ஸநாதனம் – ஒரு சவால்… எழுதியவர் சுவாமி சைதன்யானந்தர் (2)

0
11

ஸநாதனம் – ஒரு சவால்… எழுதியவர் சுவாமி சைதன்யானந்தர் (1)

ஸநாதனம் – ஒரு சவால் தொடர்ச்சி…

அறிவிலிகள் கூறும் ஸநாதனம்

ஆனால், அதிமேதாவிகள் எனத் தங்களைத் தவறாகக் கருதும் சில அறிவிலிகள் ஸநாதனம் என்பதற்கு வேறு பல கருத்துக்களைக் கூறுகிறார்கள். அவற்றில் சில…

1.சமூக ஏற்றத்தாழ்வே ஸநாதனம்

அதாவது ஜாதி ஏற்றத்தாழ்வே ஸநாதனம் எனப் பிதற்றுகிறார்கள்.

வேதங்கள் ஸநாதனக் கொள்கைகளைக் கூறுகின்றன.

சுவாமி விவேகானந்தர், “சுருதிக்கு மாறாக ஸ்ம்ருதியில் ஏதாவது கூறப்பட்டால் அது விலக்கப்பட வேண்டியது, அதை ஏற்றுக்கொள்ள வேண்டாம்” என்கிறார்.

சுருதி என்றால் வேதங்கள்.

ஸ்ம்ருதி என்றால் வேதங்களைத் தழுவி எழுதப்பெற்ற இதிகாசம், புராணம் போன்ற நூற்கள்.

மனுஸ்ம்ருதி என்பதும் இதில் அடங்கும்.

வேதத்திற்கு மாறாகக் கூறியிருந்தால் மனு ஸ்ம்ருதியே தள்ளத்தக்கது என்பதே ஸநாதனக் கொள்கை.

ஆனால், மனுஸ்ம்ருதியை இந்த அறிவிலிகள் சரியாகப் படித்துப் புரிந்துகொள்ளாததால் குறை கூறுகிறார்கள். மேலும், மனுஸ்ம்ருதி போன்ற நீதி நூற்கள் இடத்திற்கு இடம்,காலத்திற்குக் காலம் மாற்றத்திற்கு உட்படக்கூடியது.

கொரோனா காலத்தில் ஒருவரையொருவர் தொடக்கூடாது. மூன்றடி தள்ளி நிற்க வேண்டும்,முகத்தில் முகமூடி அணிய வேண்டும் என அரசு சட்டம் இயற்றியது. இது காலத்தின் கட்டாயம், இதற்கும் மதத்திற்கும் தொடர்பு இல்லை. இது போன்றதே மனுஸ்ம்ருதி போன்றவை.

மேலும், இப்பொழுது நடைமுறையில் இல்லாத மனுஸ்மிருதியைக் கூறி, ஹிந்து மதத்தைக் குறைகூறி இழிவுபடுத்துவதற்கெனப் பணம் பெற்றுக்கொண்டு இழிவுபடுத்த நினைக்கும் இவர்கள் துரோகிகள்.

ஏனெனில், தற்பொழுது நடைமுறையில் உள்ளது பாரத அரசியல் அமைப்புச் சட்டம் தான். அம்பேத்கார் போன்றோரின் கூட்டு முயற்சியால் வந்த சட்டங்களே பாரதத்தில் நடைமுறையில் உள்ளன. அவ்வாறு இருக்க உள்நோக்கத்துடனே இவர்கள் மனுஸ்ம்ருதியை முன்னிறுத்தி ஹிந்து மதத்தை, ஸநாதனத்தைத் தூற்றுகிறார்கள். இவர்களின் உள்நோக்கம் ஹிந்துக்களை மதம் மாற்றுவதுதான்.

சரி. நாம் விட்ட இடத்திற்கு வருவோம்.

அதாவது ஜாதி ஏற்றத்தாழ்வு.

அனைவரும் குறிப்பாக ஹிந்துக்கள், ஸநாதனிகள் புரிந்துகொள்ள வேண்டியது யாதெனில்,

வேதங்களில் ஜாதி குறித்துக் கூறப்படவேயில்லை.

