நான் கொடுக்கமாட்டேன். போரில் அவர்களை வெல்வேன். நீங்கள் பயப்படவேண்டாம்.
பாண்டவர்கள் புறங்காட்டி ஓடுவார்கள்
”பகைவர்களாகிய பாண்டவர்களின் வலிமை, அவர்களுக்குத் துணையாக வருகின்றவர்களுடைய வலிமை முதலான வற்றைச் சிறப்பித்துப் பேசும் பிதாமகர் பீஷ்மர், துரோணர், கிருபர், விதுரர், போன்ற கிழட்டு வேதாந்தங்களின் சொற் களைக் கேட்டு, எங்களை இகழ்ந்து,”நீ வெல்லமாட்டாய், மாள்வாய் ” என்று கூறுகின்றீர்கள். உண்மையில் போர்க் களத்தில் அந்தப்பாண்டவர்கள் எங்களுக்கு எதிர் நின்று போர்புரிய முடியாது புறங் காட்டி ஓடுவர். அவர்களை நான் ஒருவனே எளிதில் வெல்வேன்” என்று தன் ஆண்மையை எடுத்துக்காட்டிப் பேசினான்.
அதனைக் கேட்ட திருதராட்டிரர், ”உன் ஆண்மையை இங்குள்ளவர்கள் யாவரும் அறிவார்கள். அதை இப்பொழுது ஏன் பறைசாற்றிக் கொள்ள வேண்டும்” என்று குத்தலாகப் பேசினார்.
அந்த நேரத்தில் கர்ணனைப் பீஷ்மர் பார்த்து, “அர்ச்சுனனை ஒரு தடவை கூட வெல்ல முடியாத கையாலாகாத நீ வாய்ப் பேச்சில்தான் வீரன்” என்று இகழ்ந்து பேசவே அவன் கோபித்து, “நீங்களெல் லாம் ஒன்று சேர்ந்து பாண்டவர்களுக்கே. நாட்டைக் கொடுத்து அவர்களைப் போற்றி அண்டி வாழுங்கள்” என்று கோபமாகப் பேசி அவையிலிருந்து எழுந்து தன்னிருப் பிடம் சேர்ந்தான். ஒரு கருத்து பிடிக்க வில்லையென்றால் வெளிநடப்பு செய்வது என்பது அக்காலத்திலும் இருந்தது என்ப தனை இதன் மூலம் அறியலாம்.
கர்ணன் கோபித்து வெளிநடப்பு செய்ததை அலட்சியம் செய்து, திருதராட்டிரர், சஞ்சயனை நோக்கி, “சஞ்சயா! பாண்டவர்களில் யார் யார் நம்மைச் சேர்ந்தவர்களைக் கொல்ல உறுதி பூண்டுள்ளனர்” என்று கேட்டார்.
அதற்கு, சஞ்சயன், “மன்னவரே! பிதாமகர் பீஷ்மரைக் கொல்லத் துருபதன் மகன் அலியாக வாழ்பவன் சிகண்டி என்பவன் காத்திருக்கின்றான்; ஆச்சார்யர் துரோணரைக் கொல்ல யாகாக்னியில் தோன்றி, துருபதனின் மகனாக வளர்ந்து வரும் திட்டத்துய்மன் நாள்களை எண்ணி வருகின்றான். சல்லியனைக் கொல்ல முரசக் கொடியோன் தருமபுத்திரர் தங்களின் மாமனாக இருந்தும் தங்களுக்குத் துரோகம் செய்ததற்காகக் கொல்ல முடிவு செய்துள்ளார். துரியோதனன் உள்பட உன் பிள்ளைகள் நூற்றுவரையும் பீமன் தன் சபதப்படி கொன்றுகுவிக்கக் கறுவிக் கொண்டிருக்கின்றான். அது தவிர அவனுக்கு வேறு சிந்தனையே இல்லை அர்ச்சுனன், உன் மருமகன் சயத்திரதனை யும், தான வீரன் கர்ணனையும் கொன்று தீர்க்கத் துடித்துக் கொண்டிருக்கின்றான். அதோடு ஆத்திரக்காரனாகிய அசுவத்தாமன் சிரஞ்சீவி ஆதலின் அவன் வலிமையை ஒடுக்கித் துரத்த கங்கணம் கட்டியுள்ளான். வஞ்சனையாளன், மாமன் சகுனியை சகாதேவனும்; நின் பேரப்பிள்ளைகளை அபிமன்யுவும் கொன்று தீர்ப்பர். அழி வில்லாதிருக்கும் அலம்புசனைப் புறங் காட்டச் செய்து, அவனுடன் வந்திருந்த அரக்கர் சேனையை அர்ச்சுனன் மகன், எல்லாவித லக்ஷணங்களையுமுடைய அழகுத் ததும்பும் இரவான் கொன்று தீர்ப்பான்; அலாயுதன் போன்ற மாயையில் வல்லவர்களைப் பீமன் மகன் கடோத்கஜன் கொன்றொழிப்பான். இது போலவே கௌரவர்களுக்குத் துணையாக வரும் மன்னர்களை அப்பாண்டவர்களுக்குத் துணையாக வரும் மன்னர்கள் கொன்றொழிப்பர்” என்று கூறி முடித்தான்.
