பூத்த பாரிஜாத மலரின் நறுமணம் கலந்த திருப்பாற் கடலின் மத்தியில், நவரத்தின மணிகள் பதித்த பொன் வண்ண மணிமண்டபம் எழிலோடு காணப்படுகிறது.
அம்மண்டபத்துள் பேரொளி மிக்க ஆதிசேஷன் எனும் ஹம்ஸதூலிகைப் பாயலில் அனந்தகோடி சூரிய பிரகாசத்தோடு கூடிய பிரசன்ன வதனத்துடனும், கருணை அமிழ்தம் பொழியும் தாமரைக் கண்களுடனும் சேவை சாதிக்கும் ஸ்ரீமந் நாராயணன் திருப்பள்ளி கொண் டிருந்தார்.
திருமாலின் திருநெற்றியில் கஸ்தூரி திலகமும், பொன் திருமேனியிலே களப சந்தனமும் அணியுறப் பிரகாசித்தன.
பிரகாசம் பொருந்திய கௌஸ்துபமணியும், முத்துமணிமாலைகளும் அணியப் பெற்றிருந்த மணி மார்பின் வலப்பக்கம் ஸ்ரீவத்ஸம மற்றும் திருக்கரங்களில் ஸுதர்சனம், பாஞ்சசன்னியம், கௌமோதகி, சாரங்கம் ஆகிய பஞ்சாயுதங்களும் ஒளியுறப் பொலிவுற்றன.
இப்பேர்ப்பட்ட அலங்கார விபவம் பொங்க எடுத்த அவதார வைபவத்தின் காரணமாக மகாவிஷ்ணு சிந்தனை வசப் பட்டார். அத்தேவனின் திருமுகத்தில் திடீரென்று ஒரு பேரொளிப் பிரகாசம்.
அன்று ஒரு நாள் பரமேசுவரன் நெற்றிக் கண்களி லிருந்து தீப்பொறிகள் தோன்றினாற் போல், இன்று திருமாலின் திருநேத்திரங்கள் இரண்டிலும் இருந்து இரு அழகு கன்னியர் அவதரித்தனர்.
அவர்கள் இருவரும் வண்ண நிலா வடிவம் கொண்ட பேரழகின் பிறப்பிடமாய்க் காட்சி அளித்தனர். அவர்கள் திருமாலை நமஸ்கரித்து பணிவன்போடு நின்றனர்.
திருமால் அப்பெண்களுக்கு முறையே அம்ருதவல்லி, சௌந்தர்யவல்லி என்று நாமகரணம் பண்ணினார்.
சகல கல்யாண குணங்களும் நிரம்பியவர்களும், வனப்புடன் கூடிய தேக சௌந்தரியத்தைக் கொண்டவர் களும், ஈடு இணையில்லாத அழகிய முகலாவண்யத்தை யும் கொண்டவர்களுமாக விளங்கினர். அக்கன்னியர் இருவரும் திருமாலின் திருநயனங்களைப் போன்ற செங்கண் உடைய நங்கையர்களாக இருந்தனர்.
திருமால் அவர்களைத் திருநோக்கம் செய்து, “என்புத்திரிகளே! பூவுலகில் நடக்கப் போகும் ஒரு ஒப்பற்ற வைபவம் நிமித்தம் நீங்கள் எனது கண்களிலிருந்து பிறந்தீர்கள். நீங்கள் இருவரும் வைகுண்டத்தில் வாசம் புரிவீர். தக்க சமயத்தில் உங்கள் பிறப்பிற்கான காரணம் உங்களுக்கே புரியும்” என்ற அருள் செய்தார்.
ஸ்ரீவைகுண்டத்தில் வாசம் புரியும் வனிதையர் அழகு முருகனின் அருமை பெருமைகளைக் கேள்வியுற்று, அவரையே கணவராக அடையவேண்டும் என்று இருவரும் மனதில் சங்கல்பம் கொண்டனர்.
முருகனின் அழகை மனதில் வரித்தனர். அவன் திருநாமத்தைத் துதிபாடினர். உண்ணும் போதும், உறங்கும் போதும் உலாவும் போதும் “முருகா! முருகா!” என்று உள்ளம் உருகினர்.