ஸ்ரீமத் பகவத்கீதையில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர்,

சாதுர் வர்ணியம் மயா ஸ்ருஷ்டம் குணகர்ம விபாகச: |

தஸ்ய கர்த்தாரமபி மாம் வித்யகர்த்தாரமவ்யயம் ||

“நான்கு வர்ணங்களை நான் படைத்தேன்” என்கிறார் பகவான்.

ஆனால் அது பிறப்பினால் அல்ல, குணம் மற்றும் செயலின் அடிப்படையில்தான் நான்கு வர்ணங்கள்.

அவை,

1) பிராம்மணன் 2) க்ஷத்ரியன் 3) வைசியன் 4) சூத்திரன்.

      வேதம் ஓதுவதும், ஓதுவித்தலும், யாகங்கள் செய்வதும், செய்வித்தலும் யார் செய்கிறார்களோ அவர்கள் பிராம்மணர்கள்.

      நாட்டை, மக்களைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்பவர்கள் க்ஷத்ரியர்கள்.

      விவசாயமும்,வாணிபமும், கால்நடைப் பராமரிப்பும் செய்பவர்கள் வைசியர்கள்.

      தானாகச் சிந்தித்துச் செயல்புரியத் தெரியாமல், பிறர் ஆணைப்படி செயல் புரிபவர் சூத்திரர்.

      ஒரு பிராம்மணனின் மகன் வியாபாரம் செய்தால் அவன் வைசியன்.

      ஒரு க்ஷத்ரியனின் மகன் குற்றேவல் செய்தால் அவன் சூத்திரன்.

      ஒரு சூத்திரனின் மகன் பூஜை செய்தால் அவர் பிராம்மணன்.

      இதுதான் ஸநாதனம் கூறும், ஹிந்து மதம் கூறும் வர்ணமுறை.

      ஆனால், இன்று பாரதத்தில் ஆயிரக்கணக்கான ஜாதிகள் உள்ளன. அவற்றைப் பிறப்பின் அடிப்படையில் நிர்ணயிக்கிறது அரசாங்கம்.

      அரசாங்கம் தனது அனைத்துப் படிவங்களிலிருந்தும் ஜாதி என்ற வார்த்தையை எடுத்துவிட்டால் ஜாதியே இருக்காது. அவ்வாறாயின் ஏற்றத்தாழ்வு எவ்வாறு வரும்?

      எனவே, ஜாதி ஏற்றத்தாழ்வு ஹிந்துவின், ஸநாதனத்தின் குறைபாடல்ல. அரசாங்கத்தின் குறைபாடே.

      ஸநாதன நூற்கள் எவையும் ஜாதியையோ, பிறப்பின் அடிப்படையில் பிரிவுகளையோ கூறவில்லை.

      மனுஸ்ம்ருதியில் கூட ஜாதியைப் பற்றிய குறிப்பு இல்லை.

      வர்ணத்தைக் குறித்த குறிப்புகளே உள்ளன. ஆனால், அவையும் பிறப்பின் அடிப்படையில் இல்லை.

      ஆனால், பிறப்பின் அடிப்படையில் ஜாதி என்று அரசாங்கம் கூறியதில் பழகிய நமக்கு மேற்கூறிய கூற்று புரிய வேண்டு மெனில் ஆழ்ந்து புத்தி பூர்வமாக, யுக்தி பூர்வமாகச் சிந்திக்க வேண்டும்.

      அதற்கு ஸநாதனிகளும், பகுத்தறிவுவாதிகளும், அரசியல்வாதிகளும், அறிவுஜீவிகளும் சிந்திக்க முன்வர வேண்டும்.

      2.பெண்ணடிமை ஸநாதனக் கொள்கை

        ஸநாதனம், ஹிந்துப் பெண்களைப் பெண் என்ற நிலையில் பார்ப்பதில்லை.

        “எங்கள் நாட்டில் எத்தனை வயதான ஆணும் பெண்களை, சிறுமிகளைக் கூட அம்மா என அழைக்கத் தயங்குவதில்லை” என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

        மேலும், “எங்கள் நாட்டில் மனைவியைத் தவிர அனைத்துப் பெண்களையும் தாயாகப் பார்க்கிறோம். உங்கள் நாட்டில் தாயைத் தவிர அனைத்துப் பெண்களையும் மனைவியாக, போகப் பொருளாகப் பார்க்கிறீர்கள்” என மேலை நாட்டில் கூறுகிறார் சுவாமி விவேகானந்தர்.