மனம் தளர்ந்த திருதராட்டிரர்
சஞ்சயன் கூறியவற்றையெல்லாம் கேட்ட திருதராட்டிரர் தன்பிள்ளைகள் நூறுபேரும் கொல்லப்படுவார்கள் என்ப தைக் கேட்டு மனம் தளர்ந்தார். மனங் குமுறினார். அப்பொழுது அவன் இளவல் விதுரர், “போனது போகட்டும், மன்னரே! இப்பொழுதாவது பாண்டவரை வர வழைத்து, ஆட்சியை ஒப்படைக்கலாம். அதுதான் எல்லார்க்கும் நல்லது” என்று கூறினார். அதற்குத் திருதராட்டிரர், “சஞ்சயனே! விதுரர் சொல்படி நாம் இப்பொழுது பாண்டவர்களை அழைத் தால், அவர்கள் வருவார்களா?” என்று கேட்டார். அதற்குச் சஞ்சயன், “நீங்கள் ஆணையிடுங்கள். அடுத்த நிமிடம் அவர் களை அழைத்துக்கொண்டு வருவேன்” என்றான்.
கோபம் கொண்ட துரியோதனன்
இதனைக் கேட்டதும் துரியோதனன் மிகுதியான கோபங்கொண்டான். உடவே அவன், “சஞ்சயா! நீ பாண்டவரை விரும்பி வேண்டி அழைத்துவருவாய். உடனே இந்த மன்னர் ஆட்சியை அவர்களிடம் ஒப்படைப்பார். அவர்கள் சுலபமாக நாட்டையும், நகரத்தையும் பெறுவார்கள். இது மிக நன்றாக உள்ளது. பரிசுத்தமான நடு நிலையான மனத்தையுடையவர் என்று தான் உன்னை நான் எண்ணியிருந்தேன். இப்பொழுது தான் தெரிகின்றது ஒரு தலைப்பட்சமாய் இருக்கின்றாய் என்று. அந்தப் பாண்டவர்களிடம் விசுவாசம் இருப்பதால்தான் நீ, என் தந்தை கூறியவுடன் சிறிதும் தாமதிக்காது ஒப்புக் கொண்டாய்.
“இப்பொழுது நான் என்ன செய்யப் போகிறேன் தெரியுமா? கர்ணன் முதலான வரை துணைகொண்டு இப்பொழுதே அங்கு சென்று அவர்களுடன் போரிட்டு அவர்களைக் கொன்று, எந்தவிதத் தடங்க லும் இல்லாமல் அரசாளப் போகின்றேன்” என்று கூறினான்.
துரியோதனன் பேச்சைக் கேட்டுத் திருதராட்டிரர் கோபங்கொண்டார். “சஞ்சயனே! இவனுக்குக் கூறுகின்ற அறிவுரைகளினால் எந்தவிதப் பயனும் விளையப் போவதில்லை. இந்தத் துஷ்டனுக்கு நல்லவை மனத்தில் ஏறா. போரில் இவன் இறக்கத்தான் போகின்றானா? அல்லது தப்பிப் பிழைக்கத்தான் போகின்றானா? ஒன்றும் தெரியவில்லை. அவன் தலை விதிப்படி நடக்கட்டும். இனி நாம் ஒன்றும் செய்வதற்கில்லை” என்று கோபத்துடன் சஞ்சயனிடம் கூறிவிட்டு, அச்சபையி லிருந்து நீங்கி, கற்பினுக்கு அணிகலம் போன்றவளாகிய தன் மனைவி காந்தாரியின் அரண்மனை போய்ச் சேர்ந்தார்.
காந்தாரியின் பேச்சை ஏற்க மறுத்த துரியோதனன்
“மகனுக்கு தீயாவது நல்ல புத்தி கூறு” என்று திருதராட்டிரர் கூற, காந்தாரி, துரியோதனனை அன்போடு அழைத்து. “மகனே! போர் செய்தல் என்பது அறி வுடைமை ஆகாது. பெரியோர்கள் சொற்படி பாண்டவர்க்கு உரிய நாட்டைக் கொடுத்து அவர்கள் நட்பினைப் பெறுவாய்; அதன் மூலம் பீஷ்மர் முதலான பெரியோர்களின் ஆசியைப் பெற்று இனிது வாழ்வாய்” என்று அன்போடு கூறினாள்.