அப்பெண்டிற்குப் பால் கசந்தது. உறக்கம் வராமல் பஞ்சணை நொந்தது. அவர்கள் கட்டழகு இளமேனி பசலை பூத்தது. கை வளையல்கள் நழுவின. மன்மதனின் காம பாணத்தின் மோக மயக்கத்தில் உடலும், உள்ளமும் தளர்ந்தனர். தொடர்ந்து இரவு பகல் உறங்காமல் விழித்துக் கொண்டே இருந்தனர். தனிமையில் அமர்ந்து தியான நிஷ்டையில் முருகனைத் தரிசிப்பது என்ற தீர்மானத்திற்கு வந்தனர்.
இருவரும் தங்கள் எண்ணத்தை திருமாலின் திருவடி யில் சமர்ப்பித்தனர்.
“அச்சுதா! அனந்தா! கோவிந்தா! நாங்கள் இருவரும் ஈசனின் பாலன் முருகனைத் தவமிருந்து மணம் புரிய எண்ணுகிறோம். அதற்காக சரவணப் பொய்கைக்குப் புறப்படுகிறோம். தேவரீர் எங்களுக்கு அருள் புரிய வேண்டும் ” என்று பிரார்த்தித்தனர்.
மாதவன் மனம் குளிர தமது புத்திரிகளைத் திருக் கண்மலர்ந்து, “அமிர்தவல்லி! சௌந்தரியவல்லி! உங்கள் பிறவிப் பயன் பலிதமாகத் தக்க தருணம் வந்துவிட்டது. சென்று வாருங்கள். மனம் போல மாங்கல்யம் உங்களுக்கு சித்திக்கட்டும்” என்று அருளாசி நல்கி விடைகொடுத்தார்.
அன்பு சகோதரிகள் இருவரும் திருமாலை வலம் வந்து நிலம் கிடந்து சேவித்து சரவணப் பொய்கை புறப்பட்டனர்.
அணிமணி ஆபரணங்களால் அலங்கார பதுமைகளாக காட்சி அளித்த சகோதரிகள் இருவரும் நகைளையும், வெண்பட்டு வஸ்திரங்களையும் களைந்தனர். காவி உடுத்தி, ருத்ராக்ஷமணி மாலைகள் தரித்து, திருவெண்ணீறு அணிந்து மூஞ்சிபுல்லால் அரைதனில் ஒட்டியாணம் அணிந்து மான் தோலால் மேனியை மறைத்தனர். மரவுரி, உத்தரீயங்கள் தரித்துக் கொண்டு சரவணப் பொய்கையிலுள்ள நாணல் காட்டின் நடுவே அமர்ந்து முருகப் பெருமானின் ஷடாக்ஷர மஹா மந்திரத்தைப் பக்தி சிரத்தையோடு இரவும் பகலும் ஜபிக்கத் தொடங்கினர்.
அன்ன ஆகாரங்களை வெறுத்து அருந்தவம் இயற்றும் சகோதரிகள் காற்றை மட்டும் சுவாசித்து உக்ரமான தவத்தைத் தொடங்கினர்.
கந்தபுரியில் திருவிளையாடல்களை நடத்திக் கொண்டிருக்கும் முருகப் பெருமான், சகோதரிகள் முன்னால் மலர்ந்த முகத்துடன் பிரத்யக்ஷமானார்.
அழகன் முருகனைக் கண்டதும் தேவலோக சகோதரிகள் மெய்யுருகினர். உடல் புளகம் போர்த்தது. முருகனை அணைத்து மகிழ அவர்கள் கரங்கள் துடித்தன. முருகனைச் சுற்றி வலம் வந்து இருவரும் வலமும் இடமுமாக நாணிக்கோணி நின்றனர்.
முருகப் பெருமான் சகோதரிகளைத் திருநோக்கம் செய்து, ”பரந்தாமனின் நயனங்களிலிருந்து தோன்றிய நற்குண நங்கையர்களே! உங்கள் தியானத்தால் யாம் தன்யனானோம் உங்கள் வரம் என்ன?” என்று வினவினார்.
“ஆறுமுகப் பெருமானே! அகிலமமெலாம் காத்தரு ளும் கருணாமூர்த்தியான கயிலைமலைவாசனின் அருமை புத்திரரே! தேவரீரைத் திருமணம் புரிய வேண்டும் என்று நாங்கள் தவமிருந்தோம். எங்களை மணம் புரிந்து உங்கள் தர்ம பத்தினிகளாகும் பெரும் பாக்கியத்தைத் தந்தருளுவீர்!”