        இதன் காரணமாகவே, பெண்களை மதிக்கின்ற காரணத்தினாலேயேதான் தினமும் ஒரு பெண் என்றில்லாமல் ஒரே மனைவியுடன் 50 ஆண்டுகள், 80 ஆண்டுகள் என உயிர் உள்ளவரை அன்பான தம்பதிகளாக பாரதியக் குடும்பங்களில் வாழ்கிறார்கள்.

        தன் உடலில் பாதியைப் பார்வதிக்குக் கொடுத்து அர்த்தநாரீஸ்வரர் ஆன சிவன், ஹிந்துக்களின் வழிபடும் தெய்வமாக இருக்கிறார். இதிலிருந்து ஸநாதனிப் பெண்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் நேர்மையாகச் சிந்திப்பவர்களுக்குப் புரியும்.

        மேலும், சாஸ்திரம் கூறும் ஒரு நியதியையும் இங்கே கூறத்தான் வேண்டும்.

        “ஒருவன் துறவியாகிவிடில் அவருடைய பூர்வாசிரம தந்தைகூட அவரை வணங்க வேண்டும். ஆனால், துறவியும் தன் பூர்வாசிரமத் தாயை வணங்க வேண்டும்” என்பது நியதி.

        இவ்வாறு இருக்க பெண்ணடிமை எவ்வாறு ஹிந்து சமய, ஸநாதனக் கொள்கையாக இருக்க முடியும்?

        தாய்வழிபாடு ஸநாதனஅடிப்படை நூற்களில் ஒன்றாகிய ரிக்வேதத்தில் கூறப்பெற்றுள்ளது.

        நாம் நம் நாட்டைப் பாரதமாதா என வழிபடுகிறோம்.

        மேலும் நமது நதிகளை கங்கா மாதா, யமுனா மாதா… என வழிபடுகிறோம்.

        நாம் மொழியினைத் தாய்மொழி, மதத்தைத் தாய் மதம்..என தாய்வழிபாடு பாரதத்தின் பெருமை. வழிபாட்டிற்கு உரியவர் களைப் பட்டியலிடும் போதும் மாதா, பிதா, குரு, தெய்வம் என்றே கூறுகிறோம். தாய்க்குத்தான் முதலிடம். தாயிற் சிறந்த கோவில் இல்லை என்பது முதுமொழி. இவ்வாறு சாஸ்திரங்கள் கூறும்பொழுது ஸநாதனத்தில் பெண்ணடிமை உள்ளதென புத்திசாலி கூறமாட்டான்.

        3.உடன்கட்டை ஏறுதல்

        உடன்கட்டை ஏறும் வழக்கம் ஹிந்து மதத்தில், ஸநாதனத்தில் உண்டு என அறிவிலிகள் சிலர் மேடைகளில் பிதற்றுகிறார்கள்.

        வேத, இதிகாச, புராணங்களில் எங்குமே உடன்கட்டை ஏற வேண்டுமெனக் கூறப்படவில்லை.

        ராஜஸ்தானில் ரஜபுத்திர மன்னர்களைக் கொன்ற முகலாயர்கள் பெண்களை இழுத்துச் சென்று கொடுமைப் படுத்தியதால் அங்குள்ள பெண்கள் கணவன் இறந்தபின் தங்கள் கற்பு, மானம் காக்கத் தீயில் புகுந்தது வரலாறு கூறும் உண்மை.

        ஆனால், இதிகாசத்திலோ, புராணத்திலோ அத்தகு உதாரணங்கள் இல்லை.

        மஹாபாரதத்தில் பாண்டுவின் மனைவி மாத்ரி தன் கணவனுடன் சிதையில் தீக்குளித்த வரலாறு உள்ளது.

        ஆனால், அது உடன்கட்டை ஏறுதல் என்பதால் அன்று. தன் கணவன் மரணத்திற்குத் தான் காரணமாகிவிட்டோம் என்ற குற்ற உணர்வினால்.

        வேறு எங்கும் உடன்கட்டை ஏறிய குறிப்பு இல்லை.