அன்னையின் கூற்றை ஏற்க மறுத்த அவன், “அன்னையே! என்னுடைய பாதங்களை வணங்கி, பிற அரசர்கள் கப்பம் கட்டத்தான், நான் நாட்டை ஆள்வேன். யாரையும் தலைகுனிந்து வணங்கி வாழமாட்டேன். போருக்கு நான் அஞ் சேன்; போரிட்டுப் பாண்டவர்களை வெற்றி காண்பேன். புகழும் அடைவேன். என்னுடைய வலிமையைத் தந்தை முதலாக உள்ள யாருமே அறியவில்லை. அதனால் தான் இப்படிப் பேசுகின்றார்கள்” என்று திட்டவட்டமாகத் தாயின் கூற்றை ஏற்க மறுத்துவிட்டான்.
திருதராட்டிரர் சஞ்சயனை நோக்கி, “சஞ்சயா! நீ மூன்று கால நிகழ்ச்சிகளை அறிந்தவன். முதலின் யார் வெற்றி பெறுவார்கள்? என்பதைச் சொல்வாயாக ” என்று கேட்க, சஞ்சயன், ”வேத வியாசரை, நினையுங்கள். அவர் சொல்வார்” என்றான். திருதராட்டிரரும் வேதவியாசரை வரும்படி நினைக்க அவரும் வந்தார்.
வந்த வேதவியாசர் திருதராட்டிரரை நோக்கி, “மகனே! தர்மத்தை நிலைநிறுத்து தற்காக அவதரித்துள்ள திருமாலாம் கண்ண பிரான் தர்மவான்களான பாண்டவர் பக்கம் நின்று, அதர்மத்தில் வேரூன்றிய நின் மைந்தர்களை அழித்து, அவர்கட்கு வெற்றி யை அருளுவான்; மேலும் அவனிருக்கு மிடத்தில்தான் ஞானம், புகழ், செல்வம் அனைத்தும் ஓங்கும். அப்பெருமான் எங்குப் பொருந்தியிருக்கின்றானோ அங்குதான் வெற்றி கிட்டும். அண்ட சராசரங்களையெல்லாம் தன் வயிற்றகத்து அடக்கிக் அடக்கித்காத்த அந்த உலகமுண்ட பெருவாயனை, கண்ணபிரானை மனத்தில் நினைப்பவர் காரியங்கள் வெற்றியடையும். எனவே அத்தகைய கண்ணபிரானது திரு வடிகளைத் தப்பாது வழிபட்டு மோட் சத்தை அடைவாய்” என்று கூறினார்.
அதனைக்கேட்டுத் திருதராட்டிரர் ஞானவுணர்வு பெற, வேதவியாசரை நோக்கி, ”தந்தையே! மகளிர், பிள்ளைகள் மேல் வைத்த பாசத்தையும், நீக்க முடியாத பெரிய மாயையையும் நீக்கியே தெளிந்த மனத்தை அடைந்து, எவராலும் அறிதற்கு இயலாத அந்தப் பரம்பொருளை, கண்ணபிரானை நான் தெரிந்து கொள்ளும்படி உபதேசித்து அருளியதனால் நான் உய்ந்து போனேன். நீர் உபதேசித்தபடியே அந்தக் கண்ணபிரானின் திருவடிகளைச் சிக்கெனப் பிடித்துக் கொண்டேன்” என்று கூறினார்.
கர்வத்துடன் துரியோதனன்
ஆனால் துரியோதனனோ வியாசரின் கூற்றைக் கேட்டும் மனம் மாறாமல் கர்வத் துடன், கோவர்த்தன கிரியைக் குடையாகப் பிடித்தவனும், நான்முகனைப் படைத்த வனும் ஆகிய அந்தக் கிருஷ்ணரின் நட்பை அர்ச்சுனன் பெற்றிருந்தாலும், நான் அவனை வணங்கமாட்டேன். உம்முடைய சொல்லை ஏற்கவும் மாட்டேன்.” என்று கூறக் கண்ணிலான் மனம் வெறுத்து, ”எல்லாம் விதிப்படி நடக்கட்டும்” என்று கூறிவிட்டார்.
அதன்பின் சஞ்சயமுனிவன், “மன்னவரே! உங்கள் பிள்ளைகள் உங்கள் வார்த்தையைக் கேட்டு நடக்கமாட்டார்கள். போர் செய்து மாளத்தான் போகிறார்கள் ஆதலின் கண்ணபிரானைத் தோத்திரம் (தியானம்) செய்வாய்” என்று கூற, திருதராட்டிரர் பிள்ளைமேலுள்ள வெறுப்பினை அவன்மேல் காட்டி, “இனி நீ நினைத்தபடி யெல்லாம் பேசிக்கொண்டிரு. என் முன்னால் நிற்காதே போ” என்று கூறித்தன் அரண்மனை சேர்ந்தார். வியாசரும் சென்றார்.
மகாபாரதம் – 39 சஞ்சயன் தூது சருக்கம்… போரினைக் கைவிட்டுத் தவம் செய்வீர் Asha Aanmigam