சகோதரிகளின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டார் ஷண்முகப் பெருமானார். அவர்கட்கு தனித் தனியே ஒரு நிபந்தனையை விதித்தார்.
”அமிருதவல்லி! நீ தேவலோகம் சென்று தேவேந்திர னுக்குப் புதல்வியாக இருப்பாய்! சௌந்தர்யவல்லி! நீ மண்ணுலகம் சென்று சிவமுனிவரின் புதல்வியாக இருப்பாய் ! தக்க தருணத்தில் உங்கள் இருவரையும் ஆட்கொண்டருளி மணம் செய்து மகிழ்வோம்.”
செந்தில் வேலவனின் அன்பு கட்டளையை சகோதரிகள் மனமுவந்து ஏற்றனர்.
இங்ஙனம் சகோதரிகளை அநுக்கிரஹித்த ஆறுமுகப் பெருமான் சகோதரிகளின் அபிலாஷையைப் பற்றி இந்திரனுக்கும், சிவமுனிவருக்கும் அருளிச் செய்தார். அவர்கள் கந்தனின் அன்பு கட்டளைக்குப் பேரின்பம் கொண்டனர். கந்தபுரிக்கு எழுந்தருளினார் முருகப் பெருமான்.
சகோதரிகள் இருவரும் முருகனின் ஆணைப்படி தனித்தனியே பிரிந்தனர்.
இத்தருணத்தில் அமரேந்திரன், சூரபன்மனுக்கு பயந்து கொண்டு மேருமலையில் தேவர்களுடன் ஒளிந்திருந் தான். அவன் முன்னால் சின்னஞ்சிறு குழந்தையாக வந்து நின்றாள் அமிர்தவல்லி.
“தேவர்களின் தலைவா! திருமாலின் நயனங்களி லிருந்து நானும் என் சகோதரியும் தோன்றினோம். என்பெயர் அமிர்தவல்லி என் சகோதரி சௌந்தர்யவல்லி.
நாங்கள் இருவரும் திருமுருகனை மணம் புரியவேண்டும் என்று தவமிருந்தோம். எங்கள் தவம் பலித்தது. முருகப் பெருமான் என்னைத் தங்களிடமும் என் சகோதரியைப் பூவுலகில் சிவமுனிவரிடமும் வளரும்படி ஆணையிட்டுள்ளார். அதனால் நீங்கள் எங்களைத் தங்கள் புதல்வியாக ஏற்றுக் கொள்ளவும்” என்று கேட்டுக் கொண்டாள்.
இந்திரன் அகமும் முகமும் மலர்ந்தான். தனக்கு எப்பேர்ப்பட்ட ட பாக்கியத்தை முருகப் பெருமான் அளித்துள்ளார் என்று எண்ணிப் பூரித்தான். அமிர்த வல்லியை தனது புத்திரியாக ஏற்றுக் கொண்டான்.
தேவேந்திரன் அமிர்தவல்லியைத் தமது வாகனமாகிய ஐராவதத்திடம் வளர்க்கும்படி ஒப்படைத்தான். ஐராவதம் அந்தக் குழந்தையை மகிழ்ச்சியோடு மனோவதி நகரம் எடுத்துச் சென்றது.
ஐராவதம் எனும் யானையால் வளர்க்கப்படும் குழந்தைக்குத் தெய்வயானை என்று பெயர் சூட்டினர். தெய்வயானை முருகப் பெருமானைச் சிந்தையிலே கொண்டு வளர்ந்து வரலானாள்.
அமிர்தவல்லியைப் போல் சௌந்தர்யவல்லியும் முருகனருளால் தொண்டை நந்நாட்டிலுள்ள வள்ளி மலையில் தவம் செய்து கொண்டிருந்த சிவமுனிவரின் புத்திரியாக வள்ளீ எனும் திருநாம வைபவத்துடன் வளர்ந்து வரலானாள்.
கந்த புராணம் – 12 திருமாலின் புத்திரிகள்… திருப்பாற் கடலின் மத்தியில், நவரத்தின மணிகள் பதித்த பொன்