        நாமே சிந்திப்போம். நமது பகுதியில் நமது மூதாதையர்கள் உடன்கட்டை ஏறியதாகக் குறிப்புகள் உள்ளனவா? இல்லையே.

        பின் எப்படி ஸநாதனத்தில் உடன்கட்டை என்ற இழிநிலை உள்ளது எனக் கூற முடியும்?

        4.தீண்டாமை

          அஹமாத்மா குடாகேச ஸர்வபூதாசய ஸ்தித |

          அஹமாதிஸ்ச மத்யம் ச பூதானாம் அந்த ஏவ ச ||

          “நான் எல்லா உயிர்களிலும் உள்ளேன்” என்கிறார் கீதையில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர்.

          எல்லோரிலும் இறைவன் உறைகிறான் என்ற உயர்ந்த கொள்கையைக் கூறும் ஸநாதனம் தீண்டாமையை எவ்வாறு ஏற்றுக்கொள்ளும்.

          இதுபோன்று பல தீமைகள் சில பகுதிகளில், சில குழுக்களால் கடைபிடிக்கப்பட்டன என்பது மறுப்பதற்கு இல்லை.

          ஆனால், அவை மதத்தின் குற்றம் அல்ல, மனிதனின் குற்றம்.

          ஹிந்து மதத்தை, ஸநாதனத்தைப் பொறுத்தவரை எந்தவிதப் பிழையும் இல்லை.

          ஸநாதனக் கொள்கைகள் சிறப்பானவை. யாரும் குறை கூறும் வகையில் இல்லை.

          இதை அனைவரும் புரிந்துகொண்டு வாழ்ந்தால் இன்பமே எந்நாளும் துன்பமில்லை. அனைவரும் நலம்பெறலாம்.

          ஸநாதனத்தை அழிக்க முடியுமா?

          ஸநாதனம் என்றாலே ஆதிஅந்தம் இல்லாதது என்று முன்னரே பார்த்தோம். எனவே, ஸநாதனத்தை அழிப்பது என்பது இயலாது.

          ஸநாதனக் கொள்கைகள் நிரந்தர உண்மைகள். எனவே அவற்றை அழிப்பது என்பது நடவாத காரியம்.

          ஆயின் ஸநாதனியை அழிக்கலாம். ஸநாதனக் கொள்கை களை நம்பும், பின்பற்றும் ஸநாதனியை அழிக்கலாம்.

          அழிப்பது என்பது இருவிதத்தில் நடத்தலாம்.

          1. ஸநாதனிகளைக் கொல்வது.
          2. ஸநாதனக் கொள்கைகளை நம்பிப் பின்பற்றுபவனை அதிலிருந்து மாற்றி வேறு கொள்கைளைப் பின்பற்ற வைப்பது.

          இந்த இரண்டுமே வரலாற்றில் நடந்துள்ளன, நடந்து கொண்டு இருக்கின்றன. கோடிக்கணக்கான ஹிந்துக்கள், ஸநாதனிகள் கொல்லப்பட்டுள்ளனர். கோடிக்கணக்கானோர் வாள் முனையில் அச்சுறுத்தி, ஆசைகாட்டி, ஏமாற்றி மதம் மாற்றப்பட்டுள்ளனர்.

          சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உலகம் முழுக்க ஸநாதனிகள்தான் இருந்தார்கள். ஆனால் இன்று,நாம் நூறு விழுக்காட்டிலிருந்து 12.5 விழுக்காடாகக் குறைந்து சுருங்கி விட்டோம். மொத்தம் 800 கோடி உலக மக்கள் தொகையில் 100 கோடி மக்கள் தான் ஹிந்துவாக இருக்கின்றனர்.

          அதுவும் 100 கோடி பேரும் சான்றிதழ் ஸநாதனிகள் தான். இந்த 100 கோடியில் ஒரு விழுக்காடாவது ஸநாதனம் குறித்து அறிவுள்ளவர்களாக இருப்பார்களா என்பது கேள்விக்குறியே.

          எனவே ஸநாதனம் காக்க ஸநாதனக் கொள்கைகளைப் புரிந்தவர்கள், அறிந்தவர்கள் அதிகரிக்க வேண்டும். நாம் முதலில் ஸநாதனம் குறித்துத் தெளிவுபட வேண்டும், பிறருக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும். இது ஒவ்வொரு ஹிந்துவின் கடமையாகும்.

          ஏன் ஸநாதனம் காக்கப்பட வேண்டும் ? என்ற கேள்வி வருகிறதல்லவா? ஒருவர் அவர் விரும்பும் கொள்கையில் வாழ்ந்தால் என்ன தவறு? என்று கேட்போர் உளர்.

          “ஹிந்து மதமே பாரதத்தின் உயிர்நாடி, ஹிந்துமதம் அழிந்தால் பாரதம் அழிந்துவிடும். பாரதம் அழிந்தால் உலகே அழிந்துவிடும் என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

          “உலகில் சாந்தியையும் சமாதானத்தையும் போதிக்கும் தகுதியுடைய ஒரே நாடு பாரதம்தான். எனவே பாரதம் காப்பாற்றப்பட வேண்டும்.

          “பாரதத்தைக் காப்பாற்ற அதன் உயிர்நாடியாகிய ஆன்மிகத்தை, ஹிந்து மதத்தைக் காப்பாற்ற வேண்டும்” என்பதே சுவாமி விவேகானந்தரின் அறைகூவல்.

          ஏன் பாரத ஆன்மிகத்திற்கு, ஹிந்து மதத்திற்கு அவர் அத்துணை முக்கியத்துவம் கொடுக்கிறார் எனில், அதன் உலகளாவிய சமாதானக் கொள்கைகளுக்காகத்தான் .

          ஹிந்து மதத்தின், எந்த வடிவிலும் இறைவனை வழிபடலாம் என்ற மிக உயர்ந்த கொள்கைதான் உலகில் சமாதானத்தை நிலைநிறுத்தும்.

          குறிப்பிட்ட பெயரில், வடிவில் வழிபட்டால் மட்டுமே உனக்கு இறைஅருள் கிடைக்கும், சுவர்க்கத்தில் இடம் உண்டு எனவும், வேறு வடிவில் வழிபட்டால் உன்னை கடவுள் நரகிற்குத் தள்ளுவார், நீ கொல்லப்பட வேண்டியவன் என்றும் கூறும் வேற்று மதங்கள் எவ்வாறு சமாதானத்தை உலகில் நிலைநாட்ட முடியும்?

          மேலும், ஸநாதனம் உலகை வழி நடத்தும் மற்றொரு கொள்கையையும் பார்ப்போம்.

          உணவைப் பகிர்ந்து உண்ண வேண்டும்

          உணவு அனைவருக்கும் கிடைக்க வேண்டும் உணவை அனைவரும் பகிர்ந்து உண்ண வேண்டும் -என்பதும் ஸநாதனக் கொள்கை.

          ஹிந்து சமய நூலான திருக்குறளில் திருவள்ளுவர்,

          பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்

          தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. (குறள் – 322)

          “தனக்குக் கிடைத்ததை மற்றவருக்குப் பகிர்ந்து கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் காப்பாற்றுதல், அறங்கள் எல்லாவற்றிலும் தலையாய அறமாகும்” என்கிறார் வள்ளுவர்.

          பிறருக்குக் கொடுக்காமல் உண்பவன் திருடன் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.

          தைத்திரீய உபநிஷதத்தின் இறுதியில் உணவு குறித்து

          அ. உணவைப் பழிக்கக் கூடாது.

          ஆ. உணவை வெறுக்கக் கூடாது.

          இ. உணவை ஏராளமாக உற்பத்தி செய்யுங்கள்.

          ஈ. உணவு தேடி வருகின்ற யாரையும் திருப்பி அனுப்பக் கூடாது – என்ற வாக்கியங்கள் உள்ளன.

          எவர்கள் தங்கள் பொருட்டே சமைக்கிறார்களோ அந்தப் பாவிகள் பாவத்தையே உண்கிறார்கள் என்கிறது கீதை (3.13).

          இதன் மூலம் அனைவருக்கும் உணவு கிடைப்பதை உறுதி செய்கிறது ஸநாதனம்.

          இதனால்தான் சுவாமிஜீ, “ஹிந்துமதம் காப்பாற்றப்பட வேண்டும்”என்கிறார். எனவே,நம் ஒவ்வொருவரின் கடமை

          ஹிந்து மதத்தைக் காப்பாற்றுவது.

          நிறைவுரை

          வேதங்களில் கூறப்பெற்றுள்ள நிரந்தர உண்மைகளை மக்களுக்குப் புரியும்படியாகக் கதை வடிவில் தருபவையே இதிகாச புராணங்கள்.

          ஸநாதன தர்மத்தில் ராமாயணம், மகாபாரதம் என இரு இதிகாசங்களும், 18 புராணங்கள், 18 உப புராணங்கள் என அனேக ஸ்ம்ருதிகள் உள்ளன.

          ராமாயணம் பெண்ணாசையால் அழிவு ஏற்படும் எனும் உண்மையையும், மகாபாரதம் மண்ணாசை அழிவைத் தரும் என்ற உண்மையையும் விளக்குகிறது. இதுபோன்றே புராணங்க ளிலும் வேத உண்மைகளை விளக்கும் பல கதைகள் உள்ளன.

          புராணங்கள் நடந்தனவா இல்லையா என்ற ஆராய்ச்சி செய்யத் தேவையில்லை. அவை நடந்தவையோ, நடக்காத வையோ எவ்வாறாயினும் அவைகளிலிருந்து மனித குலத்திற்குக் கிடைக்கும் செய்தி அற்புதமானது.

          நமது புராணங்களில் கூறப்பெற்றுள்ள உண்மைகளைத் தற்கால விஞ்ஞானிகள் வியப்புடன் பார்க்கின்றனர். ஏனெனில் அந்த உண்மைகள் சரியானவை என்பதைத் தற்கால விஞ்ஞானிகள் தற்போதுதான் கண்டுபிடிக்கின்றனர்.

          இதன் காரணமாக ஐக்கிய நாடுகளின் விஞ்ஞானக் கல்விப் பன்னாட்டுக் கழகம் நம்முடைய புராணங்களை மொழி பெயர்த்து 100 நூற்களாக வெளியிட்டுள்ளது.

          நம்முடைய பாரத நாட்டு ரிஷிகள் கண்டு தெளிந்து தெரிவித்த கருத்துக்களை நாம் கண்டுகொள்வதில்லை. ஆனால் அயல்நாட்டு விஞ்ஞானிகள் பாரத சாஸ்திர உண்மைகளின் மேன்மை உணர்ந்து வியந்து போற்றுகின்றனர்.

          குளத்தில் மலரும் தாமரையின் தேனை வெளியிடங் களிலிருந்து வரும் வண்டுகள் பருகுகின்றன. ஆனால் குளத்திலே வாழும் மீன்களோ, தவளைகளோ பருகுவதில்லை. இதுபோன்றதே நம் நிலையும்.

          அதற்கு நாம் செய்ய வேண்டியது, நமது ஹிந்து மதக் கொள்கைகளை நன்கு படித்து அதை மற்றவருக்கும் எடுத்துச் சொல்வதுதான்.

          அறியாமையில் இருக்கும் மக்களுக்கு நமது ஹிந்து மதப் பெருமைகளையும், கொள்கைகளையும் எடுத்துக் கூறும் பணியைத் தொடர்ந்து செய்வோமாக!

          பாரத நாட்டில் சோஷலிச,அரசியல், பொருளாதாரக் கருத்துக்களைப் பரப்புமுன் ஆன்மிகக் கருத்துக்களின் வெள்ளம் இங்கே பெருக்கெடுத்து ஓடச் செய்யுங்கள். காடுகளிலும் மடங்களிலும் மறைந்து கிடக்கும் வேத உபநிஷத, இதிகாச புராணக் கருத்துக்களைக் கிராமங்கள் தோறும், குடிசைகள் தோறும் வாரியிறையுங்கள். – சுவாமி விவேகானந்தர்.

          ஸநாதனம் – ஒரு சவால்… முற்றியது

          ஸநாதனம் – ஒரு சவால்… எழுதியவர் சுவாமி சைதன்யானந்தர் (1)

          LEAVE A REPLY

          Please enter your comment!
          Please enter your name here